TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09-06-2026

Trending TNPSC

By

8 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09-06-2026

தமிழ்நாடு செய்திகள்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை

பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல் துறை சார்பில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய், முதல்வராக பொறுப்பேற்ற மே 10 அன்று இந்தப் படையை உருவாக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து அரசாணை (GO) வெளியிடப்பட்டு, இந்தப் படை தமிழக முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஐஜி கே. வாசுகி இந்தப் படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் கட்டமாக 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், அதில் 1 காவல் கண்காணிப்பாளர் (SP), 2 துணைக் கண்காணிப்பாளர்கள் (DSP), 4 ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் படையின் தொடக்க விழா ஜூன் 9 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மேலும், இந்தப் படைக்கு நவீன ரோந்து வாகனங்களும் வழங்கப்படுகின்றன.

தேசியச் செய்திகள்

பிரதமர் ஜன் தன் யோஜனா கணக்குகள்

பிரதமர் ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டம் 2014 ஆகஸ்ட் 28 அன்று தொடங்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததன்படி, இத்திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை 58 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கு இல்லாதவர்களை வங்கி சேவைக்குள் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் உலகின் மிகப்பெரிய நிதி ஒருங்கிணைப்புத் திட்டமாக கருதப்படுகிறது. இக்கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை. தகுதியான பயனாளிகளுக்கு இலவச ரூபே டெபிட் கார்டு, ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு, மற்றும் ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதி வழங்கப்படுகிறது. மேலும், அரசின் நலத்திட்ட நிதிகளை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் நேரடி நன்மை பரிமாற்ற (DBT) முறைக்கு இத்திட்டம் முக்கிய ஆதாரமாக உள்ளது. கணக்குதாரர்களில் 56% பேர் பெண்கள், மேலும் 67% கணக்குகள் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன. DBT முறையின் கீழ் இதுவரை ரூ.45 லட்சம் கோடி ஜன்தன் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94% பேரிடம் வங்கிக் கணக்கு இருப்பதற்கும் இத்திட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மாநில நிதிக் குழுக்கள் குறித்த அறிக்கை

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (Ministry of Panchayati Raj), மாநில நிதிக் குழுக்கள் (State Finance Commissions - SFCs) தொடர்பான தரவுத்தொகுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 243-Iவது பிரிவின் கீழ் அமைக்கப்படும் மாநில நிதிக் குழுக்கள், மாநில அரசின் வருவாயை மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே பகிர்வது குறித்து பரிந்துரைகள் வழங்கும் அரசியலமைப்பு அமைப்புகளாகும். அறிக்கையில் தரவுச் சிதறல், பஞ்சாயத்து மற்றும் துறைவாரியான செலவினத் தரவுகள் இல்லாமை, தரநிலையற்ற கணக்கியல் முறை, ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகள் இல்லாமை, அடித்தட்டு மட்டத்தில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை, மாநில நிதிக் குழுக்களை அமைப்பதில் தாமதம் மற்றும் போதிய அதிகாரப் பகிர்வு இல்லாமை போன்ற சவால்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பரிந்துரைகளில், 73வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் செயல்பாட்டை இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாநிலங்கள் நிரந்தர மாநில நிதிக் குழு பிரிவுகளை அமைக்க வேண்டும் என்றும், ஒரே மாதிரியான கணக்கியல் தலைப்புகள் மற்றும் பொதுவான அறிக்கை வடிவங்களை பின்பற்ற வேண்டும் என்றும், பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீட்டு (Panchayat Advancement Index) அளவுகோல்களை தேவைகள், செயல்திறன் மற்றும் சமத்துவம் என்ற பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ருத்வ அபியான் – 10 ஆண்டுகள்

பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ருத்வ அபியான் (PMSMA) திட்டம் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission - NHM) மூலம் செயல்படுத்தப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச கர்ப்பகால சுகாதார சேவைகளை வழங்கி, அபாயங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பாதுகாப்பான மகப்பேற்றை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இந்தத் திட்டம் கர்ப்பத்தின் 2 மற்றும் 3ஆம் தவணையில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படுவதுடன், அதிக அபாய கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சேவைகள் ஒவ்வொரு மாதமும் 9ஆம் தேதி அரசு சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகின்றன. இதில் மருத்துவ பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட், மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கும். மாதந்தோறும் 9ஆம் தேதி தன்னார்வமாக சேவை செய்யும் தனியார் மருத்துவர்கள் ‘IPledgeFor9’ Achievers Awards மூலம் பாராட்டப்படுகின்றனர். 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Extended PMSMA Strategy, அதிக அபாய கர்ப்பங்களை பாதுகாப்பான பிரசவம் வரை தொடர்ந்து கண்காணிப்பதை உறுதி செய்கிறது. இதுவரை 7.50 கோடிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால சுகாதார சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தாய்மரண விகிதம் (Maternal Mortality Ratio - MMR) 2014–16 காலகட்டத்தில் ஒரு இலட்சம் உயிர்ப்பிறப்புகளுக்கு 130 ஆக இருந்தது, அது 2022–24 காலகட்டத்தில் 87 ஆகக் குறைந்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

