TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03-04-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03-04-2026
தமிழ்நாடு செய்திகள்
அமைச்சரவை பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிக்க முடியாது
சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பின்படி, ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மற்றும் தண்டனை குறைப்பு தொடர்பான அமைச்சரவை பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது; இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161 உடன் தொடர்புடையது. இந்த வழக்கு 1996ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் நவரசு கொலை வழக்கு தொடர்புடையது; இதில் ஜான் டேவிட் மீது கடலூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது மற்றும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், தமிழக அமைச்சரவை அவரது முன்கூட்டிய விடுதலையை பரிந்துரைத்தது, ஆனால் ஆளுநர் அதை நிராகரித்தார்; இதை எதிர்த்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே விவகாரத்தில் சென்னை அமர்வு மற்றும் மதுரை அமர்வு வேறுபட்ட தீர்ப்புகள் வழங்கியதால், தலைமை நீதிபதி பரிந்துரையின்படி மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு (நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே. இளந்திரையன், சுந்தர் மோகன்) விசாரணை நடத்தியது. முழு அமர்வு தீர்ப்பில், அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும், தனிப்பட்ட விருப்புரிமையை பயன்படுத்தி அதற்கு முரணான முடிவு எடுக்க முடியாது என்று கூறப்பட்டது. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் தொடரும் என்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தீர்க்கப்படலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161 – ஆளுநரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161ன் படி, ஒரு மாநிலத்தின் ஆளுநர், அந்த மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் செல்லும் சட்டங்களுக்கு உட்பட்ட குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, மன்னிப்பு (Pardon), தண்டனையை ஒத்திவைப்பு (Reprieve), தளர்வு (Respite), தண்டனை குறைப்பு (Remission) வழங்கவும், அல்லது தண்டனையை இடைநிறுத்தவும் (Suspend), குறைக்கவும் (Remit), மாற்றவும் (Commute) அதிகாரம் பெற்றவர்.
தேசியச் செய்திகள்
மார்ச் மாதத்தில் 2,264 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் – புதிய உச்சம்
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளமான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் மார்ச் மாதத்தில் 2,264 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன; இதன் மொத்த மதிப்பு ₹19.53 லட்சம் கோடி ஆகும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறை (DFS) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் (1,830 கோடி பரிவர்த்தனைகள்) உடன் ஒப்பிடுகையில் இது 24% வளர்ச்சி பெற்றுள்ளது; மேலும் பிப்ரவரி மாதம் (2,039 கோடி) எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. யுபிஐ, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதித்துள்ள இரு அடுக்கு பாதுகாப்பு (Two-factor authentication) முறையைப் பின்பற்றுகிறது; இதில் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ரகசிய PIN பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் நடைபெறும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சுமார் 85% யுபிஐ மூலம் நடைபெறுகிறது. சர்வதேச அளவில், பூடான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் யுபிஐ சேவை செயல்படுகிறது; இதில் பிரான்ஸ் யுபிஐ அறிமுகமான முதல் ஐரோப்பிய நாடு ஆகும்.
மாநிலச் செய்திகள்
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவராக இருந்த ராகவ் சத்தா நீக்கம்
