TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12-02-2026

Trending TNPSC

By

12 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12-02-2026

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

கிராஃபோர்டு பரிசு 2026 – வீரபத்ரன் ராமநாதன்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன், கிராஃபோர்டு பரிசு 2026-ஐ பெற்றுள்ளார். இந்த விருது ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் மூலம் வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வழங்கப்படாத துறைகள் ஆகிய புவி அறிவியல் மற்றும் வானியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. வீரபத்ரன் ராமநாதன் பசுமை இல்ல வாயுக்கள் (GHGs) மற்றும் புவி வெப்பமடைதல் குறித்த தனது ஆராய்ச்சிக்காக அறியப்பட்டவர். மேலும், குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs) மற்றும் பிற மாசுபடுத்திகள் காலநிலை மாற்றத்தில் வகிக்கும் பங்கு குறித்து கண்டறிந்துள்ளார். இந்த விருது பொதுவாக “புவி அறிவியலின் நோபல் பரிசு” என்று அழைக்கப்படுகிறது.

வைலி ரிசர்ச் ஹீரோஸ் பரிசு 2025 – டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா

இந்திய பொது சுகாதார நிபுணரான டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா, “Impact Beyond Academia” பிரிவில் வைலி ரிசர்ச் ஹீரோஸ் பரிசு 2025-ஐ வென்றுள்ளார். இந்த உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும் முதல் இந்தியர் இவர் ஆவார். வைலி ரிசர்ச் ஹீரோஸ் பரிசு, பொதுக் கொள்கை மற்றும் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் விருதாகும். டாக்டர் லஹாரியாவின் ஆய்வுகள் தடுப்பூசி திட்டங்கள், தாய் மற்றும் சேய் நலம், மற்றும் முதன்மை சுகாதார அமைப்புகள் குறித்து கவனம் செலுத்துகின்றன. இவர் உலக சுகாதார அமைப்பு (WHO)-வின் முன்னாள் அதிகாரி ஆவார். டாக்டர் நம்ரதா பதக், டாக்டர் குலூத் அல்சயேக், டாக்டர் நந்திதா கருட், மற்றும் டாக்டர் இம்மானுவேல் பெப்ரா ஆகியோரும் வைலி ரிசர்ச் ஹீரோஸ் பரிசு 2025 பெற்றுள்ளனர்.

ஆகாசா ஏரில் நிர்வாக மாற்றம்

ஆகாசா ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வணிக அதிகாரி (CCO) பிரவீன் ஐயர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இணை நிறுவனர் மற்றும் தலைமை தகவல் அதிகாரி (CIO) ஆனந்த் சீனிவாசன், புதிய தலைமை வணிக அதிகாரி (CCO) ஆக பொறுப்பேற்றுள்ளார். நிர்வாக மாற்றம் சீராக நடைபெற ஏப்ரல் 30, 2026 வரை பிரவீன் ஐயர் நிர்வாகக் குழுவுடன் இணைந்து செயல்படுவார். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) வினய் துபே ஆவார். ஆகாசா ஏர் சமீபத்தில் தனது 33வது விமானத்தை இணைத்துள்ளது; இது ஜனவரி 2026க்கு பிறகு இணைக்கப்பட்ட இரண்டாவது விமானமாகும். நிறுவனம் 226 போயிங் 737 MAX விமானங்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஆர்டர் வழங்கியுள்ளது; மேலும் 193 விமானங்கள் வரவிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய மேரி கியூரி பெல்லோஷிப்புக்கு சென்னையில் பிறந்த ஆய்வாளர் தேர்வு

சென்னையில் பிறந்த விஞ்ஞானி சமத்மிகா ரவி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக உயரிய ஆராய்ச்சி உதவித்தொகைகளில் ஒன்றான மேரி ஸ்க்லோடோவ்ஸ்கா-கியூரி குளோபல் போஸ்ட்டாக்டோரல் பெல்லோஷிப் பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து வந்த 17,066 விண்ணப்பங்களில், இவரது திட்டம் 98% மதிப்பெண் பெற்று, தேர்வு செய்யப்பட்ட 1,610 திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ஐரோப்பிய ஆணையம் €404.3 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது. இவரது “Bytes4Beets” என்ற ஆய்வுத் திட்டம், சர்க்கரை பீட் செடியின் காட்டு இனங்களை ஆய்வு செய்து, காலநிலை மாற்றத்தைக் தாங்கக்கூடிய பயிர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு மத்திய தரைக்கடல் கடற்கரையில் காணப்படும் காட்டு கடல் பீட் இனங்களின் மரபணுக்களை பகுப்பாய்வு செய்து, எதிர்கால பயிர் பெருக்கத்திற்கான தகவமைப்பு மரபணுப் பண்புகளை கண்டறிவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

