TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-03-2026

Trending TNPSC

By

13 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-03-2026

தேசியச் செய்திகள்

பெட்ரோல்-டீசல் கலால் வரி குறைப்பு

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை குறைத்தது; இதில் டீசலுக்கு ரூ.10 கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டு, பெட்ரோலுக்கு ரூ.10 குறைக்கப்பட்டதால், பெட்ரோல் கலால் வரி லிட்டருக்கு ரூ.13 இலிருந்து ரூ.3 ஆக குறைந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் இழப்பை ஈடுகட்டவும், உள்நாட்டு விலை உயர்வைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் சில்லறை விலையில் மாற்றம் இல்லை. இந்த வரிக் குறைப்பால் மத்திய அரசுக்கு ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மிகை லாபத் தடுப்பு வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ. 21.5, விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.29.5 வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், பெட்ரோல் மொத்த வரி லிட்டருக்கு ரூ.11.90 டீசல் மொத்த வரி லிட்டருக்கு ரூ.7.80 ஆக குறைந்துள்ளது; முன்பு இவை முறையே ரூ.21.90 மற்றும் ரூ.17.80 ஆக இருந்தன. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

மாநிலங்களுக்கு வணிக எல்.பி.ஜி ஒதுக்கீடு 70% ஆக உயர்வு

மத்திய அரசு மாநிலங்களுக்கான வணிகப் பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி (சமையல் எரிவாயு) ஒதுக்கீட்டை 70% ஆக அதிகரித்தது. ஈரான், இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவில் முதலில் வணிக எரிவாயு ஒதுக்கீடு 30% ஆக குறைக்கப்பட்டு, பின்னர் மார்ச் 23 அன்று 20% உயர்த்தப்பட்டு, தற்போது மேலும் 20% அதிகரிக்கப்பட்டதால் மொத்தம் 70% ஆக உயர்ந்துள்ளது, இது போர் முன் நிலை அளவாகும். இந்த அறிவிப்பை எண்ணெய் துறைச் செயலர் நீரஜ் மிட்டல் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அறிவித்தார்.

விளையாட்டுச் செய்திகள்

ஹாக்கி இந்தியா விருதுகள் 2026

ஹாக்கி இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், கடந்த ஒரு ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங் சிறந்த ஆண் வீரர் விருதையும், ஸ்டிரைக்கர் நவ்னீத் கௌர் சிறந்த பெண் வீராங்கனை விருதையும் பெற்றனர்; இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக் 1980 தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் வீரரும் முன்னாள் கேப்டனுமான ஜாஃபர் இக்பால், மேஜர் தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்று ரூ.25 லட்சம் பெற்றார். பிஷு தேவி காரிபம் சிறந்த கோல்கீப்பர் விருதையும், சஞ்சய் சிறந்த டிஃபெண்டர் விருதையும் பெற்று தலா ரூ.5 லட்சம் பெற்றனர்; சுக்ஜீத் சிங் சிறந்த ஃபார்வர்டு விருதை பெற்றார். மேலும், ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி கௌரவிக்கப்பட்டு, வீரர்கள் தலா ரூ.3 லட்சம் மற்றும் பயிற்சியாளர்கள் தலா ரூ.1.5 லட்சம் பெற்றனர்.

ஆசிய கோப்பை வில் வித்தையில் இந்தியா 10 பதக்கங்கள்

பாங்காக், மார்ச் 27 அன்று தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில் வித்தை (முதல்நிலை) போட்டியில், இந்தியா மொத்தம் 10 பதக்கங்கள் (2 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றது. காம்பவுண்ட் கலப்பு அணியில் சிகிதா தனிபார்தி மற்றும் ரஜத் சௌஹான் மலேசியாவை 158-156 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர். காம்பவுண்ட் மகளிர் அணியில் சிகிதா தனிபார்தி, ராஜ் கௌர், தேஜல் சால்வே வெள்ளி பதக்கம் பெற்றனர்; ரீகர்வ் ஆடவர் அணியில் தேவாங் குப்தா, சுக்செயின் சிங், ஜூயெல் சர்க்கார் வெள்ளி பதக்கம் பெற்றனர். தனிநபர் பிரிவில் தேஜல் சால்வே மற்றும் ரஜத் சௌஹான் வெண்கலம் வென்றனர்; மேலும் உதய் காம்போஜ் காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார்.

