TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03-03-2026

Trending TNPSC

By

9 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03-03-2026

தமிழ்நாடு செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் 5,367 குடியிருப்புகள் திறப்பு

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ₹840.76 கோடி செலவில் கட்டப்பட்ட 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, மேலும் ₹420.34 கோடி செலவில் 1,984 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார். தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் தாமஸ் சாலை, சுபேதார் கார்டன், அப்பாசாமி முதலி தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு பகுதிகளில் ₹153.69 கோடி செலவில் கட்டப்பட்ட 870 குடியிருப்புகளை திறந்து வைத்தார். கிரிம்சன் சாலை பகுதியில் குடிசைகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ₹46.12 கோடி செலவில் 283 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டினார். மயிலாப்பூர் பகுதியில் ₹101.94 கோடி செலவில் கட்டப்பட்ட 600 குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன. கோட்டூர்புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ₹585.13 கோடி செலவில் கட்டப்பட்ட 3,897 குடியிருப்புகள் கோட்டூர்புரம், அயனாவரம் நகர், கப்பல் பிள்ளை தோட்டம், ராயபுரம் தொகுதி லோட்டஸ் தோட்டம், கோயம்பேடு மாவட்டம், அத்திச்சேரி தொகுதி, வரம்பாறை, மலையம்மன் தோட்டம், திருவொற்றியூர் தொகுதி காரனேசன் நகர் மற்றும் பேப்பல் பகுதி-2 ஆகிய திட்டப்பகுதிகளில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் பெருங்குடி தொகுதி பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ₹4 கோடி செலவில் கட்டப்பட்ட உள்விளையாட்டு வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டதுடன், சட்டேர் நகர் பகுதியில் ₹374.22 கோடி செலவில் 1,701 புதிய குடியிருப்புகள் மற்றும் ₹5 கோடி செலவில் பல்நோக்கு கூட்ட அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டப்பகுதிகளில் திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி கூடம், கைப்பந்து மைதானம், 200 மீட்டர் தடகளப் பாதை, கோ-கோ மைதானம், 250 இருக்கைகள் கொண்ட காட்சிக்கூடம், சிறுவர் பூங்கா மற்றும் அங்கன்வாடி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வன உரிமைச் சட்டம் அமலாக்க நடவடிக்கைகள்

இந்தியாவில் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் மரபு வழியாக வனத்தை சார்ந்து வாழும் மக்களின் நில உரிமைகளை அங்கீகரிப்பதற்காக 2006 ஆம் ஆண்டு “வன உரிமைச் சட்டம்” (The Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006) இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புவிசார் தகவல் அமைப்பு (GIS) மற்றும் 2011 கணக்கெடுப்பு செயற்கைக்கோள் வரைபடத் தரவுகளை பயன்படுத்தி “தமிழ்நாடு வன உரிமைச் சட்ட வரைபடத் தொகுப்பு” தயாரிக்கப்பட்டு, அது 2025 ஏப்ரல் 14 அன்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டது. இதன் மூலம் வனப்பகுதிகளில் வாழும் 1,986 பழங்குடியின கிராமங்களின் வன உரிமைகள் தொடர்பான தரவுகள் கண்டறியப்பட்டன. சட்டத்தை செயல்படுத்த பழங்குடியின வல்லுநர்களின் உதவியுடன் தமிழில் வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு 2025 பிப்ரவரி 6 அன்று தலைமைச் செயலரால் வெளியிடப்பட்டது. திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க பிரத்யேக டிஜிட்டல் இணையதளம் உருவாக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் 1,766 அரசு அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான வன உரிமைக் குழு உறுப்பினர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. 21 மாவட்டங்களில் உள்ள 1,575-க்கும் மேற்பட்ட வன உரிமை கிராம சபைகள் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய வன உரிமைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் 15 உறுப்பினர்கள் வீதம் மொத்தம் 23,625 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, அதில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 7,875 பெண்கள் இடம்பெற்றனர். சட்டத்தை விரைவாக அமல்படுத்த கோட்ட அளவில் 27 சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த 73 பட்டதாரி இளைஞர்கள் மற்றும் 20 பழங்குடியின முதன்மைப் பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் 31,110 வன உரிமைக் கோரல் மனுக்களை சேகரித்தனர். இதுவரை 15,680 நில உரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பழங்குடியினர் நலத்துறை ஒருங்கிணைப்புத் துறையாக செயல்பட்டு, மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையில் வருவாய்த் துறை மற்றும் வனத்துறை இணைந்து கள ஆய்வு மற்றும் நில அளவை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தேசியச் செய்திகள்