ஆம் ஆத்மி கட்சி (AAP) சார்ந்த மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சத்தா, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்; அவருக்கு பதிலாக அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டார். இந்த மாற்றம், டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பான நிகழ்வுகளின் பின்னணியில் ஏற்பட்டது; இதில் AAP தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் 2024ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் பிப்ரவரி 2025ல் விடுதலை செய்யப்பட்டார். இக்காலத்தில் ராகவ் சத்தா கட்சியின் போராட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் பங்கேற்கவில்லை. அவர் 2025 குளிர்கால கூட்டத் தொடர் மற்றும் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகியவற்றில் பேச வாய்ப்பு பெற்றார் மற்றும் உணவு கலப்படம், விமான நிலைய உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற விஷயங்களை முன்வைத்தார். இந்த பதவி மாற்றம் குறித்து மாநிலங்களவை செயலாளரிடம் கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா – கிருஷ்ணா’ ஓவியம் ₹167 கோடிக்கு விற்பனை – சாதனை
புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவிவர்மா வரையந்த ‘யசோதா மற்றும் கிருஷ்ணா’ ஓவியம், மும்பையில் நடைபெற்ற ஏலத்தில், சர்வதேச ஏல நிறுவனம் Pundole’s Art மூலம் ₹167.2 கோடிக்கு விற்பனையாகி, நவீன இந்தியக் கலைப்படைப்புகளில் அதிக மதிப்பில் விற்பனையான ஓவியம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இதற்கு முன் எம்.எஃப். உசைன் அவர்களின் ‘Untitled (Gram Yatra)’ ஓவியம் சுமார் ₹118 கோடிக்கு விற்பனையாகி இருந்த சாதனையை இது முறியடித்துள்ளது. ₹80–120 கோடி மதிப்பில் கணிக்கப்பட்ட இந்த ஓவியத்தை சிரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைரஸ் எஸ். புனாவாலா வாங்கியுள்ளார். இந்த ஓவியம் 1890-களில், ராஜா ரவிவர்மாவின் கலைப் பயணத்தின் உச்சகட்டத்தில் வரையப்பட்டது மற்றும் அவரது முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சர்வதேசச் செய்திகள்
செங்கடல் கப்பல் போக்குவரத்து குறித்து பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் ஆலோசனை
செங்கடலில் தடையற்ற சரக்குக் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனை நடைபெற்றது; அமெரிக்கா–பிரிட்டன் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ஆதரவு படைகள் இடையிலான மோதலால் செங்கடல் பகுதிகள் மூடப்பட்டதால், ஆசியா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்பட்டு, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் தலைமை வகித்தார்; இதில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றன, மேலும் இந்தக் கூட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்தது. 2022ஆம் ஆண்டு உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி நிறுத்திய ஐரோப்பிய நாடுகள், தற்போது நார்வே, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்துள்ளன. இந்தியா, பிரிட்டன் அழைப்பின் பேரில், வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தலைமையில் கலந்து கொண்டது; இதை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார்.
டெனிஸ் மன்டுரோவ் பிரதமர் மோடியைச் சந்திப்பு
ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மன்டுரோவ், பிரதமர் நரேந்திர மோடியை ஏப்ரல் 2 அன்று புதுதில்லியில் சந்தித்து இந்தியா–ரஷ்யா இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வருகை தந்து 23வது இந்தியா–ரஷ்யா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்றது நினைவுகூரப்பட்டது. மேலும் வர்த்தகம், பொருளாதாரம், உரங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் அந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களின் அமலாக்க முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்களை செயல்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார் மற்றும் இந்தியா–ரஷ்யா உறவுகள் மேலும் வலுப்படும் என குறிப்பிடப்பட்டது.
பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு ஜூன் 30 வரை இறக்குமதி வரிவிலக்கு
