TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 12-11-2026

Trending TNPSC

By

13 min read ·

தேசியச் செய்திகள்

உர மானியத்திற்கு ரூ.62,370 கோடி ஒதுக்கீடு – ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் நீட்டிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2026–27 ராபி பருவத்திற்கு (2026 அக்டோபர் 1 முதல் 2027 மார்ச் 31 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (P&K) உர மானியமாக ரூ.62,370 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இது 2026 காரீஃப் பருவத்திற்கான ரூ.41,533.81 கோடி மானியத்தைவிட சுமார் 50 சதவீதம் அதிகமாகும். திருத்தியமைக்கப்பட்ட ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களின்படி, நைட்ரஜன் கிலோவுக்கு ரூ.94.21, பாஸ்பரஸ் கிலோவுக்கு ரூ.66.11, சல்பர் கிலோவுக்கு ரூ.10.42, பொட்டாசியம் கிலோவுக்கு ரூ.2.38 வழங்கப்படும். முந்தைய ராபி பருவத்தைவிட ரூ.24,417.73 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 50 கிலோ டை-அமோனியம் பாஸ்பேட் (DAP) உர மூட்டையின் சில்லறை விலை ரூ.1,350 ஆகத் தொடரும். 2026 நவம்பர் 10 நிலவரப்படி, நாட்டில் 103.12 லட்சம் டன் யூரியா, 28.65 லட்சம் டன் DAP, 60.87 லட்சம் டன் NPK, 20.08 லட்சம் டன் MOP மற்றும் 22.49 லட்சம் டன் SSP உரங்கள் இருப்பில் உள்ளன. மேலும், 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தை, 2031 மார்ச் 31 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள், பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினத்தவர் (ST) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இதுவரை 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ள நிலையில், கூடுதலாக 2.5 லட்சம் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின்கீழ் செயல்படும் குறு அலகுகளுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டத்தை (CGFMU) அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும், இதற்காக ரூ.5,000 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் இதுவரை 60.36 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள், மொத்தம் ரூ.43.34 லட்சம் கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன; இத்திட்ட நீட்டிப்பின் மூலம் கூடுதலாக ரூ.12.6 லட்சம் கோடி கடன்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனுடன், உத்தரப் பிரதேச மாநிலத்தில், நொய்டா செக்டார் 51 முதல் கிரேட்டர் நொய்டா செக்டார் 4 வரை அமைக்கப்படவுள்ள 8 கி.மீ. அக்குவா லைன் மெட்ரோ வழித்தட நீட்டிப்புத் திட்டத்திற்கு, ரூ.2,390 கோடி மதிப்பீட்டில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

ஓபிசி கிரீமி லேயர் தகுதி: மார்ச் 11, 2026 தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்; மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

ஓபிசி கிரீமி லேயர் அல்லாத (Non-Creamy Layer) தகுதியை நிர்ணயிப்பதற்கான வருமானம்/செல்வச் சோதனையில் பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை விலக்கிய 1993-ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையை (Office Memorandum) நிலைநிறுத்திய மார்ச் 11, 2026 தீர்ப்பை, நவம்பர் 6, 2026 அன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது. மார்ச் 11 தீர்ப்பை முன்தேதியிட்டு அமல்படுத்துவது பணி நியமனங்கள், பணியிட ஒதுக்கீடு, பணிமூப்பு மற்றும் கல்விச் சேர்க்கைகளைப் பாதிக்கும் என்று மத்திய அரசு வாதிட்டது. ஆனால், ஏற்கெனவே முடிவடைந்த தேர்வுகள், நியமனங்கள் மற்றும் பணியிட ஒதுக்கீடுகளை மீண்டும் திறக்க வேண்டியதில்லை என்றும், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மட்டுமே தீர்ப்பின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை மட்டும் கொண்டு ஓபிசி வேட்பாளர் கிரீமி லேயர் வரம்புக்குள் வருகிறாரா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்றும், பெற்றோரின் பதவியின் நிலை மற்றும் வகையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் மார்ச் 11 தீர்ப்பு குறிப்பிட்டது. மேலும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட 2004-ஆம் ஆண்டு விளக்கத்தின் மூலம் 1993-ஆம் ஆண்டு குறிப்பாணையில் இல்லாத புதிய நிபந்தனைகளைச் சேர்க்க முடியாது என்றும், கிரீமி லேயர் விலக்கு என்பது வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; பதவி மற்றும் நிலை அடிப்படையிலானது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் இடையீட்டாளர்களின் கோரிக்கைகளை ஆறு மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது. தகுதியுடைய வேட்பாளர்களுக்காக கூடுதல் பணியிடங்களை (Supernumerary Posts) உருவாக்கலாம் என்ற அரசின் உறுதிமொழியையும் பதிவு செய்துகொண்டது. பதவிகளுக்கான சமநிலையை ஏற்படுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததுடன், இணக்க நடவடிக்கைகளுக்கான காலக்கெடுவை இரண்டு மாதங்கள் நீட்டித்தது. இந்தத் தீர்ப்பு, 2025-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வு (CSE 2025) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிசி வேட்பாளர்களின் பணி ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும். இத்தேர்வின் முடிவுகள் மார்ச் 6, 2026 அன்று வெளியிடப்பட்டிருந்தாலும், பணி ஒதுக்கீடு இறுதி செய்யப்படாததால் தீர்ப்பை அமல்படுத்துவதைத் தள்ளிவைக்க எந்த நியாயமும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