இந்தியா–கனடா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம்

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, அணு கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியா மற்றும் கனடா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் முக்கியமாக ₹24,000 கோடி மதிப்பிலான யுரேனியம் விநியோக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி 2027 முதல் 2035 வரை கனடா இந்தியாவுக்கு 11,000 டன் யுரேனியம் வழங்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அறிவியல் கனிமங்கள் மற்றும் எரிசக்தி துறைகளில் 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது மற்றும் எல்என்ஜி (LNG) எரிவாயுவை நீண்டகால அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்க கனடா ஒப்புக்கொண்டது. இதுடன் திருப்பதி ஐஐடி (IIT Tirupati) மற்றும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) ஆகியவற்றில் கனடா பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமைக்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இரு நாடுகள் இணைந்து செயல்படுத்தும் புதிய திட்டங்கள் தொடர்பாக 9 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மார்க் கார்னி தனது நான்கு நாள் அரசு முறை பயணத்தின் போது 27 ஆம் தேதி மும்பை வந்தார் மற்றும் பின்னர் புதுடெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியாவின் மிக நீளமான காற்றாலை இறக்கை தயாரிப்பு

அதானி குழுமத்தின் நிறுவனமான Adani New Industries, குஜராத் மாநிலம் முந்த்ராவில் உள்ள தனது உற்பத்தி நிலையத்தில் 91.2 மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் மிக நீளமான காற்றாலை இறக்கையை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த இறக்கைகள் குறைந்த மற்றும் நடுத்தர காற்று வேகப்பகுதிகளில் மின்உற்பத்தியை மேம்படுத்தும் அடுத்த தலைமுறை காற்றாலைகளில் பயன்படுத்தப்படும். முந்த்ரா ஆலை தற்போது 78.6 மீட்டர் மற்றும் 80.5 மீட்டர் நீளமுள்ள காற்றாலை இறக்கைகளை உற்பத்தி செய்து வருகிறது. புதிய 91.2 மீட்டர் இறக்கை உருவாக்கப்படுவது வடிவமைப்பு, பொருட்கள் பொறியியல் மற்றும் உற்பத்தித் திறனில் முன்னேற்றத்தை குறிக்கிறது. இந்த இறக்கையின் மூலம் சுமார் 185 மீட்டர் விட்டம் கொண்ட சுழற்சி பரப்பு உருவாகும். முந்த்ரா உற்பத்தி நிலையத்தின் தற்போதைய திறன் ஆண்டுக்கு 2.25 ஜிகாவாட் ஆகும், இதை படிப்படியாக 10 ஜிகாவாட் ஆக உயர்த்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதுவரை காற்றாலை உற்பத்திக்காக ₹3,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

வாரணாசியில் ஒரு மணி நேரத்தில் மரக்கன்றுகள் நடவு – கின்னஸ் சாதனை

உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில், மாநகராட்சி சார்பில் 350 ஏக்கர் பரப்பளவில் “நமோ வனம்” என்ற நகர்ப்புறக் காடு உருவாக்கப்பட்டுள்ளது. கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள சாரநாத் பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஒரு மணி நேரத்தில் 2,51,446 மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பு சீனாவில் ஒரு மணி நேரத்தில் 1,53,981 மரக்கன்றுகள் நடப்பட்டது உலக சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வில் சுமார் 20,000 பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டனர். நமோ வனம் திட்டத்தின் கீழ் மொத்தம் 3,00,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன; இதில் 2,50,000 மியாவாகி வகை மரங்கள், 10,000 பிற வகை மரங்கள், மற்றும் 40,000 பழ மரங்கள் அடங்கும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் 4 கிலோமீட்டர் நீள நடைபாதை, தியானம் மற்றும் யோகா வசதிகள், சிறுவர் விளையாட்டு பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மையம், 4 ஹெக்டேர் மலர் பூங்கா, 2 ஹெக்டேர் மூலிகை பூங்கா, மற்றும் எதிர்காலத்தில் இயற்கை மருத்துவ மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் நிதிநுட்பக் கோபுரம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள நிதிநுட்ப நகரில் ₹249 கோடி செலவில் 5.56 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட “நிதிநுட்பக் கோபுரக் கட்டடத்தை (FinTech Tower)” மார்ச் 2 அன்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் நிதிநுட்பத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 56 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் நிதிநுட்ப நகரத் திட்டத்தின் முதல்கட்டமாக இந்தக் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு அடித்தளங்கள், தரைத் தளம் மற்றும் 11 மேல் தளங்களுடன், ஸ்டீல் மற்றும் கிரீன் பில்டிங் தரநிலைகளில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கான அலுவலக இடங்கள், 250 மற்றும் 50 இருக்கை வசதியுள்ள கூட்டரங்குகள், உணவகம், உடற்பயிற்சிக் கூடம், மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின் இரு தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அலுவலக இட ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலர் நா. முருகானந்தம், மற்றும் TIDCO தலைவர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆபரேஷன் சங்கல்ப் – இந்திய கடற்படை கப்பல்கள் நிலைநிறுத்தல்

