TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12-06-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12-06-2026
மாநிலச் செய்திகள்
இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சிலை
இந்தியா-இஸ்ரேல் நட்புறவின் அடையாளமாக, இஸ்ரேல் அரசு, தனது முக்கிய நகரங்களில் ஒன்றில் சத்ரபதி சிவாஜி மகராஜின் பிரம்மாண்ட சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை மும்பைக்கான இஸ்ரேல் துணைத் தூதர் யானிவ் ரெவாச் வெளியிட்டார். இந்தத் திட்டத்திற்காக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டு, மகாராஷ்டிர அரசு முழு ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்தச் சிலை, மகாராஷ்டிரா மற்றும் இந்திய-யூத சமூகத்துக்கு இடையிலான வரலாற்றுத் தொடர்புகளின் அடையாளமாகவும் அமையும்.
தேசியச் செய்திகள்
நிதி ஆயோக் 11-ஆவது நிர்வாகக் குழுக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், நிதி ஆயோக்கின் 11-ஆவது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக 2015-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிதி ஆயோக், கூட்டுறவுக் கூட்டாட்சியை ஊக்குவிப்பதையும், நீண்டகால வளர்ச்சி செயல்திட்டங்களை வடிவமைப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் கொள்கைக் குழுவாகும். இந்த நிர்வாகக் குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் இடம்பெற்றுள்ளனர். கூட்டத்தில் தொழில்முனைவு ஊக்குவிப்பு, எதிர்காலத் தேவைகளுக்கேற்ற திறன் மேம்பாடு, நிலையான வேலைவாய்ப்புகள், மக்களின் நல்வாழ்வு, எரிசக்தி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, நீர் சேமிப்பு, இயற்கை விவசாயம், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் இணையவழி மோசடிகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள் ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை மற்றும் பகிர்வு என்ற மூன்று தூண்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், வளர்ந்த பாரதம் (Viksit Bharat) என்ற இலக்கை அடைய மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சி அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மாநிலங்களவைத் தேர்தல் 2026
இந்திய தேர்தல் ஆணையம், 10 மாநிலங்களில் காலியாகும் 24 மாநிலங்களவை இடங்களுக்கும், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் மற்றும் ஒடிஸாவில் காலியாக உள்ள 3 இடங்களுக்குமான இடைத்தேர்தலுக்கும் சேர்த்து மொத்தம் 27 இடங்களுக்கு தேர்தலை அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 18 அன்று நடைபெறுகிறது. பல மாநிலங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார். அவருடன் மன்சூர் அலிகான், பவன் கேரா மற்றும் பாஜக வேட்பாளர் எம். நாகராஜா ஆகியோரும் தேர்வாகினர். ஆந்திரப் பிரதேசத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர்களான பாஷ்யம் ராமகிருஷ்ணா, லிங்கமனேனி ரமேஷ், சிந்தகாயல விஜய் மற்றும் சனா சதீஷ் பாபு போட்டியின்றி தேர்வானார்கள். குஜராத்தில், பாஜக வேட்பாளர்களான ராஜுபாய் சுக்லா, மன்சிங் பர்மர், முகேஷ்பாய் ரத்வா மற்றும் ஜிதேந்திர கன்ஜாரியா போட்டியின்றி தேர்வாகினர். ராஜஸ்தானில், சதீஷ் பூனியா, அல்கா குர்ஜார் மற்றும் நீரஜ் டாங்கி தேர்வாகினர். மணிப்பூரில் எ. சாரதா தேவி, மேகாலயத்தில் ஜேம்ஸ் கே. சங்மா, அருணாசலப் பிரதேசத்தில் டய் தகாக் ஆகியோரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர். மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர ஜெயின் மற்றும் ஒடிஸாவில் பாஜகவின் தேபாசிஷ் சமந்தரே போட்டியின்றி தேர்வாகினர். மத்தியப் பிரதேசத்தில், பாஜகவின் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கேவத் போட்டியின்றி தேர்வான நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு 106 டர்போஜெட் ட்ரோன்கள்
இந்திய பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான எஸ்எம்பிபி (SMBP), இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக 106 டர்போஜெட் என்ஜினில் இயங்கும் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) வழங்கியுள்ளது. இந்த ட்ரோன்கள், ஜேமிங் மற்றும் ஸ்பூஃபிங் போன்ற தகவல் தொடர்பு தடைகளுக்கு மத்தியிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியவை மற்றும் 180 கிலோமீட்டர் வரை செயல்படும் திறன் கொண்டவை. மேலும், ராணுவ கட்டமைப்புகள், தளவாட மையங்கள், உத்தரவு மையங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளை தானியங்கி முறையில் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு இந்த ட்ரோன்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை இந்திய ராணுவத்தின் ஆளில்லா போர் திறனை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு சரிவு
மே மாதத்தில், இந்தியப் பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதிகளில் ₹22,908 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இது ஏப்ரல் மாதத்தின் ₹38,440 கோடியுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் குறைவாகவும், கடந்த ஓராண்டில் இல்லாத மிகக் குறைந்த முதலீடாகவும் உள்ளது. முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் (SIP) மாதாந்திர பங்களிப்பு ₹31,115 கோடியிலிருந்து ₹30,954 கோடியாக குறைந்துள்ளது. இருப்பினும், SIP திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ₹17.12 லட்சம் கோடியாக உயர்ந்து, பரஸ்பர நிதித் துறையின் மொத்த சொத்து மதிப்பில் சுமார் 21 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. கடன் சார்ந்த திட்டங்களில் இருந்து ₹96,948 கோடி வெளியேறியதால், பரஸ்பர நிதித் துறை மே மாதத்தில் ₹64,000 கோடிக்கும் அதிகமான நிகர மூலதன வெளியேற்றத்தை சந்தித்தது. இதனால் துறையின் மொத்த சொத்து மதிப்பு ₹81.6 லட்சம் கோடியாக குறைந்தது. பிரிவு வாரியாக, ஃபிளெக்ஸி கேப் நிதிகள் ₹5,175 கோடி, சிறிய மூலதன நிதிகள் ₹4,945 கோடி, நடுத்தர மூலதன நிதிகள் ₹4,385 கோடி மற்றும் பெரிய மூலதன நிதிகள் ₹1,593 கோடி முதலீட்டை ஈர்த்தன. மேலும், டிவிடெண்ட் யீல்டு மற்றும் இஎல்எஸ்எஸ் (Equity Linked Savings Scheme) திட்டங்களில் முதலீடுகள் வெளியேறின. தங்க இடிஎஃப் (Gold ETF) திட்டங்களில் இருந்து ₹725 கோடி வெளியேறியது, இது நடப்பு ஆண்டில் தங்க இடிஎஃப்களில் பதிவான முதல் முதலீட்டு வெளியேற்றமாகும்.
