TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-06-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-06-2026
தேசியச் செய்திகள்
என்ஐஏ ஐஜியாக நியமிக்கப்பட்ட பி. சுந்தர்ராஜ்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி. சுந்தர்ராஜ், 2003 சத்தீஸ்கர் கேடர் அதிகாரியாக இருந்து, தற்போது தேசிய புலனாய்வு முகமை (NIA) ஐஜியாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 12 ஆண்டுகள் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பணியாற்றியதுடன், நக்சல் பாதிப்பு கொண்ட 7 மாவட்டங்களில் சேவை செய்துள்ளார். நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து பணியாற்றினார். 2005ஆம் ஆண்டு பஸ்தர் வனப்பகுதியில் அமைக்கப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் காட்டுப் போர் முறைப் பயிற்சிப் பள்ளியில் (Counter Insurgency and Jungle Warfare School) மேம்பட்ட கமாண்டோ பயிற்சி பெற்ற முதல் காவல் அதிகாரிகளில் பி. சுந்தர்ராஜ் ஒருவராவார். அவரது புதிய நியமனத்தைத் தொடர்ந்து, அவரை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சத்தீஸ்கர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ₹1.78 லட்சம் கோடியாக உயர்வு
பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி 2025–26 நிதியாண்டில் ₹1.78 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது 2024–25 நிதியாண்டின் ₹1.54 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 15.6% வளர்ச்சியாகும். 2020–21 நிதியாண்டில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ₹84,643 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது 110% அதிகரித்துள்ளது. 2013–14 நிதியாண்டில் ₹43,746 கோடியாக இருந்த உற்பத்தி தற்போது நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள் (DPSUs) மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 76% ஆகும். தனியார் துறையின் பங்களிப்பு 24% ஆக உயர்ந்துள்ளது; இது 2024–25 இல் 22% ஆக இருந்தது. 2025–26 நிதியாண்டில் தனியார் துறை நிறுவனங்கள் ₹42,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை தயாரித்துள்ளன. இந்த சாதனையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் மாநிலங்களின் பசுமை ஹைட்ரஜன் கொள்கைகள்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை (NGHM) வலுப்படுத்தும் தேசிய பணிமனையில் இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் சான்றளிப்பு இணையதளத்தை தொடங்கி வைத்தார். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் (MNRE) உருவாக்கிய இந்த இணையதளம், இந்திய பசுமை ஹைட்ரஜன் சான்றளிப்புத் திட்டத்தின் கீழ் சான்றளிப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை எளிதாக்கும். அமைச்சகத்தின் தகவலின்படி, 13 மாநிலங்கள் பசுமை ஹைட்ரஜன் தொடர்பான கொள்கை அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இதில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தனித்துவமான பசுமை ஹைட்ரஜன் கொள்கைகளை அறிவித்துள்ளன. மேலும் இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் தங்களது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது தொழில்துறைக் கொள்கைகளில் ஹைட்ரஜன் தொடர்பான அம்சங்களை இணைத்துள்ளன. ராஜஸ்தானின் ஒருங்கிணைந்த தூய்மையான ஆற்றல் கொள்கை (2024), பசுமை ஹைட்ரஜன் பூங்காக்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்–பசுமை ஹைட்ரஜன் ஒருங்கிணைந்த வசதிகள் மற்றும் எலக்ட்ரோலைசர், சேமிப்பு, போக்குவரத்து உள்கட்டமைப்புகளுக்கான உற்பத்தி அமைப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது. ஹரியானா, பஞ்சாப், பீகார் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தங்களது பசுமை ஹைட்ரஜன் கொள்கைகளை இறுதி செய்யும் மேம்பட்ட நிலையில் உள்ளன.