குறு கடன் உத்தரவாத நிதித் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அமைச்சரவை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மைக்ரோ யூனிட்டுகளுக்கான கடன் உத்தரவாத நிதியை (Credit Guarantee Fund for Micro Units – CGFMU) மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது மார்ச் 2031 வரை தொடர ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின்கீழ் ₹12.6 லட்சம் கோடி அளவுக்குக் கடன்கள் வழங்க வழிவகை செய்யப்படும். இதற்காக ₹5,000 கோடி நிதித் தொகுப்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 2016-இல் தொடங்கப்பட்ட CGFMU, நாட்டில் முத்ரா கடன் திட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கியாகச் செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் 2026 நிலவரப்படி, பிரதமர் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நிதி நிறுவனங்களால் ₹43.34 லட்சம் கோடி மதிப்பிலான 60.36 கோடிக்கும் அதிகமான கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், CGFMU திட்டமானது தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனம் (NCGTC) மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, கடன் திருப்பிச் செலுத்தாத ஆபத்துக்கு எதிரான உத்தரவாதப் பாதுகாப்பை வழங்குகிறது என்று தெரிவித்தார். பிணையில்லாக் கடன்கள் மூலம், இதற்கு முன்பு முறையான வங்கி அமைப்பின் வழியாகக் கடன் பெற முடியாதவர்களும் தொழில்முனைவோர்களாக உருவாக இத்திட்டம் உதவியுள்ளது.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

தமிழகத்தின் தூய்மையான நகரமாகத் தேர்வு செய்யப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நடத்திய தூய்மை ஆய்வில், தேனி அல்லிநகரம் நகராட்சி தமிழகத்தின் தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 4,751-க்கும் மேற்பட்ட நகரங்களில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 43 அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தேசிய அளவில் தூய்மையான நகரமாக நவி மும்பை முதலிடத்தைப் பெற்றது; தமிழக அளவில் தேனி அல்லிநகரம் நகராட்சி முதலிடத்தைப் பிடித்தது. இதற்கான விருது வழங்கும் விழா தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழகத்தின் தூய்மையான நகரத்திற்கான விருதை தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் பார்கவியிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டர் பங்கேற்றார்.

