TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10-06-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10-06-2026
மாநிலச் செய்திகள்
மணிப்பூரில் சிஆர்பிஎப் கோப்ரா படை நிறுத்தம்
மத்திய உள்துறை அமைச்சகம், மணிப்பூரில் சிஆர்பிஎப் கோப்ரா (CoBRA - Commando Battalion for Resolute Action) கமாண்டோக்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரின் மலை மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களாக ஏற்பட்டுவரும் பதற்றம் மற்றும் ஆங்காங்கே நிகழும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. கோப்ரா படை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறப்பு அனுபவம் பெற்றதாகும். சிஆர்பிஎப் இயக்குநர் ஜி.பி. சிங் சமீபத்தில் மணிப்பூருக்கு சென்று கமாண்டோக்களை பணியில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் கலந்துரையாடினார்.
வாரணாசி சிவ தீம் பார்க் திட்டம்
உத்தர பிரதேசத்தின் வாரணாசி (காசி) நகரின் பேலுபூர் பகுதியில், மாநகராட்சி சார்பில் “சிவ தீம் பார்க்” என்ற ஆக்ஸிஜன் பூங்கா ₹100 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படுகிறது. வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியாகும். இந்தப் பூங்கா காசி விஸ்வநாதர் கோயிலின் சிவபெருமானை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவாக்கப்படுகிறது. அடுத்த 8 முதல் 9 மாதங்களில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்தவெளி கலைக்கூடம், முதியோர் நூலகம், வாகன நிறுத்துமிடம், உணவு அரங்கம், கோளரங்கம் மற்றும் காசியின் பாரம்பரியம், கோயில்கள், புராணக் கதைகளை எடுத்துரைக்கும் டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக 130 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது. செய்தியில் கேரளாவின் செங்கலில் உள்ள 111 அடி மகாலிங்கம் மற்றும் பீகாரின் கிழக்கு சம்பரானில் உள்ள விராட் ராமாயணக் கோயிலில் அமைக்கப்படும் 33 அடி ஒற்றைக் கல் சிவலிங்கம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சிவலிங்கம் தமிழ்நாட்டின் மகாபலிபுரம் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
சிப்ரி 2026 அறிக்கை
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, உலகில் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அவற்றில் ரஷ்யா 4,400, அமெரிக்கா 3,700, சீனா 620, பிரான்ஸ் 290, பிரிட்டன் 225, இந்தியா 190, பாகிஸ்தான் 170, இஸ்ரேல் 90, மற்றும் வடகொரியா 60 அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. இந்தியாவின் அணு ஆயுதக் கையிருப்பு கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளதாகவும், 12 அணு குண்டுகள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு தயார்நிலையில் உள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ராணுவச் செலவினத்தில் அமெரிக்கா 954 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சீனா (336 பில்லியன் டாலர்), ரஷ்யா (190 பில்லியன் டாலர்), ஜெர்மனி (114 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா 92.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹8.77 லட்சம் கோடி) செலவினத்துடன் 5ஆம் இடத்தில் உள்ளது. மேலும், 2021–2025 காலகட்டத்தில் உலகளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த முதல் ஐந்து நாடுகளில் இந்தியா மற்றும் உக்ரைன் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
சர்வதேசச் செய்திகள்
இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலை நிறுவும் திட்டம்
இந்தியா – இஸ்ரேல் நட்புறவின் அடையாளமாக, இஸ்ரேல் அரசு, அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றில் சத்ரபதி சிவாஜி மகராஜின் பிரம்மாண்ட சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை மும்பைக்கான இஸ்ரேல் துணைத் தூதர் யானிவ் ரெவாச் வெளியிட்டார். இத்திட்டத்திற்காக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒத்துழைப்பு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். சிவாஜி மகராஜின் வரலாற்றுத் தகவல்கள் மற்றும் வடிவமைப்பு தொடர்பான ஆதாரங்களைப் பெற மகாராஷ்டிர அரசின் ஒத்துழைப்பு பெறப்படுகிறது. மேலும், இந்தச் சிலை மகாராஷ்டிரா மற்றும் இந்திய-யூத சமூகத்துக்கு இடையிலான வரலாற்றுத் தொடர்புகளின் அடையாளமாகவும் அமையும். இது சத்ரபதி சிவாஜி மகராஜின் சாதனைகள் குறித்து இஸ்ரேல் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் திட்டமாகும்.
