TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 14-11-2026
சர்வதேசச் செய்திகள்
இலங்கைக்கு இந்தியா நிதியுதவி
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்காக இந்தியா 22.5 கோடி இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் ₹6.40 கோடி) நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, ஏழு நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கையின் தலைநகரான கொழும்பு சென்றார். அங்கு இலங்கை சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்தார். மேலும், இலங்கையின் அவசரகால மருத்துவச் சேவையை வலுப்படுத்துவதற்காக 52.8 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ₹50 கோடி) நிதியுதவியுடன் கூடுதலாக 100 ஆம்புலன்ஸ்கள் வழங்க இந்தியா மற்றும் இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 2025 நவம்பரில் ஏற்பட்ட டித்வா புயலால் இலங்கையில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு செய்திகள்
நெல், அரிசி, துவரை, உளுந்து சேமிப்புக்கு தமிழக அரசு கட்டுப்பாடு
நெல், அரிசி, துவரை மற்றும் உளுந்து ஆகிய அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு மற்றும் சேமிப்புக்கு தமிழக அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு நெல்/அரிசி (கையிருப்பு வரம்பு) கட்டுப்பாட்டு ஆணை, 2026-இன்படி, இக்கட்டுப்பாடுகள் 2027 ஜனவரி 31 வரை அமலில் இருக்கும். மொத்த வியாபாரிகள் அதிகபட்சம் 2,000 டன் வரையிலும், சில்லறை வியாபாரிகள் ஒரு கடைக்கு 8 டன் வரையிலும் நெல் அல்லது அரிசி இருப்பு வைக்கலாம். ஆலை உரிமையாளர்கள் ஒரு மாத உற்பத்தித் திறனுக்கு இணையான அளவு வரை இருப்பு வைக்கலாம். இறக்குமதியாளர்கள் சுங்க அனுமதி பெற்ற பிறகு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை 45 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்க முடியாது. மேலும், தமிழ்நாடு துவரை மற்றும் உளுந்து பருப்புகள் (சேமிப்புக் கட்டுப்பாடு) ஆணை, 2026 நவம்பர் 13 முதல் மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். இதன்படி, ஒவ்வொரு பருப்பு வகையிலும் மொத்த வியாபாரிகள் 200 டன் வரையிலும், சில்லறை வியாபாரிகள் 5 டன் வரையிலும் இருப்பு வைக்கலாம். பருப்பு ஆலை உரிமையாளர்களுக்கு கடந்த மூன்று மாத உற்பத்தி அல்லது ஆண்டு நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 25 சதவீதம் ஆகியவற்றில் எது அதிகமோ அது இருப்பு வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் சுங்க அனுமதி பெற்ற 45 நாட்களுக்கு மேல் துவரை மற்றும் உளுந்தை இருப்பு வைக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள் நவம்பர் 16-க்குள் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பைக் குறைக்க வேண்டும். மேலும், இருப்பு விவரங்களை நுகர்வோர் விவகாரங்கள் துறையின் இணையதளத்தில் அறிவித்து, தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். இவ்விரு ஆணைகளும் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம், 1955-இன் கீழ், தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.