மத்திய அரசு, மேற்காசிய போர் தாக்கம் காரணமாக ஏற்பட்ட விநியோகச் சங்கிலி பாதிப்பை சமாளிக்க, முக்கிய பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 30 வரை முழுமையான சுங்க வரிவிலக்கு வழங்கியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு, பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்து, ரசாயன மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தி துறைகள் போன்றவற்றுக்கு ஆதரவாகவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெத்தனால், அனிட்ரோஸ் அம்மோனியா, டொலுவீன், ஸ்டைரீன், டைக்ளோரோமீத்தேன், வினைல் குளோரைடு மோனோமெர், பாலிபியூடாடீன், ஸ்டைரீன் பியூடாடீன், பாலிஸ்டர் பிசின் உள்ளிட்ட பொருட்கள் இந்த வரிவிலக்கில் அடங்கும். இந்த நடவடிக்கையால் அரசுக்கு சுமார் ₹1,800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஹோர்மஸ் நீரிணையை மூடியது, இயற்கை எரிவாயு உற்பத்தி பாதிப்பு போன்ற காரணங்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை 50% உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ₹10 குறைக்கப்பட்டது மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு ₹21.50, விமான எரிபொருளுக்கு ₹29.50 ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ரேஸி வான்டெர் டஸன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ரேஸி வான்டெர் டஸன், வயது 37, அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். அவர் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க தேசிய அணியில் அறிமுகமானார் மற்றும் மொத்தமாக 18 டெஸ்ட், 71 ஒருநாள், 57 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மார்ச் 2025 முதல் தேசிய அணியில் இடம் பெறவில்லை மற்றும் 2026ஆம் ஆண்டு கிரிக்கெட் வாரிய மைய ஒப்பந்த பட்டியலிலும் இடம்பெறவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் 17 அரைசதங்கள் மற்றும் 6 சதங்கள் பதிவு செய்துள்ளார்.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
இந்தியாவில் மாதாந்திர இணையப் பயன்பாடு 31 ஜிபி – நோக்கியா அறிக்கை
நோக்கியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு இந்தியாவில் ஒருவரின் மாதாந்திர சராசரி கைப்பேசி இணையப் பயன்பாடு 31 ஜிபி ஆக உயர்ந்துள்ளது; இது 2024ஆம் ஆண்டின் 27.5 ஜிபியுடன் ஒப்பிடுகையில் 18% வளர்ச்சி ஆகும். மொத்த இணையப் பயன்பாட்டில் 5ஜி சேவையின் பங்கு 47% ஆக உயர்ந்துள்ளது; மேலும் 5ஜி தரவு பயன்பாடு 70% அதிகரித்து 12.9 எக்சாபைட் ஆகியுள்ளது. இதன் மூலம் இந்தியா உலகின் 2-ஆவது மிகப்பெரிய 5ஜி சந்தாதாரர்கள் கொண்ட நாடு ஆகும்; மேலும் 5ஜி தரவு நுகர்வு மற்றும் Fixed Wireless Access (FWA) பயன்பாட்டிலும் 2-ஆம் இடம் பெற்றுள்ளது, இதில் FWA பங்கு 25% ஆகும். 2025ஆம் ஆண்டு விற்பனையான ஸ்மார்ட்போன்களில் 90%க்கும் அதிகமானவை 5ஜி வசதி கொண்டவை; மேலும் 89 கோடி 4ஜி சாதனங்களில் 38 கோடிக்கும் அதிகமானவை 5ஜி வசதி கொண்டவை. $100 (₹9,300) க்குக் குறைவான 5ஜி ஸ்மார்ட்போன்கள் அதிகரித்துள்ளன. பெருநகரங்களில் மொத்த இணையப் பயன்பாட்டில் 58% 5ஜி மூலம் நடைபெறுகிறது; மேலும் 2031ஆம் ஆண்டுக்குள் 5ஜி சந்தாதாரர்கள் 100 கோடியைத் தாண்டும் என நோக்கியா கணித்துள்ளது.
மங்கோலியாவின் புதிய பிரதமராக உச்ரல் நயம்-ஓசோர் நியமனம்
மங்கோலிய நாடாளுமன்றம், ஏப்ரல் 3, 2026 அன்று, உச்ரல் நயம்-ஓசோரை மங்கோலியாவின் பிரதமராக நியமித்தது; இது ஒன்பது மாதங்களில் இரண்டாவது தலைமை மாற்றம் ஆகும். முன்னாள் பிரதமர் ஜான்டன்ஷாதர் கோம்போஜாவ், அரசியல் பதற்றம் மற்றும் சட்டப்பேரவை முடக்கம் காரணமாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டது; இதில் 107 உறுப்பினர்களில் 88 பேர் ஆதரவாக வாக்களித்தனர். 39 வயதான உச்ரல் நயம்-ஓசோர், முன்பு மங்கோலிய நாடாளுமன்ற சபாநாயகர், மங்கோலிய மக்கள் கட்சி தலைவர், மற்றும் துணை பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார். இந்த மாற்றம், ஜனநாயகக் கட்சி மற்றும் மங்கோலிய மக்கள் கட்சியின் சில பிரிவுகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்ததால் ஏற்பட்ட சட்டப்பணிகள் பாதிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டது.
