TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15-05-2026

Trending TNPSC

By

8 min read ·

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15-05-2026

தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தின் புதிய தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்றார். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தமிழக அரசு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை புதிய தலைமை வழக்கறிஞராக நியமித்தது. இவர் ஏற்கனவே 2017 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார். விஜய் நாராயண் தனது பள்ளிப் படிப்பை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முடித்தார். அவர் சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பையும், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்துள்ளார். இவர் பிரபல வழக்கறிஞர் எம்.கே. நம்பியார் மற்றும் வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கர் ஆகியோரின் பேரன் ஆவார். மேலும், முன்னாள் இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் நெருங்கிய உறவினராக உள்ளார். விஜய் நாராயண், இந்திய சட்ட நிறுவனத்தின் சென்னை மண்டல செயற்குழு உறுப்பினர், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். தற்போது அவர் திருச்சி தேசிய சட்டப் பள்ளியின் பொதுக்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

சேலத்தில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் சேலத்தில் மே 14-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி தொடங்கி வைத்தார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தத் திட்டத்தை தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்திருந்தார். இந்த சிறப்பு அதிரடிப்படை, மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையிலும், சூரமங்கலம் சரக உதவி ஆணையர் ராமலட்சுமியின் கண்காணிப்பிலும் செயல்படுகிறது. இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக் காவலர்கள் உட்பட 4 பேர் கொண்ட குழு இடம்பெற்றுள்ளது. இந்தப்படைக்கு நான்கு சக்கர வாகனம், கேமரா மற்றும் தேவையான சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குற்றச்செயல்கள் நடைபெறக்கூடிய இடங்களை கண்காணித்தல், பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்குதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது, பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி உதவி வழங்குவது போன்ற பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.

தேசியச் செய்திகள்

இந்திய வேளாண் ஸ்டார்ட் அப்புகளில் ஐ.எப்.ஏ.டி முதலீடு

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அமைப்பான வேளாண் வளர்ச்சிக்கான சர்வதேச நிதி மையம் (IFAD), இந்தியாவின் வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக அடுத்த ஆண்டில் 4 முதல் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. IFAD அமைப்பு 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட வேளாண் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய தனியார் வேளாண் துறையில் முதல் முறையாக செயல்படுவதற்காக 2026–2033 வரைவு திட்டத்தை IFAD உருவாக்கியுள்ளது. அமைப்பின் துணைத் தலைவர் டொனால் பிரவுன், புதிய கொள்கை சீர்திருத்தங்களின் அடிப்படையில் அரசு நிறுவனங்களுடன் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்திய வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் 110 ஆஸ்பிரேஷனல் மாவட்டங்கள் திட்டத்துடன் IFAD இணைந்து செயல்பட உள்ளது. மேலும், நபார்டு (NABARD) அமைப்பும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. சிறு விவசாயிகளுக்காக தானிய சேமிப்பு கிடங்குகள், உணவு பதப்படுத்துதல் கூடங்கள், கூட்டுறவு சங்கங்கள் அமைத்தல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு தகுந்த பயிர்கள் மற்றும் சிறுதானிய சாகுபடிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்களையும் IFAD செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

உள்நாட்டில் சர்க்கரை தட்டுப்பாட்டை சமாளிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதிக்கு 2026 செப்டம்பர் 30 வரை தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு சர்க்கரை ஏற்றுமதி ‘கட்டுப்படுத்தப்பட்ட’ (Restricted) பிரிவின் கீழ் இருந்ததால், ஏற்றுமதிக்கு மத்திய அரசின் உரிமம் பெறுவது கட்டாயமாக இருந்தது. மே 13 அன்று வெளியிடப்பட்ட வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் (DGFT) அறிவிப்பின்படி, கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, 2026 செப்டம்பர் 30 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு வழங்கப்படும் CXL மற்றும் TRQ ஒதுக்கீட்டு சர்க்கரை ஏற்றுமதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே அனுமதி பெற்ற திட்டங்கள் மற்றும் அரசு ஒப்பந்தங்களின் கீழ் நடைபெறும் ஏற்றுமதிக்கும் இந்தத் தடை பொருந்தாது.

