TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 28-10-2026
தமிழ்நாடு செய்திகள்
உலகத் திறன் போட்டி: 12 பேருக்கு ரூ.49 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் ச. விஜய், 48-ஆவது உலகத் திறன் போட்டியில் பங்கேற்ற 12 பேருக்கு மொத்தம் ரூ.49 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார். 2026 செப்டம்பர் மாத இறுதியில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 68 நாடுகள், 64 திறன் பிரிவுகள் இடம்பெற்றன; இந்தியா முழுவதிலுமிருந்து 70 பேர், அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர், பங்கேற்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ரா. மு. ஹமதூ சலாமு, செயற்கை உறுப்பு பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை பெற்றார். சைபர் பாதுகாப்புத் தொழில்நுட்பம் பிரிவில் கா. பா. ராகுல், கைப்பேசிச் செயலி மேம்பாடு பிரிவில் கே. அரிஜுன், பூச்சு மற்றும் உலர் சுவர் அமைப்பு பிரிவில் ம. மகேந்திரன், ஆபரணங்கள் பிரிவில் ஜாய் தாஸ் ஆகிய நால்வரும் சிறப்புத் தகுதிப் பதக்கங்கள் (Medallions for Excellence) பெற்று தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை பெற்றனர். மேலும், போட்டியில் பங்கேற்ற ஏழு பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. 2026 அக்டோபர் 27 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. உலகத் திறன் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. 16 முதல் 23 வயது வரையிலான தகுதியுடைய மாணவர்கள் மற்றும் பணிபுரியும் இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் முதலில் மாநில அளவிலும், பின்னர் தென் மண்டல அளவிலும், இறுதியாக தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று உலக அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுகின்றனர்.
10,000 கிராமப்புறப் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள்: ரூ.57 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு, 2026–2027-ஆம் நிதியாண்டில், 10,000 தகுதியான கிராமப்புறப் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்து நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கியுள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இத்திட்டத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முந்தைய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 லிட்டர் பால் தரக்கூடிய ஆரோக்கியமான, அதிகப் பால் உற்பத்தித் திறனுள்ள கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும். கிராமப்புறப் பெண்களின் வருமானத்தை உயர்த்துதல், மாநிலத்தின் பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துதல், அறிவியல் சார்ந்த பால் பண்ணை முறைகளை ஊக்குவித்தல், குடும்பங்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வருமானம் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். முறையான கால்நடைப் பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை மூலம் ஒவ்வொரு மாடும் ஐந்து ஆண்டுகளில் 3 முதல் 4 கன்றுகள் வரை ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிக் குடும்பங்களுக்கு நீண்டகாலச் சொத்து உருவாக்கமும் பொருளாதாரப் பயன்களும் கிடைக்கும்.
தேசியச் செய்திகள்
‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயமாகப் பாடுவதற்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
2026 அக்டோபர் 27 அன்று, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயமாகப் பாட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக, இந்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசு உள்ளிட்டோருக்குப் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது. பீம்ராவ் துரியோதன் போர்கர் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் சத்யபாமா மாவோஜி ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971-இன் பிரிவு 3, 2026-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2026 ஜனவரி 28 மற்றும் ஜூலை 9 தேதியிட்ட உத்தரவுகள் ஆகியவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. தேசியப் பாடல் அல்லது தேசிய கீதம் பாடப்படும்போது வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்துவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க இத்திருத்தம் வழிவகுக்கிறது. இம்மனுக்களை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. ஸ்ரீஷானந்தா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. ஏற்கெனவே நிலுவையில் உள்ள தொடர்புடைய மனுக்களுடன் இவற்றையும் இணைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை 2026 நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக, கர்நாடக இசைக்கலைஞரும் எழுத்தாளருமான டி. எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, உச்சநீதிமன்றம் 1986-ஆம் ஆண்டின் பிஜோ இம்மானுவேல் வழக்கை குறிப்பிட்டு, மனசாட்சியின் அடிப்படையில் பாடலைப் பாட மறுப்போரின் உரிமைகள் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய முடியும் எனக் குறிப்பிட்டது. இவ்விவகாரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ஆவது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் தொடர்புடையவை.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நால்வரைப் பரிந்துரைத்த உச்சநீதிமன்ற கொலீஜியம்
2026 அக்டோபர் 27 அன்று, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி பி. வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற கொலீஜியம், பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிப்பதற்காக நான்கு நீதிபதிகளை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி பி. சாம் கோஷி, தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி மனாஷ் ரஞ்சன் பதக், குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரதா சக்ரவர்த்தி, தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பட்னா உயர்நீதிமன்ற நீதிபதி சுதிர் சிங், உத்தராகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டனர்.