வாரணாசியில் கோதுமை மதிப்பு சங்கிலி மாநாடு (WPPS CEO மாநாடு) ஜூலை 9 முதல்
கோதுமை பொருட்கள் ஊக்குவிப்பு சங்கத்தின் (WPPS) CEO மாநாடு 2026 உத்தரப் பிரதேசம் வாரணாசியில் ஜூலை 9 முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாடு “புதிய இந்தியாவுக்கான கோதுமை மதிப்பு சங்கிலிகளை மறுவரையறை செய்தல்” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை WPPS மற்றும் உத்தரப் பிரதேச ரோலர் மாவு ஆலைகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்கின்றன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், மாவு ஆலை உரிமையாளர்கள், கோதுமை வர்த்தகர்கள், உணவு உற்பத்தியாளர்கள், தானிய கொள்முதல் வல்லுநர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் கோதுமை உற்பத்தி மற்றும் நிலைத்தன்மை, அரைக்கும் தொழில்நுட்பம், பதப்படுத்தல் புதுமைகள், பேக்கரி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள், கொள்முதல் மற்றும் சேமிப்பு, விநியோகச் சங்கிலி மேலாண்மை, உள்நாட்டு மற்றும் உலக சந்தை போக்குகள், ஏற்றுமதி வாய்ப்புகள், நுகர்வோர் விருப்பங்கள், சில்லறை மேம்பாடு மற்றும் வணிக வளர்ச்சி உத்திகள் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன.
இந்தியா 2.176 கோடி ஹெக்டேர் நில மீட்டெடுப்பு இலக்கை எட்டியது
பான் சவால் (2011) திட்டத்தின் கீழ் சீர்குலைந்த மற்றும் காடழிக்கப்பட்ட 2.176 கோடி ஹெக்டேர் நிலத்தை இந்தியா மீட்டெடுத்து இலக்கை எட்டியுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்தார். இந்தியா மேலும் 2030-க்குள் கூடுதலாக 50 லட்சம் ஹெக்டேர் மீட்டெடுக்க இலக்கிடப்பட்டுள்ளது, மொத்த இலக்கு 2.6 கோடி ஹெக்டேர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களில் நில மீட்டெடுப்பில் தெலங்கானா (4.18 mha) முதலிடம், அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (3.78 mha), ஒடிசா (2.64 mha) மற்றும் குஜராத் (1.73 mha) உள்ளன. இத்திட்டத்தின் கீழ் ₹702,335.29 மில்லியன் நிதி புழக்கம், 1,224.51 மில்லியன் மனித நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (நீர்ப்பிடிப்பு மேம்பாடு) மூலம் 2.7 கோடி ஹெக்டேர் நிலங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன; பசுமை இந்தியா திட்டம் மற்றும் CAMPA மூலம் காடு வளர்ப்பு நடவடிக்கைகள் முறையே 1.7 லட்சம் மற்றும் 3.20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பான் சவால் திட்டம் உலகளவில் 2030-க்குள் 350 மில்லியன் ஹெக்டேர் நில மீட்டெடுப்பை நோக்கமாகக் கொண்டது.
சர்வதேச யோகா தினம் 2026 மற்றும் யோகா சங்கம் இணையதளம்
21 ஜூன் 2026 அன்று நடைபெறவுள்ள 12வது சர்வதேச யோகா தினம் (IDY 2026) முன்னிட்டு, நாடு தழுவிய யோகா பங்கேற்பை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளமான யோகா சங்கம் இணையதளம் (Yoga Sangam Portal), ஆயுஷ் அமைச்சகத்தால் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தை ஆயுஷ் துறையின் மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரதாப்ராவ் ஜாதவ், மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் நடைபெற்ற 25 நாள் கவுண்ட்டவுன் நிகழ்வில் தொடங்கி வைத்தார். இந்த இணையதளத்தில் 1.7 லட்சத்திற்கும் அதிகமான அமைப்பாளர்கள் தங்களது நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பொதுவான யோகா நெறிமுறை (Common Yoga Protocol - CYP) அடிப்படையில் இதில் பங்கேற்கலாம். சர்வதேச யோகா தினம் 2025-இல், 10 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், 13.04 லட்சத்திற்கும் அதிகமான யோகா சங்கம் நிகழ்வுகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டன. IDY 2026-க்காக மேம்படுத்தப்பட்ட இந்த இணையதளம் நிகழ்வு பதிவு, பங்கேற்பு ஒருங்கிணைப்பு, புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள் பதிவேற்றம் ஆகிய வசதிகளை வழங்குகிறது. பங்கேற்கும் அமைப்புகளுக்கு ஆயுஷ் அமைச்சகத்தால் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
ஐஐஐடிஇஎம் 15வது நிறுவன தினம்
