TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 25-08-2026
சர்வதேசச் செய்திகள்
ஜெய்சங்கர் – புதின் சந்திப்பு
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஆகஸ்ட் 24 அன்று மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து இந்தியா–ரஷியா இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ரஷியப் பயணத்தின்போது ரஷிய துணைப் பிரதமர் டெனிஸ் மண்டரோவை ஜெய்சங்கர் சந்தித்து வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்ததுடன், இந்தியா–ரஷியா அரசுகளின் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான ஆணையம் (IGC-TEC) கூட்டத்திலும் பங்கேற்றார். மேலும், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். இந்திய வேளாண் துறையின் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷியா இந்தியாவுக்கான யூரியா உர விநியோகத்தை அதிகரித்து, கூடுதல் விநியோகத்தைத் தொடரவும் தயாராக உள்ளது. இந்தியா–ரஷியா இருதரப்பு வர்த்தகம் 2026-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டின் சரிவுக்குப் பிறகு மீண்டும் அதிகரித்துள்ளது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், செப்டம்பர் 12–13, 2026 அன்று புது தில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு மற்றும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதினைச் சந்திக்க உள்ளார்.
தமிழ்நாடு செய்திகள்
2027-28 முதல் TN-அறிவு பாடத்திட்டம்
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், 2027-28 கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய TN-Analytical Thinking, Reasoning, Innovation, Venture and Entrepreneurship, Upskilling (TN-ARIVU) பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இப்பாடத்திட்டத்தில் I-V வகுப்புகளுக்கு ARIVU Foundation, VI-VIII வகுப்புகளுக்கு ARIVU Discovery, IX-XII வகுப்புகளுக்கு ARIVU Edge ஆகிய நிலைகள் இடம்பெறும். பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 31 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, மொத்தம் ₹44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிச்சுடர் திட்டத்தின் கீழ் VI-XII வகுப்பு மாணவர்களுக்கு திறன் சார்ந்த மதிப்பீடு 2026-27 கல்வியாண்டில் ₹18.01 கோடி செலவில் செயல்படுத்தப்படும். வெற்றிப்பாதை திட்டத்தின் கீழ் 172 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி, மாதிரித் தேர்வுகள் மற்றும் கல்வி வழிகாட்டுதல் வழங்க ₹22.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. PLAY திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு தினசரி விளையாட்டு, கலை மற்றும் இணைப் பாடச் செயல்பாடுகளுக்கான தனிப் பாடவேளை வழங்கப்படும். 50 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் Sports Plus பள்ளிகளாக ₹2.34 கோடி செலவில் மேம்படுத்தப்படும். 6,980 அரசு நடுநிலைப் பள்ளிகளில் செஸ் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான பயிற்சி ₹20.17 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும். IX-XII வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 23.4 லட்சம் பேருக்கு ₹81.89 கோடி செலவில் விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தமிழகத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு சுகாதார நிறுவனங்களில் பிறக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த 107 அதிதீவிர கர்ப்பகால மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தங்க மோதிரங்களைப் பாதுகாப்பாக சேமிக்க இம்மையங்களில் பெட்டகம் போன்ற பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்பட உள்ளன. மாநில சுகாதாரத் துறை, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செப்டம்பர் 5, 2026க்குள் முடிக்க பொதுப்பணித் துறைக்கு (PWD) அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டம் செப்டம்பர் 15, 2026 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் இரும்புக் கிரில் தடுப்புகள், தரை மற்றும் சுவருடன் பொருத்தப்பட்ட சேமிப்பு அலமாரிகள் மற்றும் பூட்டக்கூடிய கதவுகள் ஆகியவை இடம்பெறும்.
ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு
திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடப் போவதில்லை என இந்திய தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, மனுதாரர்கள் தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரியுள்ளனர். 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகள் 84 மற்றும் 151-ஏ மற்றும் 1967-ஆம் ஆண்டு சஞ்சீவய்யா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவித்தது. மே 2026 தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் பதவி விலகிய சி. ஜோசப் விஜய், எஸ். ஜெயக்குமார் மற்றும் ஈ. சுப்பையா உள்ளிட்டோரின் ராஜினாமைகளால் இத்தொகுதிகளில் காலியிடங்கள் ஏற்பட்டன. தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தடுக்கும் இடைக்காலத் தடையை நீட்டித்து, வழக்கை செப்டம்பர் 8, 2026க்கு ஒத்திவைத்தது.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் எரிவாயு உருளைத் திட்டம்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் ஜனவரி 2027, பொங்கல் பண்டிகையை ஒட்டி, செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1,30,16,104 குடும்பங்கள் பயனடையும் என்றும், ஆண்டுதோறும் சுமார் ₹4,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு உருளையைப் பெற்ற பின்னர் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், அதற்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஆண்டு வருமானம் ₹2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், குறு மற்றும் சிறு விவசாயக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் ஆகியோர் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள். 24 ஆகஸ்ட் 2026 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதேபோன்ற இலவச எரிவாயு உருளைத் திட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் தீபம் திட்டம், உத்தரப் பிரதேசத்தின் பிரதமரின் உஜ்வலா திட்டம், மகாராஷ்டிரத்தின் முதலமைச்சரின் அன்னபூர்ணா யோஜனா மற்றும் உத்தரகண்டின் அந்தியோதயா திட்டம் ஆகியவற்றில் செயல்படுத்தப்படுகின்றன.