எஸ்ஐஆர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரத்துக்குப் பதிலளிக்க மனுதாரருக்கு 10 நாள்கள் அவகாசம்
2026 அக்டோபர் 27 அன்று, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்குப் பதிலளிக்க மனுதாரர் ராகேஷ் குமார் சிங்கிற்கு 10 நாள்கள் அவகாசம் வழங்கி இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த 248 பக்கப் பிரமாணப் பத்திரத்தில், எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் சட்டப்படி ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும், படிவம் 6-இல் மாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதால் தேர்தல் ஆணையம் தனிப்பட்ட முறையில் மாற்றங்களைச் செய்யவில்லை என்றும் தெரிவித்தது. எஸ்ஐஆர் நடவடிக்கைகள் மற்றும் பீகாரில் படிவம் 6-இல் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை எழுந்தது. இதற்கிடையில், பீகாரில் எஸ்ஐஆர் பணியின்போது உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இன்றி படிவம் 6-இல் மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறி, மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு மீதும் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. இம்மனுக்களை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. ஸ்ரீஷானந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி – வளர்ந்துவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு 2026
வளர்ந்துவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு 2026, 2026 அக்டோபர் 27 அன்று, புது தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களில் தமிழ்நாட்டின் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் உள்நாட்டு வேக ஈனுலை அணு உலை (Fast Breeder Reactor), அதன் முதல் கட்டச் செயல்பாடு 2026 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுதி செமிகண்டக்டர் சில்லுகள் உலகச் சந்தையைச் சென்றடைந்தது, மேலும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விக்ரம்-1 (Vikram-1) தனியார் ராக்கெட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தியா அணுசக்தி, விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளிலும் தனது தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி வருகிறது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவை 20%-க்கு மேல் உயர்த்த உடனடித் திட்டமில்லை – மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, நிதின் கட்கரி
2026 அக்டோபர் 27 அன்று, பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவை 20%-க்கு மேல் உயர்த்தும் உடனடித் திட்டம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். இந்தியாவின் இறக்குமதி கச்சா எண்ணெய் சார்பைக் குறைப்பதற்காக எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், 85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் கொண்ட E85 மற்றும் 100% எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களை அனுமதிக்கும் வகையில் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்து அறிவிக்கை வெளியிட்டது. 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டார். தற்போதைய எத்தனால் கலப்பு இலக்கு 20% என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2026 அக்டோபர் 27 அன்று புது தில்லியில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (PHD Chamber of Commerce and Industry) நடத்திய நிகழ்ச்சியில், E20 பெட்ரோலுக்கு எதிரான தகவல்கள் பணம் கொடுத்து நடத்தப்படும் பிரச்சாரம் என்று குறிப்பிட்டார். எத்தனால் கலப்பு, இறக்குமதி எரிபொருட்கள் மீதான சார்பைக் குறைப்பதற்கும் உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் பெறுகிறது.
பொருளாதாரச் செய்திகள்
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோக்கத்தை அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும் – சிபிஐசிசி சுற்றறிக்கை
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) 2026 அக்டோபர் 27 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, வரி செலுத்துபவருக்கு வரி ஏய்ப்பு செய்யும் நோக்கம் இருந்தது என்பதை ஜிஎஸ்டி அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும். வரி செலுத்தப்படவில்லை அல்லது வரி விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன என்ற காரணங்களுக்காக மட்டுமே ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 74(1) மற்றும் 74(5)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது; மோசடி, வேண்டுமென்றே தவறான தகவல் அளித்தல் அல்லது வரி ஏய்ப்பு நோக்கத்துடன் உண்மைகளை மறைத்தல் ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட ஆதாரங்கள் அவசியம். வரி செலுத்துபவரிடம் விளக்கம் கோரும் நோட்டீஸிலும் அந்த ஆதாரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இதற்கு முன்னதாக, 2026 அக்டோபர் 8 அன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜிஎஸ்டி நடைமுறைகளின் கீழ் அதிகாரிகளுக்கு இருந்த கைது செய்யும் அதிகாரத்தை நீக்கவும், ஜிஎஸ்டி குற்றங்களுக்காகக் குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கான வரம்பை ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.
