TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15-06-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15-06-2026
சர்வதேசச் செய்திகள்
பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ நிகழ்வு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் ஆகியோர் 2026 ஜூன் 14 அன்று பிரான்ஸின் நைஸ் நகரில் 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்வை இணைந்து தொடங்கி வைத்தனர். இது பிரதமர் மோடியின் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தின் முதல் கட்டமாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் துணிகர முதலீட்டு நிதியங்கள் பங்கேற்கின்றன. மேலும், இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் உதவிபெறும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப முயற்சிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தியா பாதுகாப்பு, உயர்தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களையும், செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் முன்னிறுத்தியது. மேலும், மேக் இன் இந்தியா (Make in India) திட்டத்தின் கீழ் இருநாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் சிறிய அணுஉலைகள் உட்பட அணுமின் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வாய்ப்பும் குறிப்பிடப்பட்டது.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி
ஐரோப்பாவைச் சேர்ந்த சிஆர்இஏ (Centre for Research on Energy and Clean Air - CREA) அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2026 மே மாதத்தில் இந்தியாவின் ரஷ்யா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து ₹52,813 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயையும், மொத்தமாக சுமார் ₹59,000 கோடி மதிப்பிலான எண்ணெய் இறக்குமதியையும் மேற்கொண்டுள்ளது. மேலும், இந்தியா ரஷ்யாவிலிருந்து ₹6,051 கோடி மதிப்பிலான எண்ணெய் பொருள்களையும், ₹4,720 கோடி மதிப்பிலான நிலக்கரியையும் இறக்குமதி செய்துள்ளது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 36 சதவீதம் இந்தியாவுக்கு வழங்கப்படுவதால், ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா 50 சதவீதம் கொள்முதல் செய்து முதலிடத்தில் உள்ளது. துருக்கி 6 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் 5 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளன. புது மங்களூரு சுத்திகரிப்பு நிலையம், விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஒடிஸாவின் பாரதீப் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய அரசுத் துறை சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளன.
ஐஎன்எஸ் சாரதாவின் கொழும்பு பயணம்
இந்திய கடற்படைக் கப்பல் (INS) சாரதா, இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கொண்ட பயணத்தை நிறைவு செய்து 2026 ஜூன் 13 அன்று புறப்பட்டது. இந்தப் பயணம் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியது. இந்த விஜயத்தின் போது இந்திய கடற்படை மற்றும் இலங்கை கடற்படை இடையே தொழில்முறை, பயிற்சி மற்றும் விளையாட்டு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன. திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை வீரர்களுக்கு சிறிய ரக ஆயுதங்களைக் கையாளுதல், அடிப்படை தீயணைப்பு, முதலுதவி மற்றும் மீட்பு நடைமுறைகள் குறித்து INS சாரதா கப்பலில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் இரு கடற்படைகளுக்கிடையேயான செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் பரஸ்பர செயல்பாட்டுத் திறனை (Interoperability) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
தைவான் புதிய உளவுத் தகவல் இணையதளத்தை அறிமுகப்படுத்தியது
சீனா மற்றும் தைவான் இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில், தைவானின் தேசிய பாதுகாப்புப் பணியகம் (National Security Bureau - NSB), சீன குடிமக்கள் உளவுத்துறை தொடர்பான தகவல்களை பாதுகாப்பாக வழங்குவதற்காக புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய இணையதளம், சீன குடிமக்கள் தகவல்களை வழங்குவதற்கான பாதுகாப்பான தகவல் பரிமாற்றத் தளமாக செயல்படும்.
