TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-08-2026

Trending TNPSC

By

8 min read ·

சர்வதேசச் செய்திகள்

இந்தியா–ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு

இந்தியா மற்றும் ஜப்பான் இடையே கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் 2026 ஆகஸ்ட் 20 அன்று புது தில்லியில் கையொப்பமானது. சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்திய–பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கில் இருதரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்ஸுமி ஆகியோர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். கடற்படைக் கப்பல்களின் பரஸ்பர வருகை, கூட்டுப் பயிற்சிகள், பணியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பரிமாற்றம், துறைமுகங்களைப் பயன்படுத்துதல், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு உள்ளிட்ட தளவாட ஆதரவு ஆகியவை ஒத்துழைப்பில் அடங்கும். பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்புச் சூழல் குறித்த மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்திய–பசிபிக் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து மற்றும் வான்வழிப் பயணத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பைத் தடுக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் மற்றும் கட்டாயத்தின் மூலம் தற்போதைய நிலையை மாற்றும் முயற்சிகளுக்கு இரு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தியா–சிங்கப்பூர் 4-ஆவது அமைச்சர்கள் வட்டமேசை சந்திப்பு

இந்தியா–சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை சந்திப்பின் (ISMR) 4-ஆவது கூட்டம் 2026 ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ISMR 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜித்தின் பிரசாதா ஆகியோர் பங்கேற்றனர். வேளாண்-உணவு வர்த்தகம், கடல்சார் பாரம்பரியம், டிஜிட்டல்மயமாக்கல், திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மருத்துவம், மேம்பட்ட உற்பத்தி, இணைப்புத் திறன் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்திய அமைச்சர்கள் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களையும் சந்தித்தனர். 2025–26 நிதியாண்டில் ₹1.89 லட்சம் கோடி முதலீட்டு வரவுடன், சிங்கப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டு (FDI) ஆதாரமாக இருந்தது. 2000 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஒட்டுமொத்த FDI ₹18.64 லட்சம் கோடியாக இருந்தது. இந்தியா–சிங்கப்பூர் இடையிலான வர்த்தகம் 2004–05-ல் ₹64.15 ஆயிரம் கோடியிலிருந்து 2025–26-ல் ₹3.45 லட்சம் கோடியாக உயர்ந்தது.

தமிழ்நாடு செய்திகள்

₹7,015 கோடியில் ‘சிங்கப் பெண்’ கடன் திட்டம்

கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ் அறிவித்தபடி, பெண்களை தொழில்முனைவோராக உருவாக்க ‘சிங்கப் பெண்’ கடன் திட்டம் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ₹7,015 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகளுக்கு ₹5,000 கோடி மதிப்பில் 9% வட்டி விகிதத்தில் ஊரகத் தொழில் கடன் வழங்கப்பட உள்ளது. கூட்டுறவு நிறுவனங்களின் பொருள்களுக்கு ‘வெற்றி’ என்ற பொதுவான வணிகச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும் குறைந்தபட்சம் 5 சேவைகளை வழங்கும் வகையில் தலா ₹20 லட்சம் செலவில் தரம் உயர்த்தப்பட உள்ளன. 3,452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் ₹6.90 கோடி செலவில் நுண் தானியங்கி சாதனங்கள் நிறுவப்பட உள்ளன. விவசாயிகள் விளைபொருள்களை சந்தைப்படுத்த ₹50 கோடியில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மஞ்சள், முருங்கை, மிளகு ஆகியவை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ₹5 கோடி செலவில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. 10,000 ரேஷன் கடைகளில் UPI பணப் பரிவர்த்தனை விரிவுபடுத்தப்பட உள்ளது. தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் விவசாயிகளுக்கான நீண்டகாலக் கடன் திட்டம் ₹50 கோடியில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. TANFED மூலம் உரங்கள் மற்றும் விதைகள் விற்பனை ₹2,500 கோடியாக அதிகரிக்கப்பட உள்ளது.

தேசியச் செய்திகள்

தென்மண்டலக் குழு கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்து ஆலோசனை

மத்திய அரசின் சார்பில் 31-ஆவது தென்மண்டலக் குழு கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதல்வர் மல்லுபட்டி விக்ரமார்கா, கேரள முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. தென்மாநிலங்களின் நீண்டகால மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தலையீட்டுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா இடையேயான மாநிலங்களுக்கு இடையேயான நிலப் பிரச்சினைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து தீர்வு காண இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டன. ஊட்டச்சத்து குறைபாடு, போக்ஸோ வழக்குகளுக்கான விரைவு நீதிமன்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான மூன்று ஆண்டு செயல்திட்டம் ஆகியவையும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

தொகுதி மறுசீரமைப்பு: தென்மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க கோரிக்கை

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தென்மாநிலங்கள்: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 2026 ஆகஸ்ட் 20 அன்று சென்னையில் நடைபெற்ற தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். தென்மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30%க்கும் அதிகமாக பங்களிக்கின்றன. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னிலை வகித்த மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, மாநில எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைந்த தொழில் மண்டலங்கள், சரக்கு முனையங்கள் மற்றும் தொழில்–சரக்கு வழித்தடங்கள் அமைத்தல், பெங்களூரு பொம்மசந்திரம் முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு ஆகியவை தொடர்பான அம்சங்களும் இடம்பெற்றன. நிதிப் பகிர்வு தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் 279A(4) பிரிவு மற்றும் GST-க்குப் பிந்தைய மாநிலங்களின் வரி நிர்ணய நெகிழ்வுத்தன்மை குறித்து குறிப்பிடப்பட்டது. காவிரி நதிநீர் விவகாரம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களும் இடம்பெற்றன. கல்வித் துறையில் நீட் தேர்வு மற்றும் தமிழக மாநில ஒதுக்கீட்டின் MBBS, BDS, AYUSH இடங்களை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்புதல் தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

