TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11-05-2026

Trending TNPSC

By

10 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11-05-2026

தமிழ்நாடு செய்திகள்

தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் ஜோசப் விஜய், தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் நிதின் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க தேவையான ஆதரவுக்காக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கின. மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்தார். விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திரையுலகினர் பங்கேற்றனர். பதவியேற்ற பிறகு, இரண்டு மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கான ‘சிங்கப்பெண்’ பேருந்து சேவை திட்டம் தொடர்பான கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

3 முக்கிய அரசாணைகளில் கையெழுத்து

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய், மக்கள் நலன் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான 3 முக்கிய அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்படும். மேலும், போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்க போதைப்பொருள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) உருவாக்கப்படும். இந்தப் படை 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் உள்ள 28 காவல் மாவட்டங்கள் உட்பட மொத்தம் 65 பிரிவுகளாக செயல்படும். இத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு முதலமைச்சர் ஜோசப் விஜய் கையெழுத்திட்டார்.

தற்காலிக பேரவைத் தலைவராக எம்.வி. கருப்பையா நியமனம்

சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ எம்.வி. கருப்பையா, தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக (Pro-tem Speaker) நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 17-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அனைத்து புதிய உறுப்பினர்களும் தற்காலிக பேரவைத் தலைவர் முன்னிலையில் எம்எல்ஏ-வாக பதவியேற்க உள்ளனர். பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் தலைமையிலான சட்டப்பேரவைச் செயலகம், உறுப்பினர்கள் தேர்தல் வெற்றிச் சான்றிதழ்களை கொண்டு வர அறிவுறுத்தியுள்ளது. நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகிய கட்சிகளின் 13 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. மேலும், நிரந்தர பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் தேர்வு நடைபெற உள்ளது.

முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

ஐஏஎஸ் அதிகாரிகள் ப. செந்தில்குமார் மற்றும் ஜி. லட்சுமி பிரியா ஆகியோர் தமிழக முதலமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக இருந்த ப. செந்தில்குமார், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளராக இருந்த ஜி. லட்சுமி பிரியா, முதல்வரின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் அரசாணையாக வெளியிட்டார். முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்ற உடனே இருவரும் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அரசாணைப்படி, அவர்கள் இந்தப் பொறுப்பில் ஒரு ஆண்டு அல்லது தேவைக்கேற்ப தொடர உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மே 7-ம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்தத் தேர்வு நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது பெரிய கட்சியின் தலைவராக இருப்பதால், அவர் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட உள்ளார். சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக சட்டமன்றக் கட்சியை வழிநடத்துகிறார். மூத்த திமுக தலைவர் கே.என். நேரு, திமுக சட்டமன்றக் கட்சியின் துணைத் தலைவராகவும், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, கட்சியின் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையிலான அரசியல் செயல்பாடுகள் சட்டப்பேரவையில் முக்கியத்துவம் பெற உள்ளன.

மாநிலச் செய்திகள்

அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் தேர்வு

ஹிமந்த பிஸ்வா சர்மா, அசாம் மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். குவாஹாட்டியில் நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடைபெற்ற அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 126 இடங்களில், என்டிஏ கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க உள்ளது. பின்னர், ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்ற ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பங்கேற்றார்.

விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல்லில் அதிவேக அரைசத சாதனை

சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வீரர் உர்வில் படேல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம், அவர் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை சமன் செய்தார். இந்த சாதனையை அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2023-ஆம் ஆண்டு, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டியில், தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மோஹோத் ஆகியோரை கொண்ட இந்திய மகளிர் ரீகர்வ் அணி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சீன அணியை எதிர்கொண்டது. போட்டி 4-4 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து, வெற்றியை நிர்ணயிக்க ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

உலகக் கோப்பை ஷாட் கன் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

கஜகஸ்தானின் அல்மேட்டியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஷாட் கன் போட்டியில், இந்தியாவின் நீரு தண்டா மற்றும் விவான் கபூர் இணை டிராப் கலப்பு அணி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த ஜோடி 30 இலக்குகளில் 24 இலக்குகளை துல்லியமாக சுட்டு 24 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தது. முன்னதாக, தகுதிச்சுற்றில் அவர்கள் 143 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். மற்றொரு இந்திய ஜோடியான அன்வர் ரிஸ்வி மற்றும் பிரகதி துபே, 130 புள்ளிகளுடன் 23-ஆம் இடம் பெற்று தகுதிச்சுற்றிலேயே வெளியேறினர். சீன தைபே அணியின் குன் பியாங் மற்றும் வான் யு லியு இணை 36 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றது. போட்டி முடிவில் இந்தியா ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 10-ஆம் இடம் பெற்றது.

