TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 27-09-2026
தமிழ்நாடு செய்திகள்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – தொடக்கம்
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 2026 செப்டம்பர் 28 அன்று மதுரையில் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2026 ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் முதல்கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, ரூ.10.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். அங்கு பாதுகாக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருள்களையும் அவர் பார்வையிடுகிறார்.
அண்ணா பல்கலைக்கழகம் – போயிங் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்
அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி வளாக விண்வெளிப் பொறியியல் துறை மற்றும் போயிங் இந்தியா நிறுவனம் இணைந்து விண்வெளியில் எரியக்கூடிய தன்மை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான ஆய்வகத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் எம்ஐடி வளாக விண்வெளிப் பொறியியல் துறைத் தலைவர் சி. செந்தில்குமார் மற்றும் போயிங் இந்தியா நிறுவன மேலாளர் எம். அமிர்த கணேசன் ஆகியோர் கையொப்பமிட்டனர். அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வி. குமரேசன் மற்றும் முனைவர் எம். சந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வகத்தில் விண்வெளியில் எரியக்கூடிய தன்மை, எரியக்கூடிய தன்மை அறிவியல், பரிசோதனை முறைகள் மற்றும் தீ பாதுகாப்பு தொடர்பான கற்றல் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், விண்வெளி மற்றும் விமானத் துறைக்கு தேவையான திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்கவும், விண்வெளிப் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியை மேம்படுத்தவும் இந்த ஆய்வகம் பயன்படும்.
அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகம் முதலிடம்
2026–27 நிதியாண்டின் ஏப்ரல்–ஜூன் முதல் காலாண்டில், ₹55,900 கோடி (5.95 பில்லியன் டாலர்) அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்து தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரம் ₹39,800 கோடி முதலீட்டுடன் இரண்டாம் இடத்திலும், தில்லி ₹25,203 கோடி முதலீட்டுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. துறை வாரியாக, சேவைத் துறை 7.04 பில்லியன் டாலர் முதலீட்டுடன் முதலிடத்திலும், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை 2.84 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்திலும், வர்த்தகத் துறை 1.92 பில்லியன் டாலருடன் மூன்றாம் இடத்திலும், மரபுசாரா எரிசக்தித் துறை 1.24 பில்லியன் டாலருடன் நான்காம் இடத்திலும் உள்ளன. முதலீடு செய்த நாடுகளில் ஜப்பான் 5.71 பில்லியன் டாலர் முதலீட்டுடன் முதலிடத்திலும், சிங்கப்பூர் 5.22 பில்லியன் டாலர், மோரீஷஸ் 2.31 பில்லியன் டாலர், அமெரிக்கா 1.34 பில்லியன் டாலர் முதலீட்டுடனும் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீடு 30.65 பில்லியன் டாலராக இருந்தது.
தேசியச் செய்திகள்
ஐஐடி மெட்ராஸ் – யூனிகார்ன் இந்தியா ஸ்டார்ட்அப் நிதியம்
சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் யூனிகார்ன் இந்தியா வென்ச்சர்ஸ் இணைந்து ஆழ்தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியத்தைத் தொடங்கியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 செப்டம்பர் 26 அன்று பெங்களூரில் நடைபெற்ற சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் இத்திட்டத்திற்கான நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை மூலதனம் திரட்டப்பட உள்ளது. புத்தாக்கத் தொழில்முனைவு மூலதன நிதியத்தின் முதல்கட்ட அதிகபட்ச நிதி ஒதுக்கீடு ரூ.1,000 கோடி ஆகும். சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் இத்திட்டத்தில் ரூ.150 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். நிதியுதவி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பட்டியலை சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி வெளியிட்டார். சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா தலைமைச் செயல் அதிகாரி நடராஜன் மனுப்பிள்ளை இந்நிதியம் 24 முதல் 30 நிறுவனங்களுக்கு மூலதன ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்தார்.
நான்கு மாபெரும் துறைமுகங்கள் அறிவிப்பு
மத்திய அரசு குஜராத்தில் உள்ள தீனதயாள் துறைமுகம், அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகம், மகாராஷ்டிரத்தில் உள்ள ஜவாஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் ஒடிஸாவில் உள்ள பாரதீப் துறைமுகம் ஆகியவற்றை மாபெரும் துறைமுகங்களாக அறிவித்துள்ளது. இந்திய துறைமுகங்கள் சட்டம், 2025-இன் பிரிவு 73(1)-ன் கீழ், ஒரு துறைமுகத்தை மாபெரும் துறைமுகமாக வகைப்படுத்துவதற்கான தகுதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையின்படி, தீனதயாள், ஜவாஹர்லால் நேரு, பாரதீப் மற்றும் முந்த்ரா துறைமுகங்கள் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளன. இந்தியாவில் தற்போது 12 முக்கியத் துறைமுகங்கள் உள்ளன: தீனதயாள், மும்பை, மொர்முகாவ், புதிய மங்களூரு, கொச்சி, சென்னை, காமராஜர் (எண்ணூர்), வ.உ.சிதம்பரனார், விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தா (ஹால்தியா உட்பட), ஜவாஹர்லால் நேரு.