தேசியச் செய்திகள்

இ-சாங்க்யிகி இணையதளம் அறிமுகம் – MoSPI முயற்சி

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), ஜூன் 29 அன்று இ-சாங்க்யிகி (e-Sankhyiki) இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளம் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் பகிர்வு மற்றும் தரவு மேலாண்மையை முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தரவு பட்டியல் தொகுதி (Data Catalogue Module) மூலம் அமைச்சகத்தின் முக்கிய தரவு சொத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன; மேலும் மேக்ரோ குறிகாட்டிகள் தொகுதி (Macro Indicators Module) மூலம் முக்கிய மேக்ரோ பொருளாதாரக் குறிகாட்டிகளின் காலவரிசைத் தரவுகள் வழங்கப்படுகின்றன. தரவு பாதுகாப்பிற்காக, தகவல்கள் தேசிய தகவலியல் மையம் (NIC) கிளவுட் வசதியில் சேமிக்கப்படுகின்றன; மென்பொருள் பாதுகாப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன; SSL (Secure Sockets Layer) அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்பு மதிப்பீடுகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.

அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் கட்டாயம்

மத்திய உள்துறை அமைச்சகம் அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடுவதற்கு முன் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ கட்டாயம் இசைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. வங்கமொழி கவிஞர் பக்கிம் சந்திர சட்டர்ஜி, 1875 நவம்பர் 7 அன்று வந்தே மாதரம் பாடலை இயற்றினார். இந்தப் பாடல் 1950 ஜனவரி 24 அன்று தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. இப்பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. புதிய விதிகளின்படி, 1937ல் நீக்கப்பட்ட 4 வரிகள் உட்பட மொத்தம் 6 சரணங்கள் பாடப்பட வேண்டும்; இதன் நீளம் 3 நிமிடம் 10 வினாடிகள் ஆகும். குடியரசுத் தலைவர், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பத்ம விருது வழங்கும் விழாக்கள், மற்றும் தேசியக் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகள் போன்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் பாடப்பட வேண்டும். வந்தே மாதரம் பாடும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கட்டாயம். ஆனால் திரையரங்குகளில் செய்திப் படம் அல்லது ஆவணப்படத்தின் பகுதியாக பாடல் ஒலிக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டியது கட்டாயமல்ல. புதிய திருத்தங்களின்படி தேசியப் பாடலை அவமரியாதை செய்தால் அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

44 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை மேயர் பதவி பாஜக கைப்பற்றல்

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்ந்த ரிது தாவ்டே, பிருஹன்மும்பை மாநகராட்சி (BMC)-யின் 78வது மேயராக போட்டியின்றி பதவியேற்றார். ஜனவரி 15 அன்று நடைபெற்ற BMC தேர்தலில் மொத்தம் 227 இடங்கள் இருந்தன. இதில் பாஜக 89 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா (ஷிண்டே பிரிவு) 29 இடங்களிலும் வெற்றி பெற்று, மொத்தம் 118 இடங்களை பெற்றது. மேயரைத் தேர்ந்தெடுக்க 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. மேயர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 132வது வார்டு உறுப்பினரான ரிது தாவ்டே, முன்பு BMC கல்விக் குழுத் தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து, 11ஆம் தேதி BMC ஆணையர் பூஷண் கக்ரானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் போட்டியின்றி தேர்வானார். சிவசேனா (ஷிண்டே பிரிவு) சார்ந்த 5வது வார்டு உறுப்பினர் சஞ்சய் சங்கர் காதி துணை மேயராகத் தேர்வாகி, சுழற்சி முறையில் 15 மாதங்கள் பதவியில் இருப்பார். BMC இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படுகிறது; அதன் 2025–26 பட்ஜெட் தொகை ₹74,450 கோடி ஆகும். 1997 முதல் 2022 வரை சிவசேனா கட்சி தொடர்ந்து மேயர் பதவியை வகித்தது. கடைசியாக 2017ல் BMC தேர்தல் நடைபெற்றது; 2022 தேர்தல் கொரோனா பெருந்தொற்று மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதமானது. இதற்கு முன்பு 1982–1983 காலத்தில் பாஜகவின் பிரபாகர் பை மும்பை மேயராக இருந்தார். ரிது தாவ்டே மும்பையின் 2வது பாஜக மேயரும், முதல் பாஜக பெண் மேயரும் ஆவார்.