இந்திய மாம்பழ இறக்குமதிக்கு நேபாளம் கட்டுப்பாடு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களில் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்து எச்சங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளம் இந்திய மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தத் தகவலை மாதேஷ் மாகாண நில மேலாண்மை, வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி அஜய் கியாவாலி தெரிவித்தார். எல்லைப் பகுதிகளில் போதுமான பரிசோதனை வசதிகள் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நேபாளத்தின் உள்நாட்டு மாம்பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டு மாம்பழ உற்பத்தி போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து ஜிடிஆர்ஐ அறிக்கை
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) அதிகரித்து வரும் நிலையில், வர்த்தக பற்றாக்குறை, தலைகீழ் வரி அமைப்பு மற்றும் ஒப்பந்தங்களின் குறைந்த பயன்பாடு போன்ற சவால்கள் உருவாகியுள்ளன. தற்போது இந்தியா 27 நாடுகளை உள்ளடக்கிய 15 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும், 42 நாடுகளை உள்ளடக்கிய 9 ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தையிலோ அல்லது அமல்படுத்தப்படாமல் உள்ளன. மொத்தமாக இந்த 69 நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கால்வாசிக்கும் அதிக பங்கைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (CBAM), இந்தியா பெற்றுள்ள வரிச் சலுகைகளின் தாக்கத்தை குறைக்கக்கூடும் என அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், ஒப்பந்தங்களின் பயன்பாடு, துறைவாரியான பலன்கள், இறக்குமதி அதிகரிப்பு மற்றும் வர்த்தக பற்றாக்குறைகளை கண்காணிக்க FTA தாக்கக் கண்காணிப்பு அமைப்பை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2024–25 நிதியாண்டில், இந்தியா ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் மற்றும் EFTA நாடுகளுக்கு USD 48.6 பில்லியன் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்த நிலையில், அந்நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட USD 100 பில்லியன் மதிப்பில் இறக்குமதி செய்ததால் USD 50 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது. 2007–2009 மற்றும் 2023–2025 காலகட்டங்களுக்கு இடையில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ஆசியான் நாடுகளுடன் 381%, ஜப்பானுடன் 318%, தென்கொரியாவுடன் 268% அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆசியான், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் இந்தியாவின் சராசரி ஆண்டு வர்த்தக பற்றாக்குறை USD 62 பில்லியன் அளவை எட்டியுள்ளது. அதேவேளையில், தெற்காசிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உபரி USD 6.7 பில்லியனிலிருந்து USD 20 பில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவின் தகுதியான ஏற்றுமதிகளில் 20–30% மட்டுமே FTA சலுகைகளைப் பயன்படுத்துகின்றன என்று அறிக்கை தெரிவிக்கிறது.