தமிழ்நாடு செய்திகள்

ராப்டி.ஹெச்வி மின்சார மோட்டார் சைக்கிள் அனுபவ மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராப்டி.ஹெச்வி (Raptee.HV) நிறுவனத்தின் முதன்மை அனுபவ மையத்தை காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். தமிழக அரசின் ஸ்டார்ட் அப் முதலீட்டுக் கொள்கையின் கீழ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) இந்நிறுவனத்தில் கட்டாயமாக மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள் (CCPS) மூலம் ரூ.25 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை மணப்பாக்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராப்டி.ஹெச்வி நிறுவனம், டெஸ்லா மற்றும் விப்ரோ உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழகப் பொறியாளர்களால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கான உயர் மின்னழுத்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வகையில் தனது பிரத்யேக HV Tech தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கியுள்ளது. இதன் T30 மாடல், இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும். இது 240 வோல்ட் மின்னழுத்தக் கட்டமைப்பையும், மின்சார கார்களுக்குப் பயன்படுத்தப்படும் CCS2 தரநிலையிலான பொது DC விரைவு மின்னேற்ற நிலையங்களுடன் இணைக்கும் வசதியையும் கொண்டுள்ளது. இதன் மூன்று தளங்களைக் கொண்ட முதன்மை அனுபவ மையம் சென்னை பெருங்குடி, OMR சாலையில் அமைந்துள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் வாகனத்தை நேரில் பார்வையிடவும், அதன் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ளவும், சோதனை ஓட்டம் மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், TIDCO தனது ஸ்டார்ட் அப் முதலீட்டுக் கொள்கையின் கீழ் அக்னிகுல் காஸ்மோஸ் உள்ளிட்ட பிற புத்தாக்க நிறுவனங்களிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் செய்திகள்

சாலிம் அலியின் பிறந்த நாளையொட்டி நவம்பர் – பறவைகள் மாதம்

பறவைகள் தாவரங்களின் இனப்பெருக்கம், விதைகள் பரவுதல் மற்றும் காடுகளின் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுகின்றன. பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தியப் பறவைகள் குறித்த தொடக்ககால ஆய்வுகளை ஃபிராங்க்ளின் (1831), சைக்ஸ் (1832), டி.சி. ஜெர்டன் (1833) ஆகியோர் மேற்கொண்டனர். மதராஸ் ராணுவத்தின் மருத்துவரான டி.சி. ஜெர்டன், 1862-ஆம் ஆண்டு 'The Birds of India' என்ற நூலை வெளியிட்டார். நெல்சன் (1868) மற்றும் லெவிஸ் மூர் (1878) ஆகியோர் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கையேடுகளில் பறவைகள் குறித்த தகவல்களைப் பதிவு செய்தனர். தமிழில் பறவைகள் குறித்த தொடக்ககாலப் படைப்புகளில் ஞானபோதினி (பிப்ரவரி 1891) இதழில் வெளியான 'பறவைகள்' கட்டுரையும், டி.ஆர். இராமநாதாயரின் 'பறவைகள்' கட்டுரை விவேக சிந்தாமணி (ஜூலை–ஆகஸ்ட் 1893) இதழ்களில் வெளியானதும் குறிப்பிடத்தக்கவை. மேலும், எம். கோபாலகிருஷ்ணையரின் 'பரிகாளிக்கும் பறவை' (விவேகபானு, ஜூன் 1904), 'அன்னப்பறவை' (ஜனலோசனி, 1905), 'கோழியும் அதன் முட்டையும்' (சக்கரவர்த்தினி, ஜூலை 1906) மற்றும் 'கழுகு' (நல்லாசிரியன், பிப்ரவரி 1907) ஆகிய கட்டுரைகளும் வெளியாகின. தர்ஸ்டன், 1913-ஆம் ஆண்டு தென்னிந்தியப் பறவைகளை 21 இனங்களாக வகைப்படுத்தினார். புறநானூற்றில் பிசிராந்தையார் குறிப்பிட்டுள்ள அன்னச் சேவல், தற்கால ஆய்வுகளின்படி பூநாரை (Flamingo) என அடையாளப்படுத்தப்படுகிறது; இது சங்க இலக்கியங்களில் வலசைப் பறவைகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதைக் காட்டுகிறது. ஜெர்டன் இந்தியாவிற்கு வரும் பறவைகளின் பருவகால இடம்பெயர்வுகளைக் குறிப்பிட்டுள்ளார்; தர்ஸ்டன், தென்னிந்தியப் பகுதிகளுக்கு வலசைப் பறவைகள் குளிர்காலத்தில் வருவதாகப் பதிவு செய்துள்ளார். இராசாளிப் பறவை ஒரு மணி நேரத்தில் 241 கி.மீ. வேகத்திலும், ஒரு நாளில் 2,170 கி.மீ. தூரமும் பறக்கக்கூடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டி.பி. குப்புசாமி, ஆனந்தபோதினி (மே 1918) இதழில் 'காகம்' என்ற கட்டுரையை எழுதி, காகங்களின் உணவைப் பகிர்ந்து உண்ணுதல், கழிவுகள் மற்றும் இறந்த உயிரினங்களை உண்ணுதல், விதைகளைப் பரப்புதல் போன்ற பண்புகளை விளக்கியுள்ளார். புகழ்பெற்ற இந்தியப் பறவையியலாளர் டாக்டர் சாலிம் அலியின் பிறந்த நாளையொட்டி நவம்பர் மாதம் 'பறவைகள் மாதமாக' அனுசரிக்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

