TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 22-08-2026

Trending TNPSC

By

7 min read ·

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

14-வது பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்கள் கூட்டம்

14-வது பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்கள் கூட்டம் 2026 ஆகஸ்ட் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். 2026-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கருப்பொருள் “மீள் திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு” என்பதாகும். கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், மேம்பட்ட பொருட்கள், உயிரித் தொழில்நுட்பம், ஒளியியல், புவிசார் தொழில்நுட்பம் மற்றும் உயர் செயல்திறன் கணினி உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான புத்தாக்கச் சூழலமைப்பை உருவாக்குவதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இந்திய தனியார் விண்வெளி புத்தாக்க நிறுவனங்கள்

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்ஸெல், துருவா ஸ்பேஸ், கேலக்ஸிஐ, பியர்சைட், சேட்ஸ்யூர், மனஸ்து ஸ்பேஸ், அஸ்ட்ரோகேட், டேக்மீடூஸ்பேஸ், காஸ்மோசர்வ் ஸ்பேஸ் மற்றும் ஆர்பிட்எய்ட் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட இந்திய விண்வெளித் துறை புத்தாக்க நிறுவனங்களின் CEO-நிறுவனர்கள் பிரதமருடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்நிறுவனங்கள் ராக்கெட் தயாரிப்பு, வானூர்தி மின்னணுவியல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம், அதிநவீன உந்துவிசை அமைப்புகள், பாதுகாப்பு உளவு கண்காணிப்பு, விண்வெளிக் கழிவுகள் அகற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வானிலை கணிப்பு உள்ளிட்ட துறைகளில் செயல்படுகின்றன. இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை வளர்ச்சி, உள்நாட்டுத் தொழில்நுட்ப உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை கலந்துரையாடலில் முக்கியமாக இடம்பெற்றன.

சர்வதேசச் செய்திகள்

உல்ச்சி ஃபிரீடம் ஷீல்டு ராணுவப் பயிற்சி

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் ‘உல்ச்சி ஃபிரீடம் ஷீல்டு’ கூட்டு ராணுவப் பயிற்சி 2026 ஆகஸ்ட் 21-ஆம் தேதி, திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்கு 6 நாட்களுக்கு முன்னதாக நிறைவடைந்தது. ஆகஸ்ட் 17, 2026 அன்று தொடங்கிய இப்பயிற்சி, வட கொரியாவின் சாத்தியமான தாக்குதல்களை எதிர்கொள்ளும் இரு நாடுகளின் ராணுவத் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. முதலில் 11 நாட்கள் இரு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்ட இப்பயிற்சியில் தற்காப்பு மற்றும் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன; இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 27 வரை நடைபெற திட்டமிடப்பட்டது. திட்டமிடப்பட்ட கூட்டு களப் பயிற்சிகளின் எண்ணிக்கை 14-லிருந்து 7 ஆக குறைக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த வட கொரியா, சுமார் 10 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கடலை நோக்கி ஏவி சோதனை நடத்தியது.

தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரலாறு

எஸ். ஜெயசீல ஸ்டீபன் எழுதிய “மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: சாதிவாரி முறையில் அடையாள வேறுபாடுகளும் முரண்பாடுகளும்” என்ற நூல், ந.மு. தமிழ்மணி மொழிபெயர்ப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தரங்கம்பாடியில் 1790-ஆம் ஆண்டு முதன்முதலாக மக்கள்தொகை, தொழில் மற்றும் வீடமைப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன; சாதி, மதம், மொழி மற்றும் அடிமை முறை தொடர்பான தகவல்களும் பதிவுசெய்யப்பட்டன. சமூக அளவீட்டின் அடிப்படையில் வீடுகள் குறித்த முதல் புள்ளிவிவர ஆய்வு 1702-ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 1822-ஆம் ஆண்டு மக்கள்தொகை அளவீடுகள் தொடங்கின; 1830–31, 1836–37 ஆகிய ஆண்டுகளில் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. 1843 முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் நடைமுறை தொடங்கியது. 1871-ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தரவுகள் பிரிட்டிஷ் பேரரசின் புள்ளிவிவரங்களுடன் இணைக்கப்பட்டன. 1871 கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 416 தொழில்கள் பதிவாகின. 1881 கணக்கெடுப்பில் 17 சாதிப் பிரிவுகளும் 76 துணைப் பிரிவுகளும் குறிப்பிடப்பட்டன. தமிழ் பேசும் பகுதிகளில் முதன்முறையாக சாதிப் பட்டியல் 1891-ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது; 1901-ஆம் ஆண்டு தொழில் விவரங்களுடன் கூடிய சாதிச் சொற்களஞ்சியம் வெளியிடப்பட்டது. 1921-ஆம் ஆண்டு, சாதியை இனவியல் அடிப்படையில் அல்லாமல் சமூக மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் அணுகும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. “பட்டியல் சாதிகள்” என்ற சொல் 1932-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமானது மற்றும் 1935-ஆம் ஆண்டு இந்தியச் சட்டத்தில் இடம்பெற்றது. இந்நூல் டேனிஷ் தரங்கம்பாடி (1790–1834), பிரெஞ்சு புதுச்சேரி மற்றும் காரைக்கால் (1822–1825), பிரிட்டிஷ் சென்னை மாகாணம் (1871–1941) ஆகிய பகுதிகளில் நடைபெற்ற காலனியகால மக்கள்தொகை மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்புகளைப் பதிவு செய்கிறது.

கொசஸ்தலையாற்றில் மீன் இறப்பு – விசாரணைக் குழு

சென்னையில் உள்ள கொசஸ்தலையாற்றில் மீன்கள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு, 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) சார்பில் பக்கிங்ஹாம் கால்வாய், ரயில்வே மேம்பாலக் கால்வாய், எண்ணூர் முகத்துவாரம் மற்றும் காட்டுப்பாக்கம் அனல் மின் நிலையம் அருகே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் நீரில் ஆக்ஸிஜன் செறிவு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது; தொழிற்சாலை கழிவு அல்லது எண்ணெய் படலம் கலந்திருப்பது கண்டறியப்படவில்லை, நீரின் வெப்பநிலையும் இயல்பாக இருந்தது. நீர் மற்றும் இறந்த மீன்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. மொத்தம் 2,150 கிலோ மீன்கள் இறந்ததாகக் கண்டறியப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் உதவியுடன் அவை அகற்றப்பட்டன. விசாரணைக் குழுவில் மீன்வளத்துறை இணை இயக்குநர், மீன்வளக் கல்லூரி பேராசிரியர், TNPCB அதிகாரி மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் இடம்பெற்றுள்ளனர்.

மாவட்ட நீதிபதி தேர்வு – வழக்கறிஞர் பணி அனுபவம்

இந்திய உச்ச நீதிமன்றம், சட்டப் பட்டதாரிகள் மாவட்ட நீதிபதி பணிக்கான நீதித்துறைப் பணியாளர் தேர்வில் பங்கேற்கத் தேவையான கட்டாய வழக்கறிஞர் பணி அனுபவத்தை 3 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாக குறைத்துள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஏ.ஜி. மாசி மற்றும் கே.வி. விஸ்வநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு 2:1 பெரும்பான்மைத் தீர்ப்பு வழங்கியது. 2025 மே 25 முதல் 2027 மார்ச் 31 வரை அறிவிக்கப்படும் நீதித்துறைப் பணியாளர் தேர்வுகளுக்கு இந்த வழக்கறிஞர் பணி அனுபவ நிபந்தனை பொருந்தாது. இந்தக் காலத்தில் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நீதித்துறை அகாதமியில் 1 ஆண்டு எழுத்தர் பயிற்சியும், பின்னர் 1 ஆண்டு நீதிமன்றப் பயிற்சியும் பெற வேண்டும்; இப்பயிற்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடைபெறும். 2027 ஏப்ரல் 1-க்குப் பிறகு அறிவிக்கப்படும் தேர்வுகளுக்கு குறைந்தபட்சம் 1 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் கட்டாயமாகும். இதற்கான சான்றை குறைந்தது 10 ஆண்டுகள் பார் கவுன்சில் உறுப்பினராக உள்ள மூத்த வழக்கறிஞரிடம் இருந்து பெற வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொடர்ந்து 2 ஆண்டுகள் நீதித்துறைப் பயிற்சி கட்டாயமாகும். இந்த நடைமுறை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். நீதிபதி கே.வி. விஸ்வநாத் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாடு

தமிழக அரசு, செயற்கை நுண்ணறிவு (AI) திறன் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐசிடி அகாதெமி, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) அமைப்புகளுடன் சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) மேற்கொண்டது. இஒப்பந்தங்களின் மூலம் தொழில் துறையின் தேவைக்கேற்ற நடைமுறைப் பயிற்சிகள், சான்றிதழ் பயிற்சிகள், சிறப்பு திறன் மையங்கள் மற்றும் மாநில அளவிலான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள முக்கிய AI திட்டங்களில் AI சிறப்பு மையம், AI பல்கலைக்கழகம் மற்றும் AI நகரம் ஆகியவை அடங்கும். இந்நிகழ்வுக்கு தமிழக செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் ரா.குமார் தலைமை வகித்தார்; துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த் பங்கேற்றார்.

தேசியச் செய்திகள்

இந்தியாவின் விண்வெளித் துறை புத்தாக்க நிறுவனங்கள்

பிரதமர் நரேந்திர மோடி, 2026 ஆகஸ்ட் 21-ஆம் தேதி புது தில்லியில், விண்வெளித் துறையைச் சேர்ந்த 20 புத்தாக்க நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் (CEOs) கலந்துரையாடினார். வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. விண்வெளி புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் துறைசார் அமைப்புகள், குறிப்பாக வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்கள், இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே விண்வெளித் துறை மீதான ஆர்வத்தை ஏற்படுத்த அடல் புத்தாக்க இயக்கம் (Atal Innovation Mission – AIM) மையங்களுடன் விண்வெளி நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பு விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் புத்தாக்கம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

2026 தேசிய நல்லாசிரியர் விருது

2026-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் தேர்வு செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் எம். தங்கராஜ், புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தியாகி ஆர். சீனிவாசன் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எஸ். கணேசன் ஆகியோர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். கேந்திரிய வித்யாலயா பிரிவில் மதுரை பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் ஜெ. அமுதா தேர்வு செய்யப்பட்டார்.

மாநிலச் செய்திகள்

மேகேதாட்டு அணை – திருத்தப்பட்ட திட்ட அறிக்கை

கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர் ஆணையத்திடம் (CWC) மீண்டும் சமர்ப்பித்துள்ளது. ₹9,000 கோடி மதிப்பிலான இத்திட்டம் 67.14 டிஎம்சி நீர் சேமிப்பு திறன், 400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் மற்றும் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக 4.5 டிஎம்சி நீர் ஒதுக்கீடு ஆகியவற்றைக் கொண்டதாகும். இத்திட்டத்திற்காக 12,500 ஏக்கர் வன நிலம் பயன்படுத்தப்படுவதுடன், அப்பகுதியில் 8.90 லட்சம் மரங்கள் வெட்டப்பட வாய்ப்புள்ளது. கர்நாடக அரசு முதற்கட்ட திட்ட அறிக்கையை 2018-ஆம் ஆண்டு தாக்கல் செய்தது; 2019-ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு முரணாக இருந்ததால் CWC திருத்தம் செய்ய உத்தரவிட்டது. பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட அறிக்கை ஜூன் 29-ஆம் தேதி, காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து கர்நாடக அரசு திருத்தங்களை மேற்கொண்டு DPR-ஐ மீண்டும் CWC-யிடம் சமர்ப்பித்துள்ளது.

கேரளத்தில் ஓணம் பண்டிகை

கேரளத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, மாணவிகள் அத்தப்பூ கோலம் அமைத்து, அதைச் சுற்றி பாரம்பரிய நடனம் ஆடினர்.

உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 23-08-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-08-2026

சமகால இணைப்புகள்