TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06-06-2026

Trending TNPSC

By

17 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06-06-2026

தமிழ்நாடு செய்திகள்

நீலகிரி வரையாடு மற்றும் பறவைகள் கணக்கெடுப்பு – 2026

உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் 2026 ஜூன் 5 அன்று நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நீலகிரி வரையாடு எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கான மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு (2025–26) மற்றும் மாநில அளவிலான வேட்டை பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவற்றின் தரவுகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக மதிப்பிடப்பட்டு, இது கடந்த ஆண்டைவிட 4.68% உயர்வாக பதிவாகியுள்ளது. மொத்த வரையாடுகளில் 44.87% ஆனைமலைப் பகுதியில் மற்றும் 29.25% நீலகிரி நிலப்பரப்பில் காணப்படுகின்றன. ஆண்–பெண் விகிதம் 55:100 என்றும், பெண்–குட்டி விகிதம் 100:66 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பில் 393 பறவை இனங்கள் மற்றும் 6,01,348 பறவைகள் பதிவாகியுள்ளன; இதில் 116 நீர்ப்பறவை இனங்களும் 131 வலசைப் பறவை இனங்களும் அடங்கும். நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பில் 391 பறவை இனங்கள் மற்றும் 2,24,801 பறவைகள் பதிவாகியுள்ளன; இதில் 228 உள்ளூர் இனங்களும் 72 வலசைப் பறவை இனங்களும் இடம்பெற்றுள்ளன. நிகழ்வில் “தமிழகத்தில் பவளப்பாறை மறுசீரமைப்பு: களப்பணியாளர்களுக்கான நிலையான செயல்முறை வழிகாட்டுதல்கள்” என்ற நூல் வெளியிடப்பட்டது. இதில் ஆர். வி. ரஞ்சித்குமார் (வனத்துறை அமைச்சர்), வி. கே. ராஜீவ் (சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்), சுப்ரியா சாகு (அரசு கூடுதல் தலைமைச் செயலர்), ஸ்ரீநிவாஸ் ரெட்டி (முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர்) மற்றும் ராகேஷ் குமார் டோக்ரா (முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர்) ஆகியோர் பங்கேற்றனர்.

தேசியச் செய்திகள்

இந்தியாவில் ஏர்டிராங்க் நிறுவன முதலீடு

ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்டு 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏர்டிராங்க் (AirTrunk) நிறுவனம், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ₹3 லட்சம் கோடி (30 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்து 5 ஜிகாவாட் (GW) திறன் கொண்ட உயர் திறன் தரவு மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. 2026 ஜூன் 5 அன்று புது தில்லியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏர்டிராங்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராபின் குடா இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. லுமினா கிளவுட் இன்ஃப்ரா (Lumina CloudInfra) நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் 2026 ஏப்ரல் மாதத்தில் ஏர்டிராங்க் இந்தியச் சந்தையில் நுழைந்தது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டங்கள், இந்தியாவின் எண்ம உட்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு திறன்களை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு, இந்தியாவின் எண்ம உட்கட்டமைப்புத் துறையில் முன்மொழியப்பட்ட மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும்.

‘வந்தே மாதரம்’ உத்தரவு குறித்து சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம், 2026 ஜனவரி 28 அன்று மத்திய அரசு வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவது தொடர்பான சுற்றறிக்கை, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதற்கும் பொருந்தும் என்று 2026 ஜூன் 5 அன்று கருத்து தெரிவித்தது. அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு (PIL) விசாரணையின் போது இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டது. மனுவில், 1891-ஆம் ஆண்டு மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்படும் மரபு குறித்து குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, மத்திய அரசின் சுற்றறிக்கையை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்து, தற்போதைய மனுவை திரும்பப் பெற மனுதாரர் அனுமதி கோரினார். இதனை ஏற்ற நீதிமன்றம், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இந்தியாவின் 100-ஆவது ராம்சர் தளம்

உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம், இந்தியாவின் 100-ஆவது ராம்சர் தளமாக அங்கீகரிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி 2026 ஜூன் 5 அன்று அறிவித்தார். ஈரநிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 1971-ஆம் ஆண்டு ஈரானின் ராம்சர் நகரில் உருவாக்கப்பட்ட ராம்சர் ஒப்பந்தத்தில் (Ramsar Convention) இந்தியா 1982 பிப்ரவரி 1 அன்று கையொப்பமிட்டது. இந்த அங்கீகாரத்துடன், இந்தியாவில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 99-இலிருந்து 100 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம், உத்தரப் பிரதேசத்தின் 13-ஆவது ராம்சர் தளமாகவும் மாறியுள்ளது. இதற்கான அங்கீகாரச் சான்றிதழை உத்தரப் பிரதேச வனத்துறை அமைச்சர் அருண்குமார் சக்சேனா, முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களிடம் உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2026 அன்று வழங்கினார்.

