TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-05-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-05-2026
மாநிலச் செய்திகள்
வி.டி.சதீசன் கேரள முதல்வர்
வி.டி.சதீசன் கேரள முதல்வராக மே 18, 2026 அன்று திருவனந்தபுரத்தில் பதவியேற்கிறார். அவருடன் 20 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் கர்நாடகா, தெலங்கானா, ஹிமாசல பிரதேசம் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் ஏப்ரல் 6, 2026 அன்று நடைபெற்றது; முடிவுகள் மே 4, 2026 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 63 இடங்களில் வென்றது. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) 35 இடங்களும், பாஜக 1 இடமும் பெற்றது. முதல்வர் பதவிக்கான போட்டியில் வி.டி.சதீசன், கே.சி.வேணுகோபால், மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே போட்டி நிலவிய நிலையில், மே 14, 2026 அன்று சதீசன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். புதிய அமைச்சரவையில் ரமேஷ் சென்னிதலா, கே.முரளிதரன், சன்னி ஜோசப், ஏ.பி.அனில் குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில் பி.கே.குஞ்சாலிகுட்டி, என்.ஷம்சுதீன், கே.எம்.ஷாஜி, பி.கே.பஷீர், வி.இ.அப்துல் கபூர் ஆகியோர் அமைச்சரவையில் உள்ளனர். கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (RSP) மற்றும் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி (CMP) ஆகியவற்றிற்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்பட உள்ளார். தேர்தலின்போது பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.
தேசியச் செய்திகள்
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்வு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு மே 17, 2026 அன்று ஒப்புதல் அளித்தார். தற்போது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை மே 5, 2026 அன்று ஒப்புதல் அளித்தது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மேலும் 4 புதிய நீதிபதி பணியிடங்களை உருவாக்கும் திருத்த மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். உச்சநீதிமன்ற சட்டம் (நீதிபதிகள் எண்ணிக்கை), 1956 படி, தலைமை நீதிபதியைத் தவிர்த்து பிற நீதிபதிகளின் எண்ணிக்கை ஆரம்பத்தில் 10 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது 1960 இல் 13 ஆகவும், தொடர்ந்து 17 ஆகவும், 1986 இல் 25 ஆகவும், 2009 இல் 30 ஆகவும், 2019 இல் 34 ஆகவும் உயர்த்தப்பட்டது. தற்போது புதிய ஒப்புதலின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்வு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு மே 17, 2026 அன்று ஒப்புதல் அளித்தார். தற்போது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை மே 5, 2026 அன்று ஒப்புதல் அளித்தது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மேலும் 4 புதிய நீதிபதி பணியிடங்களை உருவாக்கும் திருத்த மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். உச்சநீதிமன்ற சட்டம் (நீதிபதிகள் எண்ணிக்கை), 1956 படி, தலைமை நீதிபதியைத் தவிர்த்து பிற நீதிபதிகளின் எண்ணிக்கை ஆரம்பத்தில் 10 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது 1960 இல் 13 ஆகவும், தொடர்ந்து 17 ஆகவும், 1986 இல் 25 ஆகவும், 2009 இல் 30 ஆகவும், 2019 இல் 34 ஆகவும் உயர்த்தப்பட்டது. தற்போது புதிய ஒப்புதலின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிப்பு மையம் அமைக்கும் ஐசிஇஒய்இ
சர்வதேச செயற்கைக்கோள் நிறுவனமான ஐசிஇஒய்இ (ICEYE), இந்தியாவில் தனது முதல் செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் உலகின் முன்னேற்றமான செயற்கை துளை ரேடார் (SAR) செயற்கைக்கோள் தொகுப்பை கொண்டுள்ளது. மேலும், செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிப்பு, உளவு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு சேவைகள் வழங்கி வருகிறது. ஐசிஇஒய்இ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரஃபல் மோட்ரெவ்ஸ்கி தெரிவித்ததன்படி, இந்த மையத்தில் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாடுகளுக்கான சிறிய செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட உள்ளன. முதல் ஆண்டில் சுமார் 10 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படவுள்ள நிலையில், பின்னர் ஆண்டுதோறும் 20 முதல் 40 செயற்கைக்கோள்கள் வரை உற்பத்தி அதிகரிக்கப்படும். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் சேர்த்து, இந்தியா ஐசிஇஒய்இ நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தயாரிப்பு மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்கள் உள்நாட்டு தேவைகளுக்கும் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சி-295 விமானம் சோதனைக்கு தயார்
குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள டாடா-ஏர்பஸ் மையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் ஏர்பஸ் சி-295 போக்குவரத்து விமானம், இந்திய விமானப்படை பயன்பாட்டிற்காக சோதனைக்கு தயாராகியுள்ளது. இந்த சி-295 விமானம், வீரர்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் சென்ற அவ்ரோ-748 விமானங்களுக்கு மாற்றாக சேர்க்கப்படுகிறது. இந்த விமானத்தில் 70 வீரர்கள் பயணிக்க முடியும் மற்றும் ராணுவத் தளவாடங்களையும் எடுத்துச் செல்ல முடியும். மேலும், இது குறுகிய ஓடுதளங்களில் இயக்கப்படக்கூடியது. இந்தியா, 56 சி-295 விமானங்களை கொள்முதல் செய்ய ஸ்பெயின் நாட்டுடன் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து வாங்கப்படுகின்றன; மீதமுள்ள 40 விமானங்கள், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் டாடா-ஏர்பஸ் கூட்டுத் திட்டம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்த உற்பத்தி மையத்தை 2024 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தொடங்கி வைத்தனர். இந்த விமானத்தின் வடிவமைப்பில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இதில் 13,000-க்கும் மேற்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு 37 இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பாகங்களை வழங்கியுள்ளன. இந்திய விமானப்படையின் துணை தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி சமீபத்தில் இந்த விமானத்தை பார்வையிட்டார்.