தேசியச் செய்திகள்
இந்தியாவில் 100% எத்தனால் எரிபொருளுக்கு ஒப்புதல்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2026 ஜூன் 14 அன்று நாகபுரியில் நடைபெற்ற இந்திய எத்தனால்-உயிர் எரிபொருள் மாநாட்டில், இந்தியாவில் வாகனங்களில் 100 சதவீத எத்தனால் எரிபொருள் பயன்படுத்த சட்டப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதற்கான ஒப்புதல் கோப்பில் அவர் 2026 ஜூன் 13 அன்று கையொப்பமிட்டார். 100 சதவீத எத்தனால் எரிபொருளில் சுமார் 93 முதல் 95 சதவீதம் எத்தனால் இடம்பெறும்; மீதமுள்ள பகுதி பெட்ரோல் மற்றும் பிற வேதியியல் சேர்மங்களைக் கொண்டிருக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள 20 சதவீத எத்தனால் கலப்பு எரிபொருள் வாகனங்களை, என்ஜின் மற்றும் எரிபொருள் அமைப்பில் மாற்றங்கள் செய்து 100 சதவீத எத்தனால் பயன்பாட்டிற்கு மாற்ற முடியும். மாருதி சுசுகி, டொயோட்டா, ஹூண்டாய் மற்றும் எம்.ஜி. நிறுவனங்கள் 100 சதவீத எத்தனால் எரிபொருளுக்கான வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்கள் மற்றும் நாகப்பட்டினம் பௌத்த விகாரை
ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்கள், பொதுவாக லைடன் பட்டயங்கள் என்று அழைக்கப்படுபவை, நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11-ஆம் நூற்றாண்டில், முதலாம் ராஜராஜ சோழன், நாகப்பட்டினத்தில் அமைந்திருந்த சூடாமணி வர்ம விகாரைக்கு ஆனைமங்கலம் கிராமத்தையும் சுற்றியுள்ள நிலங்களையும் தானமாக வழங்கினார். இந்த விகாரை கி.பி. 1005-இல் கடாரம் (ஸ்ரீ விஜய பேரரசு) மன்னர் சூடாமணி வர்மனால் தொடங்கப்பட்டு, அவரது மகன் மாரவிஜயோத்துங்கவர்மனால் நிறைவு செய்யப்பட்டது. இந்த நிலக்கொடை கி.பி. 1035-இல், முதலாம் ராஜேந்திர சோழன் (மதுராந்தகன்) மூலம் 21 செப்புப் பட்டயங்களில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இந்த நிலம் பள்ளிச்சந்தம் (Pallichchandham) எனப்படும் வரிவிலக்கு நிலமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கி.பி. 1090-இல், முதலாம் குலோத்துங்க சோழன் இந்த நிலக்கொடையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் மூன்று செப்புப் பட்டயங்களை வெளியிட்டார். இப்பட்டயங்கள் பண்டித நடேச அய்யர் மற்றும் கே.வி. சுப்பிரமணிய அய்யர் ஆகியோரால் படியெடுக்கப்பட்டு விளக்கப்பட்டன. வரலாற்று ஆய்வாளர் கே.ஏ. மேனன், "Copper Plates to Silver Plates: Cholas, Dutch and Buddhism" என்ற ஆய்வுக் கட்டுரையில், ஆனைமங்கலம் பின்னர் சங்கமங்கலம் என பெயர் மாறியதாகவும், பௌத்தம் வீழ்ச்சியடைந்த பிறகு அந்த நிலங்கள் போர்த்துகீசியர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சி.ஐ.எஸ்.எஃப் ட்ரோன் எதிர்ப்பு பயிற்சி திட்டம்
ஆப்ரேஷன் சிந்தூர் நடைபெற்ற ஒரு ஆண்டுக்குப் பிறகு, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF), இந்திய விமானப்படையுடன் (IAF) இணைந்து 7,120 வீரர்களுக்கு ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயிற்சி அளித்துள்ளது. இந்தப் பயிற்சியில் ட்ரோன்களை இயக்குதல், வான்வழி கண்காணிப்பு, வரைபடமாக்கம் மற்றும் எதிரி ட்ரோன்களை செயலிழக்கச் செய்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அணுமின் நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்பு நிறுவனங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் பொறுப்பும் சி.ஐ.எஸ்.எஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத், பிலாய் மற்றும் பெஹ்ரோர் ஆகிய இடங்களில் பிரத்யேக ட்ரோன் பயிற்சிப் பள்ளிகளை நிறுவும் பணியில் சி.ஐ.எஸ்.எஃப் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), கான்பூர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் (DIAT), புனே ஆகியவற்றுடன் இணைந்து மேம்பட்ட கல்வித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) வழிகாட்டுதலின்படி, 187 நகரங்களைச் சேர்ந்த 450 மாநில தீயணைப்புத் துறை வீரர்களுக்கு, ஹைதராபாத்திலுள்ள சி.ஐ.எஸ்.எஃப் தீயணைப்புப் பயிற்சி நிறுவனத்தில், மேம்பட்ட தொழில்துறை தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சி.ஐ.எஸ்.எஃப்-இன் தீயணைப்புப் பிரிவு ₹172.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை பாதுகாத்துள்ளது.