அரசு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீட்டுக்கு வரிவிலக்கு அவசர சட்டம்

அரசு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரிவிலக்கு வழங்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு 2026 ஜூன் 5 அன்று அமல்படுத்தியது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 123-ன் கீழ், நாடாளுமன்றம் செயல்படாத நிலையில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் 2026 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்து, அரசு கடன் பத்திரங்களின் விற்பனை, பரிமாற்றம் மற்றும் மாற்றம் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் மூலதன ஆதாயங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் அந்நிய முதலீட்டை ஈர்த்து இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவது ஆகும். இந்த நடவடிக்கைக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது. புதிய முறையின் கீழ் 15, 30 மற்றும் 40 ஆண்டு கால அரசு கடன் பத்திரங்கள் மற்றும் இறையாண்மை பசுமைப் பத்திரங்கள் ஆகியவை முழுமையாக அணுகக்கூடிய வழிமுறை (FAR)-ல் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் குறுகிய கால கடன் வரம்பு, செறிவு வரம்பு மற்றும் பத்திர வாரியான வரம்பு நீக்கப்பட்டு, மத்திய அரசு கடன் பத்திரங்களுக்கு 6%, மாநில அரசு கடன் பத்திரங்களுக்கு 2% முதலீட்டு வரம்பு தொடர்கிறது.

மகாரத்னா அந்தஸ்தை இழக்கும் அபாயத்தில் பெல் மற்றும் செயில் நிறுவனங்கள்

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனங்களுக்கு, நிதிச் செயல்திறனை மேம்படுத்த ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கிய மத்திய அரசு, செயல்திறன் மேம்படாவிட்டால் அவற்றின் மகாரத்னா அந்தஸ்தை நவரத்னாவாக தரம் குறைக்கலாம் என அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரி வரிக்கு பிந்தைய லாபம் (PAT) ₹5,000 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற தகுதியை இரு நிறுவனங்களும் பூர்த்தி செய்யவில்லை. இந்த மதிப்பாய்வு, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) தொடர்பான மறுமதிப்பீட்டின் ஒரு பகுதியாகும்; இதனை மத்திய அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதன் தலைமையிலான குழு மேற்கொண்டது. இந்த குழு ‘ரத்னா’ அந்தஸ்து நீக்கத்தையும் உள்ளடக்கிய கடுமையான நிதி மற்றும் நிர்வாக அளவுருக்களை பரிந்துரைத்துள்ளது. தற்போதைய விதிகளின்படி, மகாரத்னா நிறுவனங்கள் ₹5,000 கோடி வரை அரச அனுமதி இன்றி முதலீடு செய்யலாம், ஆனால் நவரத்னா நிறுவனங்களுக்கு ₹1,000 கோடி வரம்பு உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் துறை (DPE), 2010-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகளை 2025 விலைகளுக்கு ஏற்ப திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கனரக தொழில்துறை மற்றும் எஃகு அமைச்சகங்கள் மீட்பு திட்டங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இறால் ஏற்றுமதி கண்காணிப்பு தீவிரம்: CDSCO நடவடிக்கை

புது தில்லி: இறால்களில் தடைசெய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டறியப்பட்டதால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் சந்தைகளில் இந்திய இறால் ஏற்றுமதிக்கு 43% நிராகரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கு கால்நடை மருத்துவக் கடைகள் மற்றும் மருந்தகங்களில் ஆய்வுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும், இறால் ஏற்றுமதி தொகுப்புகளில் குளோராம்பெனிகால் (chloramphenicol) மற்றும் நைட்ரோஃபுரான்ஸ் (nitrofurans) எச்சங்கள் கண்டறியப்பட்டதாக கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான்கு மாநிலங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பண்ணைகளில் மாசுபாடு கண்டறியப்பட்டதில், ஆந்திரப் பிரதேசம் 74%, ஒடிசா 13%, மேற்கு வங்கம் 8.7%, குஜராத் 4.3% ஆகியவை இடம்பெற்றுள்ளன. தடை நடைமுறை, ஆய்வு விவரங்கள் மற்றும் விதிமீறல் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாநிலங்களுக்கு CDSCO அறிவுறுத்தியுள்ளது. உணவு உற்பத்தி விலங்குகளில் இந்த மருந்துகள் மனித உடல்நல பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் அபாயம் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் விதிகள் 1945 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை ஹைட்ரஜன்

இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக உலக வங்கி குழுமத்தின் ஒரு பிரிவான சர்வதேச நிதி நிறுவனம் (IFC), ஹைகென்கோ கிரீன் எனர்ஜிஸ் நிறுவனத்திற்கு $50 மில்லியன் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சீமென்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ், கிளீன் டெக்னாலஜி ஃபண்ட், ஃபிரான்டியர் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் மற்றும் ஃபுல்லர்டன் கார்பன் ஆக்ஷன் ஃபண்ட் ஆகியவற்றுடன் இணைந்து, மொத்தமாக $105 மில்லியன் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் IFC கையெழுத்திட்டுள்ளது.

தனியார் துறைக்கு திறக்கப்பட்ட தந்திரோபாய ஏவுகணை உற்பத்தி

பாதுகாப்பு அமைச்சகம் (MoD), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) உள்நாட்டு தந்திரோபாய ஏவுகணை உற்பத்தித் திட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு திறந்துள்ளது. இதன்மூலம் ஏவுகணை உற்பத்தியில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தின் ஆதிக்கம் குறைக்கப்பட்டுள்ளது. 10–12 டிஆர்டிஓ தந்திரோபாய ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ள பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (DAP) 2026-க்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது. Adani Defence & Aerospace, Bharat Forge, ICOMM, Solar Defence and Aerospace Ltd ஆகிய நிறுவனங்கள் Development-cum-Production Partner (DcPP) முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆகிய நிறுவனங்களும் பங்கேற்கின்றன. முக்கிய திட்டங்களில் நாட்டின் முதல் ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான Naval Anti-Ship Missile–Short Range (NASM-SR), ருத்ரம்-I, ருத்ரம்-II, ருத்ரம்-III ஏவுகணைத் தொடர்கள், Very Short-Range Air Defence System (VSHORADS), Man-Portable Air-Defence System (MANPADS), Long-Range Glide Bomb (LRGB) மற்றும் UAV-Launched Precision Guided Missile ஆகியவை அடங்கும். பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் பேலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியையும் எதிர்காலத்தில் தனியார் துறைக்கு திறக்கலாம் என தெரிவித்துள்ளார்.

விமானப்படையின் துணைத் தலைமைப் பொறுப்பாளராக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமனம்

ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், இந்திய விமானப்படையின் (Indian Air Force) துணைத் தலைமைப் பொறுப்பாளராக (Vice-Chief of the Air Staff - VCAS) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை 1 அன்று பதவியேற்கிறார். அவர் ஏர் மார்ஷல் நாகேஷ் கபூருக்கு பின் இப்பதவியை ஏற்கிறார். தற்போது அவர் Chief of Integrated Defence Staff (CISC) ஆக பணியாற்றி வருகிறார். ஆயுதப்படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும் Integrated Theatre Commands உருவாக்க முயற்சிகளிலும் அவர் பங்களித்துள்ளார். டிசம்பர் 6, 1986 அன்று இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் இணைந்த அவர், தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா (National Defence Academy), பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரி, பங்களாதேஷ் (Defence Services Staff College) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி, புது தில்லி (National Defence College) ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர் (Flying Instructor) மற்றும் சோதனை விமானி (Experimental Test Pilot) ஆன அவர், 3,300 மணி நேரத்திற்கும் அதிகமான பறக்கும் அனுபவத்துடன், Mirage-2000, MiG-21, Jaguar உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வகை விமானங்களை இயக்கியுள்ளார்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகள் நியமனம்

இந்திய அரசியலமைப்பின் அதிகாரங்களின் கீழ், இந்திய குடியரசுத் தலைவர், இந்திய தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, Bombay High Court கூடுதல் நீதிபதிகள் ஆறு பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்துள்ளார். நியமிக்கப்பட்டவர்கள் நிவேதிதா பிரகாஷ் மேத்தா, பிரபுல்ல சுரேந்திரகுமார் குபால்கர், அஷ்வின் தாமோதர் போபே, ரோஹித் வாசுதேவ் ஜோஷி, அத்வைத் மகேந்திர சேத்னா, மற்றும் பிரவின் ஷேஷ்ராவ் பாட்டீல் ஆவர். இந்த நியமனங்கள் 6 ஜூன் 2026 அன்று அறிவிக்கப்பட்டன.