புற்றுநோய் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிப்

உச்சநீதிமன்றம், மீதமுள்ள 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக (Notifiable Disease) அறிவிப்பது குறித்து பரிசீலித்து உரிய முடிவை விரைவாக எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிப்பதன் மூலம் புற்றுநோய் பாதிப்பு குறித்த தரவுகளை முறையாகச் சேகரித்தல், நோய்க் கண்காணிப்பு, சிகிச்சைத் திட்டமிடல் மற்றும் பொது சுகாதாரக் கொள்கைகளை உருவாக்குதல் ஆகியவை மேம்படும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே புற்றுநோய் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு 2018-ஆம் ஆண்டிலேயே புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்தது. புற்றுநோய் ஒரு தொற்றா நோய் ஆகும்; அரசமைப்புச் சட்டத்தின்படி சுகாதாரம் மாநிலப் பட்டியலில் முதன்மையாக இடம்பெற்றுள்ளது. நோய்களை அறிவிக்கும் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 16 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், சுமார் 8.70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மிசோரம், மேகாலயம், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் பாதிப்பு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; சுமார் 98 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 3.50 கோடியாக அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பாக மருத்துவர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டது. புற்றுநோய் கண்காணிப்பை வலுப்படுத்தி ஒருங்கிணைந்த எண்மப் புற்றுநோய் பதிவேட்டை (Digital Cancer Registry) உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் வழிவகுக்கிறது.

கோவளத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு

சென்னை அருகே கோவளத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தென்மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, தென்மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். 2047-ஆம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தென்னிந்திய பொருளாதாரத்தை உருவாக்கும் இலக்கு முன்வைக்கப்பட்டது. கேரள முதல்வர் வி.டி. சதீசன், முல்லைப்பெரியாறு அணை மறுகட்டுமானம் செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கான முழு நீர்ப்பங்கை வழங்க கேரளா தயாராக இருப்பதாகவும், புதிய அணையின் செலவை கேரளா ஏற்கும் என்றும் தெரிவித்தார். விழிஞ்ஞம் துறைமுகத்தை மையமாகக் கொண்டு கேரளாவை கடல்சார் பொருளாதார மையமாக மேம்படுத்துவது மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் விஜய், ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

நீட் போராட்டம் குறித்து உயர்மட்டக் குழு

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான மாணவர் போராட்டங்களின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் காவல்துறை அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் முன்னாள் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ரவிசங்கர் ஜா, முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சலேந்தர் கவுர், முன்னாள் சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லா, முன்னாள் மேகாலயா டிஜிபி எல்.ஆர். பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய் மால்யா பக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இந்த வழக்குகள் தொடர்பான மனுக்களை விசாரித்தது. போராட்டத்தின்போது காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அதிகப்படியான பலப்பிரயோகம், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல், இணையவழித் துன்புறுத்தல், காவல்துறையினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை இக்குழு விசாரித்து, இழப்பீடு தொடர்பாகப் பரிந்துரைகள் வழங்கும். குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

செனாப் ரயில் பாலத்தில் வந்தே பாரத்

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ரயில் பாலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் ஆற்றிலிருந்து 1,178 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே பாலமாகும். பிரதமர் நரேந்திர மோடி செனாப் ரயில் பாலத்தை 2025 ஜூன் 6 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜம்மு–ஸ்ரீநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவால் 2026 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் செனாப் பாலத்தில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் வேகம் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 100 கி.மீ. ஆக உயர்த்தப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்

சின்குஃப்பீல்டு கோப்பை செஸ் – பிரக்ஞானந்தாவுக்கு 2-ஆம் இடம்

இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்ற சின்குஃப்பீல்டு கோப்பை செஸ் தொடரில் இரண்டாவது இடம் பெற்றார். ஒன்பது சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா மற்றும் அமெரிக்காவின் வெஸ்லி சோ தலா 5.5 புள்ளிகள் பெற்றனர். வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட இரண்டு ரேபிட் போட்டிகளும் டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து ஆர்மகெடான் ஆட்டம் நடைபெற்றது. இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய வெஸ்லி சோ, டிரா ஏற்பட்டால் வெற்றியாகக் கருதப்படும் விதியின் அடிப்படையில் சாம்பியன் பட்டம் வென்றார். எட்டாவது சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். கிராண்ட் செஸ் டூர் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெற்றவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்: ஆர். பிரக்ஞானந்தா – 34.5 புள்ளிகள், வெஸ்லி சோ – 34.5 புள்ளிகள், ஃபேபியானோ கருவானா – 29.5 புள்ளிகள், வின்சென்ட் கீமர் – 28.5 புள்ளிகள்.

வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 22-08-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20-08-2026

சமகால இணைப்புகள்