இந்தியா சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் (IIIDEM) தனது 15வது நிறுவன தினத்தை முன்னிட்டு 16–17 ஜூன் 2026 அன்று புதுதில்லியில் ‘திறன் மேம்பாடு மற்றும் மூலோபாய வரைபடம்’ குறித்த இரண்டு நாள் மாநாட்டை நடத்தியது. இதில் 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் 250 தேசிய மற்றும் மாநில அளவிலான முதன்மைப் பயிற்சியாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) 30 அதிகாரிகள், IIIDEM-இன் 80 பங்கேற்பாளர்கள், மற்றும் டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் 100 BLO மேற்பார்வையாளர்கள் அடங்குவர். நிகழ்வில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர் டாக்டர் விவேக் ஜோஷி, மற்றும் IIIDEM இயக்குநர் ஜெனரல் ராகேஷ் வர்மா பங்கேற்றனர். மாநாடு தேசியத் திட்டங்களை வலுப்படுத்துதல், உலகளாவிய திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகளை விரிவுபடுத்துதல், ஆராய்ச்சி மற்றும் அறிவு மேம்பாட்டை ஊக்குவித்தல், மற்றும் நிலையான ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகிய நான்கு மூலோபாயத் துறைகளில் கவனம் செலுத்தியது. வரைவு தேசியப் பயிற்சிக் கொள்கை, மாநில, மாவட்ட மற்றும் சட்டமன்ற நிலை பயிற்சித் தரநிலைகள், மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. 2011 முதல், IIIDEM மொத்தம் 1,885 பயிற்சித் திட்டங்களை நடத்தி 1,20,883 பங்கேற்பாளர்களை சென்றடைந்துள்ளது. மேலும் அதன் சர்வதேச பயிற்சி நடவடிக்கைகள் 142 நாடுகளை சென்றடைந்துள்ளன.
டிஜிலாக்கரில் ஜன் ஆதார் இணைப்பு
ராஜஸ்தான் அரசின் ஜன் ஆதார் (குடும்ப அடையாள அட்டை), டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் ஆவண சேமிப்பு தளமான டிஜிலாக்கருடன் (DigiLocker) இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமார் 7.5 கோடி குடிமக்கள் தங்களது ஜன் ஆதார் ஆவணத்தை டிஜிட்டல் முறையில் அணுக முடியும். குடிமக்கள் ஏற்கனவே உள்ள ஜன் ஆதார் விவரங்களை டிஜிலாக்கரில் பெறுவதுடன், புதிய குடும்ப அடையாள அட்டைக்கான பதிவையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள முடியும். டிஜிலாக்கரில் இணைக்கப்பட்ட ஜன் ஆதார் மூலம் சிரஞ்சீவி திட்டம் (Chiranjeevi Scheme) மருத்துவக் காப்பீட்டு சலுகைகள், பொது விநியோக முறை (PDS) சலுகைகள், மாணவர் கல்வி உதவித்தொகை மற்றும் பிற அரசு நலத்திட்ட சேவைகளை அணுக முடியும். இந்த முயற்சி காகிதமற்ற நிர்வாகம், டிஜிட்டல் ஆவண சரிபார்ப்பு மற்றும் குடிமக்களுக்கான அரசு சேவை அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போதைப்பொருள் இல்லாத பாரத வாரம் 2026 தொடக்கம்
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை (DoSJE) சார்பில் 17–26 ஜூன் 2026 வரை “போதைப்பொருள் இல்லாத பாரத இயக்கம் – வளர்ந்த பாரதத்தின் அடையாளம் (Nasha Mukt Bharat Abhiyaan – Viksit Bharat Ki Pehchaan)” என்ற கருப்பொருளில் போதைப்பொருள் இல்லாத பாரத வாரம் 2026 (Nasha Mukt Bharat Saptah 2026) மெய்நிகர் முறையில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் தொடர்பான நாடு தழுவிய நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த வாரம் நடத்தப்பட்டது. நிகழ்வின் போது போதைப்பொருள் ஒழிப்பு நண்பர் (Nasha Mukti Mitra - NMM) தனிநபர் டாஷ்போர்டு மற்றும் போதைப்பொருள் இல்லாத பாரத இயக்கம் (NMBA) குறும்படம் ஆகியவை தொடங்கப்பட்டன. தனிநபர் டாஷ்போர்டு மூலம் தன்னார்வலர்கள் தங்களது பங்களிப்புகளை கண்காணிக்கவும், அடிமட்ட விழிப்புணர்வு மற்றும் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடியும். இந்த மெய்நிகர் நிகழ்வில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தொடர்புடைய அமைச்சகங்கள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் கூட்டாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். போதைப்பொருள் இல்லாத பாரத இயக்கம் (NMBA), போதைப்பொருள் தேவைக் குறைப்பிற்காக கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் செயல்படுகிறது.