சர்வதேசச் செய்திகள்
பல்கேரியா - பின்லாந்து பயணத்தில் ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது பல்கேரியா மற்றும் பின்லாந்து அரசுமுறைப் பயணத்தின்போது, பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடாது என்பதையும், இது போருக்கான யுகமல்ல என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினார். பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வேலிஸ்லாவா பெட்ரோவாவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உலகப் பாதுகாப்பு, பயங்கரவாதம், பொருளாதார பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி மீள்தன்மை மற்றும் கடல்சார் வர்த்தகம் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கரோனா பெருந்தொற்று சர்வதேச ஒருங்கிணைப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் எலினா வால்டோனெனை சந்தித்து வர்த்தகம், முதலீடு, செயற்கை நுண்ணறிவு, 6ஜி, செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், தூய எரிசக்தி மற்றும் விண்வெளித் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, எண்மமயமாக்கல் மற்றும் நிலையான வளர்ச்சி துறைகளில் இருநாட்டு உறவுகள் வியூக கூட்டுறவு (Strategic Partnership) அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டன.
பிரதமர் மோடியின் பிரான்ஸ் - ஸ்லோவாக்கியா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 13 முதல் 18 வரை, பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பிரான்சின் நைஸ் நகரில் அவர் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானை சந்தித்து பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ நிகழ்ச்சியையும் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து, ஜூன் 14 முதல் 16 வரை ஸ்லோவாக்கியா பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லகிரினி மற்றும் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், பிரான்சின் ஏவியான் நகரில் ஜூன் 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெறும் ஜி7 (G7) மாநாட்டில் பங்கேற்று ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கிறார். அதன்பின், ஜூன் 18 அன்று பாரிஸில் நடைபெறும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிறுவன மாநாடான ‘விவாடெக் (VivaTech)’ மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது மேற்காசியப் போர் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் மற்றும் எரிசக்தி விநியோகச் சிக்கல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேற்கு கரை யூதக் குடியேற்ற விரிவாக்கத் திட்டம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்தவும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இஸ்ரேல் அரசு 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி அமெரிக்க டாலர்) நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் முன்னெடுத்து வருகிறார். இந்த நிதி சாலைகள், குடிநீர் வசதிகள் மற்றும் பாதாள சாக்கடை அமைப்புகள் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில், சுமார் 27 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு மத்தியில் 7 லட்சம் யூதர்கள் வசித்து வருகின்றனர். இந்த யூதக் குடியேற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பெரும்பாலான நாடுகள் சட்டவிரோதமானவை என்று கருதுகின்றன. பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி பிரிட்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இந்தத் தடைகளுக்கு கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
கனடாவில் சிறார்களுக்கு சமூக ஊடகக் கட்டுப்பாடு
16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் புதிய சட்ட மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கனடாவின் கலாசார அமைச்சர் மார்க் மில்லர் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவின் கீழ், சமூக ஊடக தளங்கள் மட்டுமின்றி, சாட்ஜிபிடி (ChatGPT) உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்களும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட உள்ளன. மேலும், சிறார்களுக்கான போதிய பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தத் தடையில் இருந்து விலக்கு வழங்கப்படும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
விம்பிள்டன் 2026 பரிசுத் தொகை உயர்வு
டென்னிஸ் போட்டிகளின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் சாம்பியன்ஷிப், புல்தரைக் களத்தில் நடைபெறும் உலகின் மிகப் பழமையான கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும். இந்த ஆண்டுக்கான போட்டியின் மொத்த பரிசுத் தொகை 20 சதவீதம் உயர்த்தப்பட்டு ₹821 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன்கள் தலா ₹45.98 கோடி ரொக்கப் பரிசைப் பெறுவார்கள். ரன்னர்-அப் வீரர்கள் தலா ₹22 கோடி பெறுவார்கள். முதல் சுற்றிலேயே வெளியேறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ₹1 கோடி வழங்கப்படும். விம்பிள்டன் வரலாற்றில் ஒரே ஆண்டில் பரிசுத் தொகை 20 சதவீதம் உயர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். 2026-ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் போட்டி ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது.
