TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 29-08-2026

Trending TNPSC

By

6 min read ·

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

காங்கோவில் தீவிரமாகப் பரவும் எபோலா: தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

கின்ஷாசா, ஆகஸ்ட் 28: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, நோய்த்தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது காங்கோவில் பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ, தடுப்பூசியோ எதுவுமில்லை. இருப்பினும், எபோலாவுக்கு சிகிச்சையளிக்க உதவும் எர்வெபோ தடுப்பூசி, இந்தத் தீநுண்மிக்கு எதிராகவும் ஓரளவு பாதுகாப்பை அளிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) நம்பிக்கை தெரிவித்துள்ளது. காங்கோ அரசு புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 5,794 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,786-ஆக அதிகரித்துள்ளது; இறப்பு விகிதம் 48% ஆகும். இத்தொற்று வட கிவு மாகாணத்தின் இரண்டு புதிய பகுதிகள் உட்பட மொத்தம் 60 சுகாதார மண்டலங்களுக்கு பரவியுள்ளது.

தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இந்தோ-ஜெர்மன் எம்எஸ்எம்இ மாநாடு

இந்தோ-ஜெர்மன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மாநாடு 2026 ஆகஸ்ட் 28 அன்று சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டை தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு (SICCI) மற்றும் இந்தோ-ஜெர்மன் வர்த்தக சபை (IGCC) ஆகியவை இணைந்து நடத்தின. இதில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில் துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன. இந்தியா–ஜெர்மனி இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு சார்ந்த ஒத்துழைப்பு மற்றும் இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) மூலம் உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மிகேலா க்யூச்லர், சென்னைக்கான ஜெர்மனி நாட்டின் துணைத் தூதர் (Consul General), மைக்கல் ஹோய்ஸ்ப், ஜெர்மனி துணைத் தூதர், மற்றும் அலெக்ஸ் பால் மேனன், மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (MEPZ SEZ) மேம்பாட்டு ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காரை–கொளக்காநத்தம் புவியியல் மரபுத் தலம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை–கொளக்காநத்தம் பகுதி, காவிரிப் படுகையின் புதைபடிவ வளம் கொண்ட முக்கிய புவியியல் பகுதியாகும்; இது அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கடலூர் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. கிரீடேசியஸ் காலத்தில் (14.5 முதல் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு) காவிரிப் படுகையின் சில பகுதிகள் கடலில் மூழ்கியதால் கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிவங்கள் உருவாகிப் பாதுகாக்கப்பட்டன. 1862ஆம் ஆண்டில், ஆங்கிலேயப் புவியியலாளர் ஹென்றி ஃபிரான்சிஸ் பிளான்ஃபோர்டு திருச்சிராப்பள்ளி–காவிரிப் படுகையின் கிரீடேசியஸ் காலப் பாறைகளை ஆய்வு செய்து அவற்றை ஊற்றாத்தூர்ப் பாறைக்குழு, திருச்சிராப்பள்ளிப் பாறைக்குழு மற்றும் அரியலூர்ப் பாறைக்குழு என மூன்று முக்கியப் பாறைக்குழுக்களாக வகைப்படுத்தினார். 2015ஆம் ஆண்டில், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (GSI) காரை–கொளக்காநத்தம் பகுதியை இந்தியாவின் 32ஆவது புவியியல் மரபுத் தலமாக அறிவித்தது. சுமார் 4 கி.மீ. நீளமுள்ள இப்பகுதி நீண்டகால மண்ணரிப்பு மற்றும் மாறுபாடான அரிப்பு (Differential Erosion) காரணமாக உருவான பாழ்நிலப்பகுதி (Badland Topography) நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. இங்கு ஜிப்சம், சேற்றுப்பாறை, களிமண் பாறை, வண்டல்பாறை, சுண்ணாம்புப் பாறை மற்றும் சிவப்பு மண் அடுக்குகளுடன் அம்மோனைட்டுகள், பெலெம்னைட்டுகள், வயிற்றுக்காலிகள் மற்றும் சிப்பிகள் போன்ற புதைபடிவங்கள் காணப்படுகின்றன. இப்பகுதி பாறை அடுக்கியல் (Stratigraphy), படிவியல் (Sedimentology), தொல்லுயிரியல் (Palaeontology) மற்றும் நிலவடிவியல் (Geomorphology) ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய திறந்தவெளி புவியியல் ஆய்வகமாக விளங்குகிறது; மேலும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: விருதுநகரில் செப். 17-ல் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 17 அன்று தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இத்திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021 செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தில் தவெக ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, இத்திட்டத்தின் பெயர் ‘பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றப்பட்டதுடன், 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக நடப்பு பட்ஜெட்டில் ₹268 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று, விருதுநகரில் முன்னாள் முதல்வர் காமராசர் படித்த கே.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் இத்திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் தென் மாவட்டத்துக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

