TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06-03-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06-03-2026
தேசியச் செய்திகள்
மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்
மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 2021 செப்டம்பர் 18 அன்று தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என். ரவி, 2026 மார்ச் 5 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பின் பேரில் மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அவர்களுக்கு தமிழக ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதேவேளை, பல மாநிலங்களிலும் புதிய ஆளுநர் நியமனங்கள் செய்யப்பட்டன. ஹிமாசலப் பிரதேச ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா தெலங்கானா ஆளுநராக, தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா மகாராஷ்டிர ஆளுநராக, நந்த் கிஷோர் யாதவ் நாகாலாந்து ஆளுநராக, மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) செய்யது அடா ஹஸ்னைன் பிகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டனர். மேலும் லடாக் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா ஹிமாசலப் பிரதேச ஆளுநராக, தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்ஸேனா லடாக் துணைநிலை ஆளுநராக, மற்றும் தரன்ஜீத் சிங் சாந்து தில்லி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு செய்திகள்
அரவிந்த் தர்மாதிகாரி – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்; இந்த நியமனம் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை செய்த பின் செய்யப்பட்டது. அவர் 2026 மார்ச் 5 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா அவர்களுக்கு பின் இந்தப் பொறுப்பை ஏற்கிறார். அரவிந்த் தர்மாதிகாரி 1966 ஜூலை 8 அன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் நகரில் பிறந்தார்; நாகபுரி பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் வணிகவியல் பட்டம் பெற்றார். அவர் 1992 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், ஜபல்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டு சிவில், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு வழக்குகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். 2000 முதல் 2015 வரை மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் போன்ற துறைகளுக்காக ஆஜரானார். பின்னர் அவர் 2016 ஏப்ரல் 7 அன்று மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2018 மார்ச் 17 அன்று நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்; தொடர்ந்து 2025 ஏப்ரல் 23 அன்று கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதீஷ் குமார் – மாநிலங்களவை வேட்புமனு
பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) தலைவருமான நிதீஷ் குமார் (75), 2026 மார்ச் 5 அன்று பாட்னா நகரில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தார். 2005 ஆம் ஆண்டிலிருந்து பீகார் முதல்வராக பதவி வகித்து வந்த அவர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீண்ட முதல்வர் காலத்துக்கு பின்னர் அந்தப் பதவியிலிருந்து விலக உள்ளார். 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டு முறையே 89 மற்றும் 85 இடங்களை கைப்பற்றின; எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக்கு 35 இடங்கள் கிடைத்தன. 2024 நவம்பர் 20 அன்று 10-ஆவது முறையாக பீகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்றார்; சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் சின்ஹா துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பீகாரில் 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 2026 மார்ச் 16 அன்று நடைபெற உள்ளது, அதற்காக JDU சார்பில் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் – 500 ஆன்மிக நூல்கள் வெளியீடு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்துச் சமய அறநிலையத் துறை (HR&CE) பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை 2026 மார்ச் 5 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்த பதிப்பகப் பிரிவு சென்னை இந்துச் சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. 2023 ஜனவரி 19 அன்று நடைபெற்ற முதல் கட்டத்தில், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி உள்ளிட்ட 180 அரிய ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன. 2025 பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத்தில், தல வரலாறு, தல புராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட 108 நூல்கள் வெளியிடப்பட்டன. 2024 ஏப்ரல் 15 அன்று நடைபெற்ற மூன்றாம் கட்டத்தில், புராணக் கதைகள் மற்றும் இதிகாச நூல்கள் உள்ளிட்ட 300 ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன; இதன் மூலம் மொத்தம் 516 அரிய ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டிருந்தன. தற்போது நான்காம் கட்டமாக, புராணங்கள், திருமுறைகள், பிரபந்தங்கள், சைவ மற்றும் வைணவ ஆய்வு நூல்கள், முக்கிய கோயில்களின் கல்வெட்டுத் தரவுகளுடன் கூடிய நூல்கள் மற்றும் கிராமத் தெய்வ வரலாறு நூல்கள் உள்ளிட்ட 500 ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்துச் சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலர் நா. முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் க. மணிவாசன், மற்றும் அறநிலையத் துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.