விளையாட்டுச் செய்திகள்
ஆசியப் போட்டி: துப்பாக்கி சுடுதல் மற்றும் ஸ்குவாஷ்
நகோயாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில், மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் அணி பிரிவில் இந்தியாவின் திலோத்தமா, விதர்ஷா வினோத் மற்றும் ஆஷி சௌக்சி ஆகியோர் 1763.90 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் அனாஹத், சடோமியை 9-11, 13-11, 12-10, 11-6, 11-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் அபய் சிங், பாகிஸ்தானின் முகமது இர்பானை 11-3, 12-10, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஜோஷ்னா சின்னப்பா – வேலவன் செந்தில்குமார் வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அரை இறுதியில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா – வேலவன் செந்தில்குமார் ஜோடி, ஹாங்காங்கின் டாங் மிங்-ஹாங் – லீ கா யி ஜோடியிடம் 10-11, 11-2, 10-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 40 வயதான ஜோஷ்னா சின்னப்பாவுக்கு இது 6-வது ஆசிய விளையாட்டுப் பதக்கம் ஆகும்; இதற்கு முன்பு அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
தஜிந்தர்பால் சிங் டூருக்கு குண்டு எறிதலில் வெள்ளி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் குண்டு எறிதல் இறுதிப் போட்டியில், இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் டூர் 20.64 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அவருடைய 3-வது ஆசிய விளையாட்டுப் பதக்கம் ஆகும். இதற்கு முன்பு அவர் 2018 மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஈரானின் முகம்மத்ரேசா தாய்பிசே 20.81 மீட்டர் தூரம் எறிந்து தங்கமும், சவுதி அரேபியாவின் முகமது தொலு 20.48 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் வென்றனர்.
ஆசிய விளையாட்டு மாரத்தானில் சவான் பர்வாலுக்கு வெள்ளி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் மாரத்தான் (42.195 கி.மீ.) போட்டியில், இந்தியாவின் சவான் பர்வால் 2 மணி 11 நிமிடங்கள் 37 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 28 வயதான சவான் பர்வால், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஆவார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு மாரத்தானில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஆசிய விளையாட்டு மாரத்தான் வரலாற்றில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை ஆகும். இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஒசூர் குக்கப்பா சீத்தாராம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 1951-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர்களான சோட்டா சிங் மற்றும் சூரத் சிங் மாத்தூர் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஜப்பானின் இச்சிதாகா யமாஷிதா 2:10:49 நேரத்தில் தங்கமும், சீனாவின் பெய் யூ ஃபெங் 2:12:13 நேரத்தில் வெண்கலமும் வென்றனர்.
400 மீட்டர் ஓட்டத்தில் பிராச்சி சவுத்ரிக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில், இந்தியாவின் பிராச்சி சவுத்ரி பந்தய தூரத்தை 53.21 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பக்ரைனின் சல்வா நாசர் 49.20 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கமும், ஈரானின் ஜஹ்ரா ஜரேய் மனோஜன் 52.38 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
கபடியில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம்
ஜப்பானின் ஐச்சி-நகோயா பகுதியில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் கபடியில் தங்கப் பதக்கங்களை வென்றது. மகளிர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஈரானை 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டதுடன், ஆசிய விளையாட்டில் மகளிர் கபடியில் 4-வது தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிர் கபடி 2010-ம் ஆண்டு குவாங்சூ ஆசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது; 2010 மற்றும் 2014-ல் இந்தியா தங்கம் வென்றது, 2018-ம் ஆண்டு ஜகார்த்தா ஆசிய விளையாட்டில் ஈரானிடம் தங்கத்தை இழந்தது, 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் மீண்டும் தங்கம் வென்றது. ஆடவர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஈரானை 40-34 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டில் கபடியில் 9-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றது. 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மட்டுமே இந்திய ஆடவர் அணி பதக்கம் வெல்லவில்லை. இந்திய அணியின் ரெய்டர்களான அர்ஜுன் தேஸ்வால் மற்றும் தேவாங்க் ஆடவர் இறுதிப் போட்டியில் முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
அஜர்பைஜான் கிராண்ட் பிரீ: ஜார்ஜ் ரஸல் வெற்றி
