TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01-07-2026

Trending TNPSC

By

11 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01-07-2026

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

கவிஞர் புவியரசு காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (சு. ஜெகந்நாதன்), ஜூன் 30 அன்று 94 வயதில் கோவையில் காலமானார். 1931 செப்டம்பர் 19 அன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள லிங்கவநாயக்கன்புதூரில் பிறந்த இவர், தனது சமஸ்கிருதப் பெயரை புவியரசு என தமிழ்ப்படுத்திக் கொண்டார். 1957 முதல் 1989 வரை கோவையில் உள்ள பல பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றினார். தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். வங்கக் கவிஞர் காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய "The Revolutionary" நூலை "புரட்சிக்காரன்" என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2007-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதும், "கையெழுத்து" கவிதைத் தொகுப்பிற்காக 2009-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதும் பெற்றார். இந்திரா பார்த்தசாரதி, சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகியோருடன், முதன்மை இலக்கியத்திற்கும் மொழிபெயர்ப்பிற்கும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக புவியரசு குறிப்பிடத்தக்கவர்.

இந்திய ராணுவத்தின் 31-ஆவது தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பதவியேற்பு

ஜெனரல் தீரஜ் சேத், 30 ஜூன் 2026 அன்று இந்திய ராணுவத்தின் 31-ஆவது தலைமைத் தளபதியாக (Chief of Army Staff) பதவியேற்றார். அவர், 30-ஆவது ராணுவ தலைமைத் தளபதியாக பணியாற்றிய ஜெனரல் உபேந்திர துவிவேதியைத் தொடர்ந்து இப்பொறுப்பை ஏற்றார். பதவியேற்பதற்கு முன்பு ராணுவ துணை தலைமைத் தளபதியாக (Vice Chief of Army Staff) பணியாற்றிய தீரஜ் சேத், 40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவப் பணி அனுபவம் கொண்டவர். அவர் டிசம்பர் 1986-இல் இந்திய ராணுவத்தில் இணைந்தார். மகாராஷ்டிர மாநிலம், கடக்வாஸ்லாவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் (National Defence Academy - NDA) முன்னாள் மாணவரான அவர், கவசப் படையில் (Armoured Corps) தனது பணியைத் தொடங்கினார். மேலும் பாலைவன மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகள், ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, சுதர்ஷன் சக்ரா கார்ப்ஸ் (Sudarshan Chakra Corps), தென்மேற்கு மண்டலக் கட்டளை (South Western Command) மற்றும் தென்மண்டலக் கட்டளை (Southern Command) ஆகியவற்றிற்கு தலைமை தாங்கியுள்ளார். 1 ஏப்ரல் 2026 அன்று அவர் ராணுவ துணை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

தேசியச் செய்திகள்

மகேந்திரகிரியில் 175 டன் செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனையில் இஸ்ரோ வெற்றி

இஸ்ரோ, திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில், 175 டன் உந்துவிசை திறனுடைய செமி-கிரையோஜெனிக் என்ஜினின் ஹாட் டெஸ்ட் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்தச் சோதனை 88% உந்துவிசை திறனில் நடைபெற்றது. இதற்கு முன் 47% (94 டன்) மற்றும் 60% (120 டன்) உந்துவிசை திறனில் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தன. இந்த வெற்றியைத் தொடர்ந்து 100% உந்துவிசை திறன் கொண்ட 200 டன் என்ஜின் சோதனையை மேற்கொள்ளும் அடுத்த கட்டத்திற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், எல்.வி.எம்.3 (LVM3) ராக்கெட்டின் L110 Core Stage-க்கு மாற்றாக 2,000 கிலோநியூட்டன் திறன் கொண்ட SC200 என்ஜின் மூலம் இயங்கும் SC120 செமி-கிரையோஜெனிக் ப்ரோபல்ஷன் ஸ்டேஜ் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் திரவ ஆக்ஸிஜன் (Liquid Oxygen) மற்றும் இஸ்ரோசின் (Isrosene) ஆகியவை எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப மேம்பாடு LVM3 ராக்கெட்டின் செயல்திறன் மற்றும் பயன்சுமை திறனை உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியின் பகுதிநேர தலைவராக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நியமனம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, முன்னாள் நிதிச் செயலரும், இந்தியாவின் 25-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையருமான ராஜீவ் குமார் அவர்களை புதிய பகுதிநேர தலைவராக நியமித்துள்ளது. இவர், மார்ச் 2026-இல் பதவி விலகிய அதானு சக்ரவர்த்திக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியின் இயக்குநர்கள் குழு, ராஜீவ் குமார் அவர்களை 4 ஆண்டுகளுக்கு சுயாதீன இயக்குநராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், 3 ஆண்டுகளுக்கு பகுதிநேர தலைவராக நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI)-யின் இறுதி ஒப்புதலுக்காக விண்ணப்பித்துள்ளது. ராஜீவ் குமார், 2024 மக்களவைத் தேர்தலை இந்தியாவின் 25-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக வெற்றிகரமாக நடத்தினார். மேலும், 2017–2020 காலகட்டத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறைச் செயலராக பணியாற்றிய அவர், பொதுத்துறை வங்கிகளில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு, 27 பொதுத்துறை வங்கிகளை 12 வங்கிகளாக இணைக்கும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றினார்.