இந்திய தடகளத் தொடரில் ஸ்ரீசங்கர் தங்கம்

சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்திய தடகளத் தொடர்-6 போட்டியில், கேரளாவைச் சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர், நீளம் தாண்டுதல் போட்டியில் 8.04 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். அவர் ஏற்கனவே 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி இலக்கை எட்டியுள்ளார். பி. டேவிட் 7.77 மீட்டர் தாண்டி இரண்டாம் இடம் பெற்றார். 110 மீட்டர் தடை ஓட்டத்தில், தேசிய சாதனையாளர் தேஜஸ் ஷிர்சே 13.43 வினாடிகளில் இலக்கை எட்டினார். எம். கிருஷிக் 13.44 வினாடிகளில் ஓடி, இருவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி இலக்கை எட்டினர். ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதர்ஷ் ராம் 2.27 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். மேலும், தேஜஸ்வின் சங்கரின் தேசிய சாதனையான 2.29 மீட்டரை முறியடிக்க 2.30 மீட்டர் உயரத்தைத் தாண்ட முயன்றார்.

தேசியச் செய்திகள்

நாட்டின் முதல் மித்ரா ஜவுளி பூங்கா திறப்பு

மத்திய அரசின் மித்ரா (MITRA) திட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் நாட்டின் முதல் ஜவுளி பூங்காவை திறந்து வைத்தார். இந்தப் பூங்கா ₹1,695 கோடி செலவில் 1,327 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்கா திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய ஜவுளித் துறை வெளியிட்ட தகவலின்படி, இந்த ஜவுளி பூங்கா மூலம் ₹6,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், 24,400-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் செய்திகள்

டித்வா புயல் சேதம்: இந்தியா - இலங்கை மறுகட்டுமான ஒப்பந்தம்

இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் சேதத்திற்குப் பிறகு, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 450 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹4,500 கோடி) செலவில் புனரமைப்பு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட இந்தப் புயலால் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 640-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இலங்கைக்கு உதவ இந்திய அரசு ‘ஆபரேஷன் சாகர் பந்து’ திட்டத்தை மேற்கொண்டு மறுகட்டுமானப் பணிகளுக்கான நிதி உதவியை அறிவித்தது. இதுதொடர்பாக கொழும்பில், இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, இலங்கை தொழிலாளர் துறை அமைச்சரும் நிதித்துறை இணையமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் வீட்டு வசதி, சுகாதாரம், குடிநீர், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா - டிரினிடாட் டொபாகோ இடையே 8 ஒப்பந்தங்கள்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மேற்கொண்ட டிரினிடாட் மற்றும் டொபாகோ பயணத்தின்போது, இந்தியா மற்றும் டிரினிடாட் டொபாகோ இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. இந்த பயணம், ஜமைக்கா, சுரினாம், டிரினிடாட்-டொபாகோ ஆகிய கரீபியன் நாடுகளுக்கான ஒன்பது நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். டிரினிடாட் டொபாகோவில், ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் கம்லா பெர்சாத் பிசேசரை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். ஒப்பந்தங்களில் சுற்றுலாத்துறை, இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் முதன்முதலில் தங்கிய நெல்சன் தீவின் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை இடம்பெற்றன. மேலும், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, தடயவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன், 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் ஃபிஜி, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் மற்றும் கரீபியன் தீவுகளுக்கு அனுப்பப்பட்ட இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வம்சாவளியினரை கண்டறிவது தொடர்பாகவும் இருநாடுகள் ஆலோசனை நடத்தின.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