சுற்றுச்சூழல் செய்திகள்

உலகின் மிக நீளமான பாம்பு – கின்னஸ் சாதனை அங்கீகாரம்

இந்தோனேசியாவின் சுலவேசி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மலேயோபைதான் ரெட்டிகுலேட்டஸ் (Malayopython reticulatus) வகை மலைப்பாம்பு, கின்னஸ் உலக சாதனை புத்தகம் மூலம் உலகின் மிக நீளமான அளவிடப்பட்ட பாம்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்பாம்பின் நீளம் 7.22 மீட்டர் (23 அடி 8 அங்குலம்) ஆக அளவிடப்பட்டுள்ளது. இதற்கு “இபு பாரோன்” அல்லது “தி பாரோனஸ்” என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு, உலகின் மிக நீளமான பாம்பு இனமாக அறியப்படுகிறது.

பொருளாதாரச் செய்திகள்

தவறான விற்பனைக்கு இழப்பீடு: ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), “வணிக வங்கிகள் – பொறுப்பான வணிக நடத்தை (திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்) 2026” என்ற தலைப்பில், நிதித் தயாரிப்புகளின் தவறான விற்பனை (Mis-selling) மற்றும் கட்டாய இணை விற்பனை (Compulsory bundling) தடுக்க புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இவ்வழிகாட்டுதல்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். விற்பனை செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் கருத்து பெறுவது கட்டாயம். தவறான விற்பனை உறுதியாகும் பட்சத்தில், வங்கிகள் வாடிக்கையாளர் செலுத்திய முழுத் தொகையையும் திருப்பி வழங்க வேண்டும் மற்றும் ஏற்பட்ட இழப்பிற்கும் இழப்பீடு வழங்க வேண்டும். தயாரிப்பு விற்பனைக்கு முன், வாடிக்கையாளரின் வயது, வருமானம், நிதி அறிவு மற்றும் இடர் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தத்தைக் கணிக்க வேண்டும். ‘டார்க் பேட்டர்ன்’ போன்ற தவறான உத்திகள் பயன்படுத்தக் கூடாது; நேரடி விற்பனை முகவர்கள் (DSA) மூலம் வலுக்கட்டாய விற்பனையும் தடுக்கப்பட வேண்டும். வங்கி வளாகத்தில் மூன்றாம் தரப்பு தயாரிப்புகளை விற்பனை செய்பவர்கள், வங்கி ஊழியர்களிடமிருந்து தெளிவாக வேறுபடுத்தப்பட வேண்டும்; மேலும் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்கான நடத்தை விதிகள் (Code of Conduct) அமைக்கப்பட வேண்டும். ஏப்ரல் 1 முதல் வங்கிகள் காப்பீட்டு தரகராக செயல்படலாம்; ஆனால் மூன்றாம் தரப்பு தயாரிப்பு மற்றும் சேவை வழங்குநர்கள் (TPPSP) வலுவான குறைதீர் அமைப்பைக் கொண்டிருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

₹10.91 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் இந்தியாவின் 4வது பெரிய நிறுவனமான எஸ்பிஐ

பாரத ஸ்டேட் வங்கி (SBI), சந்தை மூலதன அடிப்படையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தை முந்தி, இந்தியாவின் நான்காவது அதிக மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்துள்ளது. புதன்கிழமை வர்த்தக முடிவில், எஸ்பிஐயின் சந்தை மதிப்பு ₹10.91 லட்சம் கோடி ஆக இருந்தது; டிசிஎஸ் மதிப்பு ₹10.53 லட்சம் கோடி ஆக இருந்தது. எஸ்பிஐ பங்குகள் ₹1,183-க்கு 3.45% உயர்வுடன் முடிவடைந்தன. இதன் மூலம், எஸ்பிஐ இந்தியாவின் அதிக மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனம் ஆனது. பிப்ரவரி 7 அன்று வங்கி அறிவித்த ₹21,028.15 கோடி நிகர லாபம், ஆண்டு அடிப்படையில் 24.5% வளர்ச்சி பெற்றது. அதே காலாண்டில், மொத்த வாராக்கடன் (Gross NPA) 1.57% ஆகக் குறைந்தது மற்றும் நிகர வாராக்கடன் (Net NPA) 0.39% ஆக இருந்தது. தற்போது இந்தியாவின் மிக அதிக மதிப்புமிக்க நிறுவனங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (₹19.88 லட்சம் கோடி), ஹெச்டிஎஃப்சி வங்கி (₹14.26 லட்சம் கோடி), பார்தி ஏர்டெல் (₹11.47 லட்சம் கோடி) மற்றும் டிசிஎஸ் (₹10.53 லட்சம் கோடி) உள்ளன.