மங்கோலிய மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

மங்கோலியாவின் உலன்படார் நகரில் நடைபெற்ற சீனியர் ரேங்கிங் ஓபன் சீரிஸ் மல்யுத்தப் போட்டியில் இந்தியா மொத்தம் 17 பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த தரவரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றது. ப்ரீஸ்டைல் பிரிவில், தீபக் (61 கிலோ), தினேஷ் (125 கிலோ) மற்றும் சாகர் ஜக்லான் (74 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வென்றனர்; சுமித் (57 கிலோ), குமார் மொகித் (65 கிலோ), ஜெய்தீப் (74 கிலோ) மற்றும் விக்கி (97 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். கிரெக்கோ ரோமன் பிரிவில், சுனித் (87 கிலோ) மற்றும் நிதேஷ் (97 கிலோ) தங்கப் பதக்கங்கள் வென்றனர். மகளிர் பிரிவில், மனிஷா (57 கிலோ), நேஹா (59 கிலோ) மற்றும் காஜல் (76 கிலோ) தங்கப் பதக்கங்கள் வென்றனர்; நீலம் (50 கிலோ), ஹன்சிகா (55 கிலோ), மான்ஸி (62 கிலோ) மற்றும் பிரியா (76 கிலோ) வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சாதனை டெஸ்ட் வெற்றி

பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் ஜூன் 6 அன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 564/8 டிக்ளேர் செய்தது. இதில் ஷுப்மன் கில் (126) மற்றும் கே.எல். ராகுல் (100) சதங்கள் அடித்தனர். ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கும், பின்தொடர்ந்து விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. அறிமுக டெஸ்டில் விளையாடிய மானவ் சுதர், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் அறிமுக டெஸ்டிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற 9-ஆவது இந்திய வீரராகவும், அந்தப் பட்டியலில் 3-ஆவது இந்திய பந்துவீச்சாளராகவும் அவர் இடம்பிடித்தார். மேலும், அறிமுக டெஸ்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த 10-ஆவது இந்திய வீரராகவும் ஆனார். அனைத்து வடிவங்களிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா இதுவரை 15 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 13 வெற்றிகள், 1 டை, 1 வாஷ்அவுட் பதிவு செய்துள்ளதுடன், இன்னும் தோல்வி கண்டதில்லை.

பிரக்ஞாநந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை

கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞாநந்தா, நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, இப்போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதையடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். மேலும், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பிரக்ஞாநந்தாவுக்கு ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் எஸ்டிஏடி உறுப்பினர்-செயலர் ஜெ. மேகநாத ரெட்டி பங்கேற்றனர். செஸ் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஹோம் ஆஃப் செஸ் அகாதெமி நிறுவப்பட்டுள்ளது; இது இன்டர்நேஷனல் மாஸ்டர் (IM) மற்றும் கிராண்ட்மாஸ்டர் (GM) பட்டங்களை பெற வீரர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொருளாதாரச் செய்திகள்

2025–26 ஜனவரி–மார்ச் காலாண்டில் நடப்புக் கணக்கு உபரி

2025–26 நிதியாண்டின் ஜனவரி–மார்ச் காலாண்டில், இந்தியாவின் நடப்புக் கணக்கு உபரி (Current Account Surplus) 710 கோடி டாலராக பதிவாகியுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.7% ஆகும். இந்தக் காலகட்டத்தில் நிகர சேவைகள் வரவு 6,040 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை 8,340 கோடி டாலராக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் பணப்பரிமாற்றம் 4,350 கோடி டாலராகவும், வெளிநாடுவாழ் இந்தியர்களின் (NRI) வைப்பு நிதி 330 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு (FDI) 420 கோடி டாலர் நிகர வரவையும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) மூலம் 1,200 கோடி டாலர் நிகர முதலீடும் பதிவாகியுள்ளது. 2025–26 முழு நிதியாண்டில், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) 2,520 கோடி டாலராக இருந்தது. மேலும், நிகர மறைமுக வரவுகள் 31,200 கோடி டாலராக உயர்ந்துள்ளன. முழு ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டின் நிகர வரவு 690 கோடி டாலராக இருந்ததுடன், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2,360 கோடி டாலர் குறைந்துள்ளது.