இந்திய ராணுவத்தின் புதிய சீருடைக் கொள்கை
இந்திய ராணுவம், காலனித்துவ கால நடைமுறைகள் மற்றும் கலைச்சொற்களை நீக்கும் நோக்கில் ‘ராணுவ சீருடைகள்-2026 கையேடு’ (Army Uniforms-2026 Pamphlet) மூலம் புதிய சீருடைக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய அம்சமாக, இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் பொதுவான Uniform Numbering Scheme அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம் தனது சீருடைகளை சடங்கு ஆடை (Ceremonial Dress), பணி ஆடை (Working Dress), மெஸ் ஆடை (Mess Dress) மற்றும் போர் ஆடை (Combat Dress) என நான்கு பிரிவுகளாகத் தொடர்ந்து வைத்துள்ளது. புதிய விதிமுறைகளின் கீழ், பண்டி ஜாக்கெட் (Bandi Jacket) முறையான சிவில் உடையின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மெஸ் ஆடை எண் 5 மற்றும் 6-இல் இருந்து பவுச் பெல்ட் (Pouch Belt) நீக்கப்பட்டுள்ளது, Reviewing Officer வாள் ஏந்திச் செல்வது விருப்பத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது, மற்றும் “ராயல்” (Royal) என்ற சொல் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், Dress No. 3A உள்ளிட்ட பழைய சீருடை வடிவங்கள் 2029 ஜூன் 30க்குள் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
ஒடிசாவின் ஸ்மார்ட் கிராமத் திட்டம்
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) ‘ஸ்மார்ட் வில்லேஜ்’ திட்டத்தின் கீழ், ஒடிசா மாநிலத்தின் கேந்திராபாரா மாவட்டத்தில் உள்ள குசுன்பூர் கிராமத்தில், முதலைகள் கிராமத்திற்குள் நுழைவதை எச்சரிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வனவிலங்கு கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட உள்ளது. கேந்திராபாரா மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட மனித-முதலை மோதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ், புதுப்பிக்கப்பட்ட நீர் கதவு வசதி, நிலத்தடி வடிகால் அமைப்பு, சமூகக் கூடம், சமூகக் கழிப்பறைகள், மயானம் மற்றும் கோல்டு மிக்ஸ் தொழில்நுட்பம், கழிவு பிளாஸ்டிக் சாலை தொழில்நுட்பம், சிமெண்ட் கலந்த பிற்றுமின் கலவை (Cement Grouted Bituminous Mix) ஆகியவற்றைப் பயன்படுத்தி சாலை மேம்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. CSIR-இன் ‘Lab to Land’ கொள்கைக்கு இணங்க, காய்ந்த பூ பதப்படுத்துதல், உறைந்து உலரவைத்தல் (Freeze-Drying) மூலம் பழங்கள் தயாரித்தல், ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள், மக்கக்கூடிய தட்டுகள், மூலிகை தரை சுத்திகரிப்பு திரவங்கள், கொசு விரட்டி லோஷன்கள் மற்றும் இயற்கை தேன் மெழுகு நறுமண மெழுகுவர்த்திகள் போன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்காக 17 சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அடுத்த மூன்று ஆண்டுகளில் குசுன்பூர் கிராமத்திற்கு வருகை தரவுள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் இரட்டை தங்கம்
துருக்கியின் அண்டால்யா நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், இந்தியா ரீகர்வ் கலப்பு அணி மற்றும் ரீகர்வ் ஆடவர் தனிநபர் பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. ரீகர்வ் கலப்பு அணி இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா மற்றும் கும்கும் மோஹோத் ஜோடி, தென் கொரியாவின் கிம் ஜெ டியோக் மற்றும் ஓஹ் யெ ஜின் ஜோடியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. ரீகர்வ் ஆடவர் தனிநபர் இறுதிப்போட்டியில் தீரஜ் பொம்மதேவரா, தென் கொரியாவின் லீ வூ சோக்-ஐ 7-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தனது முதல் உலகக் கோப்பை தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றார். இது கும்கும் மோஹோத்தின் முதல் உலகக் கோப்பை போட்டி ஆகும். மேலும், ஒரே உலகக் கோப்பை போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறையாகும். இந்தியா போட்டியை இரண்டாம் இடத்தில் நிறைவு செய்தது; சீனா முதலிடத்தையும் மெக்ஸிகோ மூன்றாம் இடத்தையும் பெற்றன.