தமிழகத்தில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர் க்யூ. மணிவண்ணன், ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஸ்காட்டிஷ் கிரீன்ஸ் கட்சி சார்பில் எடின்பர்க் மற்றும் லோத்தியன்ஸ் பிராந்தியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குறுகிய கால விசா மற்றும் காலவரையின்றி தங்கும் அனுமதி (Indefinite Leave to Remain - ILR) பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட்டார். மணிவண்ணன் முன்னதாக ஆசிரியர், கொள்கை நிபுணர், ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் மனித உரிமை அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் (NGOs) ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

ஹண்டாவைரஸ் பரவல்: கேனரி தீவுகளில் மீட்பு நடவடிக்கை

ஸ்பெயினின் கேனரி தீவுகளில், ஹண்டாவைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட MV Hondius சுற்றுலா கப்பலில் இருந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் அர்ஜென்டினாவில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பலில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். ஹண்டாவைரஸ் பொதுவாக கொறித்துண்ணிகள் மூலம் பரவுகிறது. இந்த நோய்க்கு தற்போது தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட சிகிச்சை இல்லை. கப்பலில் இருந்த சுமார் 150 பயணிகள் மற்றும் சிப்பந்திகள், டெனெரிஃப்பிலுள்ள கிரனாடில்லா துறைமுகம் வழியாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு மருத்துவ நடைமுறைகளுடன் டெனெரிஃப் தெற்கு விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஸ்பெயின் சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் அறிகுறியற்றவர்களாக இருந்ததாக தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பு (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், மீட்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு ஆபத்து குறைவாக இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரச் செய்திகள்

இந்தியாவில் தனியார் துறை மூலதனச் செலவு உயர்வு

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (CII) வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் தனியார் துறை மூலதனச் செலவு (Capex), செப்டம்பர் 2025-இல், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 67% உயர்ந்து ₹7.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் உற்பத்தித் துறை சுமார் ₹3.8 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. குறிப்பாக உலோகம், வாகனங்கள் மற்றும் ரசாயனத் துறைகள் முக்கிய பங்காற்றின. சேவைத் துறை சுமார் ₹3.1 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. இதில் வர்த்தகம், தகவல் தொடர்பு மற்றும் IT/ITeS துறைகள் இடம்பெற்றுள்ளன. CII இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி, இந்த தரவுகள் இந்தியாவின் முதலீட்டு வளர்ச்சியை காட்டுவதாக தெரிவித்தார். இதற்கு முன்பு, தலைமைப் பொருளாதார ஆலோசகர் (CEA) வி. அனந்த நாகேஸ்வரன், நிறுவன லாபம் 30.8% உயர்ந்தபோதிலும் தனியார் துறை மூலதன உருவாக்கம் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மேற்கு ஆசிய நெருக்கடி நிலையை முன்னிட்டு, MSME-களுக்கு 45 நாள் கட்டண உத்தரவாதம், எரிபொருள் மற்றும் மின் நுகர்வு குறைப்பு, விநியோகச் சங்கிலி பாதுகாப்பு, இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தி ஊக்குவித்தல் மற்றும் PM Internship Scheme கீழ் பயிற்சிகளை அதிகரித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை CII வழங்கியுள்ளது.

முக்கிய தினங்கள்

தேசிய தொழில்நுட்ப தினம் - மே 11

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் போக்ரானில் நடைபெற்ற போக்ரான்-II அணு சோதனை (Operation Shakti) வெற்றியை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுவதோடு, விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் புதுமையாளர்களின் பங்களிப்பையும் பாராட்டுகிறது. முன்னாள் பிரதமர் Atal Bihari Vajpayee மே 11-ஐ தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தார்.

உலக பறவைகள் இடம்பெயரும் தினம்

உலக இடம்பெயரும் பறவைகள் தினம் என்பது இடம்பெயரும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு தினமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையும், அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையும் கடைப்பிடிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் இது மே 9 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு இயக்கத்திற்கு United Nations Environment Programme உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஆதரவு வழங்குகின்றன.

உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12-05-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10-05-2026

சமகால இணைப்புகள்