எல் நினோ எல்லையை கடந்த கடல் வெப்பநிலை; பருவமழைக்கு சாதகமான IOD வாய்ப்பு
ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BoM) வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூன் 7, 2026-ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நினோ 3.4 குறியீட்டு மதிப்பு +0.81°C ஆக பதிவாகி, எல் நினோவுக்கான +0.80°C எல்லையை கடந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) குறியீட்டு மதிப்பு -0.34°C ஆக இருந்து தற்போது நடுநிலை நிலையில் உள்ளது. இருப்பினும், 2026 ஆகஸ்ட்–செப்டம்பர் காலத்தில் சாதகமான (Positive) IOD உருவாக வாய்ப்புள்ளதாக பெரும்பாலான காலநிலை மாதிரிகள் தெரிவிக்கின்றன. சாதகமான IOD, இந்தியாவிற்கு அதிக ஈரப்பதத்தை வழங்கி தென்மேற்கு பருவமழைக்கு ஆதரவாக அமையக்கூடும். இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தென்மேற்கு பருவமழை கணிப்பை நீண்டகால சராசரி மழையின் (LPA) 90% எனக் குறைத்துள்ளது. பருவமழை ஜூன் 4, 2026 அன்று தொடங்கியதுடன், தற்போது 18% மழைப்பற்றாக்குறை பதிவாகியுள்ளது. தெற்கு அலைவுக் குறியீட்டு எண் (SOI) ஜூன் 7 நிலவரப்படி -21.7 ஆக இருந்தது. வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால் எல் நினோ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் சாதகமான IOD அதன் தாக்கத்தை ஓரளவு சமநிலைப்படுத்தக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தில் ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப் படையை ஜூன் 9 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்தப் படைக்காக முதல் கட்டமாக ₹354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக தமிழக காவல் துறையில் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தப் படை உருவாக்கம் தொடர்பான ஆணையில் முதல்வர் மே 10 அன்று பதவியேற்றபோது கையொப்பமிட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில், இந்தப் படை காவல் துறையின் மகளிர் பிரிவுடன் இணைந்து செயல்படும். மேலும், நவீன தொழில்நுட்ப கருவிகள், நவீன வாகனங்கள் மற்றும் ட்ரோன் ரோந்து கண்காணிப்பு வசதிகள் இந்தப் படைக்கு வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் படையின் இலச்சினையை முதல்வர் வெளியிட, அதை படையின் தலைமை அதிகாரி ஜி.ஜி. கே. பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார். நிகழ்வில் தமிழக அரசின் தலைமைச் செயலர் மு. சாய்குமார், தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே. மணிவாசன் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்திற்கு ₹7,957.57 கோடி ஒதுக்கீடு
125 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு, ஜூன் 9 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ₹95,692 கோடி நிதியை விடுவித்தது. இதில் தமிழகத்திற்கு ₹7,957.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தின் (MGNREGA) 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபிஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) சட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டம் டிசம்பர் 2025-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமாகியது. புதிய சட்டத்தின்படி, வேலைவாய்ப்பு உறுதி காலம் 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. சட்டப்பேரவை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதிப் பங்கீடு மத்திய அரசு 60% மற்றும் மாநில அரசு 40% என்ற விகிதத்திலும், வடகிழக்கு மாநிலங்கள், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் 90:10 என்ற விகிதத்திலும் வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமை வகித்தார். இந்த நிதி நாடு முழுவதும் உள்ள சுமார் 2.80 லட்சம் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. மாநில வாரியான ஒதுக்கீட்டில் உத்தரப் பிரதேசம் ₹12,221.48 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (₹8,508 கோடி), தமிழ்நாடு (₹7,957.57 கோடி), ஆந்திரப் பிரதேசம் (₹7,701.21 கோடி), ராஜஸ்தான் (₹7,581.57 கோடி) மற்றும் பிகார் (₹6,715.83 கோடி) இடம்பெற்றுள்ளன. யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரிக்கு ₹40.56 கோடியும், ஜம்மு-காஷ்மீருக்கு ₹1,151.02 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசியச் செய்திகள்
கேப்டன் லால்ரினாவ்மா சைலோவுக்கு கீர்த்தி சக்ரா விருது
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த கேப்டன் லால்ரினாவ்மா சைலோ (27), பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆற்றிய வீரச் செயலுக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா விருதைப் பெற்றார். இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) நடைபெற்ற விழாவில் வழங்கினார். ஸ்ரீநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியை கண்டறிந்து வீழ்த்தியதுடன், மேலும் சில பயங்கரவாதிகளையும் அவர் முறியடித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது காட்டிய துணிச்சலுக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது. மிசோரம் முதல்வர் லால்டுஹோமா, அவரை கௌரவிக்கும் வகையில் ₹10 லட்சம் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தார். 2026ஆம் ஆண்டில், கீர்த்தி சக்ரா விருது 7 பேருக்கு வழங்கப்பட்டது; இதில் 2 பேருக்கு மரணத்திற்குப் பின் விருது வழங்கப்பட்டது. மிசோரம் மாநிலத்திலிருந்து கீர்த்தி சக்ரா பெற்ற இரண்டாவது நபர் என்ற பெருமையை லால்ரினாவ்மா சைலோ பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1968ஆம் ஆண்டு, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த சுபேதார் சால்னுனா லுஷாய் இந்த விருதைப் பெற்றிருந்தார்.
