TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 31-10-2026

Trending TNPSC

By

10 min read ·

தமிழ்நாடு செய்திகள்

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் – ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்வு

தமிழக அரசு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.1.20 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாகவும் உயர்த்தியுள்ளது. புதிய நடைமுறைகள் 2027 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றன. மொத்தம் 942 அரசு மருத்துவமனைகள் மற்றும் 1,215 தனியார் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ.1,300 கோடி காப்பீட்டுத் தவணையாக வழங்குகிறது. இந்நிறுவனம் மாவட்ட வாரியாக காப்பீட்டுச் சேவைகளை வழங்குவதற்காக மெடி அசிஸ்ட், விடால், எம்பிஜே மற்றும் ஹெல்த் இந்தியா ஆகிய மூன்றாம் தரப்பு காப்பீட்டு மேலாண்மை நிறுவனங்களுடன் (TPA) ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் எட்டு வகையான உயர்தர சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. புதிய காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்து, திருத்தப்பட்ட நடைமுறைகளின்படி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.

தமிழக அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனம் – வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

தமிழக அரசு, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில், அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத்தின் வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி 2026 அக்டோபர் 30 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகை ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இது டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பொருந்தும். ஏற்கெனவே இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் வயது தளர்வுகளுடன் இந்த கூடுதல் சலுகையும் வழங்கப்படும். குரூப்-1 தேர்வில், பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 32-இல் இருந்து 37 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37-இல் இருந்து 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது; மாற்றுத்திறனாளிகளில் பொதுப் பிரிவினருக்கு 42-இல் இருந்து 47 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47-இல் இருந்து 52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில், பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30-இல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகளில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 40-இல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில், பொதுப் பிரிவினருக்கு 30-இல் இருந்து 35 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினருக்கு 32-இல் இருந்து 37 ஆகவும், எஸ்சி, எஸ்சி (ஏ), எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 35-இல் இருந்து 40 ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் கல்வித் தகுதி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு பொருந்தும் விதிகளின்படி உச்ச வயது வரம்பிலிருந்து விலக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் திரைப்பட மானியம் – 224 திரைப்படங்களுக்கு ரூ.15.68 கோடி வழங்கல்

2015 முதல் 2022 வரை தமிழகத்தில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு வெளியான 224 தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழக அரசு திரைப்பட மானியம் வழங்கியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் தலைமையிலான தேர்வுக் குழு திரைப்படங்களை ஆய்வு செய்து, எட்டு ஆண்டுகளுக்கும் ஆண்டுக்கு 28 திரைப்படங்கள் வீதம் மொத்தம் 224 திரைப்படங்களை மானியம் பெறத் தகுதியானவையாகத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரைத்தது. 2026 அக்டோபர் 30 அன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வி மற்றும் செய்தி-விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மானியக் காசோலைகளை வழங்கினார். ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15.68 கோடி மானியமாக வழங்கப்பட்டது. மேலும், தமிழ்த் திரைப்பட விருதுகள், கலைமாமணி விருதுகள், மாநில விருதுகள் மற்றும் திரைப்பட மானியங்கள் ஆகியவை தகுதியின் அடிப்படையில் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா – குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பு

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா, 2026 அக்டோபர் 30 அன்று நடைபெற்றது. இதில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இஸ்ரோ முன்னாள் மூத்த விஞ்ஞானி எஸ். நம்பி நாராயணன், தமிழறிஞர் சொ.சொ. மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களும் வழங்கப்பட்டன. 2025–2026 கல்வியாண்டில் பல்வேறு பாடப்பிரிவுகளை நிறைவு செய்த சுமார் 1,300 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கிய வளர்ச்சியை விளக்கும் "Inclusive Growth in India: An Ageing Population Perspective" என்ற நூல் வெளியிடப்பட்டது. மேலும், காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு நினைவு அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறை வெளியிடப்பட்டன. பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் அரங்கம், கருத்தரங்கு அரங்கம், புஷ்பகிரி பாரம்பரிய கலாசார மையம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. மேலும், 22 கிலோவோல்ட் துணை மின் நிலையம், கட்டுப்பாட்டு அறைக் கட்டடம் மற்றும் 30 வகுப்பறைகளைக் கொண்ட கல்வியியல் துறைக் கட்டடம் ஆகிய புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம், எண்மத் தொழில்நுட்பம், படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் தொழில்முனைவுத் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

தாம்பரத்தில் ‘ஸ்மார்ட் காக்கி பீட் சிஸ்டம்’ இருசக்கர வாகன ரோந்து தொடக்கம்

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில், மாநகரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்மார்ட் காக்கி பீட் சிஸ்டம்’ என்ற இருசக்கர வாகன ரோந்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சேலையூர் அருகிலுள்ள பதுவஞ்சேரி ஆயுதப்படை வளாகத்தில், காவல் ஆணையர் (பொறுப்பு) ஏ. அமல்ராஜ் இத்திட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 73 இருசக்கர ரோந்து வாகனங்களில், வாக்கி-டாக்கி, உடலில் பொருத்தும் கேமரா மற்றும் சைரன் கருவி உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாம்பரம் மாநகர காவல் துறையின் தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காவலர்கள் தங்களது பணிகளை நேர்மையாக மேற்கொள்ளவும், பொதுமக்களிடம் கண்ணியமாகப் பேசவும், காவல் துறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்படவும் காவல் ஆணையர் அறிவுறுத்தினார்.