தமிழ்நாடு செய்திகள்
தானியங்கி மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை
தமிழ்நாடு மின்வாரியம், மின் நுகர்வோருக்கான தானியங்கி மின் கட்டண செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கான மின் பயன்பாடு தற்போது இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. கணக்கெடுக்கப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. புதிய ‘இ.பி. ஆட்டோ பே’ வசதியின் மூலம், மின் கட்டணத் தொகை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுத்துக்கொள்ளப்படும். இந்த வசதியை பெற நுகர்வோர் www.tnpdcl.org என்ற இணையதளத்தில் உள்ள பணம் செலுத்தும் பிரிவில் ‘இ.பி. ஆட்டோ பே’ தேர்வை பயன்படுத்தி, மின் இணைப்பு எண், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் மற்றும் வங்கி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த முறையின் கீழ், மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட நாளிலிருந்து 10-ஆவது நாளில் மின் கட்டணம் தானாகவே வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும். இந்த வசதி வீடுகள் உட்பட தாழ்வழுத்த (LT) பிரிவு மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேசச் செய்திகள்
இந்தியா - நெதர்லாந்து ஒப்பந்தங்கள்
இந்தியா மற்றும் நெதர்லாந்து நாடுகள் இடையே மே 17, 2026 அன்று தி ஹேக் நகரில் 17 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே முன்னிலையில் நடைபெற்றன. இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், வர்த்தகம், முதலீடு, கடல்சார் மேம்பாடு, அறிவியல் மற்றும் புத்தாக்கம், செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங், விண்வெளி, சுகாதாரம், நீர்வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு, சுங்கவரி, கல்வி, கலாசாரம், மற்றும் இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கையொப்பமிடப்பட்டன. இருநாடுகளின் கூட்டு அறிக்கையில் ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்ட அடிப்படையில் உக்ரைனில் அமைதி நிலைநாட்டும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 2025-2026 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் வேட்புமனுவுக்கு நெதர்லாந்து ஆதரவு தெரிவித்தது. 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு வர்த்தகம் 27.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டியது. நெதர்லாந்து, ஐரோப்பாவில் இந்தியாவின் 4-வது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி ஆகும்.
இந்தியாவின் 35% ஏற்றுமதி வட அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025-26 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 35 சதவீதம் வட அமெரிக்கா, வடகிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட அமெரிக்கா நோக்கிய ஏற்றுமதி 22.1 சதவீதம் ஆக இருந்து, அதன் மதிப்பு ரூ.9.2 லட்சம் கோடி (97.7 பில்லியன் அமெரிக்க டாலர்) என பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 1.3 சதவீதம் அதிகமாகும். வடகிழக்கு ஆசியா நோக்கிய ஏற்றுமதி ரூ.3.9 லட்சம் கோடி (41.6 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆக இருந்து, மொத்த ஏற்றுமதியில் 9.4 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21.6 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இந்திய மின்னணுப் பொருட்கள், பொறியியல் சாதனங்கள், ரசாயனங்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் மீதான தேவை அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். இந்தப் பிராந்தியத்தில் சீனா, தென் கொரியா, வடகொரியா, ஜப்பான், மங்கோலியா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. லத்தீன் அமெரிக்கா நோக்கிய ஏற்றுமதி ரூ.1.5 லட்சம் கோடி (16.4 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆக இருந்து, 3.7 சதவீத பங்கையும், 7.8 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.41.8 லட்சம் கோடி (441.78 பில்லியன் அமெரிக்க டாலர்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எபோலா பரவலை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த WHO