16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.எஸ்.ஆர் பணிகள்

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SSR) மே 30 முதல் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்டமாக மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கோவா, அஸ்ஸாம், பிகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக எஸ்.எஸ்.ஆர் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக டெல்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், உத்தரகண்ட், சண்டிகர், தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகம், மேகாலயா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், நாகாலாந்து, திரிபுரா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தமன் மற்றும் தியூ பகுதிகளில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளில் 3.94 லட்சம் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLOs) ஈடுபட்டு, 36.73 கோடி வாக்காளர்களை வீடு தோறும் சென்று சரிபார்க்க உள்ளனர். ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கான எஸ்.எஸ்.ஆர் பணிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில், 9.86 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள நிலையில், BLOக்களுக்கு ஜூன் 20 முதல் 29 வரை பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை களப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாநிலச் செய்திகள்

மிசோரம் இஞ்சி இயக்கம் தொடக்கம்

மத்திய அரசு, மிசோரம் மாநிலத்தில் இஞ்சி சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட இஞ்சி தயாரிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் ரூ.189.79 கோடி மதிப்பிலான ‘மிசோரம் இஞ்சி இயக்கம்’ திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மிசோரம் முதல்வர் லால்டுஹோமா ஆகியோர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர். மிசோரம் மாநிலத்தில் உற்பத்தியாகும் இஞ்சியில் 6 முதல் 8 சதவீதம் ஒலியோ ரெசின் சத்து உள்ளது. இது உலக சராசரியான 3 சதவீதத்தை விட அதிகமாகும். விவசாயிகளுக்கு நேரடி பலன் கிடைக்கச் செய்து, இடைத்தரகர்களை நீக்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கேரள முதல்வராக வி.டி. சதீஷன் தேர்வு

காங்கிரஸ் மேலிடம், வி.டி. சதீஷனை கேரள காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் அவர் விரைவில் கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றது. முதல்வர் தேர்வு தொடர்பாக திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆலோசனை நடத்தினர். முதல்வர் பதவிக்கான போட்டியில் ரமேஷ் சென்னிதலா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைமையிடம் ஒப்படைக்கும் ஒருவரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வி.டி. சதீஷன் தேர்வு செய்யப்பட்ட தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், அஜய் மக்கான், மற்றும் தீபா தாஸ் முன்ஷி டெல்லியில் அறிவித்தனர். அவர் வரும் 18-ம் தேதி கேரளாவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

வூஷூ உலகக் கோப்பையில் அபர்ணா தங்கம் வெற்றி

சீனாவில் நடைபெற்ற 11-ஆவது வூஷூ உலகக் கோப்பை போட்டியில், இந்தியாவின் அபர்ணா, மகளிருக்கான 52 கிலோ சண்டா பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில், நடப்பு உலக சாம்பியனான வியத்நாம் வீராங்கனை தி புவோங் காவை நேர் செட்களில் தோற்கடித்தார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அபர்ணா, இதே தி புவோங் காவிடம் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பளுதூக்குதல் போட்டியில் அஜித்துக்கு வெண்கலம்

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அஜித் நாராயணா, ஆடவர் 71 கிலோ பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 174 கிலோ என மொத்தம் 314 கிலோ எடையைத் தூக்கி மொத்தப் பிரிவில் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் தனியாக ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் வட கொரியாவின் வோன் ஜுரி, 351 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஜியன் சென், 335 கிலோ எடையுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக மகளிர் பிரிவில் கோமல் கோஹர் வெண்கலமும், ஞானேஸ்வரி வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

பிஎஸ்ஜி 14-ஆவது முறையாக சாம்பியன்

Paris Saint-Germain அணி, பிரான்ஸ் லீக் 1 கால்பந்து தொடரில் 14-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பியைத் தக்கவைத்துக் கொண்டது. மேலும், இந்த அணி தொடர்ந்து 5-ஆவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. RC Lens அணிக்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்காக Khvicha Kvaratskhelia மற்றும் Ibrahim Baye ஆகியோர் கோல்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் பிஎஸ்ஜி அணி 76 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் பட்டத்தை வென்றது. RC Lens அணி 67 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டி முதலில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், பிஎஸ்ஜி அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்றதால் பின்னர் நடத்தப்பட்டது.

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 9 தங்கம்

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கெண்டில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் (யு-15, யு-17) இந்தியா மொத்தம் 27 பதக்கங்கள் வென்றது. இதில் 9 தங்கம், 6 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். யு-15 மகளிர் பிரிவில், அன்ஸீ (37 கிலோ), சோனியா (40 கிலோ), தன்வி (43 கிலோ), ஹன்சிகா அத்ரி (46 கிலோ), சுனைனா (58 கிலோ), பூமிகா (61 கிலோ), ஏஞ்செல் (70 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். அக்ஷிதா (33 கிலோ) மற்றும் தன்வி (64 கிலோ) வெள்ளிப் பதக்கம் பெற்றனர். மகளிர் பிரிவில் இந்தியா மேலும் 5 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. யு-15 ஆடவர் பிரிவில், யஷ் குமார் (33 கிலோ) மற்றும் முகமது யாசர் (58 கிலோ) தங்கப் பதக்கம் வென்றனர். சாஸ்தா வசந்த் அசோக் குமார் (37 கிலோ), சமீர் போரா (43 கிலோ), சுதர்சன் வாசுதேவ் சந்தக் (52 கிலோ), ரோனக் பராக் லோகண்டே (67 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இந்தியா ஆடவர் பிரிவில் மேலும் 7 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியது.

வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16-05-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 14-05-2026

சமகால இணைப்புகள்