தேசியச் செய்திகள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 – ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறுகிறது

இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகை ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகையைக் கணக்கிடும் பணி 2027 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். இதற்கான குறிப்புக் கால தேதியாக 2027 மார்ச் 1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் பனிப்பொழிவு காணப்படும் லடாக், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, நாட்டின் பிற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இக்கணக்கெடுப்பு நடைபெறும். வீடு வீடாகக் கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பாக 2027 ஜனவரி 10 முதல் 24 வரை சுய கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வசதி வழங்கப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பின் மறுபரிசீலனைச் சுற்று மார்ச் 1 முதல் மார்ச் 5, 2027 வரை நடைபெறும். இந்தியாவின் முதல் எண்ம (Digital) மக்கள்தொகை கணக்கெடுப்பான 2027 கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி, 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெற்றது.

குஜராத்தில் பிஎம்-கிசான் திட்டத்தின் 24-ஆவது தவணை வெளியீடு

குஜராத் மாநிலம், பனாஸ்கந்தா மாவட்டம், பில்டி பகுதியில் 2026 அக்டோபர் 30 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாரத தேசிய டீசல் மின்சார ரயில் என்ஜின் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.14,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அப்போது, மேற்காசியப் போரால் இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் மற்றும் உரங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரங்கள் மானிய விலையில் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார். உலகளவில் ஒரு மூட்டை டை-அமோனியம் பாஸ்பேட் (DAP) உரம் ரூ.5,000-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ரூ.1,300-க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக மத்திய அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிடுவதாகவும் தெரிவித்தார். 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ.4.5 லட்சம் கோடி நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 12 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மூலம் கோதுமை மற்றும் எண்ணெய் வித்துப் பயிரிடும் விவசாயிகள் ரூ.24 லட்சம் கோடி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் பெற்றுள்ளதாகவும், பிஎம்-குசும் (PM-KUSUM) திட்டத்தின் மூலம் சூரியசக்தி வேளாண் பம்புகள் நிறுவப்பட்டு விவசாயிகளின் மின்சாரச் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் பிஎம்-கிசான் திட்டத்தின் 24-ஆவது தவணையை பிரதமர் வெளியிட்டார். மேலும், சர்தார் வல்லபபாய் படேலின் 151-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தின் ஏக்தா நகரில் நாட்டின் பாரம்பரியக் கைவினைப் பொருள்கள் மற்றும் உணவு வகைகளைப் பறைசாற்றும் ‘பாரத் பர்வ் 2026’ கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

குற்ற வழக்கு தொடரத் தேவையான சிசிடிவி ஆதாரங்களை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) கீழ் தகவல் வழங்குவதைக் கட்டுப்படுத்தும் விதிகளை இயந்திரத்தனமாகப் பயன்படுத்தி, குற்ற வழக்கு தொடரத் தேவையான ஆவணங்களை வழங்க மறுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்த இந்த வழக்கு, மதுரையைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் தாக்கல் செய்த மனுவை அடிப்படையாகக் கொண்டது. அவரது தந்தை காணாமல் போன நிலையில், அக்டோபர் 6 அன்று அவரது பெயரில் மனுதாரருக்கும் குடும்பத்தினருக்கும் எதிராக போலிக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை அனுப்பிய நபரைக் கண்டறிந்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக, சம்பந்தப்பட்ட ஆர்எம்எஸ் அஞ்சலகத்தின் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு ஆர்எம்எஸ் கண்காணிப்பாளரிடம் மனுதாரர் கோரியிருந்தார்; ஆனால் அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது. அஞ்சல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படியும், உரிய விசாரணை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகக் கோரினால் மட்டுமே அஞ்சல் ஆவணங்களை வழங்க முடியும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒருவரின் உரிமைகள் பாதிக்கப்படும்போது, அதற்குக் காரணமான நபரை அடையாளம் காண அரசு வசமுள்ள ஆதாரங்கள் உதவும் என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக அந்த ஆதாரங்களைப் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்குவது அதிகாரிகளின் கடமை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தகைய ஆதாரங்களை வழங்க மறுப்பது, பாதிக்கப்பட்டவர் சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமையைப் பறிப்பதாகும் என்றும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே தகவல் வழங்க மறுப்பது நியாயமானதாக இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, மனுதாரர் கோரிய சிசிடிவி காட்சிகள் மற்றும் விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் பென் டிரைவில் வழங்குமாறு ஆர்எம்எஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் வெற்றி – என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட்டை, 2026 அக்டோபர் 30 அன்று இரவு 11.51 மணிக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஏவப்பட்ட 18 நிமிடங்கள் 40 விநாடிகளில், அந்தச் செயற்கைக்கோள் புவிநிலை மாற்று வட்டப்பாதையில் (GTO) குறைந்தபட்சம் 170 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 37,023 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. என்விஎஸ்-03 செயற்கைக்கோளின் எடை 2,250 கிலோ மற்றும் அதன் செயல்பாட்டுக் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இதில் எல்-பேண்ட், 5-பேண்ட், எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ரூபிடியம் அணுக்கடிகாரம் இடம்பெற்றுள்ளன. இச்செயற்கைக்கோள் இந்திய நிலப்பரப்பு முழுவதும் மற்றும் நாட்டின் எல்லைக்கு அப்பால் 1,500 கி.மீ. தொலைவு வரை துல்லியமான வழிகாட்டுதல் மற்றும் வரைபடச் சேவைகளை வழங்கும். மேலும், தரைவழி, கடல்வழி, வான்வழிப் போக்குவரத்து கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்புத் துறைப் பயன்பாடுகளுக்கு உதவும். இந்தியாவின் மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) மூலம் IRNSS-1A, 1B, 1C, 1D, 1E, 1F மற்றும் 1G ஆகிய ஏழு செயற்கைக்கோள்களை 2013 முதல் 2016 வரை ரூ.1,420 கோடி செலவில் இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது. இதன் மேம்படுத்தப்பட்ட என்விஎஸ் வரிசையில், என்விஎஸ்-01 (2023) மற்றும் என்விஎஸ்-02 (2025) ஆகிய செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. என்விஎஸ்-02 செயற்கைக்கோளில் மின் சமிக்ஞைகள் கிடைக்காததால் இயந்திரத்தைச் செயல்படுத்தும் பைரோ வால்வு திறக்காமல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதன் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. இதுபோன்ற கோளாறுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க உரிய வடிவமைப்பு மாற்றங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் என்விஎஸ்-03 செயற்கைக்கோளில் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதாரச் செய்திகள்