காஷ்மீர் குங்குமப்பூவின் தேவை அதிகரிப்பு
மேற்கு ஆசிய நெருக்கடியைத் தொடர்ந்து ஈரானின் குங்குமப்பூ உற்பத்தி சரிவு காரணமாக காஷ்மீர் குங்குமப்பூவின் உலகளாவிய தேவை அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் குங்குமப்பூ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தகவலின்படி, ஈரானில் குங்குமப்பூ உற்பத்தி 140 டன் அளவிற்கு குறைந்துள்ளது. தனித்துவமான நறுமணம் மற்றும் இயற்கை நிறமூட்டும் தன்மைக்காக “சிவப்பு தங்கம் (Red Gold)” என அழைக்கப்படும் காஷ்மீர் குங்குமப்பூ, முக்கியமாக தெற்கு காஷ்மீரின் பம்பூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் குங்குமப்பூ உற்பத்தி 2023–24 ஆம் ஆண்டில் 23.53 மெட்ரிக் டன்னிலிருந்து 2024–25 ஆம் ஆண்டில் 19.58 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் போதுமான நீர்ப்பாசன வசதியின்மை உற்பத்தி சரிவுக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது ஜம்மு காஷ்மீரில் சுமார் 3,700 ஹெக்டேர் நிலப்பரப்பில் குங்குமப்பூ சாகுபடி நடைபெறுகிறது. இதன் அறுவடை காலம் அக்டோபர் 15 முதல் நவம்பர் 20 வரை ஆகும். காஷ்மீர் குங்குமப்பூ ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சர்வதேசச் செய்திகள்
அனிஸ்பியர் கையகப்படுத்தலால் பயனடையும் அமன் சாங்கர்
கர்சர் (Cursor) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கோடிங் தளம் ஆகும். இது 2022ஆம் ஆண்டு அமன் சாங்கர், சுலேஹ் ஆசிப், ட்ரூயல், மற்றும் லுன்னெமார்க் ஆகியோரால் தொடங்கப்பட்டது. கர்சரின் தாய் நிறுவனமான அனிஸ்பியர் (Anysphere) நிறுவனத்தை Elon Musk 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கையகப்படுத்த உள்ளார். 2026 ஏப்ரல் மாதத்தில், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் கர்சருடன் கூட்டாண்மை ஏற்படுத்தி, அதன் கணினி வளங்களை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான பயிற்சியில் பயன்படுத்தியது. அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்த 25 வயதுடைய இந்திய வம்சாவளி இளைஞர் அமன் சாங்கர், கர்சரின் நிறுவனர்களில் ஒருவராக இருந்து, இந்த கையகப்படுத்தலின் மூலம் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் பெற உள்ளார். அவர் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT)-இல் கல்வி பயின்றார். அவரது தந்தை அரவிந்த் சாங்கர், ஐஐடி பம்பாய் முன்னாள் மாணவர் ஆவார்.