₹665 கோடி மீன்வளத் திட்டங்கள்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 மார்ச் 5 அன்று தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ₹665.53 கோடி மதிப்பிலான 13 புதிய திட்டப் பணிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விரிவாக்கம், தருவைக்குளம் மற்றும் வாணியக்குடி மீனவ கிராமங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், மற்றும் நெம்மேலி குப்பத்தில் மீன் இறங்குதளம் அமைப்பும் அடங்கும். தொடர்ந்து ₹100.84 கோடி மதிப்பிலான 8 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார்; இதில் ராமநாதபுரம் மாவட்டம் வளமலூரில் ₹54.02 கோடியில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கடற்பாசி உற்பத்தி பூங்கா மற்றும் பழையார் மீனவ கிராமத்தில் ₹26.26 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம் அடங்கும். தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ₹88.06 கோடியில், 60,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் 4,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கூடுதல் சேமிப்பு கிடங்குகள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் ₹26.50 கோடியில் அலையாத்தி பாதுகாப்பு மையம், மரக்காணத்தில் ₹50.30 கோடியில் சர்வதேச பறவைகள் மையம், மற்றும் கோவை காந்திபுரத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ₹167.84 கோடியில் கட்டப்பட்ட கோத்தகிரி அரசு மருத்துவமனை (நீலகிரி), அன்னூர் அரசு மருத்துவமனை (கோவை), மற்றும் கடலாடி அரசு மருத்துவமனை (ராமநாதபுரம்) ஆகிய மருத்துவமனைக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன், ₹26.62 கோடி மதிப்பிலான 2 கேத்லேப் கருவிகள், 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேனர், டெலிகோபால்ட் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ₹39.33 கோடியில் கட்டப்பட்ட 3 படப்பிடிப்புத் தளங்களுடன் கூடிய திரைப்படப் படைப்பாக்க வளாகமும் திறந்து வைக்கப்பட்டது.
கனவு இல்லம் திட்டத்தில் 3 எழுத்தாளர்களுக்கு குடியிருப்பு – முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர்வருவாய் பிரிவு (HIG) குடியிருப்புகளை மொத்தம் ₹4.58 கோடி மதிப்பில் 2026 மார்ச் 5 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்று எழுத்தாளர்களுக்கு வழங்கினார். குடியிருப்புகளை பெற்றவர்கள் செம்மொழித் தமிழ் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன், “புதிய தரிசனங்கள்” நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற பொன்னீலன், மற்றும் “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆ.இரா. வேங்கடாசலபதி ஆவர். இதன் தொடர்ச்சியாக, எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆக்கங்களின் 27 தொகுதிகள் முன்பே வெளியிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 73 தொகுதிகளையும் முதல்வர் வெளியிட்டார். மேலும் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர் வே. ஆனைமுத்து மற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் நூல்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது; அதன்படி வே.ஆனைமுத்துவின் மரபுரிமையாளர்களுக்கு ₹20 லட்சமும், ஈரோடு தமிழன்பனின் மனைவி தி.பா. சாந்தகுமாரிக்கு ₹10 லட்சமும் வழங்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (MSME) சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்; இந்தத் திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோர் அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை வங்கிக் கடன் பெறலாம். தொடர்ந்து திருச்சி உள்ளூர் திட்டப்பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டமும் மற்றும் தூத்துக்குடி உள்ளூர் திட்டப்பகுதியின் முழுமைத் திட்டமும் வெளியிடப்பட்டன.
வாட்ஸ் ஆப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை
தமிழகத்தில் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ் ஆப் மூலம் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 2026 மார்ச் 5 அன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை EMRI Green Health Services நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன; அவற்றில் 303 வாகனங்களில் உயிர் காக்கும் மேம்பட்ட மருத்துவ வசதிகள் உள்ளன. மேலும் மலைப் பகுதிகள் மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்காக 40-க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையில் 7,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்; கட்டுப்பாட்டு அறைக்கு நாள்தோறும் 10,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்படுகின்றன. ஆம்புலன்ஸ் சேவையின் சராசரி சென்றடைவு நேரம் பெருநகரங்களில் 6.59 நிமிடங்கள், நகர்ப்புறங்களில் 9.40 நிமிடங்கள், மற்றும் கிராமப்புறங்களில் 11.31 நிமிடங்கள் ஆகும்.
சர்வதேசச் செய்திகள்
நரேந்திர மோடி – பின்லாந்து அதிபர் சந்திப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் அவர்களுடன் 2026 மார்ச் 5 அன்று புது தில்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்; பின்லாந்து அதிபர் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்த சந்திப்பில் இந்தியா–பின்லாந்து உறவுகளை வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கியத் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு மற்றும் தூய எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது; மேலும் மேற்காசியா போர் மற்றும் உக்ரைன் போர் போன்ற பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள், பரஸ்பர இடப்பெயர்வு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. எண்மையமாக்கல் மற்றும் நிலைத்தன்மை துறைகளில் இந்தியா–பின்லாந்து உறவு “உத்திசார் கூட்டணி” (Strategic Partnership) என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது; இதன் கீழ் செயற்கை நுண்ணறிவு (AI), 6ஜி தொலைத்தொடர்பு, தூய எரிசக்தி மற்றும் குவாண்டம் கணினி துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும். மேலும் பாதுகாப்பு, விண்வெளி, செமிகண்டக்டர் மற்றும் முக்கியக் கனிமங்கள் துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது; இதனுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கும் முயற்சிக்கு பின்லாந்து ஆதரவு தெரிவித்தது.