வங்கி சீர்திருத்தங்களுக்கான உயர் நிலைக் குழு அமைப்பு

2026–27 மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, வங்கி சீர்திருத்தங்களுக்கான வளர்ச்சியடைந்த பாரத உயர் நிலைக் குழுவை மத்திய அரசு 2026 அக்டோபர் 30 அன்று அமைத்தது. இக்குழுவின் தலைவராக முன்னாள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவர் சுரேஷ் என். படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் சிரீஷ் சந்திர மூர்மு, முன்னாள் துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன், இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்தரு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் பதவிக்காலம் 6 மாதங்கள் ஆகும். தற்போதைய வங்கி நடைமுறைகளை மதிப்பிடுதல், சர்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகளைக் கண்டறிந்து இந்திய வங்கி அமைப்புக்கு ஏற்ப செயல்படுத்துதல், ஊரக மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட இந்திய வங்கிகளின் தரத்தை உயர்த்துவதற்கான சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தல் ஆகியவை இக்குழுவின் முக்கியப் பணிகளாகும். மேலும், வங்கித் துறையின் நீண்டகால முதலீட்டுத் தேவைகளை மதிப்பிடுதல், நிதி ஆதாரங்கள் மற்றும் கடன் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைத்தல், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எண்ம எழுத்தறிவை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளையும் இக்குழு வழங்கும். இப்பரிந்துரைகள் மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் (NBFCs) ஆகியவற்றையும் உள்ளடக்கும்.

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

இந்தியாவில் 12 ஆண்டுகளில் 49.6 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்: உலக வங்கி அறிக்கை

உலக வங்கியின் 2026-ஆம் ஆண்டுக்கான இந்திய வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையின்படி, இந்தியாவில் 2011 முதல் 2023 வரை சுமார் 49.6 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம், உலகிலேயே மிக வேகமாக வறுமையைக் குறைத்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. தீவிர வறுமை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான வறுமையைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், வருமான ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகமாக உள்ளது; அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 சதவீதத் தொழிலாளர்களின் சராசரி வருமானம், கடைசி 10 சதவீதத் தொழிலாளர்களின் வருமானத்தைவிட 13 மடங்கு அதிகமாக உள்ளது. பணவீக்கத்தைக் கணக்கில் கொண்ட உண்மையான வருமானத்தின் அடிப்படையில், ஒரு நாளைக்கு ரூ.399-க்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோரின் விகிதம் 2011-இல் 57.7 சதவீதமாக இருந்தது; இது 2023-இல் 16.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், ஒரு நாளைக்கு ரூ.285-க்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோரின் விகிதம் 27.1 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2023-இல் ரூ.399 தினசரி வருமான அளவுகோலின்படி, கிராமப்புற வறுமை விகிதம் 19.3 சதவீதமாகவும், நகர்ப்புற வறுமை விகிதம் 8.6 சதவீதமாகவும் இருந்தது. மேலும், 2017 முதல் 2023 வரை சுமார் 13.4 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன; இது வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகையின் அதிகரிப்பைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும். எனினும், வேலைவாய்ப்புகள் அதிகரித்த அளவுக்கு ஊதியம் உயரவில்லை என்றும், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்ட உண்மையான வருமானத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு

செயலியை இப்போது பெறுங்கள்

மேலும் படிக்க

புதிய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 02-11-2026

முந்தைய பதிவு

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 30-10-2026

சமகால இணைப்புகள்