‘ராக்வீர்’ சாலைப் பாதுகாப்புத் திட்டம்: ரேபிடோவின் கின்னஸ் உலக சாதனை
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ‘ராக்வீர்’ (Rakveer) சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்திற்கு ஆதரவாக, ரேபிடோ (Rapido) நிறுவனம் 4 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்கச் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரமான ‘கோல்டன் ஹவர்’ காலப்பகுதியில் பொதுமக்கள் தயக்கமின்றி மருத்துவ உதவி வழங்குவதை ஊக்குவிப்பதே ராக்வீர் திட்டத்தின் நோக்கமாகும். இந்தக் கூட்டு முயற்சி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ரேபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜூலை 1 முதல் விபி-ஜி ராம் ஜி (VB-G RAM G) ஊரக வேலைத் திட்டம்
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு விக்சித் பாரத் – ரோஸ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) [VB-G RAM G] திட்டத்திற்கான மாநில வாரியான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய சட்டம், தற்போதைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக செயல்படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ₹95,692 கோடி இடைக்கால நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களின் பங்களிப்பையும் சேர்த்து, VB-G RAM G திட்டத்தின் மொத்த நிதி ₹1.51 லட்சம் கோடியாக இருக்கும். ஜூன் 30, 2026 வரை MGNREGA செயல்பாட்டிற்காக மத்திய அரசு ஏற்கனவே ₹30,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி நாடு முழுவதும் உள்ள சுமார் 2.80 லட்சம் கிராம ஊராட்சிகளுக்கு சென்றடைந்து, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஊரக வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. 26 மாநிலங்கள் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளை செய்துள்ள நிலையில், ஜார்கண்ட், கர்நாடகா, தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்கள் இன்னும் ஒதுக்கீடு செய்யவில்லை. மிசோரம், புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை தேவையான அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளன. திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ₹7,585.49 கோடி, உத்தரப் பிரதேசத்திற்கு ₹9,721.48 கோடி, ஆந்திரப் பிரதேசத்திற்கு ₹7,707.21 கோடி, ராஜஸ்தானுக்கு ₹7,581.87 கோடி, பிகாருக்கு ₹6,715.83 கோடி, கர்நாடகாவுக்கு ₹5,709.09 கோடி, மகாராஷ்டிராவுக்கு ₹4,420.32 கோடி, தெலங்கானாவுக்கு ₹3,825.31 கோடி, கேரளாவுக்கு ₹3,136.44 கோடி மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு ₹6,252.03 கோடி மத்திய அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய நிர்வாகம் மற்றும் சமூகத் தணிக்கைக்காக ₹1,850.62 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மூங்கில் விவசாயிகளுக்கான FSC வன மேலாண்மைச் சான்றிதழ்
இண்டஸ்ட்ரீ ஃபவுண்டேஷன் (Industree Foundation), சிறு விவசாயிகள் நிர்வகிக்கும் தனியார் மூங்கில் தோட்டங்களுக்கு வனப் பொறுப்புக் குழு (Forest Stewardship Council - FSC) வன மேலாண்மைச் சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் அமைப்பாக உருவெடுத்துள்ளது. SCS Global Services வழங்கிய இந்தச் சான்றிதழ், கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா, ஹாசன் மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களில் உள்ள 1,112.9 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் சாகுபடி செய்யும் 6,671 சிறு மற்றும் குறு பெண் விவசாயிகளை உள்ளடக்கியது. FSC குழுமச் சான்றிதழ் (Group Certification) முறையின் மூலம் சிறு