தேசியச் செய்திகள்
இந்திய குடியுரிமைக்கான ஆதாரங்கள் – குவாஹாட்டி உயர்நீதிமன்றம்
பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இந்திய குடியுரிமையை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் அல்ல என்று அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் தராங் மாவட்டத்தைச் சேர்ந்த குல்சன் பேகம் என்பவரை வெளிநாட்டவர் என வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அறிவித்ததை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கல்யாண் ராய் சுரானா மற்றும் சுஸ்மிதா புகன் கௌண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்களின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், குடும்ப உறவுகளை நிரூபிக்க வாக்காளர் பட்டியல், குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் தொடர்புகள் மட்டுமே போதுமானவை அல்ல என்றும் குறிப்பிட்டது. மனுதாரரின் தாத்தா, பாட்டி மற்றும் தந்தை ஆகியோர் 1970 முதல் 1997 வரை அஸ்ஸாமில் தொடர்ந்து வசித்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், அவரது குடியுரிமை மற்றும் குடும்ப உறவுகளை நிரூபிக்கத் தவறியதாகக் கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேசிய விளையாட்டு வாரியத் தலைவராக தேவேஷ் சதுர்வேதி நியமனம்
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவேஷ் சதுர்வேதி, தேசிய விளையாட்டு வாரியத்தின் (NSB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1989-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் 2024 ஆகஸ்ட் முதல் 2025 பிப்ரவரி வரை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைச் செயலராகப் பணியாற்றினார். ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் (Target Olympic Podium Scheme – TOPS) தலைமைச் செயல் அதிகாரியான பி.கே. கர்க், தேசிய விளையாட்டு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவைச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையிலான தேடுதல் மற்றும் தேர்வுக் குழு இந்நியமனங்களை உறுதி செய்தது. தலைவர் மற்றும் உறுப்பினர் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பர். தேசிய விளையாட்டு வாரியம், தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அந்த அங்கீகாரத்தை ரத்து செய்தல் ஆகிய அதிகாரங்களைக் கொண்டுள்ளது. மேலும், விளையாட்டு நிர்வாகம் தொடர்பாக சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.
100 கி.மீ. மெட்ரோ வலையமைப்பில் இணைந்த பெங்களூரு
பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு மெட்ரோவின் பிங்க் வழித்தடத்தில் காளேன அக்ரஹாரா முதல் எஸ்.ஜி. பாளையா வரை அமைக்கப்பட்ட 7.5 கி.மீ. உயர்மட்ட மெட்ரோ பாதையை நவம்பர் 13 அன்று திறந்து வைத்தார். இதன் மூலம் பெங்களூருவின் செயல்பாட்டிலுள்ள மெட்ரோ ரயில் வலையமைப்பு 103 கி.மீ. ஆக உயர்ந்தது. இதனால் டெல்லி-என்சிஆர் (416 கி.மீ.) பகுதிக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்ட நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது. 101 கி.மீ. மெட்ரோ வலையமைப்புடன் மும்பை மூன்றாவது இடத்தில் உள்ளது. 100 கி.மீ. மெட்ரோ வலையமைப்பைக் கடந்த நாட்டின் மூன்றாவது நகரமாக பெங்களூரு திகழ்கிறது. புதிய பாதையில் நவம்பர் 14 முதல் பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் (BMRCL) வணிக ரீதியான சேவையைத் தொடங்கியது. மேலும், பிரதமர் பெங்களூரு–மங்களூரு–மட்காவ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், நம்ம மெட்ரோ திட்டத்திற்கான நிதிச் செலவில் மத்திய, மாநில அரசுகளிடையே நியாயமான பங்கீடு இருக்க வேண்டும் என்றும், திட்ட ஒப்புதலில் ஏற்படும் தாமதங்களால் அதிகரிக்கும் செலவுகளை இரு அரசுகளும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு யூரியா துறையில் சிஏஜி தணிக்கை
இந்திய கணக்குத் தணிக்கைத் தலைவர் (CAG), 15 ஆண்டுகளுக்குப் பிறகு யூரியா துறையில் தணிக்கையைத் தொடங்கியுள்ளது. யூரியா தேவை மதிப்பீடு, விற்பனை விவரங்கள், உர மானியத்தின் செயல்திறன் மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் யூரியா வேளாண்மை அல்லாத பயன்பாடுகளுக்குத் திசைதிருப்பப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும். 