எல்ஐசி, ஜிஐசி மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் – D-SII அந்தஸ்தைத் தக்கவைத்த ஐஆர்டிஏஐ
2025–26 நிதியாண்டிற்காக, இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), இந்திய பொதுக் காப்பீட்டுக் கழகம் (GIC) மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றை உள்நாட்டு முக்கியத்துவம் வாய்ந்த காப்பீட்டு நிறுவனங்கள் (D-SIIs) என மீண்டும் வகைப்படுத்தியுள்ளது. இந்நிறுவனங்கள் பெரிய சந்தைப் பங்கு, அளவு மற்றும் நிதி அமைப்புடன் ஆழமான பிணைப்பு கொண்டதால் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் நாடு முழுவதும் காப்பீடு வழங்குகின்றன. இந்நிறுவனங்களில் ஏற்படும் ஏதேனும் தடங்கல் தேசிய பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இவை கடுமையான ஒழுங்குமுறை கண்காணிப்பு மற்றும் அபாய மேலாண்மை விதிகளின் கீழ் செயல்படுகின்றன. இவை ‘Too Big To Fail (TBTF)’ நிறுவனங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன; இதன் நோக்கம் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்து பாலிசிதாரர்களை பாதுகாப்பது ஆகும்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விளம்பரத் தூதராக சுதர்சன் பட்நாயக் நியமனம்
இந்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சகம் மூலம், மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்களை 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விளம்பரத் தூதராக நியமித்துள்ளது; இது இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். ஒடிசாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ (2014) விருது பெற்ற சுதர்சன் பட்நாயக், 2017ஆம் ஆண்டு பூரி கடற்கரையில் 48 அடி 8 அங்குல உயரமுள்ள மணல் கோட்டை அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தவர். 2027 கணக்கெடுப்பில், காகித முறைக்கு பதிலாக ஸ்மார்ட்போன் செயலிகள் பயன்படுத்தப்படும் மற்றும் Self-enumeration portal அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறும்; முதல் கட்டம் (ஏப்ரல்–செப்டம்பர் 2026) – வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு, இரண்டாம் கட்டம் (பிப்ரவரி 2027) – மக்கள் தொகை கணக்கெடுப்பு, இதில் கல்வி, இடப்பெயர்வு, பிறப்பு விகிதம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.
பெண் குழந்தைகளுக்கான ‘லக்பதி பிடியா யோஜனா’ – டெல்லி அரசு திட்டம்
டெல்லி அரசு, முதல்வர் ரேகா குப்தா தலைமையில், மார்ச் 30, 2026 அன்று ‘லக்பதி பிடியா யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது; இது முன்னைய ‘லாட்லி திட்டத்திற்கு’ மாற்றாகும். இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு, பிறப்பு முதல் உயர்கல்வி வரை கட்டங்களாக நிதியுதவி வழங்குகிறது. மொத்தமாக ₹61,000 நேரடி நிதியுதவி வழங்கப்பட்டு, வட்டியுடன் சேர்த்து சுமார் ₹1.20 லட்சம் ஆக உயரும். இதில் பிறப்பின் போது ₹11,000, 1, 6, 9, 11, 12 ஆம் வகுப்புகளில் தலா ₹5,000, ஒராண்டு டிப்ளமோக்கு ₹10,000, 2–3 ஆண்டுகள் டிப்ளமோக்கு ₹20,000, மற்றும் 4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தபின் ₹25,000 வரை வழங்கப்படும். இந்த தொகையை 12ஆம் வகுப்பு முடித்த பிறகு அல்லது 18/21 வயது பூர்த்தியானபின் பெற முடியும்; இத்திட்டம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தல், குறைந்த வயது திருமணத்தைத் தடுப்பது, நிதி சுதந்திரத்தை உறுதி செய்தல் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கு ஆதரவு அளித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா உலகில் 3-வது இடம் – IRENA அறிக்கை
சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (IRENA) வெளியிட்ட அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு இந்தியா உலகின் 3-வது பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையாக உருவெடுத்துள்ளது; இதில் ஒரே ஆண்டில் சுமார் 45 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த நிறுவப்பட்ட திறன் 2023ஆம் ஆண்டு 175.9 ஜிகாவாட்டிலிருந்து 2025ஆம் ஆண்டு 250.5 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதில் சூரிய சக்தி 37 ஜிகாவாட் சேர்த்து முக்கிய பங்காற்றி, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் 2-வது இடம் பெற்றுள்ளது. காற்றாலை மின்சாரம் 6.3 ஜிகாவாட் மற்றும் நீர்மின் திறன் 2024ஆம் ஆண்டு 52 ஜிகாவாட்டிலிருந்து 2025ஆம் ஆண்டு 56 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. மேலும் உந்தப்பட்ட நீர்மின் சேமிப்பு திறன் 4.7 ஜிகாவாட்டிலிருந்து 7.2 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது; இது புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைக்கும் இந்தியாவின் முயற்சியை காட்டுகிறது.
வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04-04-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02-04-2026
சமகால இணைப்புகள்
Tue Apr 07 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07-04-2026
Mon Apr 06 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06-04-2026
Sun Apr 05 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05-04-2026
Sat Apr 04 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04-04-2026
Thu Apr 02 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02-04-2026
Wed Apr 01 2026