மாநிலச் செய்திகள்
மாநில பொருளாதார வளர்ச்சி ஒப்பீடு (2021–2025)
2021-22 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் முக்கிய பொருளாதார மாநிலங்களான கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரம் ஆகியவற்றில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியில் கர்நாடகம் சுமார் 65% வளர்ச்சியுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது; அதன் ஜிஎஸ்டிபி ₹17.02 லட்சம் கோடியில் இருந்து ₹28.09 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இதற்கு பெங்களூரை மையமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சி முக்கிய காரணமாகும். குஜராத் சுமார் 48% வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு சுமார் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, அதன் ஜிஎஸ்டிபி ₹21.36 லட்சம் கோடியில் இருந்து ₹31.55 லட்சம் கோடியாக உயர்ந்து, மகாராஷ்டிரத்துக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது. அதே சமயம் மகாராஷ்டிரம் இந்தியாவின் மிகப் பெரிய மாநில பொருளாதாரமாக இருந்தாலும், வளர்ச்சி விகிதத்தில் சுமார் 43% வளர்ச்சியுடன் இந்த நான்கு மாநிலங்களில் குறைந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது; 2024-25 நிதியாண்டில் அதன் ஜிஎஸ்டிபி ₹42,67,771 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
3 குழந்தைகள் பெறும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை – ஆந்திரப் பிரதேச புதிய கொள்கை
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் ‘வரைவு மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை’ (Draft Population Management Policy)-யை அறிமுகப்படுத்தினார். இந்தக் கொள்கையின் நோக்கம் மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதத்தை (Total Fertility Rate – TFR) 1.5-லிருந்து 2.1 என்ற மாற்று நிலைக்கு உயர்த்துவதாகும். இந்தக் கொள்கை ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். இந்தக் கொள்கையின் கீழ் மூன்றாவது குழந்தையைப் பெறும் குடும்பங்களுக்கு பிரசவத்தின் போது ₹25,000 ஊக்கத்தொகை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி மற்றும் 18 வயது வரை குழந்தைக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்; இந்தத் திட்டம் “Poshana – Shiksha – Suraksha” தொகுப்பு என அழைக்கப்படுகிறது. இந்தக் கொள்கை 2047 ஆம் ஆண்டுக்குள் முதியோர் அதிகம் கொண்ட சமூகமாக மாறுவதைத் தவிர்க்கவும், மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியை 15% உயர்த்தவும் மற்றும் TFR-ஐ 2.1-இல் நிலைநிறுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ‘பிரகதி’ மற்றும் ‘விகாஸ்’ சின்னங்கள் அறிமுகம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான (Census 2027) சின்னங்களாக ‘பிரகதி’ மற்றும் ‘விகாஸ்’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இந்த 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கும். இதில் சுய-கணக்கெடுப்பு (Self-Enumeration) முறையும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பும் முதன்முறையாக அனுமதிக்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பிற்கான டிஜிட்டல் தளங்களை Centre for Development of Advanced Computing (C-DAC) உருவாக்கியுள்ளது. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக — Houselisting Operations (HLO) மற்றும் Population Enumeration — நடத்தப்படும். இந்த நிகழ்வில் Amit Shah அறிமுகப்படுத்திய நான்கு டிஜிட்டல் கருவிகள் Houselisting Block Creator (HLBC) web application, HLO mobile application, Self-Enumeration (SE) portal, மற்றும் Census Management and Monitoring System (CMMS) portal ஆகும். மேலும் பிரகதி (பெண் கணக்கெடுப்பாளர்) மற்றும் விகாஸ் (ஆண் கணக்கெடுப்பாளர்) ஆகிய சின்னங்கள் Census 2027-இன் நட்பு முகங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தினசரி TNPSC நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா மூலம் ரேங்க் உயர்த்துங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09-03-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05-03-2026
சமகால இணைப்புகள்
Sun Mar 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-03-2026
Sat Mar 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-03-2026
Fri Mar 27 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-03-2026
Thu Mar 26 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26-03-2026
Sat Mar 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-03-2026
Thu Mar 19 2026