ஜன் சமர்த் போர்ட்டல் – 4 ஆண்டுகள் நிறைவு

ஜன் சமர்த் போர்ட்டல் (Jan Samarth Portal) 6 ஜூன் 2022 அன்று தொடங்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டில் தனது 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது நிறுவனக் கடன்களை எளிதாகப் பெற உதவும் ஒற்றைச் சாளர டிஜிட்டல் தளமாக செயல்படுகிறது. விவசாயம், வணிகம், வீட்டுவசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட துறைகளை இந்த தளம் உள்ளடக்குகிறது. கடன் வழங்குபவர்களையும் பயனாளிகளையும் நேரடியாக இணைக்கும் இந்த தளம், மத்திய அரசின் 16 கடன் சார்ந்த திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் நுழைவாயிலாக செயல்படுகிறது. இந்த போர்ட்டல் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, பெங்காலி மற்றும் கன்னடம் ஆகிய 8 மொழிகளில் கிடைக்கிறது. நாட்டில் நிதி உள்ளடக்கத்தையும் (Financial Inclusion) எளிமையான கடன் வழங்கல் முறையையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

லட்சத்தீவில் மாபெரும் பவளப்பாறை கூட்டமைப்பு கண்டறிதல்

லட்சத்தீவின் கத்மத் தீவு (Kadmat Island) அருகே, 2026 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கடல்சார் பல்லுயிர் பெருக்க ஆய்வில், “பொட்டேட்டோ பேட்ச்” (Potato Patch) என அழைக்கப்படும் பவோனா கிளாவிஸ் (Pavona clavus) இனத்தைச் சேர்ந்த மாபெரும் பவளப்பாறை கூட்டமைப்பு ஆவணப்படுத்தப்பட்டது. சுமார் 4,250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கூட்டமைப்பு, உலகில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய உயிருள்ள பவளப்பாறை கூட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, இந்த பவள அமைப்பு 700 முதல் 1,800 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். எனினும், அதன் வயது ஸ்கெலெரோக்ரோனாலஜி (Sclerochronology) மற்றும் ரேடியோமெட்ரிக் டேட்டிங் (Radiometric Dating) போன்ற அறிவியல் முறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆய்வில், பவளத் திசுக்களில் 58.47% உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology) விஞ்ஞானி இத்ரிஸ் பாபு, ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (REEF), தி ஹாபிடட்ஸ் டிரஸ்ட் (The Habitats Trust) மற்றும் லட்சத்தீவு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவை பங்கேற்றன.

பொருளாதாரச் செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக தொடரும்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% ஆக மாற்றமின்றி தொடர்வதாக 2026 ஜூன் 5 அன்று அறிவித்தது. இந்த முடிவு மும்பையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு (Monetary Policy Committee - MPC) கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, நடப்பு ஆண்டிற்கான பணவீக்க விகிதம் 5.1% ஆக இருக்கும் என தெரிவித்தார்; ஆர்பிஐயின் பணவீக்க இலக்கு 4% ஆகும். மேலும், 2026–27 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது; இது முன்பு மதிப்பிடப்பட்ட 6.9% இலிருந்து குறைக்கப்பட்டுள்ளது. காகிதப் பணத்துக்கு மாற்றாக பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆர்பிஐ பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025–26 ஜனவரி–மார்ச் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தகவலின்படி, 2025–26 நிதியாண்டின் ஜனவரி–மார்ச் (4-ஆம்) காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி உள்நாட்டு தேவை மற்றும் அரசின் முதலீடுகள் காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025–26 முழு ஆண்டு வளர்ச்சி 7.7% ஆக உயர்ந்துள்ளது; இது முந்தைய 2024–25 நிதியாண்டின் 7.1% வளர்ச்சியை விட அதிகமாகும். வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உற்பத்தி மற்றும் சேவைத் துறை செயல்திறன் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த மதிப்பு கூடுதல் (GVA) 4-ஆம் காலாண்டில் 7.9% ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026–27 நிதியாண்டின் GDP வளர்ச்சி கணிப்பை 6.6% ஆக குறைத்துள்ளது, இதற்குக் காரணமாக மத்திய கிழக்கு மோதல், விநியோக தடைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேசச் செய்திகள்