தேசியச் செய்திகள்

பிரதமரின் ஜன் தன் திட்டம் – 12 ஆண்டுகள்

பிரதமரின் ஜன் தன் திட்டம் (PMJDY) 2014 ஆகஸ்ட் 28 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. வங்கி மற்றும் நிதிச் சேவைகள் கிடைக்காத மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு நிதிச் சேவைகளை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வங்கிக் கணக்குகளை தொடங்கலாம்; குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக அபராதம் அல்லது பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கப்படாது. ஏடிஎம் மற்றும் இணையவழிப் பரிவர்த்தனைகளுக்காக இலவச ரூபே அட்டை வழங்கப்படுகிறது. மேலும், ₹2 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடு மற்றும் ₹10,000 வரை மிகைப் பற்று வசதி வழங்கப்படுகிறது. ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் 14.5 கோடியில் இருந்து 2026-ஆம் ஆண்டில் 59 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதில் 33 கோடி கணக்குகள் பெண்களுடையவை (56%), 46 கோடி கணக்குகள் ஊரக மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் (78%) தொடங்கப்பட்டுள்ளன. 2026 ஆகஸ்ட் 19 நிலவரப்படி, ஜன் தன் கணக்குகளின் மொத்த இருப்புத் தொகை ₹3.17 லட்சம் கோடியாகவும், ஒரு கணக்கின் சராசரி இருப்புத் தொகை ₹5,356 ஆகவும் இருந்தது; இதுவரை 41.29 கோடி ரூபே அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கிய 12 ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் ₹53 லட்சம் கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா

செயிண்ட் லூயி, ஆகஸ்ட் 28: அமெரிக்காவின் செயிண்ட் லூயியில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் (GCT) ஃபைனல்ஸ் போட்டியின் இறுதியில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஃபபியானோ கரூவானாவை 15–13 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனார். இதன்மூலம் GCT ஃபைனல்ஸ் வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். ஏற்கெனவே 2026-ஆம் ஆண்டில், நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்திருந்தார். கிராண்ட் செஸ் டூரில் இதற்கு முன்பு அவரது அதிகபட்ச நிலை 2025-ஆம் ஆண்டில் 4-ஆம் இடம் ஆகும். இந்தியாவிலிருந்து விஸ்வநாதன் ஆனந்த், டி. குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி மற்றும் பி. ஹரிகிருஷ்ணா ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்; பிரக்ஞானந்தாவைத் தவிர இந்தியர் பெற்ற அதிகபட்ச இடமாக 2018-ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் பெற்ற 5-ஆம் இடம் உள்ளது. கிராண்ட் செஸ் டூர் 2015 முதல் நடைபெற்று வருகிறது; இதில் கிளாசிக்கல், ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் போட்டிகள் இடம்பெறுகின்றன. 2026 GCT ஃபைனல்ஸுக்கு, நடப்பாண்டு சுற்றின் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற ஆர். பிரக்ஞானந்தா, ஃபபியானோ கரூவானா, வெஸ்லி சோ மற்றும் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர் தகுதி பெற்றனர். இறுதிப்போட்டியில் முதல் கிளாசிக்கல் ஆட்டத்தில் தோல்வியடைந்த பிரக்ஞானந்தா, பின்னர் இரு ரேப்பிட் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 11–9 என முன்னிலை பெற்றார்; தொடர்ந்து பிளிட்ஸ் ஆட்டங்களில் வெற்றி பெற்று, இறுதியில் 15–13 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றார். 3-ஆம் இடத்துக்கான போட்டியில், அமெரிக்காவின் வெஸ்லி சோ, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை 18–12 என்ற கணக்கில் வீழ்த்தினார். சாம்பியனான பிரக்ஞானந்தாவுக்கு ₹1.90 கோடி ரொக்கப் பரிசும், கரூவானாவுக்கு ₹1.19 கோடியும், வெஸ்லி சோவுக்கு ₹71 லட்சமும், கெய்மருக்கு ₹47 லட்சமும் வழங்கப்பட்டது. பிரக்ஞானந்தா, கரூவானா மற்றும் வெஸ்லி சோ ஆகியோர் அடுத்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் டூர் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

இலவச TNPSC படிப்புப் பொருட்கள் பதிவிறக்கம் செய்து Smart பயிற்சி

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 30-08-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 28-08-2026

சமகால இணைப்புகள்