பார்சிலோனா கிராண்ட் பிரீயில் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி
பிரிட்டன் வீரரும் ஃபெராரி அணியின் ஓட்டுநருமான லூயிஸ் ஹாமில்டன், 2026 ஜூன் 14 அன்று மாண்ட்மெலோவில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் (F1) தொடரின் 7-ஆவது பந்தயமான பார்சிலோனா கிராண்ட் பிரீயில் வெற்றி பெற்றார். மெர்சிடிஸ் அணியிலிருந்து ஃபெராரி அணிக்கு மாறிய பிறகு அவர் பெற்ற முதல் வெற்றியும், கடந்த 40 பந்தயங்களில் பெற்ற முதல் வெற்றியும் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் மெர்சிடிஸ் அணியின் இத்தாலிய வீரர் கிமி ஆண்டோனெல்லியின் தொடர்ச்சியான 5 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போட்டியில் மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் இரண்டாம் இடத்தையும், மெக்லாரன் அணியின் நடப்பு சாம்பியன் ஆஸ்கர் பியாஸ்ட்ரி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இந்த வெற்றியுடன் லூயிஸ் ஹாமில்டனின் மொத்த ஃபார்முலா ஒன் வெற்றிகளின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.
53 ஆண்டுகளுக்குப் பிறகு என்.பி.ஏ பட்டம் வென்ற நியூயார்க் நிக்ஸ்
நியூயார்க் நிக்ஸ் அணி, 53 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய கூடைப்பந்து சங்க (NBA) பட்டத்தை வென்றது. 2026 ஜூன் 14 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், நிக்ஸ் அணி சான் ஆண்டோனியோ ஸ்பர்ஸ் அணியை 94-90 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் 45 புள்ளிகள் எடுத்த ஜேலன் பிரன்சன், இறுதிப் போட்டியின் மதிப்புமிக்க வீரர் (Finals MVP) விருதைப் பெற்றார் மற்றும் நிக்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஜோஷ்னா சின்னப்பா
இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையும், முன்னாள் உலகத் தரவரிசையில் 10-ஆம் இடம் பெற்றவருமான ஜோஷ்னா சின்னப்பா, தனது ஏழாவது தொடர்ச்சியான ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்று, இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியராகத் திகழ்கிறார். 39 வயதான ஜோஷ்னா, சென்னையில் உள்ள ஐஎஸ்டிஏ (ISTA) அகாடமியில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் உன்னதி திரிபாதியை தோற்கடித்து தனது இடத்தை உறுதி செய்தார். ஜோஷ்னா, ஐந்து முறை ஆசிய விளையாட்டுப் போட்டிப் பதக்கம் வென்றவர் ஆவார். வரவிருக்கும் ஐச்சி-நகாயா ஆசிய விளையாட்டுப் போட்டியில், அனாஹத் சிங் மற்றும் தன்வி கன்னா ஆகியோருடன் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணியில் இடம்பெற உள்ளார். மேலும், அவர் கலப்பு இரட்டையர் பிரிவிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16-06-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 14-06-2026
சமகால இணைப்புகள்
Wed Jul 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
Tue Jul 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
Wed Jul 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
Tue Jul 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
Sat Jul 18 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
Thu Jul 16 2026