பிரான்ஸ் ஏவியானில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாடு
ஜி7 உச்சி மாநாடு 2026 ஜூன் 17 அன்று பிரான்ஸ் நாட்டின் ஏவியான் நகரில் நிறைவடைந்தது. பிரான்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் ஈரான் பிரச்சினை, உக்ரைன் போர், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் உலகப் பொருளாதார நிலைத்தன்மை தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. ஸ்விட்சர்லாந்தின் லூசர்னில் கையெழுத்தாக உள்ள அமெரிக்கா–ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதி நாளில் நடைபெற்ற ஏஐ தொடர்பான கலந்துரையாடலில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன், கூகுள் டீப்மைண்டின் டெமிஸ் ஹாசாபிஸ், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் டாரியோ அமோடெய், மிஸ்ட்ரல் ஏஐ நிறுவனத்தின் ஆர்தர் மென்ச், மற்றும் சர்வம் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் விவேக் ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். ஜி7 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்குதல், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்துதல், மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
கசானில் தொடங்கிய ரஷியா–ஆசியான் உச்சி மாநாடு
ரஷியா–ஆசியான் (ASEAN) உச்சி மாநாடு 2026 ஜூன் 17 அன்று ரஷியாவின் கசான் நகரில் தொடங்கியது. இந்த மாநாடு ரஷியா–ஆசியான் பேச்சுவார்த்தை உறவின் 35ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படுகிறது. மாநாட்டை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொடங்கி வைத்தார். ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உடன் இணைந்து அவர் மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். பிலிப்பீன்ஸ், புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, கிழக்கு திமோர் மற்றும் வியத்நாம் ஆகிய ஆசியான் உறுப்பு நாடுகளுடன் ரஷியாவின் வர்த்தக, முதலீட்டு, தொழில்துறை மற்றும் உத்திசார் உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. உலகளாவிய எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியத்நாம் உள்ளிட்ட சில ஆசியான் நாடுகள் ரஷிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளன அல்லது அதனை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன.
அமெரிக்க இந்தோ-பசிபிக் படைப்பிரிவு மீண்டும் பசிபிக் படைப்பிரிவாக பெயர் மாற்றம்
அமெரிக்க இந்தோ-பசிபிக் படைப்பிரிவு (US Indo-Pacific Command) என்ற பெயரில் இருந்து “இந்தோ” என்ற சொல் நீக்கப்பட்டு, அது மீண்டும் அமெரிக்க பசிபிக் படைப்பிரிவு (US Pacific Command) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளுக்கிடையிலான உத்திசார் தொடர்பை கருத்தில் கொண்டு, 2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இந்தப் படைப்பிரிவுக்கு இந்தோ-பசிபிக் படைப்பிரிவு என பெயரிடப்பட்டது. அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தப் படைப்பிரிவு 1947ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் தலைமையில் உருவாக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய பிராந்திய பாதுகாப்பு, கொரியா போர், மற்றும் வியத்நாம் போர் தொடர்பான நடவடிக்கைகளில் பங்காற்றியுள்ளது. தற்போதைய பெயர் மாற்றத்தால் அதன் செயல்பாட்டு எல்லைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்தியாவின் மேற்கு எல்லை வரை உள்ள கடல் பரப்பில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10வது தாய்லாந்து–இந்தியா பாதுகாப்புப் பேச்சுவார்த்தை
10வது தாய்லாந்து–இந்தியா பாதுகாப்புப் பேச்சுவார்த்தை 16 ஜூன் 2026 அன்று பாங்காக் நகரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்தின் பாதுகாப்புத்துறை துணை நிரந்தர செயலாளர் அட்மிரல் நட்டபோல் திவ்வானிச் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீ சத்யஜித் மொகந்தி ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். பேச்சுவார்த்தையில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு சூழல், இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு முயற்சிகள், பயிற்சி பரிமாற்றங்கள், கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு உற்பத்தி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு நாடுகளும் விவாதித்தன. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) தலைமையிலான பாதுகாப்பு கட்டமைப்புகளின் கீழ் ஒத்துழைப்பு குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன. இந்தியா மற்றும் தாய்லாந்து தங்களின் இருதரப்பு உறவை 2025ஆம் ஆண்டு மூலோபாயக் கூட்டாண்மையாக (Strategic Partnership) உயர்த்தியிருந்தன.
பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் இந்தியா–ஜப்பான் கூட்டுக் கடன் வழங்கும் முறை
இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பாரிஸ் உடன்படிக்கையின் (Paris Agreement) பிரிவு 6.2 கீழ் கூட்டுக் கடன் வழங்கும் முறை (Joint Crediting Mechanism - JCM) தொடர்பான அமலாக்க விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. காலநிலை நடவடிக்கை, பசுமை இல்ல வாயு உமிழ்வு குறைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விதிகள் 8 ஜூன் 2026 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது இரு நாடுகளும் கையெழுத்திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (Memorandum of Cooperation - MoC) தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த பொறிமுறை, இந்தியாவில் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும் அல்லது அகற்றும் தணிப்பு திட்டங்களுக்கு (Mitigation Projects) ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. அமலாக்க விதிகளில் இரு அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுக்குழு (Joint Committee) அமைத்தல், வெளிப்படையான திட்ட ஒப்புதல் நடைமுறைகள், மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு மற்றும் தணிக்கை செயல்முறைகள், நிலையான வளர்ச்சி பாதுகாப்புகள் மற்றும் கார்பன் கிரெடிட் கண்காணிப்புக்கான தேசிய பதிவேடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டுக் கடன் வழங்கும் முறை (JCM) குறைந்த கார்பன் தொழில்நுட்ப திட்டங்கள், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும்.
தமிழ்நாடு செய்திகள்
தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம்
2026 ஜூன் 11 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) இடையே தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி IN-SPACe நிறுவனம் ₹100 கோடி மதிப்பிலான உபகரணங்களை வழங்கும். தமிழ்நாடு அரசு நிலம், கட்டடங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும். இந்த மையத்தில் அதிர்வு, அதிர்ச்சி, வெப்ப-வெற்றிடம், மின்காந்த குறுக்கீடு மற்றும் ஒத்திசைவு, அழுத்தம் மற்றும் ஓட்டம் சோதனை, ஏவுகணை வாகன ஒருங்கிணைப்பு, துணை அமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஹைட்ரோக்ளேவ் செயல்பாடுகளுக்கான சோதனை மற்றும் தரநிலை உறுதிப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இம்மையம் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ளது.
பொருளாதாரச் செய்திகள்
இந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு குறைவு; மைக்ரோ ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள ஏடிஎம்களின் எண்ணிக்கை 2022–23 நிதியாண்டில் 2.55 லட்சமாக இருந்த நிலையில், 2024–25 நிதியாண்டில் 2.51 லட்சமாக குறைந்துள்ளது. டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் மேற்கொள்ளப்பட்ட ரொக்கப் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளும் குறைந்துள்ளன. பரிவர்த்தனை எண்ணிக்கை 2022–23 நிதியாண்டில் 68,975 லட்சத்தில் இருந்து 2025–26 நிதியாண்டில் 53,394 லட்சமாக குறைந்துள்ளது. அதே காலத்தில் பணம் எடுக்கும் மதிப்பு ₹32.8 லட்சம் கோடியில் இருந்து ₹28.5 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. யூனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உள்ளிட்ட டிஜிட்டல் கட்டண முறைகளின் பயன்பாடு அதிகரித்தது இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. மறுபுறம், மைக்ரோ ஏடிஎம்களின் பயன்பாடு அதிகரித்து, 2025–26 நிதியாண்டில் 12,126 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் எடுக்கும் மதிப்பு 8.8% உயர்ந்து ₹3.22 லட்சம் கோடியாக உள்ளது. 2026 மார்ச் மாதத்தில், ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண அமைப்பு (AePS) கொண்ட மைக்ரோ ஏடிஎம்கள் பணம் எடுக்கும் மதிப்பில் 3.3% வளர்ச்சியை பதிவு செய்தன. வங்கித் தொடர்பாளர்களால் (Banking Correspondents) இயக்கப்படும் மைக்ரோ ஏடிஎம்கள் கிராமப்புற மற்றும் சேவை குறைவான பகுதிகளில் வங்கிச் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்ட பயன்களை வழங்குவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை (Financial Inclusion) மேம்படுத்துகின்றன.