ஐஎன்எஸ் பெட்வா போர்க் கப்பலை நவீனமயமாக்க ₹498.58 கோடியில் ஒப்பந்தம்; பிரளய் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான பிரம்மபுத்திரா ரகப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் பெட்வாவை நவீனமயமாக்குவதற்காக, கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்துடன் ₹498.58 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் தில்லியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கப்பலில் தற்போது பயன்படுத்தப்படும் நீராவி மூலம் இயங்கும் உந்துவிசை அமைப்பு அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக டீசல் என்ஜின் அடிப்படையிலான புதிய உந்துவிசை அமைப்பு பொருத்தப்பட உள்ளது. இத்திட்டம் இந்தியாவின் கப்பல் பழுதுபார்ப்பு, பராமரிப்பு, சிக்கலான உந்துவிசை அமைப்புகளை மாற்றுதல் மற்றும் கடற்படைக் கப்பல்களை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதுடன், 50-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) பங்கேற்பையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தீவிலிருந்து கடந்த 5ஆம் தேதி பிரளய் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இச்சோதனையின் அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டதாகவும், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் (Integrated Test Range) கண்காணிப்புக் கருவிகள் பதிவு செய்த தரவுகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மின்கலக் கழிவு மறுசுழற்சி மற்றும் அத்தியாவசிய கனிமப் பாதுகாப்பு

போக்குவரத்துத் துறையின் மின்மயமாக்கல் அதிகரித்து வருவதால், லித்தியம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற அத்தியாவசிய கனிமங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. 2026 செப்டம்பர் 13 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி தொழில்நுட்பம் மற்றும் அத்தியாவசிய கனிமங்களை ஆயுதமாக்குவது குறித்து எச்சரித்தார். இக்கனிமங்களின் தாதுக்கள் அரிதாகவோ அல்லது குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் குவிந்தோ காணப்படுவதால், அவற்றின் விநியோகம் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வர்த்தகத் தடைகளால் பாதிக்கப்படக்கூடும். மேலும், கனிமப் பதப்படுத்தலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதால், இந்தியா இறக்குமதியைச் சார்ந்துள்ளது. இந்தச் சார்பைக் குறைக்க, பயன்பாட்டுக் காலம் முடிவடைந்த லித்தியம்-அயன் மின்கலங்களை மறுசுழற்சி செய்து அவற்றிலுள்ள மதிப்புமிக்க கனிமங்களை மீட்டெடுக்கலாம். முறைசாரா மறுசுழற்சி முறைகளில் கனிம மீட்பு விகிதம் 10%–20% மட்டுமே உள்ள நிலையில், முறைசார் மறுசுழற்சி நிலையங்களில் இது 90%-க்கும் அதிகமாக உள்ளது. 2025–26 நிதியாண்டில் இந்தியாவில் 8.7 மில்லியனுக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் (EVs) பயன்பாட்டில் இருந்ததால், எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மின்கலக் கழிவுகளின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்கல மறுசுழற்சி மூலம் மின்சார வாகன மின்கல உற்பத்திக்குத் தேவையான இந்தியாவின் லித்தியம் தேவையில் சுமார் 10%–12% வரை பூர்த்தி செய்ய முடியும். இந்தியாவின் மின்கலக் கழிவு மேலாண்மை விதிகள், 2022 (Battery Waste Management Rules, 2022), நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புணர்வு (Extended Producer Responsibility – EPR) முறையை அறிமுகப்படுத்தின. மறுசுழற்சித் துறையை வலுப்படுத்த, மறுசுழற்சி செய்யப்பட்ட கனிமங்களை மூலோபாய வளத் திட்டமிடல் மற்றும் முன்மொழியப்பட்ட தேசிய அத்தியாவசிய கனிம இருப்பில் சேர்த்தல், பல்வேறு மின்கல வேதியியல் முறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) ஊக்குவித்தல், மின்கல வகைப்படுத்தல் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட கனிமங்களின் தரத்திற்கான தரநிலைகளை உருவாக்குதல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக்கு ஏற்ற வடிவமைப்பை ஊக்குவித்தல், உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் மின்கலங்களைத் திரும்பப் பெறும் மற்றும் மீண்டும் வாங்கும் திட்டங்களைச் செயல்படுத்துதல், மறுசுழற்சி உள்கட்டமைப்பில் நீண்டகால முதலீடுகளை உறுதிப்படுத்துதல் ஆகியவை அவசியமாகும். இதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு அத்தியாவசிய கனிமப் பதப்படுத்தும் திறனை மேம்படுத்தி, இறக்குமதிச் சார்பைக் குறைக்க முடியும்.