‘சன்ஷைன் டபுள்’ டென்னிஸ் சாதனை

இண்டியன் வெல்ஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் ஆகியவை டென்னிஸ் காலண்டரில் முதல் இரண்டு போட்டிகளாக இருந்து, ஒவ்வொன்றும் 1,000 தரவரிசை புள்ளிகள் வழங்குகின்றன; இவ்விரு போட்டிகளிலும் ஒரே ஆண்டில் சாம்பியன் பட்டம் வெல்வது ‘சன்ஷைன் டபுள்’ என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு போட்டிகளும் ஒரே மாதத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன. தற்போதைய நிலையில், மகளிர் பிரிவில் அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் மற்றும் ஆடவர் பிரிவில் யானிக் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்; இருவரும் இந்த ஆண்டின் இண்டியன் வெல்ஸ் ஓபன் போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், ‘சன்ஷைன் டபுள்’ சாதனையை நோக்கி முன்னேறுகின்றனர்.

சர்வதேசச் செய்திகள்

நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு

காத்மாண்டு, மார்ச் 27 அன்று, பாலேந்திர ஷா (35), காத்மாண்டு முன்னாள் மேயர், நேபாளம் நாட்டின் 47-ஆவது பிரதமராக, அதிபர் ராம் சந்திர பௌடெல் முன்னிலையில் பதவியேற்றார்; இதன் மூலம் அவர் நாட்டின் இளம் வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். சமீபத்திய பொதுத் தேர்தலில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 275 இடங்களில் 182 இடங்கள் வென்று தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது; இதற்கு முன் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு இளைஞர் போராட்டங்களால் கவிழ்ந்தது. ‘ஜாப்பா-5’ தொகுதியில் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பி. சர்மா ஒலியை தோற்கடித்த பாலேந்திர ஷா, மாதேஷ் சமூகத்தைச் சேர்ந்த முதல் பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றார். புதிய அரசு, கௌரி பகதூர் கார்க்கி தலைமையிலான விசாரணை ஆணைய அறிக்கையை அமல்படுத்த முடிவு செய்து, கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக் மீது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பரிந்துரையை எடுத்துக்கொண்டது.

அமெரிக்க டாலரில் டிரம்ப் கையொப்பம்

டொனால்ட் டிரம்ப் கையொப்பம் அமெரிக்கா நாட்டின் டாலர் நோட்டுகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது; இது 250-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1861-இல் காகிதப் பணம் அறிமுகமானதிலிருந்து, பதவியில் உள்ள அதிபரின் கையொப்பம் நோட்டுகளில் இடம்பெறுவது இதுவே முதல்முறை; வழக்கமாக கருவூல அதிகாரி மற்றும் நிதியமைச்சர் கையொப்பங்கள் மட்டுமே இடம்பெறும். புதிய 100 டாலர் நோட்டுகள் ஜூன் மாதம் முதல் அச்சிடப்படவுள்ளன; இதில் ஸ்காட் பெசன்ட் மற்றும் கருவூல அதிகாரி பிராண்டன் பீச் கையொப்பங்களும் இடம்பெறும். மேலும், ஈரான் எரிபொருள் நிலையங்கள் மீதான தாக்குதல் நிறுத்தம் ஏப்ரல் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது; ஹார்முஸ் நீரிணை திறப்பு தொடர்பான காலக்கெடு 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் புகலிடத் துறைமுகங்கள்