அஜர்பைஜான் கிராண்ட் பிரீ பார்முலா ஒன் பந்தயத்தில், மெர்சிடீஸ் அணியின் ஜார்ஜ் ரஸல் போல் பொசிஷனில் இருந்து பந்தயத்தைத் தொடங்கி, ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனை 0.196 விநாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஐசக் ஹட்ஜார் 3-வது இடத்தையும், மெர்சிடீஸ் அணியின் கிமி அன்டோனெல்லி 5-வது இடத்தையும் பிடித்தனர். ஓட்டுநர்களுக்கான சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் கிமி அன்டோனெல்லி 302 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜார்ஜ் ரஸல் 236 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருந்தனர். கட்டமைப்பாளர்களுக்கான புள்ளிப் பட்டியலில் மெர்சிடீஸ் 538 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது; தொடர்ந்து பெராரி 378, மெக்லாரன் 306 புள்ளிகளைப் பெற்றிருந்தன. ரஸல் போல் பொசிஷனில் இருந்து தொடங்கி, அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்து, அதிவேக சுற்றைப் பதிவு செய்து, கிராண்ட் பிரீயை வென்றதன் மூலம் தனது முதல் ‘செலெம்’ (Chelem) சாதனையைப் பதிவு செய்தார். மெர்சிடீஸ் அதிக வெற்றிகளைப் பெற்ற என்ஜின் உற்பத்தியாளர் என்ற சாதனையில் 251 வெற்றிகளுடன் பெராரிக்கு இணையானது. லூயிஸ் ஹாமில்டன், பாகு சிட்டி சர்க்யூட்டில் 500 சுற்றுகளை நிறைவு செய்த முதல் வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.
சர்வதேசச் செய்திகள்
அமெரிக்கா–சீனா செயற்கை நுண்ணறிவு பேச்சுக் குழு
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபாயங்கள் மற்றும் நன்மைகள் குறித்து விவாதிக்க இருதரப்பு பேச்சுக் குழுவை அமைக்கவும், AI தொடர்பான அவசரநிலைகளைக் கையாள பிரத்யேக தகவல் தொடர்பு வழியை உருவாக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் அடுத்த கூட்டம் 2026 நவம்பரில் நடைபெற உள்ளது. இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையேயான அவசரகால தகவல் தொடர்பை வலுப்படுத்தவும், நெருக்கடி தகவல் தொடர்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையொப்பமிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இருதரப்பு வர்த்தக விவகாரங்களைக் கையாள வர்த்தக வாரியம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், இரு நாடுகளும் வர்த்தகப் போர் நிறுத்தத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளன. பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வணிகப் பிரச்னைகளை ஆராய முதலீட்டு வாரியம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியைப் பின்பற்ற வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட சர்வதேச கடல் வழித்தடங்களில் எந்த நாடும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் இரு நாடுகளும் கருத்தொற்றுமை தெரிவித்துள்ளன. சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் நவம்பரில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டிலும், பின்னர் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெறும் G20 மாநாட்டிலும் சந்திக்க உள்ளனர்.
வங்கதேசம்–அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு
அமைதி வழி அணுசக்திப் பயன்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வங்கதேசம் அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையொப்பமிட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வில், வங்கதேச பிரதமரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் ரெஹ்ரான் ஆசாத் மற்றும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான இணையமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். வங்கதேசம் தனது நீண்டகால எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மின் உற்பத்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முதல் அணுமின் நிலையம் ரூப்பூரில் கட்டப்பட்டு வரும் நிலையில், அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்க அணுசக்தி ஒத்துழைப்பை மேற்கொள்ள இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. முன்னதாக, மே மாதத்தில் இரு நாடுகளும் பரந்த அளவிலான எரிசக்தித் துறை ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தன.
முக்கிய தினங்கள்
உலக சுற்றுலா தினம்
உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பொருளாதார, சமூக மற்றும் கலாசார வளர்ச்சியில் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். இத்தினத்தை ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), தற்போது UN Tourism என அழைக்கப்படுகிறது, நிறுவியது. 1980 முதல் உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1970-ஆம் ஆண்டு UNWTO சட்ட விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 27 தேர்வு செய்யப்பட்டது.
உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 28-09-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 26-09-2026
சமகால இணைப்புகள்
Fri Oct 02 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 02-10-2026
Thu Oct 01 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 01-10-2026
Wed Sep 30 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 30-09-2026
Tue Sep 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 29-09-2026
Mon Sep 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 28-09-2026
Sat Sep 26 2026