மேற்கு ஆசியா பகுதியில் அதிகரித்துள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு சூழலை கண்காணித்து வருகிறது. இதன் பகுதியாக ஆபரேஷன் சங்கல்ப் (Operation Sankalp) திட்டத்தின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் கப்பல்கள் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆபரேஷன் சங்கல்ப் திட்டத்தின் கீழ் ஒரு போர்க்கப்பல் (Frigate) மற்றும் ஒரு அழிப்பாளர் வகை கப்பல் (Destroyer) ஆகிய இரண்டு இந்திய கடற்படைக் கப்பல்கள் ஏடன் வளைகுடா (Gulf of Aden) மற்றும் ஓமன் வளைகுடா (Gulf of Oman) பகுதிகளில் 2019 முதல் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல்களின் பாதுகாப்பையும் கடல்சார் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் தொடங்கப்பட்டது. மேலும் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் (INS Surat) கப்பல் தற்போது பஹ்ரைன் (Bahrain) நாட்டில் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.

விளையாட்டுச் செய்திகள்

மெரிடா ஓபன் டென்னிஸ் – கிறிஸ்டினா பக்ஸா இரட்டை பட்டம்

மெக்ஸிகோ சிட்டியில் நடைபெற்ற மெரிடா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பக்ஸா (Cristina Bucșa) ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், அவர் போலந்து வீராங்கனை மெக்டலினா ஃபிரெச் (Magdalena Fręch)6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது டென்னிஸ் வாழ்க்கையின் முதல் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றினார்; இதற்கு முன்பு அவர் WTA இரட்டையர் பிரிவில் 8 முறை சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார். இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், கிறிஸ்டினா பக்ஸா மற்றும் சீனாவின் ஜியாங் ஜின்யு (Jiang Xinyu) இணை நெதர்லாந்தின் இசபெல் ஹேவர்லாக் (Isabelle Haverlag) மற்றும் பிரிட்டனின் மாயா லம்ஸ்டென் (Maia Lumsden) இணையை 6-4, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது; இது பக்ஸா-ஜின்யு இணை வென்ற முதல் பட்டமாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியனானதற்காக கிறிஸ்டினா பக்ஸாவுக்கு ₹1.69 கோடி மற்றும் 500 தரவரிசை புள்ளிகள் வழங்கப்பட்டன, மெக்டலினா ஃபிரெச்சுக்கு ₹1.04 கோடி, மேலும் இரட்டையர் பிரிவில் சாம்பியனான பக்ஸா-ஜின்யு இணைக்கு ₹56.36 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

2025–26 நிதியாண்டிற்கான EPF வட்டி 8.25%

மத்திய அறங்காவலர் குழு (Central Board of Trustees – CBT), 2025–26 நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund – EPF) வைப்பு தொகைகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு புது தில்லியில் நடைபெற்ற CBT-யின் 239வது கூட்டத்தில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் எடுக்கப்பட்டது. இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees’ Provident Fund Organisation – EPFO) உறுப்பினர்களின் கணக்குகளில் வட்டியை வரவு வைக்கும். 8.25% வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் வட்டி விகிதத்துடன் சமமாக உள்ளது மற்றும் Exchange-Traded Funds (ETFs) உள்ளிட்ட முதலீடுகளின் வருவாய் மூலம் EPFO தொடர்ந்து 8% க்கும் மேற்பட்ட வட்டி வழங்கும் ஆண்டாகும். இந்த 8.25% வட்டி விகிதம், தற்போது 7.1% வட்டி வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) விகிதத்தை விட 115 அடிப்படை புள்ளிகள் அதிகம் ஆகும். மேலும், Employees’ Provident Fund and Miscellaneous Provisions Act, 1952 (EPF & MP Act, 1952) கீழ் நிலுவையில் உள்ள இணக்கப் பிரச்சினைகளைத் தீர்க்க விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு முறை “பொதுமன்னிப்புத் திட்டம் (Amnesty Scheme)” அங்கீகரிக்கப்பட்டது, இதன் மூலம் தகுதியுள்ள அறக்கட்டளைகளுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

March 3 – உலக வனவிலங்கு நாள்

உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் 2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UNGA) அறிவிக்கப்பட்டது. 1973 மார்ச் 3 அன்று கையெழுத்தான “CITES – Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora” ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் வனவிலங்கு கடத்தல், சட்டவிரோத வர்த்தகம் மற்றும் உயிரியல் பல்வகைமையைக் காக்கும் நடவடிக்கைகள் குறித்து உலகளவில் கவனம் செலுத்துகிறது.

உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04-03-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02-03-2026

சமகால இணைப்புகள்