இந்தியாவின் முதல் புகலிடத் துறைமுகங்கள் (Ports of Refuge), அதானி போர்ட்ஸ் மூலம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த திட்டம் சர்வதேச கடல்சார் விதிமுறைகளின் கீழ், நெதர்லாந்தின் ஸ்மித் சால்வேஜ் நிறுவனம் மற்றும் கடல்சார் அவசரகால செயல்பாட்டு மையம் இணைந்து மேற்கொள்ளப்பட்டது மற்றும் இது மார்ச் 27 அன்று அறிவிக்கப்பட்டது. கடலில் விபத்து, இயந்திர கோளாறு அல்லது தீ விபத்து போன்ற அவசரநிலைகளில் சிக்கிய கப்பல்கள் தஞ்சம் அடைந்து தற்காலிக பழுதுபார்ப்பு செய்யும் இடமே புகலிடத் துறைமுகமாகும். இந்தியாவின் 11,000 கி.மீ. கடற்கரைப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில், மேற்குக் கடற்கரையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் திகி துறைமுகம் (அரபிக்கடல் மற்றும் பாரசீக வளைகுடா வழித்தடம்) மற்றும் கிழக்குக் கடற்கரையில் ஒடிசா மாநிலம் கோபால்பூர் துறைமுகம் (வங்கக்கடல் மற்றும் மலாக்கா நீரிணை வழித்தடம்) தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்துறைமுகங்களில் மீட்பு நடவடிக்கைகள், கப்பல் சிதில அகற்றம், நவீன தீயணைப்பு வசதிகள் மற்றும் எண்ணெய் கசிவு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் உள்ளன, இது கப்பல் சேதத்தைத் தடுக்கும், மாலுமிகளின் உயிரைக் காக்கும் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் பாதிப்பை குறைக்கும்.

பொருளாதாரச் செய்திகள்

6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதி

இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI), மார்ச் 27 அன்று மும்பையில், SVJEL, Sim Biotech Pharma, Vivaraj Environment, Va Tech Wabag, Parasol Chemicals, Go-Paper-Forms ஆகிய 6 நிறுவனங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடுகளுக்கு (IPO) இறுதி அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை, Vantage Flut India நிறுவனம் தனது ஐபிஓ திட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளது மற்றும் தற்போது 26 நிறுவனங்களின் வரைவு விண்ணப்பங்கள் செபியின் பரிசீலனையில் உள்ளன. அனுமதி பெற்ற திட்டங்களில், SVJEL நிறுவனம் அதிகபட்சமாக ₹4,575 கோடி திரட்டத் திட்டமிட்டு, அந்த நிதியை துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும் பொதுத் தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளது; இந்நிறுவனம் விவசாயக் கழிவுகளை தூய்மையான எரிசக்தியாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. Vivaraj Environment நிறுவனம் நீர் பயன்பாடு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மேலாண்மை துறையில் செயல்பட்டு, ₹2,250 கோடி திரட்ட அனுமதி பெற்றுள்ளது; மேலும், இந்தூர் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட Sim Biotech Pharma நிறுவனம் ₹2,180 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

நொய்டா சர்வதேச விமான நிலைய திறப்பு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா (ஜேவார்) சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். இது டெல்லி-என்சிஆர் பிராந்தியத்தின் 2-வது சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்பட்டு, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லிக்கு துணையாக செயல்படும். கவுதம புத்தநகர் மாவட்டம் ஜேவார் பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாக கருதப்படுகிறது. முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தபின், ஆண்டுக்கு 7 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், விமான நிலையத்தைச் சுற்றி தொழில் மற்றும் தளவாடக் குழுக்கள் (industrial and logistics clusters) உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், விமான நிலையத்தின் முதல் முனையம் (first terminal) திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு செய்திகள்

மாநிலங்களின் கடன் செலவு உயர்வு

மாநிலங்களின் கடன் செலவு 0.15–0.3% வரை உயர்ந்து, சில பத்திரங்களில் 8%-ஐத் தாண்டியுள்ளது; இது மேற்கு ஆசியா பகுதியில் அதிகரித்த மோதல்கள் மற்றும் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் அரசுப் பத்திர வருவாய் (bond yields) அதிகரித்ததன் விளைவாக ஏற்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தரவுகளை பிடிஐ (PTI) தொகுத்ததின்படி, அனைத்து காலாவதிகளிலும் மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) வருவாய் உயர்ந்துள்ளது. மார்ச் 24 நடைபெற்ற முந்தைய ஏலத்துடன் ஒப்பிடுகையில், 15 ஆண்டுக் கால SDLs வருவாய் 0.24%, 20 ஆண்டுக் கால SDLs 0.16%, மற்றும் 25 ஆண்டுக் கால பத்திரங்கள் 0.30% உயர்ந்துள்ளன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், 13 மாநிலங்கள் மொத்தம் ₹39,991.958 கோடி கடன் பெற்றுள்ளன, இது அறிவிக்கப்பட்ட ₹42,941 கோடி தொகையை விடக் குறைவாகும்.