ஏஐ அடிப்படையிலான மோசடி கண்டறிதல் மூலம் ஆக்சிஸ் வங்கியில் மோசடிகள் குறைவு
ஆக்சிஸ் வங்கி தனது விதி சார்ந்த மோசடி கண்டறிதல் அமைப்புகளுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அமைப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், கடந்த நிதியாண்டில் சில்லறை வாடிக்கையாளர் மோசடிகளில் சுமார் 30% ஆண்டு அடிப்படையிலான சரிவை பதிவு செய்துள்ளது. ஆக்சிஸ் வங்கியின் நிதி குற்ற நுண்ணறிவுப் பிரிவின் குழுத் தலைவர் கௌரவ் குப்தா வழங்கிய தகவலின்படி, ஏஐ அமைப்புகள் மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க உதவுகின்றன. கடந்த நிதியாண்டில் சில்லறை மொபைல் வங்கி, இணைய வங்கி மற்றும் வணிக வளாகங்களில் நடைபெற்ற மோசடி சம்பவங்கள் சுமார் 40% குறைந்துள்ளன. ஏஐ சார்ந்த கண்காணிப்பு மற்றும் இடர் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் மூலம் தடுக்கப்பட்ட டிஜிட்டல் மோசடிகள் 2025–26 நிதியாண்டில், 2024–25 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 4.5 மடங்கு அதிகரித்துள்ளன. இந்த அமைப்பு சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை முன்கூட்டியே கண்டறிதல், நடத்தை முறை பகுப்பாய்வு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், மேற்கு வங்கம், அசாம், பீகார், ஜார்கண்ட், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் ஆகிய இடங்களில் அதிக அளவில் மியூல் கணக்குகள் (Mule Accounts) இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
என்ஆர்ஐ வைப்புகளுக்கான வட்டி கட்டுப்பாடுகளை தளர்த்திய ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 3 முதல் 5 ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட புதிய Foreign Currency Non-Resident-Bank [FCNR(B)] வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகித உச்சவரம்பையும், முதிர்ச்சியடைந்த பின் புதுப்பிக்கப்படும் வைப்புகள் உட்பட மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட கால அவகாசம் கொண்ட Non-Resident External (NRE) வைப்புகளுக்கான வட்டி விகிதக் கட்டுப்பாடுகளையும் தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, 2025 ஆம் ஆண்டு ஆர்பிஐ வழிகாட்டுதலின் மறுஆய்வாகும். இந்த திருத்தப்பட்ட விதிமுறைகள் செப்டம்பர் 30, 2026 வரை அமலில் இருக்கும். ஆர்பிஐ வெளியிட்ட திருத்த உத்தரவுகளின்படி, வங்கிகள் தகுதியுடைய என்ஆர்ஐ/பிஐஓ வைப்புதாரர்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கலாம். எனினும், NRE/NRO வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள், அதே வங்கியின் ஒப்பிடத்தக்க உள்நாட்டு ரூபாய் கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை விட அதிகமாக இருக்கக் கூடாது.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
2025 ஆசிய காலநிலை அபாயங்கள் குறித்து WMO அறிக்கை எச்சரிக்கை
உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட “ஆசியாவின் காலநிலை நிலைமை 2025” அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு ஆசியாவில் கடும் வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற கடுமையான வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. 1991–2025 காலகட்டத்தில் ஆசியா உலக சராசரியை விட வேகமாக வெப்பமடைந்துள்ளது, மேலும் 1961–1990 காலத்தை விட இரட்டிப்பு வேகத்தில் வெப்பமடைதல் ஏற்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் ஆசியாவின் சராசரி வெப்பநிலை 1991–2020 சராசரியை விட 0.96°C ± 0.08 அதிகமாக பதிவாகி, பதிவுகளின்படி இரண்டாவது முதல் நான்காவது அதிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருந்தது. 