23-ஆவது ஃபீஃபா உலகக் கோப்பை தொடக்கம்
23-ஆவது ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி, மெக்ஸிகோ சிட்டியில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்தத் தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன; போட்டிகள் 38 நாட்கள் நடைபெறுகின்றன. தொடக்க ஆட்டத்தில் மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன. போட்டியைக் காண அமெரிக்க நுழைவு இசைவு (விசா) மறுக்கப்பட்ட ஆர்ஜென்டீன ரசிகர்களுக்கு, ‘நியூசான்’ (Newsan) என்ற ஆர்ஜென்டீன நிறுவனம், முதல் 100 பேருக்கு இலவச தொலைக்காட்சி பெட்டிகளையும், அடுத்த 50 பேருக்கு 35 சதவீத தள்ளுபடியுடன் தொலைக்காட்சி பெட்டிகளையும் வழங்கியது.
பொருளாதாரச் செய்திகள்
வெளிநாடுவாழ் இந்தியர்களின் டாலர் வைப்புக்கு வட்டி உயர்வு
சிட்டி யூனியன் வங்கி, வெளிநாடுவாழ் இந்தியர்களின் (NRI) அமெரிக்க டாலர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 7.10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இது 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலவரம்பைக் கொண்ட அமெரிக்க டாலர் வைப்புகளுக்கு பொருந்தும். இந்த வைப்பு திட்டத்தின் கீழ் அசல் மற்றும் வட்டி இரண்டும் அந்நியச் செலாவணியிலேயே பராமரிக்கப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு அந்நியச் செலாவணி மாற்று விகித ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், அசல் மற்றும் வட்டித் தொகையை முழுமையாகத் தாயகத்துக்குத் திருப்பிக் கொள்ளும் வசதியும் இந்தத் திட்டத்தில் உள்ளது. இதனால், இது வெளிநாடுவாழ் இந்திய முதலீட்டாளர்களுக்கான நீண்டகால சேமிப்பு வாய்ப்பாக அமைந்துள்ளது.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
இணையவழி வர்த்தக தளங்களில் அமேஸான் முதலிடம்
டேட்டம் இன்டலிஜென்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, அமேஸான், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன், இந்தியாவின் மிகவும் நம்பகமான இணையவழி வர்த்தக தளமாக முதலிடம் பெற்றுள்ளது. அமேஸானின் மோசடித் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் விழிப்புணர்வு திட்டங்கள் இந்த நம்பிக்கைக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன. இந்த ஆய்வு, இந்திய இணையவழி வர்த்தகத் துறையில் ‘டார்க் பேட்டர்ன்’ (Dark Patterns) எனப்படும் மறைமுக ஏமாற்று நடைமுறைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. மறைமுகக் கட்டணங்கள் மற்றும் ஏமாற்று வடிவமைப்புகள் காரணமாக நுகர்வோர் ஆண்டுதோறும் ₹25,000 கோடி முதல் ₹28,000 கோடி வரை இழந்து வருகின்றனர். சுமார் 30.4 கோடி வாடிக்கையாளர்களில் 88 சதவீதத்தினர் இந்த மறைமுகக் கட்டணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 73 சதவீத இணையவழி வர்த்தக தளங்கள் வாடிக்கையாளர்களை நிர்ப்பந்திக்கும் வடிவமைப்புகளையும், 69 சதவீத தளங்கள் இறுதிக் கட்டத்தில் கூடுதல் கட்டணங்களைச் சேர்க்கும் முறையையும் பின்பற்றுகின்றன. இந்த ஏமாற்று நடைமுறைகளால் நுகர்வோர் செலவினங்களைக் குறைத்து வருவதால், சுமார் ₹55,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 13-06-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11-06-2026
சமகால இணைப்புகள்
Wed Jul 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
Tue Jul 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
Wed Jul 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
Tue Jul 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
Sat Jul 18 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
Thu Jul 16 2026