மாணவர்களின் மனநலன் குறித்து உச்சநீதிமன்ற செயற்குழு ஆய்வு

மாணவர்களின் மனநலன் மற்றும் மாணவர் தற்கொலைகளை குறைக்கும் நோக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த செயற்குழு, மே 2025 முதல் 10 மாநிலங்களில் உள்ள 30 உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் 25 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்தக் கூட்டங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதியப் பாகுபாடு, பாலினம் மற்றும் மனநலம், மாணவர் தற்கொலைகள், பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தற்கொலையைக் குற்றமற்றதாக்குதல் தொடர்பான விவகாரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தச் செயற்குழு, மாணவர் தற்கொலைகளுக்கான காரணங்களை கண்டறிந்து, தொடர்புடைய சட்டங்கள், கொள்கைகள், நடைமுறையில் உள்ள சட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்யும் சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைகளை வழங்க உள்ளது.

இந்திய செமிகண்டக்டர் திட்டம் 2.0-க்கு ₹1.25 லட்சம் கோடி ஒதுக்கீட்டு முன்மொழிவு

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவின நிதிக் குழு (Expenditure Finance Committee – EFC), இந்திய செமிகண்டக்டர் திட்டம் (India Semiconductor Mission – ISM) 2.0-க்கு ₹1.25 லட்சம் கோடி ஒதுக்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்மொழிவு அடுத்ததாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. இந்திய செமிகண்டக்டர் திட்டம் (ISM) 1.0-க்கு ₹76,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. 2026–27 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ISM 2.0, இந்தியாவில் சிப் உற்பத்திச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டு சிப் வடிவமைப்பு, சிப் தயாரிப்பு, மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இத்திட்டத்தின் முக்கிய முன்னுரிமைகளை ஏற்கனவே அறிவித்துள்ளார்.

மாநிலச் செய்திகள்

விழிஞ்ஞம் துறைமுகத்தில் 49% பங்குகளை வாங்கும் எம்எஸ்சி

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த எம்எஸ்சி (Mediterranean Shipping Company) நிறுவனம், கேரளத்தில் உள்ள அதானி குழுமத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் 49% பங்குகளை சுமார் 140 கோடி டாலருக்கு வாங்குகிறது. 2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் துறைமுகம், இந்தியாவின் முதல் ஆழ்கடல் சரக்கு மாற்று (Deep-Water Transshipment) துறைமுகம் ஆகும். இது ஐரோப்பா, பாரசீக வளைகுடா, மற்றும் தொலைதூர கிழக்கு நாடுகளை இணைக்கும் சர்வதேச கடல் வணிகப் பாதையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. தற்போது ஆண்டுக்கு 16 லட்சம் கன்டெய்னர்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தத் துறைமுகம், 2029-க்குள் தனது திறனை 3.5 மடங்கு உயர்த்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த முதலீடு, இந்திய துறைமுகத் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அந்நிய தனியார் முதலீடாக கருதப்படுகிறது.

கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடக்கம்

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (Special Intensive Revision of Electoral Rolls – SRER) ஒரு பகுதியாக, 30 ஜூன் 2026 முதல் கர்நாடகத்தில் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தகுதியான வாக்காளர்களின் விவரங்களை புதுப்பிக்கும் வகையில் ஒரு மாத காலம் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தேவையான ஆவணங்களுடன் தனது வாக்காளர் சரிபார்ப்புப் படிவத்தை தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கி இந்த நடவடிக்கையில் பங்கேற்றார். இதேபோல், தில்லியிலும் SRER பணிகள் தொடங்கப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers – BLOs) வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்புப் படிவங்களை விநியோகித்தனர்.