கியூபா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அமெரிக்கா தடை

கியூபா அதிபர் மிகெல் டயாஸ் கானெல் மற்றும் கியூபா பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா 2026 ஜூன் 5 அன்று பொருளாதாரத் தடைகள் விதித்தது. இந்த நடவடிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட நிர்வாக உத்தரவு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்தது. இந்தத் தடைகளின் கீழ், மிகெல் டயாஸ் கானெலின் மனைவி லிஸ்குவெஸ்டா பெராசா, முன்னாள் அதிபர் ரௌல் காஸ்ட்ரோவின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 நபர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட 5 அரசு அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு கடந்த மாதம் 11 கியூபா அதிகாரிகள் மீது தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.

அரசு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீடு

புது தில்லி: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வெளிநாட்டு கணக்குகளை நிலைப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இணைந்து பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இதன் மூலம் மதிப்பிடப்பட்ட $40–50 பில்லியன் செலுத்துநிலைப் பற்றாக்குறை (BoP gap) ஈடுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அவசரச் சட்டத்தின் மூலம் அரசு கடன் பத்திரங்களில் இருந்து கிடைக்கும் வட்டி மற்றும் வர்த்தக ஆதாயங்களுக்கு அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI), வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் BIS ஆகியோருக்கு மூலதன ஆதாய வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1 முதல் பின்னோக்கி அமலுக்கு வருகிறது. முன்னதாக குறுகிய கால ஆதாயங்களுக்கு 30% வரியும், நீண்டகால ஆதாயங்களுக்கு 12.5% வரியும் இருந்தது. நிதி அமைச்சகம் புதியதாக வெளியிடப்படும் 15, 30, 40 ஆண்டு அரசு கடன் பத்திரங்கள் அனைத்தும் முழுமையாக அணுகக்கூடிய முறையில் சேர்க்கப்படும் என்றும், முதலீட்டு வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. மேலும், RBI தள்ளுபடி அந்நியச் செலாவணி பரிமாற்றங்கள், NRI வைப்பு நிதி விலக்கு, வெளிநாட்டு முதலீட்டு வரம்பு விரிவாக்கம் மற்றும் ஏற்றுமதி வருவாய் காலத்தை 9 மாதங்கள் வரை நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அந்நிய முதலீட்டை அதிகரித்து அரசு பத்திர சந்தையில் பங்கேற்பை விரிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2026ல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றம்: இந்தியா–தென்கொரியா பங்கு சந்தைகள் பாதிப்பு

2026-ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து அதிக அளவில் பங்கு முதலீடுகளை வெளியேற்றினர். இதில் தென்கொரியா மற்றும் இந்தியா முக்கிய பாதிப்பை சந்தித்தன. தென்கொரியாவில் $32.6 பில்லியன் (QTD) மற்றும் $69.6 பில்லியன் (YTD) நிகர வெளியேற்றம் பதிவாகியது. இந்தியாவில் $11.4 பில்லியன் (QTD) மற்றும் $27.2 பில்லியன் (YTD) பங்கு வெளியேற்றம் ஏற்பட்டது. அதேவேளை தைவான் $19.6 பில்லியன் QTD வரவை பெற்றது, ஆனால் YTD வரவு $650 மில்லியன் மட்டுமே இருந்தது. இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் கத்தார் போன்ற நாடுகளும் வெளியேற்றத்தை சந்தித்தன. தென்கொரியாவின் முக்கிய குறியீடான KOSPI P/E விகிதம் 11.45 (2024 இறுதி) முதல் 21.07 (2026 மே 29) ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் கடன் சந்தைகளில் அந்நிய முதலீடு நிலைத்திருந்தது. இந்திய கடன் சந்தையில் $120.9 மில்லியன் QTD மற்றும் $1.21 பில்லியன் YTD நிகர வரவு கிடைத்தது. தென்கொரியா கடன் சந்தையில் $13.6 பில்லியன் QTD மற்றும் $30.7 பில்லியன் YTD வரவு பதிவானது. அந்நிய முதலீட்டை ஈர்க்கவும் நாணய நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், அரசு கடன் பத்திரங்கள் மீதான வரி சலுகைகள் மற்றும் மூலதன ஆதாய வரி விலக்கு போன்ற கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பங்கு சந்தைகளில் இருந்து கடன் சந்தைகளுக்கு முதலீட்டாளர் கவனம் மாறும் போக்கு தென்பட்டுள்ளது.