சிட்டி யூனியன் வங்கியின் எம்.டி. & சிஇஓவாக ஆர். விஜய் ஆனந்த் நியமனம்

சிட்டி யூனியன் வங்கியின் (CUB) தற்போதைய செயல் இயக்குநரான ஆர். விஜய் ஆனந்த், அந்த வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் (MD) மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது; இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும். அவருடைய ஆண்டு ஊதியம் ₹2.5 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறை, இடர் மேலாண்மை, போர்ட்ஃபோலியோ பகுப்பாய்வு, கடன் மதிப்பீடு மற்றும் சில்லறை வங்கிப் பணிகளில் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் அவருக்கு உள்ளது.

ஐஓபி 90வது நிறுவனர் தினம் மற்றும் சிஎஸ்ஆர் திட்டங்கள்

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), தனது 90வது நிறுவனர் தினத்தை பிப்ரவரி 11 அன்று சென்னையில் கொண்டாடியது. வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா, நிறுவனர் எம்.சிடி.எம். சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு மரியாதை செலுத்தி விழாவைத் தொடங்கினார். நிகழ்ச்சியில் செயல் இயக்குநர்கள் ஜாய்தீப் தத்தா ராய், எஸ். தனராஜ் மற்றும் தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி ராஜீவ் குமார் கலந்து கொண்டனர். நிறுவனர் தினத்தை முன்னிட்டு வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டங்களின் கீழ் பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி வழங்கப்பட்டு, சென்னையில் உள்ள 43 அரசு பள்ளிகளின் 7,584 மாணவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், 10,000 குடும்பங்களுக்கு, அதில் 4,000 பெண் குழந்தைகள் உட்பட, சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 23 நபர்களுக்கு சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு செய்திகள்

எகிப்தில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள்

எகிப்தின் அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) மற்றும் தீபன் நெக்ரோபோலிஸில் உள்ள கல்லறைகளில், தமிழ் பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதத்தில் சுமார் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை கி.பி. 1 முதல் 3ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை. இந்த ஆய்வு 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசிய ஆய்வியல் பள்ளி (EFEO) பேராசிரியர் சார்லோட் ஸ்மித் மற்றும் சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழகப் பேராசிரியர் இன்கோ ஸ்ட்ராச் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் ஆறு கல்லறைகளில் இக்கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன; இவை பெரும்பாலும் கிரேக்க கிறுக்கல்களுடன் காணப்படுகின்றன. இதற்கு முன்பு 1926ஆம் ஆண்டு ஜூல்ஸ் பெய்லட் 2,000-க்கும் மேற்பட்ட கிரேக்க கிறுக்கல்களை வெளியிட்டிருந்தார். இந்த ஆய்வு “From the Valley of the Kings to India: Indian Inscriptions in Egypt” என்ற தலைப்பில் தமிழ் கல்வெட்டியல் சர்வதேச மாநாட்டில் வழங்கப்பட்டது. இக்கல்வெட்டுகள் இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் இருப்பை காட்டுகின்றன; இதில் பெரும்பான்மையினர் பழங்கால தமிழகம் சேர்ந்தவர்கள் என்பதும், தமிழகம், இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் ரோமானியப் பேரரசு இடையேயான வர்த்தகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.

மாநில புத்தாக்கக் கொள்கைக்கு யுனிசெஃப் மற்றும் OECD உடன் தமிழ்நாடு ஒத்துழைப்பு

தமிழ்நாடு அரசு, மாநிலத் திட்டக் குழு (SPC) மூலம், யுனிசெஃப் புத்தாக்க அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) உடன் இணைந்து மாநில அளவிலான பொதுத்துறை புத்தாக்கக் கொள்கை, புத்தாக்கக் கட்டமைப்புகள், மற்றும் மாநில புத்தாக்கக் குறியீடு உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அரசுத் துறைகளில் கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்புகளை நிறுவுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கொள்கை உருவாக்கத்திற்காக துறைசார் வல்லுநர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பு ஜனவரி 5 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கடிதப் பரிமாற்றம் மூலம் முறைப்படுத்தப்பட்டது; இதற்கு பாரிஸில் உள்ள OECD பொதுத்துறை புத்தாக்கக் கண்காணிப்பகம் தொழில்நுட்ப ஆதரவு வழங்குகிறது. மாநிலத் திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் தலைமையிலான குழு, ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் பாரிஸில் உள்ள OECD தலைமையகத்திற்கு சென்று ஆலோசனைகள் மேற்கொண்டது. மேலும், ஜனவரி 26 மற்றும் 27 தேதிகளில் ஸ்டாக்ஹோமில் உள்ள யுனிசெஃப் புத்தாக்க அலுவலகத்தில் நடைபெற்ற UNICEF COMPASS திட்டத்தில், 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் மாநிலத் திட்டக் குழு பங்கேற்றது. இந்த முயற்சியின் மூலம், புத்தாக்கத்தை முதன்மைப்படுத்தும் இத்தகைய மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்த உலகின் முதல் துணை-தேசிய அரசு என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