ரிசர்வ் வங்கியின் ‘Payments Vision 2028’

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), மும்பையில் வெள்ளிக்கிழமை, ‘Payments Vision 2028’ ஆவணத்தை வெளியிட்டு, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பிற்கான 3 ஆண்டு கால வரைபடத்தை அறிவித்துள்ளது; இதில் 15 குறிப்பிட்ட முன்னெடுப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டத்தில் அனைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளுக்கும் ‘switch on/switch off’ வசதி விரிவாக்கம், பணப்பரிவர்த்தனை மாற்ற சேவை (PaSS) அறிமுகம், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கான கூட்டுப் பொறுப்பு கட்டமைப்பு, மற்றும் மின்னணு காசோலைகள் அறிமுகம் ஆகியவை அடங்கும். இந்த வரைபடம் பயனர் அதிகாரம், மோசடி தடுப்பு பாதுகாப்பு வலுப்படுத்தல், எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனை திறன் மேம்பாடு, மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. PaSS மூலம் வங்கி மாற்றம் அல்லது கணக்கு எண் மாற்றம் நேரங்களில் பணப்பரிவர்த்தனை அறிவுறுத்தல்களை எளிதாக மாற்ற முடியும். கூட்டுப் பொறுப்பு கட்டமைப்பு மூலம் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் வங்கி மற்றும் பயனாளி வங்கி இணைந்து பொறுப்பேற்கும். மேலும், MSME துறைக்கு ஆதரவாக TReDS தளங்களில் முழுமையான இயங்குதன்மை (interoperability) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

துங்குஸ்கா ஏவுகணை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் (MoD), வெள்ளிக்கிழமை புது தில்லியில், மொத்தம் ₹858 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது; இதில் ரஷ்யாவின் JSC Rosoboronexport நிறுவனத்திடமிருந்து துங்குஸ்கா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவது மற்றும் கடற்படை விமான பராமரிப்பு அடங்கும். ₹445 கோடி மதிப்பிலான துங்குஸ்கா ஏவுகணை அமைப்பு வாங்கும் ஒப்பந்தம், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்திய ராணுவத்திற்காக கையெழுத்தானது; இது S-400 ஏவுகணைக்கு பின் இந்தியாவின் ஆயுதக் கிடங்கில் சேர்க்கப்பட்ட மற்றொரு ரஷ்ய தளவாடமாகும் மற்றும் ‘மிஷன் சுதர்சன் சக்ரா’ திட்டத்தின் கீழ் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். 2S6 துங்குஸ்கா அமைப்பு நான்கு பேர் கொண்ட குழுவால் இயக்கப்பட்டு, குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது; இதன் 30 மிமீ துப்பாக்கிகள் நிமிடத்திற்கு 5,000 சுற்றுகள் வரை சுடும் திறன் கொண்டவை மற்றும் ஏவுகணைகள் 8 கிமீ தூரம் வரை செல்லும். மேலும், ₹413 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் Boeing Defence India நிறுவனத்துடன் கையெழுத்தாகி, இந்திய கடற்படை பயன்படுத்தும் P-8I நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானங்களின் பராமரிப்பு மற்றும் ஆய்வை மேம்படுத்துகிறது.

வங்கிகள் மற்றும் பைன் லேப்ஸிற்கு RBI அபராதம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), விதிமுறைகளை மீறியதற்காக Union Bank of India, Bank of India, Central Bank of India மற்றும் Pine Labs நிறுவனங்களுக்கு மும்பையில் அபராதம் விதித்துள்ளது. இதில், Union Bank of Indiaக்கு ₹95.4 லட்சம், Central Bank of Indiaக்கு ₹63.6 லட்சம், Bank of Indiaக்கு ₹58.5 லட்சம், மற்றும் Pine Labsக்கு ₹3.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Union Bank of India, அங்கீகரிக்கப்படாத மின்னணு பரிவர்த்தனைகளுக்கு 10 வேலை நாட்களுக்குள் தொகை திருப்பி வழங்காதது, 24×7 புகார் பதிவு வசதி இல்லாமை, மற்றும் KCC கணக்குகளில் System-based Asset Classification செயல்முறையில் மேனுவல் தலையீடு காரணமாக அபராதத்திற்கு உள்ளானது. Central Bank of India, KYC விவரங்களை Central KYC Records Registry-ல் காலக்கெடுவுக்குள் பதிவேற்றாததற்காகவும், Bank of India, முன்னுரிமைத் துறை கடன்களில் கட்டண வசூல் மற்றும் முதிர்வு காலத்திற்குப் பிறகு டெபாசிட் வட்டி வழங்காதது காரணமாகவும் அபராதம் பெற்றது. Pine Labs, Full-KYC Prepaid Payment Instruments (PPI) வழங்கும்போது முழுமையான KYC சரிபார்ப்பு செய்யாததால் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜப்பான் ODA கடன் – இந்திய திட்டங்கள்