தென்மேற்குப் பருவமழை தாமதத்தால் காரீஃப் விதைப்பு குறைவு

தென்மேற்குப் பருவமழை தாமதமானதால், ஜூன் 2026 இறுதிவரை நாடு முழுவதும் காரீஃப் பருவப் பயிர்களின் விதைப்பு 23% குறைந்து 182.72 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 236.46 லட்சம் ஹெக்டேரில் விதைப்பு நடைபெற்றதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களின் விதைப்புப் பரப்பளவு குறைந்துள்ளது. 25 ஜூன் 2026 நிலவரப்படி, நெல் விதைப்பு 25.17%, பருப்பு வகைகள் 30.47%, எண்ணெய் வித்துக்கள் 53.33% குறைந்துள்ளன. அதேசமயம் கரும்பு மற்றும் சணல் சாகுபடிப் பரப்பளவு சற்றே அதிகரித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட தகவலின்படி, 24 ஜூன் 2026 நிலவரப்படி நாடு முழுவதும் மழைப்பொழிவு இயல்பைவிட 42% குறைவாக இருந்தது; இதில் மத்திய இந்தியாவில் அதிகபட்சமாக 59% மழைப்பற்றாக்குறை பதிவானது. பசிபிக் பெருங்கடலின் பூமத்தியரேகைப் பகுதியில் எல் நினோ (El Niño) நிலை நிலவுவதுடன், அது செப்டம்பர் வரை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் அணைகளில் மொத்த கொள்ளளவில் 26% மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

சர்வதேசச் செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் ‘யூஸர்நேம்’ வசதி அறிமுகம்

வாட்ஸ்ஆப் செயலியில், தொலைபேசி எண்ணைப் பகிராமல் தகவல் பரிமாற உதவும் 'யூஸர்நேம்' வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதி 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், பயனர்கள் தங்களின் விருப்பமான பெயர்களை முன்பதிவு செய்யும் வசதியை நிறுவனம் தொடங்கியுள்ளது. பயனர்கள் Settings → Account → Username வழியாக தங்களின் யூஸர்நேம்-ஐ முன்பதிவு செய்யலாம். இந்த வசதி பயனர்களின் தனியுரிமையை (Privacy) பாதுகாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படுவதுடன், பொதுவான யூஸர்நேம் தேடல் பட்டியல் எதுவும் இருக்காது என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. ஒருவரைத் தொடர்புகொள்ள அவரது சரியான யூஸர்நேம் தெரிந்திருக்க வேண்டும். உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்ஆப், இந்த வசதி தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் பயனர்களின் செயலியில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் எபோலா பரவல் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபை (UN), காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா தொற்றால் ஆப்பிரிக்காவிற்கு US$3.6 பில்லியன் வரை பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது. 15 மே 2026 முதல் பரவி வரும் புண்டிபுகியோ (Bundibugyo) வகை எபோலா தொற்றால் இதுவரை 1,307 பேர் பாதிக்கப்பட்டு 377 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வகை எபோலாவிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது நிலையான சிகிச்சையோ இல்லை. தொற்று உகாண்டா வரை பரவியுள்ளதுடன், காங்கோவில் இருந்து திரும்பிய பிரான்ஸ் மருத்துவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தெற்கு சூடான், ருவாண்டா, மற்றும் அங்கோலா நாடுகளுக்கும் பரவக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த காங்கோ ஜனநாயகக் குடியரசின் உள்துறை அமைச்சகம், கின்ஷாசா மற்றும் பிற மாகாணங்களில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. அதிபர் பெலிக்ஸ் ஷிசேகெடி, எபோலா தொற்றை எதிர்கொள்ள US$319 மில்லியன் மதிப்பிலான அவசரகால திட்டத்தை அறிவித்துள்ளார்.

கிரீஸில் இந்தியாவின் யுபிஐ சேவை அறிமுகம்

இந்தியாவின் யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை, கிரீஸ் நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரீஸ், இந்தியாவின் UPI சேவையை ஏற்றுக்கொண்ட 10-ஆவது நாடாக மாறியுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்த அறிமுகம் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையை உலகளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள Galeries Lafayette விற்பனை நிலையத்திலும், 2024-ஆம் ஆண்டு பாரிஸ் நகரிலும் UPI சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. கிரீஸ் தவிர, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பிரான்ஸ், மொரீஷியஸ், நேபாளம், பூடான், கத்தார், இலங்கை, மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளிலும் UPI சேவை கிடைக்கிறது.