10 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட கடல் பகுதி வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டது. ஆசியாவின் கண்காணிக்கப்படும் 23 பனிப்பாறைகளும் திணிவு இழப்பை சந்தித்தன, இதனால் நீர்ப்பாதுகாப்பு அபாயம் மற்றும் பேரிடர்கள் அதிகரித்துள்ளன. ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியா நாடுகள் தங்களின் வரலாற்றில் மிக அதிக வெப்பமான கோடைக்காலத்தை பதிவு செய்தன. பாகிஸ்தான், இலங்கை, வியத்நாம் ஆகிய நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டது; அதே நேரத்தில் மேற்கு ஆசியா (ஈரான் உட்பட) வறட்சி மற்றும் மணல் புயல்களை சந்தித்தது. மேலும், பாகிஸ்தானில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டதாகவும், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா பகுதிகள் சென்யார் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
QS உலக தரவரிசை 2027: இந்தியாவில் ஐஐடி டெல்லி முதலிடம்
QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2027-இல், இந்திய கல்வி நிறுவனங்களில் ஐஐடி டெல்லி (Indian Institute of Technology Delhi) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்து, உலகளவில் 118-வது இடத்தை பெற்றுள்ளது. தேசிய பட்டியலில் ஐஐடி பம்பாய் 134, ஐஐடி மெட்ராஸ் 170, ஐஐடி காரக்பூர் 205, ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூரு 221, டெல்லி பல்கலைக்கழகம் 322, ஐஐடி ரூர்க்கி 335, ஐஐடி கவுகாத்தி 349, மற்றும் ஷூலினி பல்கலைக்கழகம் 452 இடங்களைப் பெற்றுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐஐடி பம்பாயின் உலக தரவரிசை குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுனிசெஃப் குழந்தைகள் காலநிலை அபாய அறிக்கை 2026
யுனிசெஃப் (UNICEF) குழந்தைகள் காலநிலை அபாய அறிக்கை 2026, குழந்தைகள் எதிர்கொள்ளும் பல்வேறு மற்றும் ஒன்றோடொன்று இணையும் காலநிலை அபாயங்களை விளக்குகிறது. இந்த அறிக்கை யுனிசெஃப் உலகளாவிய குழந்தை அபாய தரவுத்தளத்தின் (UNICEF Global Child Hazard Database) புதிய தரவுகளைப் பயன்படுத்தி, காலநிலை அபாயங்களால் குழந்தைகள் பாதிக்கப்படும் பகுதிகளையும் சமூக சேவைகளின் செயல்திறனையும் ஆய்வு செய்கிறது. உலகில் சுமார் 1.1 பில்லியன் (110 கோடி) குழந்தைகள் குறைந்தது மூன்று ஒன்றோடொன்று இணையும் காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர் என்றும், இது அவர்களின் ஆரோக்கியம், கல்வி மற்றும் உயிர்வாழ்வை பாதிக்கக்கூடும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 40 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஆறு வரையிலான காலநிலை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இந்த அறிக்கை கடற்கரை வெள்ளம், வறட்சி, கடுமையான வெப்பம், காட்டுத்தீ, வெப்ப அலைகள், ஆற்று வெள்ளம், மணல் மற்றும் தூசி புயல்கள், வெப்பமண்டல புயல்கள் போன்ற காலநிலை அபாயங்களைப் பதிவு செய்கிறது. மேலும் காற்று மாசுபாடு மற்றும் மலேரியா போன்ற நோய் பரப்பும் உயிரினங்கள் மூலம் பரவும் நோய்கள் போன்ற காலநிலை உணர்திறன் கொண்ட அபாயங்களையும் ஆய்வு செய்கிறது.
தினசரி TNPSC நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா மூலம் ரேங்க் உயர்த்துங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 19-06-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17-06-2026
சமகால இணைப்புகள்
Wed Jul 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
Tue Jul 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
Wed Jul 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
Tue Jul 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
Sat Jul 18 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
Thu Jul 16 2026