உலக சரக்கு வர்த்தக காற்றழுத்தக் குறியீடு (WTO) – மிதமான வளர்ச்சி

World Trade Organization வெளியிட்ட உலக சரக்கு வர்த்தகக் காற்றழுத்தக் குறியீட்டின்படி, 2026 தொடக்கத்தில் உலக வர்த்தகம் மீள்தன்மையைக் காட்டி, குறியீடு 101.7 ஆக இருந்து அடிப்படை மதிப்பான 100-ஐ விட அதிகமாக உள்ளது; இது ஜனவரி 2026-இல் இருந்த 102.3-ஐ விட சற்றே குறைவாகும். மேற்காசிய மோதலால் ஏற்பட்ட தடைகளை ஓரளவு ஈடுசெய்து, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மின்னணு உதிரிபாகங்களின் தேவை அதிகரித்தது முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய துணைக் குறியீடுகளில் மின்னணு உதிரிபாகங்கள் (105.5), விமான சரக்கு போக்குவரத்து (102.2), கொள்கலன் கப்பல் போக்குவரத்து (102.4) மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் (100.5) ஆகியவை உயர்வாகவும், விவசாய மூலப்பொருட்கள் (98.9) மற்றும் வாகனத் தயாரிப்புப் பொருட்கள் (99.8) ஆகியவை அடிப்படை நிலைக்கு கீழாகவும் உள்ளன.

விளையாட்டுச் செய்திகள்

நீரஜ் சோப்ரா சாதனையை முறியடித்த ருமேஷ் பதிரகே

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியில், ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் பதிரகே 92.62 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இது ஆசிய தடகள வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச தூரமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா (90.23 மீட்டர்) வைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேலும், 90 மீட்டர் இலக்கை எட்டிய நான்காவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்த தடகள வரலாற்றில் 28-வது வீரர் என்ற சாதனையையும் ருமேஷ் பதிரகே பெற்றுள்ளார்.

நார்வே செஸ் 2026 பட்டத்தை வென்ற ஆர். பிரக்ஞானந்தா

R Praggnanandhaa, நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற Norway Chess 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது சதுரங்க வாழ்க்கையில் முக்கியமான கிளாசிக்கல் (Classical) பட்டங்களில் ஒன்றாகும். இறுதிச் சுற்றில் அவர் Vincent Keymer-ஐ தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார். போட்டியின் போது அவர் தொடர்ச்சியாக நான்கு கிளாசிக்கல் வெற்றிகளைப் பதிவு செய்தார். அவை Alireza Firouzja, Magnus Carlsen, D Gukesh, மற்றும் Vincent Keymer ஆகியோருக்கு எதிராக கிடைத்தவை. இந்தப் போட்டி Deichman Bjørvika அரங்கில் நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆர். பிரக்ஞானந்தா, நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.

லா லிகா சிறந்த வீரராக லமைன் யமால் தேர்வு

Lamine Yamal, FC Barcelona அணியின் இளம் ஸ்ட்ரைக்கர், கிளப் லா லிகா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியதற்காக லா லிகா சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர், 2025 ஆம் ஆண்டில் இந்த விருதை வென்ற தனது அணித்தோழரான Raphinha-வைத் தொடர்ந்து இந்த விருதைப் பெற்றார். தொடை இடுப்புப் பகுதி காயம் காரணமாக தொடரின் முதல் பாதியில் பல ஆட்டங்களைத் தவறவிட்டபோதிலும், அவர் விளையாடிய 28 லா லிகா போட்டிகளில் 16 கோல்கள் மற்றும் 12 அசிஸ்ட்கள் பதிவு செய்தார்.