பொருளாதாரச் செய்திகள்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம்: தற்போதைக்கு அறிவிப்பு இல்லை என என்பிசிஐ தகவல்

தீபாவளி முடிந்து இரண்டு நாட்களாகியும், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்-வணிகர் (P2M) யுபிஐ பரிவர்த்தனைகள் மீது வணிகர் தள்ளுபடி விகித (Merchant Discount Rate – MDR) கட்டணத்தை அமல்படுத்துவதற்கான புதிய தேதியை தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI) இன்னும் அறிவிக்கவில்லை. இதுகுறித்து தற்போதைக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் முதலில் அக்டோபர் 15, 2026 அன்று அமல்படுத்தப்படுவதாக இருந்தது. கடந்த அக்டோபர் 13, 2026 அன்று, என்பிசிஐ-யின் யுபிஐ மற்றும் சேவைகள் வழிகாட்டல் குழு, பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட P2M யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான எம்டிஆர் கட்டணத்தைத் தீபாவளிக்குப் பிறகு தனியாக அறிவிக்கப்படும் தேதியில் அமல்படுத்த முடிவு செய்திருந்தது. வணிகர்களின் வலுவான கோரிக்கைகளைத் தொடர்ந்து, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை ஒத்திவைக்கும் முடிவு பிரதமர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி இந்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் கட்டணத்திற்கு வணிகர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடுதல் கட்டணத்தை வணிகர்கள் பொருள்களின் விலையை உயர்த்துவதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் சுமத்தக்கூடும் என்று அஞ்சப்பட்டது. மேலும், பல ஆண்டுகளாக டீலர் கமிஷன் மாற்றியமைக்கப்படாத நிலையில், எம்டிஆர் கட்டணம் தங்களது லாப வரம்பை மேலும் குறைக்கும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர். அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் (CAIT) நிறுவனரும் பொதுச் செயலாளரும், பாஜக மக்களவை உறுப்பினருமான பிரவீண் கண்டேல்வால், இந்த ஒத்திவைப்பை வரவேற்றதுடன், இது வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பதோடு பண்டிகைக் காலத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வேகத்தையும் தக்கவைக்கும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில்துறை நீர் பற்றாக்குறைச் சவால்