உலக சுகாதார அமைப்பு (WHO), காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியசஸ் வெளியிட்டார். தற்போது பரவி வரும் எபோலா வைரஸ், அரிய வகையான பண்டியபக்யோ (Bundibugyo) வைரஸ் திரிபு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது மருந்து இல்லை. இந்த பண்டியபக்யோ வைரஸ், முதன்முதலில் 2007-08 ஆம் ஆண்டில் உகாண்டாவின் பண்டியபக்யோ மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. அப்போது 149 பேர் பாதிக்கப்பட்டு, 37 பேர் உயிரிழந்தனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு காங்கோவில் பரவியபோது 59 பேர் பாதிக்கப்பட்டு, 29 பேர் உயிரிழந்தனர். WHO மூத்த அதிகாரி ஜியன் கேசியா தெரிவித்ததன்படி, இந்த வைரஸ் பரவல் மே 5 அன்று கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு முன்பே 50 உயிரிழப்புகள், அதில் 4 சுகாதார ஊழியர்கள் உட்பட, பதிவாகியிருந்தன.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
பிரதமர் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான “தி ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார் – டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்” விருது வழங்கப்பட்டது. இது பிரதமர் மோடி பெற்ற 31-ஆவது சர்வதேச விருது ஆகும். நெதர்லாந்து பயணத்தை முடித்த பின்னர் அவர் ஸ்வீடன் சென்றடைந்தார். கோதன்பர்க் விமான நிலையத்தில் அவரை ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்ஸன் வரவேற்றார். ஸ்வீடன் பயணத்திற்குப் பிறகு அவர் நார்வே மற்றும் இத்தாலி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். நெதர்லாந்திலிருந்து புறப்பட்டபோது, அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்ததன்படி, இந்தியா–ஸ்வீடன் இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக, ஸ்வீடன் இளவரசி விக்டோரியா இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
விளையாட்டுச் செய்திகள்
தாய்லாந்து ஓபனில் சாத்விக்-சிராக் வெள்ளி
இந்தியாவின் சாத்விக்ஸாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, தாய்லாந்து ஓபன் 2026 பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது. உலகின் 4-ஆம் நிலை ஜோடியாக உள்ள இந்த இந்திய இணை, இறுதிப்போட்டியில் இந்தோனேஷியாவின் லியோ ராலி கார்னான்டோ மற்றும் டேனியல் மார்ட்டின் இணையிடம் 12-21, 23-25 என்ற நேர் கேம்களில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டம் 53 நிமிடங்கள் நடைபெற்றது. சாம்பியனான இந்தோனேஷிய இணைக்கு ரூ.37.90 லட்சம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய இணைக்கு ரூ.18.23 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதர பிரிவுகளில், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தையும், ஜப்பானின் அகேன் யமகுச்சி மகளிர் ஒற்றையர் பட்டத்தையும், சீனாவின் பாவ் லி ஜிங்/காவ் ஜி ஹான் இணை மகளிர் இரட்டையர் பட்டத்தையும், டென்மார்க்கின் மத்தியாஸ் கிறிஸ்டியன்சென்/அலெக்ஸாண்டிரா போஜே இணை கலப்பு இரட்டையர் பட்டத்தையும் வென்றனர்.
இத்தாலியன் ஓபனில் எலினா ஸ்விடோலினா சாம்பியன்
உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, இத்தாலியன் ஓபன் 2026 டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் வீராங்கனையை 6-4, 6-7 (3/7), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் ஸ்விடோலினா, 2017 மற்றும் 2018 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தாலியன் ஓபனில் 3-ஆவது முறையாக சாம்பியன் ஆனார். அவர் 1,000 டபிள்யூடிஏ தரவரிசைப் புள்ளிகள் மற்றும் ரூ.11.64 கோடி பரிசுத் தொகை பெற்றார். இரண்டாம் இடம் பெற்ற கோகோ கௌஃப் 650 தரவரிசைப் புள்ளிகள் மற்றும் ரூ.6 கோடி பரிசு பெற்றார். 31 வயதில், டபிள்யூடிஏ 1000 தொடரில் 3 முறை பட்டம் வென்ற வயதான வீராங்கனை என்ற சாதனையை ஸ்விடோலினா படைத்தார். மேலும், ஓபன் எராவில் 20 டபிள்யூடிஏ பட்டங்கள் வென்ற முதல் உக்ரைன் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இத்தாலியின் சைமன் பொலெலி / ஆண்ட்ரியா வவாசோரி இணையும், மகளிர் இரட்டையரில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் / மிரா ஆண்ட்ரீவா இணையும் சாம்பியன் பட்டம் வென்றன.
தினசரி TNPSC நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா மூலம் ரேங்க் உயர்த்துங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 19-05-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17-05-2026
சமகால இணைப்புகள்
Wed Jul 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
Tue Jul 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
Wed Jul 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
Tue Jul 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
Sat Jul 18 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
Thu Jul 16 2026