சர்வதேசச் செய்திகள்

ஆர்ஜென்டீனா எல்என்ஜி திட்ட ஒப்பந்தம்

அதானி போர்ட்ஸ் நிறுவனம், ஆர்ஜென்டீனாவின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி திட்டத்திற்கான 10 ஆண்டுகால கடல்சார் சேவை ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆர்ஜென்டீனாவின் சதர்ன் எனர்ஜி எஸ்.ஏ. (Southern Energy S.A.) நிறுவனம் நடத்திய சர்வதேச டெண்டர் மூலம், அதானி ஹார்பர் இன்டர்நேஷனல் மற்றும் மெரிடியன் குரூப் இணைந்த கூட்டணிக்கு வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தின் கீழ், இழுவைப்படகு இயக்கம், கடல்சார் தளவாட சேவைகள், விநியோக ஆதரவு மற்றும் ஊழியர்கள் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டம் ஆர்ஜென்டீனாவின் சான் மத்தியாஸ் வளைகுடாவில் அமைக்கப்பட உள்ளது. இதன் வணிக செயல்பாடுகள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் ஆண்டுதோறும் 24.5 லட்சம் டன் எல்என்ஜி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்மீனியா நாடாளுமன்றத் தேர்தல் 2026

ஆர்மீனியாவில் நடைபெற்ற 2026 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நிகோல் பஷின்யானின் (Nikol Pashinyan) சிவில் கான்ட்ராக்ட் (Civil Contract) கட்சி 49.81% வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது என்று மத்திய தேர்தல் ஆணையம் (CEC) அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியான ஸ்ட்ராங் ஆர்மீனியா (Strong Armenia) கூட்டணி 23.29% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றது. தேர்தலில் 58%க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்தத் தேர்தல் ஆர்மீனியாவின் ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் (European Union) மற்றும் அசர்பைஜான் நாடுகளுடனான உறவுகளின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. நிகோல் பஷின்யான், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை முன்னெடுத்து வருவதுடன், ரஷ்யாவுடனான உறவுகளையும் தொடர ஆதரவு தெரிவித்து வருகிறார். ஸ்ட்ராங் ஆர்மீனியா கூட்டணியை சாம்வெல் கராபெட்டியன் (Samvel Karapetyan) வழிநடத்துகிறார்.

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

SIPRI ஆண்டு அறிக்கை 2026

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) ஆண்டு அறிக்கை 2026 படி, ஜனவரி 2026 நிலவரப்படி உலகில் சுமார் 12,187 அணு ஆயுத வார்ஹெட்கள் உள்ளன. இந்தியாவின் அணு ஆயுத கையிருப்பு 190 வார்ஹெட்களாக உயர்ந்துள்ளது; அதே நேரத்தில் சீனா 620 மற்றும் பாகிஸ்தான் 170 வார்ஹெட்களைக் கொண்டுள்ளன. இந்தியாவின் 12 வார்ஹெட்கள் ஏவுகணைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு உலக இராணுவச் செலவு 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து, தொடர்ந்து 11-ஆவது ஆண்டாக அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்தியா, 92.1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவுடன் உலகின் 5-ஆவது மிகப்பெரிய இராணுவச் செலவின நாடாக இருந்தது; அமெரிக்கா 954 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தில் உள்ளது. ஆயுத இறக்குமதியில் உக்ரைனுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் 2-ஆவது மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக சுமார் 8% பங்குடன் இருந்தது. 2024 இல் 3 ஆக இருந்த நாடுகளுக்கிடையேயான ஆயுத மோதல்கள், 2025 இல் 6 ஆக உயர்ந்துள்ளன. நவீன போர்முறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன் கூட்டங்கள், தன்னாட்சி ஆயுதங்கள், இணையவழி கருவிகள், குறைக்கடத்திகள் (Semiconductors), முக்கிய கனிமங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் முக்கிய பங்கு வகிப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. உலகளாவிய ஆயுதக் குறைப்பு அமைப்புகளில் ஐக்கிய நாடுகள் ஆயுதக் குறைப்பு அலுவலகம் (UNODA) மற்றும் ஆயுதக் குறைப்பு மாநாடு (Conference on Disarmament - CD, 1978) குறிப்பிடப்பட்டுள்ளன. முக்கிய ஒப்பந்தங்களாக அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT, 1968), முழுமையான அணு சோதனைத் தடை ஒப்பந்தம் (CTBT, 1996) மற்றும் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் (TPNW, 2017) இடம்பெற்றுள்ளன.

உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10-06-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08-06-2026

சமகால இணைப்புகள்