வெற்றிப் பயணம் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்
வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் 2, 2026 (காந்தி ஜெயந்தி) முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு சாதாரண, விரைவு (Express), LSS (Limited Stop Service), டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் வழங்கப்படும். அரசு சிற்றுந்துகளிலும் (Mini Buses) மகளிர் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இத்திட்டத்தின் கீழ் மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கும் வசதி ஏற்படுத்தப்படும். பயனாளிகளுக்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை. திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவரும் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள். இத்திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு சுமார் ₹6,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது; பின்னர் இத்திட்டம் பிற போக்குவரத்து சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
ரேபிஸ் இல்லா தமிழ்நாடு’ திட்டம்
தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும் ரேபிஸ் நோய் பரவலைத் தடுக்கவும் ‘ரேபிஸ் இல்லா தமிழ்நாடு’ திட்டம் ₹107 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது; இதன் கீழ் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்திற்கு ₹25 கோடி ஒதுக்கப்பட்டு பாதுகாப்பான குடிநீர் மற்றும் சாலை வசதிகளுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும். கோவை மாநகராட்சியின் 42 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். குழித்துறை ஆறு நீராதாரத்தின் மூலம் கன்னியாகுமரி நகராட்சி, 17 பேரூராட்சிகள் மற்றும் 5 ஒன்றியங்களில் 286 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும், தாமிரபரணி ஆறு நீராதாரத்தின் மூலம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும் மேற்கொள்ளப்படும். கோவை, சிவகாசி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கான அறிக்கைகள் தயாரிக்கப்படும்; பாதாள சாக்கடை பராமரிப்புக்கு ₹102 கோடி, 15 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ₹30 கோடி, தூய்மைப் பணியாளர்களுக்காக 5,050 குப்பை சேகரிப்பு வாகனங்களுக்கு ₹262 கோடி ஒதுக்கப்படும். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1 லட்சம் LED மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, பாதாள சாக்கடை மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கான நிகழ்நேர கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். கடலூர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகள், கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் நகராட்சிகளில் ₹118 கோடியில் மழைநீர் வடிகால் வசதிகளும், திண்டுக்கல், சிவகாசி, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சிகளில் ₹24 கோடியில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்களும் அமைக்கப்படும். கன்னியாகுமரியில் ₹40 கோடியில், தூத்துக்குடி போல்பேட்டையில் ₹90 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும்; தஞ்சாவூரில் ₹130 கோடியில் ஒருங்கிணைந்த பல்நோக்கு வணிக வளாகம் உருவாக்கப்படும். தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் சிவகாசி மாநகராட்சிகளில் ₹25 கோடியில் விளையாட்டு உள்கட்டமைப்புகளும், பிற மாநகராட்சிகளில் ₹10 கோடியில் 38 சிறிய விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்படும். 15 பேரூராட்சிகளில் ₹50 கோடியில் புதிய அல்லது பழைய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளும், 10 பேரூராட்சிகளில் ₹15 கோடியில் நவீன எரிவாயு தகன மேடைகளும் அமைக்கப்படும்; மாநிலம் முழுவதும் 30 நீர்நிலைகள் ₹20 கோடியில் புனரமைக்கப்படும்.
தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை; பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்
தமிழக அரசு, 2026-ஆம் ஆண்டில் ஐந்து தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்க உள்ளது. இதில் கவிஞர் கே. ஜீவபாரதி, பேராசிரியர் ராஜ் கௌதமன், சரணபாஸ்கரன் என்கிற டி.எம்.எம். அகமது, சா. கந்தசாமி, டி.எம். பீர் முகமது ஆகியோர் அடங்குவர். இதுவரை 196 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு, ₹16.12 கோடி நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஐந்து தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்வதற்காக ₹50.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்னணு தளங்களில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் இரு அறிஞர்களுக்கு ‘இணையத் தமிழ்ச் செம்மல் விருது’ வழங்கப்பட்டு, தலா ₹25,000 பரிசுத்தொகை மற்றும் தகுதியுரை வழங்கப்படும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு கூடுதலாக ₹5.75 கோடி வழங்கப்படும். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்து புலங்களைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்காக ஆண்டுதோறும் தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகள் நடத்த ₹15 லட்சம் ஒதுக்கப்படும்; நிகழ்த்துக் கலை தொடர்பான அரையாண்டு ஆய்விதழ் வெளியிட ₹2 லட்சம் வழங்கப்படும். திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு தேனியில் ₹2.50 கோடி செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். மேலும், வேலுநாச்சியார், பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், காமராஜர் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் சென்னையில் ₹5 கோடி செலவில் நூலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கோட்டம் அமைக்கப்படும்.