விவசாயிகள் ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் சான்றிதழ் தேவைகளை கூட்டாக பூர்த்தி செய்ய முடிகிறது. இந்தச் சான்றிதழ், மூங்கில் நிலையான முறையில் பயிரிடப்படுவது, சட்டப்பூர்வ தரநிலைகளுக்கு இணங்குவது மற்றும் முழுமையாகக் கண்டறியக்கூடியது என்பதை உறுதி செய்கிறது. இண்டஸ்ட்ரீ ஃபவுண்டேஷன் தனது மறுஉருவாக்க வேளாண் காடுகள் மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (Regenerative Agroforestry and Livelihoods Project) மூலம் நில மதிப்பீடு, பயிர் தேர்வு, மண் தயாரிப்பு, நடவு, வளர்ச்சி கண்காணிப்பு, நிலையான அறுவடை மற்றும் FSC தரநிலைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டம் 2026
பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (RCS) கீழ் செயல்படும் மாற்றியமைக்கப்பட்ட உடான் (UDAN - Ude Desh ka Aam Nagrik) திட்டம், 2026 ஜூன் 20 அன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட உள்ளது. 2026 மார்ச் மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்தத் திட்டம் 2027-36 நிதியாண்டுகள் வரை 10 ஆண்டுகள் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ₹28,840 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் 120 புதிய இடங்களுக்கு விமான இணைப்பு, சுமார் 4 கோடி பயணிகளுக்கு விமானப் பயண வசதி, மற்றும் பயன்பாட்டில் இல்லாத விமானத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு 100 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், சுமார் 441 விமானத் தளங்களுக்கு செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆதரவு வழங்கப்படுவதுடன், மலைப்பகுதி, தொலைதூர, தீவு மற்றும் வளர்ச்சி குறைந்த பகுதிகளில் ₹3,661 கோடி மதிப்பீட்டில் 200 நவீன ஹெலிபேட்கள் அமைக்கப்பட உள்ளன. பிராந்திய விமான வழித்தடங்களின் செயல்திறனை மேம்படுத்த ₹10,043 கோடி Viability Gap Funding (VGF) ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ் பவன் ஹான்ஸ் நிறுவனத்திற்காக HAL Dhruv ஹெலிகாப்டர்கள் மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்காக HAL Dornier விமானங்கள் வாங்குவதற்கும் திட்டம் ஆதரவு வழங்குகிறது. 2016 ஆம் ஆண்டு தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கையின் கீழ் தொடங்கப்பட்ட உடான் திட்டம், 2026 மார்ச் 31 நிலவரப்படி 663 வழித்தடங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததுடன், 17 ஹெலிபோர்ட்கள் மற்றும் 2 நீர்நிலை விமான நிலையங்கள் உட்பட 95 விமானத் தளங்களை இணைத்துள்ளது.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
ஐசிஏஆர்-நார்ம் இயக்குநராக ராமன் மீனாட்சி சுந்தரம் நியமனம்
ராமன் மீனாட்சி சுந்தரம் ஐசிஏஆர்–தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை அகாடமி (ICAR-NAARM) இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு அவர் ஐதராபாத்தில் உள்ள ஐசிஏஆர்–இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IIR) இயக்குநராக பணியாற்றினார். மேம்படுத்தப்பட்ட சாம்பா மசூரி (Samba Mahsuri) நெல் ரகத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11-06-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09-06-2026
சமகால இணைப்புகள்
Wed Jul 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
Tue Jul 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
Wed Jul 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
Tue Jul 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
Sat Jul 18 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
Thu Jul 16 2026