சர்வதேசச் செய்திகள்
பயங்கரவாதத்திற்கு எதிராக பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டுப் பிரகடனம்
பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் 12-ஆவது முழுமைக் கூட்டம், 2026 அக்டோபர் 26–27 ஆகிய தேதிகளில் புது தில்லியில் உள்ள சம்விதான் சதனில் (பழைய நாடாளுமன்றக் கட்டடம்) நடைபெற்றது. இவ்வமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியா ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் உயிரிழந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டுப் பிரகடனம் ஏற்கப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவளிப்பவர்களை சர்வதேசச் சட்டங்களின்படி நீதியின் முன் நிறுத்தவும் உறுதியளிக்கப்பட்டது. மேலும், இஸ்ரேல்–பாலஸ்தீன மோதல், தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள், ஐ.நா. சாசனத்தின்படி சர்வதேசப் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்ப்பது ஆகியவை பிரகடனத்தில் இடம்பெற்றன. ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI), தரவு மற்றும் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் அனைத்து நாடுகளின் இறையாண்மை, தேசியப் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பை மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூட்டுப் பிரகடனம் ஏற்கப்பட்டதை அறிவித்தார். இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி. பி. ராதாகிருஷ்ணன், 2026 அக்டோபர் 27 அன்று பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் பிரதிநிதிகளுக்கு விருந்தளித்தார்.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
தென் கொரியாவில் முதல் உலகளாவிய கொரியா–தமிழ் ஆய்வு மாநாடு
முதல் உலகளாவிய கொரியா–தமிழ் ஆய்வு மாநாடு (ICKTS 2026), தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) சார்பில் 2026 அக்டோபர் 20-ஆம் தேதி இணையவழியிலும், அக்டோபர் 25-ஆம் தேதி தென் கொரியாவின் சியோல் நகரிலும் நடைபெற்றது. இந்தியா, தென் கொரியா, செக் குடியரசு, மலேசியா, ஹாங்காங் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 45 ஆய்வாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டில், ‘கொரியா–தமிழ் ஆய்வுகள்’ (Korea-Tamil Researches) என்ற நூல் வெளியிடப்பட்டது. SKTRA தலைவர் பேராசிரியர் செ. ஆரோக்கியராஜ் நூலின் முதல் பிரதியை வெளியிட, மருத்துவர் மரியா லீ பெற்றுக்கொண்டார். சிபி பதிப்பகம் வெளியிட்ட இந்நூலில் பண்டைய தமிழ்–கொரிய வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள், மொழியியல் ஒற்றுமைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் சகாய தர்சியூஸ் பி. எம். முதன்மைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் செ. ஆரோக்கியராஜ் மற்றும் முனைவர் தே. ஞானராஜ் இணைப் பதிப்பாசிரியர்களாகவும் செயல்பட்டனர். தமிழ் மரபு மற்றும் கிழக்காசிய ஆய்வுகளுக்கான பங்களிப்பைப் பாராட்டி முனைவர் நா. கண்ணனுக்கு ‘தமிழ் மரபு காவலர்’ விருதும், ஹன்புக் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஹரிபாலன் பெருமாள்சாமிக்கு ‘தமிழ் உறவுப் பாலம்’ விருதும் வழங்கப்பட்டன. இருவருக்கும் தலா ஒரு மில்லியன் தென் கொரிய வான், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன.
தினசரி TNPSC நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா மூலம் ரேங்க் உயர்த்துங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 29-10-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 27-10-2026
சமகால இணைப்புகள்
Mon Nov 23 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 23-11-2026
Sun Nov 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 22-11-2026
Sat Nov 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 21-11-2026
Fri Nov 20 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 20-11-2026
Thu Nov 19 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 19-11-2026
Wed Nov 18 2026