ஜப்பான் அரசு, இந்தியாவில் நகர்ப்புற போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் விவசாயம் தொடர்பான திட்டங்களுக்கு ¥275.858 பில்லியன் (₹16,420 கோடி) மதிப்பிலான அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவி (ODA) கடன் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது; இந்த திட்டங்கள் பஞ்சாப், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மார்ச் 24 அன்று இந்திய நிதி அமைச்சக பொருளாதார விவகாரங்கள் துறை இணைச் செயலாளர் அலோக் திவாரி மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கீச்சி ஓனோ ஆகியோருக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த திட்டங்களில் பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் (கட்டம் 3)¥102.480 பில்லியன், மும்பை மெட்ரோ லைன் 11¥92.400 பில்லியன், மகாராஷ்டிராவில் உயர்தர சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி மேம்பாட்டு திட்டம்¥62.294 பில்லியன், மற்றும் பஞ்சாப்பில் நிலையான தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம்¥18.684 பில்லியன் அடங்கும். இந்த திட்டங்கள் பொது போக்குவரத்து விரிவாக்கம், சுகாதார கட்டமைப்பு மேம்பாடு, மற்றும் நிலையான வேளாண் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஜெய்சங்கரின் இருதரப்பு சந்திப்புகள்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்த சந்திப்பில் மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் அதன் உலகளாவிய பொருளாதார தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. மார்கோ ரூபியோவுடன் நடைபெற்றது, பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மோதலுக்கு பின்னர் இரண்டாவது சந்திப்பு ஆகும். அனிதா ஆனந்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வர்த்தகம், முக்கிய தாதுக்கள், விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டது. இந்த மேடையில், இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சில் (UNSC) சீர்திருத்தம், உலகளாவிய நிர்வாக மாற்றங்கள், மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகள் மேம்பாடு ஆகியவற்றை வலியுறுத்தியது. மேலும், குளோபல் சவுத் நாடுகளின் கவலைகளான எரிசக்தி சவால்கள், உர விநியோகம், உணவுப் பாதுகாப்பு ஆகியவை முன்வைக்கப்பட்டன. உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) கடந்து செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பின் அவசியம் குறிப்பிடப்பட்டது.

G7 என்றால் என்ன? அது எப்போது உருவாக்கப்பட்டது?

· ஜி7 (Group of Seven) என்பது உலகின் முன்னணி மேம்பட்ட பொருளாதார நாடுகளின் அங்கீகரிக்கப்படாத கூட்டமைப்பாகும்.

· இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் (UK), அமெரிக்கா ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடம்பெறுகின்றன.

· இது 1975 ஆம் ஆண்டு G6 ஆக (பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், UK, அமெரிக்கா) தொடங்கப்பட்டது; பின்னர் 1976 ஆம் ஆண்டு கனடா இணைந்ததால் G7 ஆக மாறியது.

· இந்த குழு ஆண்டுதோறும் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளைப் பற்றி ஆலோசிக்கிறது.

ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2026

ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2026மக்களவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜித்தன் பிரசாதா அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா, இந்தியாவின் ஒழுங்குமுறை அமைப்பை எளிதாக்கவும், இணக்கச் சுமையை குறைக்கவும் முன்மொழிகிறது. இது 23 அமைச்சகங்கள் நிர்வகிக்கும் 79 மத்திய சட்டங்களில் உள்ள 784 விதிமுறைகளைத் திருத்த முனைகிறது. இதில் முக்கியமாக 717 விதிமுறைகள் குற்றமற்றதாக்கப்படுகின்றன, அதாவது குற்றவியல் தண்டனைகள் சிவில் அல்லது நிர்வாக நடவடிக்கைகளாக மாற்றப்படுகின்றன. மேலும், இந்த மசோதா 1000-க்கும் மேற்பட்ட குற்றங்களை முறைப்படுத்தவும், காலாவதியான மற்றும் தேவையற்ற விதிமுறைகளை நீக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சிறிய மற்றும் தொழில்நுட்ப தவறுகளுக்கான வழக்குத் தொடர்வை குறைத்து, சாதகமான வணிக சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

நேட்ஹெல்த் (NATHEALTH) தலைவர் – சங்கீதா ரெட்டி (2026–2027)

இந்திய சுகாதாரத் துறையின் உச்ச அமைப்பான நேட்ஹெல்த் (NATHEALTH), அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் சங்கீதா ரெட்டியை 2026–2027 நிதியாண்டிற்கான தலைவராக நியமித்துள்ளது. அவர், மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரதாரர் மற்றும் நிர்வாகத் தலைவர் அமீரா ஷாவைத் தொடர்ந்து இந்தப் பொறுப்பை ஏற்கிறார். இந்த அறிவிப்பு 12-வது நேட்ஹெல்த் ‘ஆரோக்கிய பாரத்’ வருடாந்திர உச்சி மாநாடு 2026க்கு பின்னர் நடைபெற்ற வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. புதிய தலைமைத்துவக் குழுவில் பாலி மெடிக்யூர் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஹிமான்ஷு பெய்ட் மூத்த துணைத் தலைவராகவும், குவாலிட்டி கேர் இந்தியா லிமிடெட் குழும மேலாண்மை இயக்குநர் வருண் கண்ணா துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேட்ஹெல்த் அமைப்பு சுகாதார சேவை வழங்குநர்கள், மருத்துவ தொழில்நுட்ப வழங்குநர்கள், கண்டறியும் சேவை வழங்குநர்கள், சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஆகியோரைக் கொண்ட பொதுத் தளமாக செயல்படுகிறது.

தமிழக மாநில மனநல சுகாதார ஒழுங்குமுறை விதிகள், 2026 (வரைவு)

தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநில மனநல சுகாதார ஒழுங்குமுறை விதிகள், 2026 (வரைவு), மனநல சிகிச்சை நிறுவனங்களில் (MHEs) வழங்கப்படும் சேவைகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்து வகுத்துள்ளது. இந்த விதிகள் படி, உள்நோயாளிகளுக்கு உடல், மன, பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறை இருக்கக்கூடாது. தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (TNSMHA) மாநிலத்தில் பணிபுரியும் மனநல நிபுணர்களின் பதிவேட்டை மாதந்தோறும் புதுப்பித்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 அன்று மாவட்ட வாரியான பட்டியலை வெளியிடும். மனநல நிறுவனங்கள் 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: பிரிவு A (தனித்த MHEs), பிரிவு B (மருத்துவக் கல்லூரி மனநலத் துறைகள்), பிரிவு C (பன்னோக்கு மருத்துவமனைகளின் மனநல வார்டுகள்), பிரிவு D (போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள்), பிரிவு E (உளவியல் சமூக மறுவாழ்வு மையங்கள்). கட்டமைப்பு விதிகளில் மின்விசிறி-படுக்கை விகிதம் 1:4, கழிப்பறை 1:8, குளியலறை 1:10, மற்றும் படுக்கைகளுக்கு இடையிலான குறைந்தபட்ச தூரம் 1 மீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது; மேலும் ஆண், பெண், பாலின சார்பற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் வழங்கப்பட வேண்டும். உடல்ரீதியான கட்டுப்பாடு அவசியமான சூழலில் மட்டும் மனநல மருத்துவர் அனுமதியுடன் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் பதிவு செய்யப்பட வேண்டும்; 24 மணி நேரத்திற்குள் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஏப்ரல் 30, 2026க்குள் சமர்ப்பிக்கலாம்.

TNPSC தேர்வில் முன்னிலை பெற தினசரி பொது அறிவு ஒரே App-ல்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-03-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-03-2026

சமகால இணைப்புகள்