திறமையான பணியாளர்கள், வலுவான உற்பத்தித் தளம் மற்றும் வணிகத்திற்கு உகந்த கொள்கைகள் காரணமாகத் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி முதலீட்டுத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஜூலை 2026-இல் வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் முதலீட்டு உகந்த குறியீட்டில் (Investment Friendliness Index – IFI) குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், சர்வதேச விமானப் போக்குவரத்து இணைப்பில் உள்ள குறைபாடு, சென்னைத் துறைமுகத்தின் உள்கட்டமைப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் நிலப்பகுதி மற்றும் மழைமறைவு மாவட்டங்களில் போதிய தொழில்துறை நீர் வழங்கல் இல்லாமை ஆகியவை முக்கியக் குறைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மாநிலத்தில் 110 தொழில்துறைப் பூங்காக்கள் மற்றும் 42 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZs) 130 குளோபல் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியாவின் மொத்த நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) 2022–23-இல் 46.03 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2023–24-இல் 44.42 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்த நிலையில், தமிழ்நாட்டின் FDI வரவு 2024–25-இல் 3.681 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. தமிழ்நாட்டின் பெரும்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைமறைவுப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு சராசரி மழைப்பொழிவு 960 மி.மீ. ஆகவும், இந்தியாவின் மொத்த நீர்வளத்தில் மாநிலத்தின் பங்கு 3% ஆகவும் உள்ளது. மாநிலத்தின் மேற்பரப்பு நீர் இருப்புத் திறன் 853 TMC என மதிப்பிடப்பட்டுள்ளது. 17 முக்கிய நதிப் படுகைகளில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 177.12 TMC நீர் கடலில் கலக்கிறது. 2011 முதல் 2021 வரையிலான காவிரியின் பத்தாண்டு கால நீர் வெளியேற்றம் 4.352 பில்லியன் கன மீட்டர் (BCM) ஆகும். மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு நீர்வளத்துறை இணைந்து மேற்கொண்ட 2025-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ஆண்டுதோறும் எடுக்கக்கூடிய நிலத்தடி நீர் வளம் 20.46 BCM ஆகவும், நிலத்தடி நீர் அகழ்வு 15.04 BCM ஆகவும், அதாவது சுமார் 73.5% ஆகவும் உள்ளது. இருப்பினும், சேலம், வேலூர் மற்றும் சென்னை மாவட்டங்கள் நிலத்தடி நீர் அதிகமாகச் சுரண்டப்பட்ட மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள் 90%–100% அகழ்வு அளவுடன் அபாயகரமான பிரிவில் உள்ளன. 2050-ஆம் ஆண்டிற்குள் தொழில்துறை நீர்த் தேவை 1,985 மில்லியன் கன மீட்டராக (MCM) உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மதராஸ் வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தைச் (MIDS) சேர்ந்த ரிடா வன்பா நோங்பிரி மற்றும் யுகேஷ் சரவணன் உள்ளிட்ட நிபுணர்கள், உள்ளூர் நீர் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப தொழில்துறை நீருக்கு விலை நிர்ணயம் செய்து நீர்வளத்தைச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974-இன் கீழ், ஜூன் 2026-இல் மட்டும் 28 தொழிற்சாலைகளுக்கு மூடல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பூஜ்ஜிய திரவ வெளியேற்ற (Zero Liquid Discharge – ZLD) தொழில்நுட்பம், தேவையான நீரில் 90% வரை மீட்டெடுக்க உதவுகிறது. இதற்கு திருப்பூர் ஜவுளித் தொழில் தொகுதிகள் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. தொழில்துறை முதலீட்டுத் திட்டமிடலில் பசுமை ஆற்றல் மற்றும் நீர் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதும் அவசியமாகும். நீர்வளத்துறைக்கான நிதி ஒதுக்கீடு இடைக்கால பட்ஜெட்டில் ₹10,076 கோடியாக இருந்த நிலையில், புதிய அரசின் முதல் பட்ஜெட்டில் ₹9,264 கோடியாகக் குறைக்கப்பட்டு 8.06% வெட்டு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம், 2013 ரத்து செய்யப்பட்டதிலிருந்து நீர்வள மேலாண்மைக்கான சட்டக் கட்டமைப்பில் இடைவெளி நீடிக்கிறது. புதிதாக நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நீர்வளங்கள் (ஒழுங்குமுறை, மேலாண்மை மற்றும் மேம்பாடு) மசோதா, 2026, தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

தினசரி TNPSC நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா மூலம் ரேங்க் உயர்த்துங்கள்

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 13-11-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 11-11-2026

சமகால இணைப்புகள்