சர்வதேசச் செய்திகள்

மடகஸ்காரில் கெஸானி புயல் தாக்கம்

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகஸ்காரில், பிப்ரவரி 11 அன்று டாமசினா துறைமுக நகருக்கு அருகே ‘கெஸானி’ என்ற தீவிர புயல் கரையைக் கடந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, 15 பேர் மாயமாகியுள்ளனர் மற்றும் 33-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால், சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கும் டாமசினா நகரின் 75% உட்கட்டமைப்புகள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கையாக 2,700-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் காரணமாக தலைநகர் அன்டனானரிவோ உட்பட பல பகுதிகளுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டது. இதற்கு முன்பு ஜனவரி 31 அன்று ‘ஃபைட்டியா’ புயல் தாக்கி 14 பேர் உயிரிழந்தனர். சமீபத்திய புயல் பாதிப்புக்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அவசர நிவாரண நிதியாக 30 லட்சம் அமெரிக்க டாலர் ஒதுக்கியுள்ளது.

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் திருத்தம்

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய திருத்தங்களை செய்துள்ளது. முன்பு இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்திருந்தது; அதை 18% ஆகக் குறைத்ததாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஒப்பந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிடமிருந்து பெறத் திட்டமிட்டுள்ளது. ஆரம்ப ஒப்பந்த வரைவில் எரிசக்தி பொருட்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப பொருட்கள், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் சேவைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் வெள்ளை மாளிகை வெளியிட்ட திருத்தப்பட்ட வரைவில் வேளாண் பொருட்கள் குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ‘உறுதி அளித்துள்ளது’ என்ற சொல் ‘உத்தேசித்துள்ளது’ என மாற்றப்பட்டுள்ளது. ஆரம்ப வரைவில், அமெரிக்க பருப்புகளுக்கு இந்தியா விதிக்கும் 30% இறக்குமதி வரி மற்றும் பருப்புகள் குறித்து குறிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், திருத்தப்பட்ட வரைவில் அவை நீக்கப்பட்டுள்ளன. அனைத்து அம்சங்களும் இறுதி செய்யப்பட்ட பின், இந்த ஒப்பந்தம் மார்ச் மாத மத்தியில் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அனிஷ் பன்வாலா வெண்கலம்

பிப்ரவரி 11, புது தில்லியில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் 23 புள்ளிகளுடன் 3ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். ஜப்பானின் டாய் யோஷியோகா 31 புள்ளிகளுடன் தங்கமும், கஜகஸ்தானின் நிகிதா சிர்யுகின் 28 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனர். மற்றொரு இந்திய வீரர் ஆதர்ஷ் சிங் 11 புள்ளிகளுடன் 6ஆம் இடம் பிடித்தார். ஜூனியர் பிரிவில் சூரஜ் சர்மா 23 புள்ளிகளுடன் வெள்ளியும், முகேஷ் நெலவள்ளி 19 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனர்; இந்தோனேசியாவின் முகமது ஃபாஸா 29 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். அணிகள் பிரிவில் சூரஜ், சஹில், முகேஷ் அடங்கிய இந்திய அணி 1,729 புள்ளிகளுடன் தங்கம் வென்றது; கஜகஸ்தான் வெள்ளி பெற்றது. 50 மீட்டர் ரைபிள் புரோன் ஜூனியர் ஆடவர் பிரிவில், அட்ரியன் கர்மாகர் 621.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்; கஜகஸ்தானின் ஓலெக் நோஸ்கோவ் மற்றும் தமெர்லான் கபுலோவ் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் பெற்றனர். அதே பிரிவின் அணிகள் போட்டியில் அட்ரியன், ரோஹித் கன்யன், ஹேமந்த்பர்மன் அடங்கிய இந்திய அணி 1,847.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றது; கஜகஸ்தான் 1,848.7 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. போட்டி நிறைவடையும் நிலையில், இந்தியா மொத்தம் 38 தங்கம், 17 வெள்ளி, 16 வெண்கலம் என 71 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

தினசரி TNPSC நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா மூலம் ரேங்க் உயர்த்துங்கள்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 13-02-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11-02-2026

சமகால இணைப்புகள்