ஜப்பான் பிரதமர் சனையே தகாய்ச்சி இந்தியா பயணம்

ஜப்பான் பிரதமர் சனையே தகாய்ச்சி, 1 முதல் 3 ஜூலை 2026 வரை இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, 2 ஜூலை 2026 அன்று புது தில்லியில், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆகஸ்ட் 2025-இல் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தின்போது அறிவிக்கப்பட்ட அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்தியா–ஜப்பான் கூட்டு தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடு, புத்தாக்கம் மற்றும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் விவாதிக்க உள்ளன. அந்தப் பயணத்தின்போது, இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 டிரில்லியன் யென் (சுமார் ₹5.82 லட்சம் கோடி) முதலீடு செய்ய ஜப்பான் அறிவித்தது. இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் சிறப்பு உத்திசார் உலகளாவிய கூட்டுறவு (Special Strategic and Global Partnership) உறவைப் பகிர்ந்து வருகின்றன.

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

அமெரிக்க உச்சநீதிமன்றம், அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது திருத்தம் வழங்கும் பிறப்புரிமை குடியுரிமையை உறுதி செய்து, சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக ஆணையை நீதிமன்றம் ரத்து செய்தது. நியூ ஹாம்ப்ஷயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வில் 6:3 பெரும்பான்மை அடிப்படையில் 91 பக்கத் தீர்ப்பை வழங்கியது. 14-ஆவது திருத்தத்தின்படி, வெளிநாட்டு தூதர்களின் குழந்தைகள் மற்றும் அமெரிக்காவை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு ராணுவப் படையினரின் குழந்தைகள் தவிர, நாட்டில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும்.

விளையாட்டுச் செய்திகள்

65-ஆவது தேசிய தடகளப் போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்

ஒடிஸா மாநிலம், புவனேசுவரம் நகரிலுள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற 65-ஆவது மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழகம் 9 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்றது. பிரவீண் சித்திரவேல், ஆடவர் மும்முறை தாண்டுதல் போட்டியில் 16.92 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். ஜெஸ்வின் ஆல்ட்ரின் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோரும் தத்தமது பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றனர். உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், ஹரியாணா மூன்றாவது இடத்தையும், கேரளம் நான்காவது இடத்தையும், மகாராஷ்டிரம் ஐந்தாவது இடத்தையும் பெற்றன.

பொருளாதாரச் செய்திகள்

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் $762.8 பில்லியனாக உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 2026 நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் $762.8 பில்லியன் (₹72.08 லட்சம் கோடி) ஆக உயர்ந்துள்ளது. இது மார்ச் 2025-இல் பதிவான $736.3 பில்லியன் (₹69.58 லட்சம் கோடி) என்பதிலிருந்து அதிகமாகும். அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வால் இந்திய ரூபாய் மற்றும் பிற நாணயங்களின் மதிப்பு பாதிக்கப்பட்டது இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெளிநாட்டுக் கடனின் விகிதம் மார்ச் 2025-இல் 19.8% ஆக இருந்த நிலையில், மார்ச் 2026-இல் 20.8% ஆக உயர்ந்துள்ளது. ஓராண்டுக்கு மேற்பட்ட கால அவகாசம் கொண்ட நீண்டகால வெளிநாட்டுக் கடன் $613.5 பில்லியன் (₹58 லட்சம் கோடி) ஆக இருந்தது. வெளிநாட்டுக் கடனில் அமெரிக்க டாலரின் பங்கு 55.5%, இந்திய ரூபாயின் பங்கு 29.4%, மற்றும் ஜப்பான் யென்னின் பங்கு 6.4% ஆக உள்ளது. மேலும், அரசின் வெளிநாட்டுக் கடன் பங்கு குறைந்துள்ளதுடன், அரசு சாரா வெளிநாட்டுக் கடன் அதிகரித்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு செய்திகள்

விபி-ஜி ராம் ஜி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அமல்

தமிழக அரசு, 1 ஜூலை 2026 முதல் வளர்ச்சியடைந்த பாரதம் – ஊரக வேலை மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி)-யை அரசிதழ் அறிவிப்பு மூலம் அமல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு (MGNREGS) மாற்றாக விபி-ஜி ராம் ஜி சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 ஜூலை 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் வழங்கப்படும் வேலைவாய்ப்பு 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 2026–27 நிதியாண்டிற்கு, மத்திய அரசு இத்திட்டத்திற்காக ₹95,692.31 கோடி ஒதுக்கியுள்ளது. திட்ட நிதி மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு ₹7,957.57 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழக அரசு ₹5,305.04 கோடி பங்களிக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) புதிய கணக்கைத் தொடங்கியுள்ளது.

TNPSC தேர்வில் முன்னிலை பெற தினசரி பொது அறிவு ஒரே App-ல்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02-07-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 30-06-2026

சமகால இணைப்புகள்