தேசியச் செய்திகள்
சத்தீஸ்கர் பஸ்தர் சுற்றுலா மற்றும் கிராமப் பேருந்து சேவை
முன்னர் நக்சல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதி தற்போது சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர், 2000-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவானது. பஸ்தர் பகுதியில் சித்ரகூட் அருவி, தீர்த்தகர் அருவி, தோல்கல் மலையேற்றத் தலம், குகைகள், பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளன. தந்தேவாடாவில் உள்ள மா தந்தேஸ்வரி கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நக்சல் பாதிப்பு பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த முதல்வர் கிராமப் பேருந்து சேவைத் திட்டம் (Chief Minister Rural Bus Service Scheme) அரசு-தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பஸ்தர் மண்டலத்தின் 14 மாவட்டங்களில் 108 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு, சுமார் 700 கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ், சத்தீஸ்கர் அரசு போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பி. பிரசன்னா, சத்தீஸ்கர் ஆளுநரின் செயலராக இருந்து பஸ்தர் சுற்றுலா வளர்ச்சியுடன் தொடர்புடையவர்.
மாநிலச் செய்திகள்
கேரளாவின் மக்கள் திட்டப் பிரச்சாரம் 2.0
கேரளாவில் பங்கேற்பு திட்டமிடல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் மக்கள் திட்டப் பிரச்சாரம் (People’s Plan Campaign – PPC) 17 ஆகஸ்ட் 1996 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் கருத்தாக்கத்தால் தாக்கம் பெற்றதுடன், 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்புத் திருத்தங்கள், கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் கேரள நகராட்சி சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தியது. திட்ட ஒதுக்கீட்டில் 35%-40% உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் கிராம சபைகள் மற்றும் நகர்ப்புற வார்டு சபைகள் நடத்தப்பட்டன. குடும்பஸ்ரீ (Kudumbashree) திட்டம் இப்பரவலாக்கப்பட்ட வளர்ச்சி அணுகுமுறையுடன் தொடர்புடைய முக்கியத் திட்டமாக உருவெடுத்தது. PPC-யின் 30-வது ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வு 16 ஆகஸ்ட் 2026 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது; இதில் மக்கள் திட்டப் பிரச்சாரம் 2.0 தொடர்பான திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. இத்திட்டத்தின் முன்மொழிவுகளில் உள்ளாட்சி அமைப்புகளில் மாணவர் பயிற்சி மற்றும் இணையதள போர்ட்டல் மூலம் தொழில்நுட்ப அடிப்படையிலான ஒருங்கிணைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. முன்னாள் கேரள நிதியமைச்சரும் கேரள மாநில திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான டி.எம். தாமஸ் ஐசக் PPC-யுடன் தொடர்புடையவர். டி.எம். தாமஸ் ஐசக் மற்றும் ரிச்சர்ட் டபிள்யூ. பிராங்கே இணைந்து People’s Planning – Kerala, Local Democracy and Development என்ற நூலை எழுதியுள்ளனர். மக்கள் திட்டம் 2.0-வில் கிராம சபைகளில் குறைந்துவரும் பங்கேற்பு, நகர்மயமாக்கல், வேலையின்மை, கழிவு மேலாண்மை, பாலின நீதி, பருவநிலை மாற்றம், குறைந்த வருவாய் ஆதாரங்கள் மற்றும் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்; இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2026-27ஆம் நிதியாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட் ₹14,300 கோடி மதிப்பில் என். ரங்கசாமியால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்மொழியின் மொழியியல் பாரம்பரியம் தொடர்பான ஆய்வுகளை மேம்படுத்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ் சொற்பிறப்பியல் ஆய்வுக்கான தமிழ் இருக்கை நிறுவப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) ₹10.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை பாலின் தரத்தின் அடிப்படையில் லிட்டருக்கு ₹41 ஆக உயர்த்தப்பட்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களின் திருமண நிதியுதவி ₹35,000-லிருந்து ₹75,000 ஆகவும், ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைகளின் மகள்களின் திருமண நிதியுதவி ₹40,000-லிருந்து ₹1 லட்சம் ஆகவும், விதவை மறுமண நிதியுதவி ₹75,000-லிருந்து ₹1 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கான திருமண நிதியுதவி ₹1 லட்சத்திலிருந்து ₹1.25 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2026-27 புதுச்சேரி பட்ஜெட் புதிய வரிகள் விதிக்கப்படாத வரியில்லா பட்ஜெட்டாகும்; இதில் வருவாய் செலவினங்களுக்கு ₹12,115 கோடியும், மூலதன செலவினங்களுக்கு ₹2,185 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினசரி TNPSC நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா மூலம் ரேங்க் உயர்த்துங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 26-08-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 24-08-2026
சமகால இணைப்புகள்
Fri Oct 02 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 02-10-2026
Thu Oct 01 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 01-10-2026
Wed Sep 30 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 30-09-2026
Tue Sep 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 29-09-2026
Mon Sep 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 28-09-2026
Sun Sep 27 2026