2026 ஜூன் மாதம், 15 மாநிலங்களில் உள்ள 169 மாவட்டங்களில் இந்தத் தணிக்கை தொடங்கப்பட்டது. இது 2027-ஆம் ஆண்டு நிறைவடைந்த பின்னர் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். தேவை மதிப்பீடு மற்றும் மானியச் செயல்திறன், ஒருங்கிணைந்த உர மேலாண்மை அமைப்பு (iFMS), உள்நாட்டு யூரியா உற்பத்தி, இறக்குமதி, உரப் போக்குவரத்து மற்றும் உரக் கட்டுப்பாட்டு ஆணை, 1985 ஆகிய ஆறு முக்கியப் பகுதிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. உரத் துறையின் முந்தைய விரிவான தணிக்கை 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. ஒரு 45 கிலோ யூரியா மூட்டையின் சில்லறை விலை ₹266.50 ஆகும்; இது பத்தாண்டுகளுக்கும் மேலாக மாற்றமின்றி உள்ளது. இந்தியாவின் யூரியா இறக்குமதி 2025-26-ஆம் ஆண்டில் 103.5 லட்சம் டன்னாக உயர்ந்தது; இது முந்தைய ஆண்டைவிட 85 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டு யூரியா உற்பத்தி 4 சதவீதம் குறைந்து 293.26 லட்சம் டன்னாகவும், நுகர்வு 2 சதவீதம் அதிகரித்து 396.6 லட்சம் டன்னாகவும் இருந்தது. யூரியா மானியம் 2025-26-ஆம் ஆண்டில் ₹1.42 லட்சம் கோடியாக உயர்ந்தது. மத்திய அரசின் மொத்த உர மானியம் அதே நிதியாண்டில் ₹2.17 லட்சம் கோடியாக இருந்தது. இந்தியா உலக அளவில் உரங்களை அதிகம் நுகரும் நாடுகளில் இரண்டாவது இடத்திலும், உரங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் மறைவு
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் 13 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை அருகிலுள்ள கருநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர். 1983-ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்தார். 2009 மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016 மார்ச் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். நீதிபதிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2020-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகத் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர் சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, 2017 ஜூன் 21-ஆம் தேதி பணி ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பிறகு 2018-ஆம் ஆண்டு அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான கருநத்தம் கிராமத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
தேசிய விளையாட்டு விருதுகள் 2025 வழங்கல்
2025-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நவம்பர் 13 அன்று புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார். மொத்தம் 17 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இவர்களில் தேஜஸ்வின் சங்கர், முகமது அஜ்மல், பிரியங்கா கோஸ்வாமி (தடகளம்), ராஜ்குமார் பால், லால்ரெம்சியாமி (ஹாக்கி), சுர்ஜீத், பூஜா (கபடி), திவ்யா தேஷ்முக், விதித் குஜராத்தி (செஸ்), டிரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் (பேட்மிண்டன்), நரேந்தர் பர்வால் (குத்துச்சண்டை), தனுஷ் ஸ்ரீகாந்த் (செவித்திறன் மாற்றுத்திறனாளி துப்பாக்கிச் சுடுதல்), ருத்ரான்ஷ் கண்டேல்வால் (பாரா துப்பாக்கிச் சுடுதல்), ஏக்தா அபியான் (பாரா தடகளம்), அரவிந்த் சிங் (படகோட்டம்), அகில் சோரன் (துப்பாக்கிச் சுடுதல்) ஆகியோர் அடங்குவர். கால்பந்து துறையில் வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது ஐ. அருமைநாயகத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது பர்வீர் சிங் (தடகளம்), சோட் லால் யாதவ் (குத்துச்சண்டை), நேஹா சவான் (துப்பாக்கிச் சுடுதல்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சார்யா விருது தர்மேந்திர யாதவ் (குத்துச்சண்டை) மற்றும் வீரேந்தர் குமார் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் விளையாட்டுத் துறைச் செயலர் ஹரிரஞ்சன் ராவ் ஆகியோர் பங்கேற்றனர். 2025-ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படவில்லை.
பொருளாதாரச் செய்திகள்
பேடிஎம் வாலட் சேவைக்கு ரிசர்வ் வங்கி பூர்வாங்க அனுமதி
பேடிஎம் பேமென்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (PPSL) நிறுவனம் மீண்டும் முன்கூட்டியே பணம் செலுத்திப் பயன்படுத்தும் எண்ம வாலட் சேவையை இயக்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கொள்கை அளவிலான பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளது. பேடிஎம் வாலட் சேவை 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2017-ஆம் ஆண்டு பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு மாற்றப்பட்டது. விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும், 2024 ஜனவரி மாதம் வாலட் கணக்குகளில் புதிதாகப் பணம் செலுத்தவும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. தொடர்ந்து, 2025 ஏப்ரல் மாதம் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. 2025 ஜூலை மாதம், தில்லி உயர்நீதிமன்றம் அந்த வங்கியைக் கலைக்க உத்தரவிட்டது. பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முழு துணை நிறுவனமாக PPSL செயல்படுகிறது. வாலட் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட கணினி அமைப்புத் தணிக்கையை மேற்கொள்ள வேண்டும். தணிக்கைக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் இறுதி அனுமதி மற்றும் அங்கீகாரச் சான்றிதழ் பெற்ற பின்னரே வாலட் சேவையைத் தொடங்க முடியும்.
சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநராக ஜி. சங்கரன் நியமனம்
சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநராக (Executive Director) ஜி. சங்கரனை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது. இவர் தற்போது அந்த வங்கியின் செயல் தலைவராக (Executive President) பணியாற்றி வருகிறார். புதிய பொறுப்பை ஏற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார். வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்த பின்னர், இந்நியமனம் குறித்த தகவல் பங்குச் சந்தைகளுக்கு செபி (SEBI) விதிமுறைகளின்படி தெரிவிக்கப்படும்.
ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ.வாக பிரதாப் சிங் நியமனம்
ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியின் (FPB) மேலாண் இயக்குநர் (MD) மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பிரதாப் சிங் நியமிக்கப்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனம் 2026 நவம்பர் 27 முதல் அல்லது அவர் பொறுப்பேற்கும் நாள் முதல், இவற்றில் எது முந்தையதோ அன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இவர் இந்தியா மற்றும் பிரிட்டனில் 29 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் கொண்டவர். ஐசிஐசிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி யுகே மற்றும் எஸ்பிஐ யுகே ஆகிய நிதி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். சில்லறை வங்கிச் சேவை, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான வங்கிச் சேவை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் வங்கி செயல்பாடுகள் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றவர்.
டார்பிடோ தயாரிப்பில் இத்தாலியின் WASS நிறுவனத்துடன் பாரத் டைனமிக்ஸ் ஒப்பந்தம்
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், இந்தியக் கடற்படைக்கான அதிநவீன டார்பிடோக்களை கூட்டாக உற்பத்தி செய்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த ஒயிட்ஹெட் அலேனியா சிஸ்டெமி சுபாகுய் (WASS) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா–இத்தாலி தொழில்துறை கூட்டாண்மை நிகழ்வின் போது கையெழுத்தானது. இதற்கு முன்னதாக, 2025 டிசம்பரில், இந்தியக் கடற்படையின் ஆறு கல்வாரி ரக ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு 48 பிளாக் ஷார்க் ஹெவி-வெயிட் டார்பிடோக்கள், ஏவுதள அமைப்புகள் மற்றும் பராமரிப்பு உதவிகளை வழங்குவதற்காக WASS நிறுவனம் ₹1,896 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொண்டது. BDL நிறுவனத்தின் தற்போதைய ஆர்டர் மதிப்பு சுமார் ₹27,000 கோடி ஆகும். இந்நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் (CMD) சைலேஷ் வகர்வால் உள்ளார். நிறுவனத்தின் முக்கியப் பாதுகாப்புத் தயாரிப்புகளில் வருணாஸ்திரா ஹெவி-வெயிட் டார்பிடோ, பிரளய் அரை-பாலிஸ்டிக் ஏவுகணை, ஹெலினா ஏவுதள அமைப்பு மற்றும் அஸ்த்ரா பார்வைக்கு அப்பாற்பட்ட வான்-வான் ஏவுகணை ஆகியவை அடங்கும். மேலும், பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டுடன் BDL பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தோனேசியா, தனது ரஃபேல் போர் விமானங்களில் பொருத்துவதற்காக BDL தயாரிக்கும் அஸ்த்ரா ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு டஸ்ஸால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னரே ஏவுகணைகளை ரஃபேல் விமானங்களில் இணைக்கும் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 15-11-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 13-11-2026
சமகால இணைப்புகள்
Mon Nov 23 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 23-11-2026
Sun Nov 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 22-11-2026
Sat Nov 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 21-11-2026
Fri Nov 20 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 20-11-2026
Thu Nov 19 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 19-11-2026
Wed Nov 18 2026