ஆண்கள் U18 ஆசியக் கோப்பை 2026 – இந்தியா சாம்பியன்

பிரதமர் நரேந்திர மோடி, ஆண்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான (U18) இந்திய ஹாக்கி அணிக்கு, ஆண்கள் U18 ஆசியக் கோப்பை 2026 பட்டத்தை வென்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதுகுறித்த வாழ்த்து செய்தியை பிரதமர் 6 ஜூன் 2026 அன்று வெளியிட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஆண்கள் U18 ஆசியக் கோப்பை 2026 ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

பெண்கள் U18 ஆசியக் கோப்பை 2026 – இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான (U18) இந்திய ஹாக்கி அணிக்கு, U18 ஆசியக் கோப்பை 2026 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். இந்த சாதனை குறித்து பிரதமர் 6 ஜூன் 2026 அன்று தனது வாழ்த்து செய்தியை வெளியிட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா பெண்கள் U18 ஆசியக் கோப்பை 2026 ஹாக்கி தொடரில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

ஜிடிபி வளர்ச்சி

மத்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் (வி. அனந்த நாகேஸ்வரன்) கூறுகையில், நிதியாண்டு 2027-இல் இந்தியாவின் பெயரளவு ஜிடிபி வளர்ச்சி 10.1% என்ற வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் விநியோக நடவடிக்கைகள் அடிப்படையில் நிதியாண்டு 2028-இல் உண்மையான ஜிடிபி வளர்ச்சி மீண்டும் 7% அளவிற்கு திரும்பும் என்றும் அவர் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிதியாண்டு 2027-க்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 6.9% இலிருந்து 6.6% ஆக குறைத்துள்ளது. வெளிப்புற பொருளாதாரச் சவால்கள் காரணமாக குறுகிய காலத்தில் வளர்ச்சி 7% க்குக் கீழே செல்லலாம் எனவும், ஆனால் மேக்ரோ ஸ்திரத்தன்மை நடவடிக்கைகள் மற்றும் வெளிப்புற சூழல் மேம்பாடு மூலம் நிதியாண்டு 2028-இல் மீண்டும் 7%+ வளர்ச்சி பாதைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. EY India மற்றும் L&T Finance பொருளாதார நிபுணர்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் நிலைமை, பணவீக்க அபாயங்கள் மற்றும் வெளிப்புற மாற்றங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் எனவும், அதே நேரத்தில் உள்நாட்டு பொருளாதார வலிமை தொடர்ந்த வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மாநிலச் செய்திகள்

கர்நாடக அமைச்சரவை துறை ஒதுக்கீடு 2026

கர்நாடகத்தில், முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அமைச்சரவைக்கான துறைகளை ஒதுக்கியதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினரான ஆர். ராமலிங்க ரெட்டி அமைச்சரவைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவருக்கு நீர்வளத் துறை ஒதுக்கப்பட்ட நிலையில், பெங்களூரு மேம்பாட்டுத் துறை கிருஷ்ண பைரே கவுடாவுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், நிதி, அமைச்சரவை விவகாரங்கள், உளவுத்துறை, மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகிய முக்கியத் துறைகளைத் தனது வசம் வைத்துள்ளார். அமைச்சரவைப் பங்கீட்டில் பிரியங்க் கார்கே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், கே.ஹெச். முனியப்பா உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையிலும், எம்.பி. பாட்டீல் பெரு மற்றும் நடுத்தர தொழில்துறையிலும், சதீஷ் ஜார்கிஹோலி பொதுப்பணித்துறையிலும் தொடர்ந்தனர். ஈஸ்வர் கந்த்ரே வனம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையிலிருந்து ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டார். கே.ஜே. ஜார்ஜ் கூடுதல் பொறுப்பாக சுற்றுலாத் துறையை பெற்றார். சரண் பிரகாஷ் பாட்டீல் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டார். யதீந்திர சித்தராமையாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறையும், பைரதி சுரேஷுக்கு போக்குவரத்துத் துறையும் ஒதுக்கப்பட்டன.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

பிரிட்டிஷ் நடிகர் அந்தோணி ஹெட் காலமானார்

பிரிட்டிஷ் நடிகரான அந்தோணி ஹெட், 72 வயதில் நிமோனியா நோயின் சிக்கல்களால் காலமானார். அவர் Buffy the Vampire Slayer மற்றும் Ted Lasso ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர். 1980-களில் Nescafe Gold Blend காபி விளம்பரங்களின் மூலம் பிரபலமான அவர், 1997 முதல் 2003 வரை ஒளிபரப்பான Buffy the Vampire Slayer தொடரில் Rupert Giles என்ற நூலகர் மற்றும் வழிகாட்டி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகளாவிய கவனம் பெற்றார்.

TNPSC தேர்வில் முன்னிலை பெற தினசரி பொது அறிவு ஒரே App-ல்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07-06-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05-06-2026

சமகால இணைப்புகள்