TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01-08-2026
முக்கிய தினங்கள்
உலக நுரையீரல் புற்றுநோய் தினம்
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புகையிலை பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் ஆகியவை இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
உலகளாவிய வலை (World Wide Web - WWW) தினம்
உலகளாவிய வலை (World Wide Web - WWW) தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலகளாவிய வலை (WWW) உருவாக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு, சர் டிம் பெர்னர்ஸ்-லீ அவர்கள் CERN (ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்) நிறுவனத்தில் பணியாற்றியபோது WWW-ஐ உருவாக்கினார். உலகளாவிய தகவல் பரிமாற்றம், இணையத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியில் WWW-ன் முக்கியத்துவத்தை இத்தினம் எடுத்துரைக்கிறது.
விளையாட்டுச் செய்திகள்
காமன்வெல்த் ஜூடோவில் இந்தியாவின் முதல் தங்கம்
கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், அஸ்மிதா டே மகளிர் 48 கிலோ ஜூடோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, காமன்வெல்த் ஜூடோவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனையாக வரலாறு படைத்தார். ஹர்ஷ் சிங் ஆடவர் 60 கிலோ ஜூடோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, காமன்வெல்த் ஜூடோவில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் ஜூடோ வீரர் என்ற சாதனையைப் படைத்தார். யாமினி மெளரியா மகளிர் 57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1990-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் ஜூடோ அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்தியா ஒவ்வொரு பதிப்பிலும் பதக்கம் வென்றிருந்தாலும், தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதல் முறை ஆகும். மேலும், லவ்பிரீத் சிங் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், சீமா காளிராமன் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பளுதூக்குதலில் லவ்பிரீத் சிங்கிற்கு வெள்ளிப் பதக்கம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், லவ்பிரீத் சிங் ஆடவர் +110 கிலோ பளுதூக்குதல் பிரிவில் 388 கிலோ ( ஸ்னாட்ச் – 176 கிலோ, கிளீன் & ஜெர்க் – 212 கிலோ ) மொத்த எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் தூக்கிய 176 கிலோ போட்டி சாதனையாக அமைந்தது. நியூசிலாந்தின் டேவிட் ஆண்ட்ரூ லிட்டி 389 கிலோ மொத்த எடையுடன் தங்கப் பதக்கமும், இங்கிலாந்தின் ஆண்ட்ரூ கிரிஃபித்ஸ் 356 கிலோ மொத்த எடையுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த லவ்பிரீத் சிங், இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் நடப்பு காமன்வெல்த் விளையாட்டுகளில் இந்தியாவின் பளுதூக்குதல் பதக்க எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது; இதில் 1 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் அடங்கும்.
வட்டு எறிதலில் சீமா காளிராமனுக்கு வெண்கலப் பதக்கம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், சீமா காளிராமன் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் 58.65 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஜமைக்காவின் சமந்தா ஹால் 61.66 மீட்டர் தூரத்துடன் தங்கப் பதக்கமும், கனடாவின் ஜூலியா டங்ஸ் 60.67 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனையான நிதி ராணி, 57.10 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடம் பெற்றார். இதற்கு முன் ஜூன் மாதத்தில் நடைபெற்ற சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில், சீமா காளிராமன் 59.73 மீட்டர் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை (Personal Best) பதிவு செய்திருந்தார்.
கேலோ இந்தியா திட்டத்திற்கு ₹29,054 கோடி ஒதுக்கீடு
கேலோ இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், மத்திய அமைச்சரவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ₹29,054 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தவுள்ள இந்தியா, 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெறும் முயற்சியில் உள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நாட்டிலுள்ள விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களுக்கு உதவுவதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ₹7,387 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 2,800 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அரசு நிதியுதவியுடன் தங்களின் திறமைகளை மேம்படுத்தி வருகின்றனர்.
ஜாம்ஷெட்பூர் எஃப்சி ஐஎஸ்எல் தொடரிலிருந்து விலகல்
2022-ஆம் ஆண்டு இந்தியன் சூப்பர் லீக் (ISL) லீக் வின்னர்ஸ் ஷீல்ட் கோப்பையை வென்ற ஜாம்ஷெட்பூர் எஃப்சி (JFC) அணி, 2026–27 சீசன் முதல் ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்காது என அறிவித்துள்ளது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) நிர்ணயித்த பங்கேற்புக் கட்டணத்தின் முதல் தவணையான ₹55 லட்சத்தை செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. டாடா ஸ்டீல் நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் நிர்வகிக்கப்பட்ட ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி, 2017–18 சீசனில் ஐஎஸ்எல் தொடரில் அறிமுகமானது. ஓவன் கோய்ல் பயிற்சியாளராக இருந்த காலத்தில், எஃப்சி கோவா மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகளுக்குப் பிறகு லீக் வின்னர்ஸ் ஷீல்ட் வென்ற மூன்றாவது அணியாக ஜாம்ஷெட்பூர் எஃப்சி சாதனை படைத்தது. ‘ரெட் மைனர்ஸ்’ என அழைக்கப்படும் இவ்வணி 2025–26 ஐஎஸ்எல் சீசனில் 6-ஆவது இடத்தைப் பிடித்தது. இந்தியாவின் முதன்மை கால்பந்து தொடரில் சொந்தமாக மைதானம் மற்றும் பயிற்சி வசதிகளைக் கொண்டிருந்த ஒரே கிளப் ஜாம்ஷெட்பூர் எஃப்சி ஆகும்.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
திரைப்பட பின்னணிப் பாடகி கே. ஜமுனாராணி மறைவு
தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகி கே. ஜமுனாராணி தனது 88-ஆவது வயதில் பெங்களூருவில் காலமானார். இவர் தனது 7-ஆவது வயதில், நடிகரும் இசையமைப்பாளருமான சித்தூர் வி. நாகையா இயக்கி நடித்த 1946-ஆம் ஆண்டு வெளியான ‘தியாகையா’ தெலுங்குத் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். 1952-ஆம் ஆண்டு வெளியான ‘வளையாபதி’ மற்றும் ‘கல்யாணி’ போன்ற தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகிகளுக்காகப் பாடத் தொடங்கினார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 6,000 பாடல்கள் பாடியுள்ளார். ‘உலகம் பலவிதம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’, ‘உத்தமபுத்திரன்’ திரைப்படத்தின் ‘யாரடி நீ மோகினி’, 1987-ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ‘நான் சிரித்தால் தீபாவளி’ ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க பாடல்களாகும். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது மற்றும் அண்ணா விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சர்வதேசச் செய்திகள்
இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரியற்ற ஸ்காட்டிஷ் சால்மன்
இங்கிலாந்து-இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) கீழ், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் சுங்க வரியற்ற ஸ்காட்டிஷ் சால்மன் மீன் சரக்கை பெங்களூரு பெற்றது. இந்தச் சரக்கு பெங்களூருவில் உள்ள சாஷிமி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பிரிட்டிஷ் துணை தூதரகத்தின் துணைத் தலைவர் ஓவன் ரிச்சர்ட்ஸ் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சரக்கில் பக்காஃப்ராஸ்ட் ஸ்காட்லாந்து (Bakkafrost Scotland) நிறுவனத்தால் வளர்க்கப்பட்ட புதிய பண்ணை ஸ்காட்டிஷ் சால்மன் மீன்கள் இடம்பெற்றிருந்தன. CETA ஒப்பந்தம், ஸ்காட்டிஷ் சால்மன் மீன்களுக்கு இந்தியா முன்பு விதித்திருந்த 33% இறக்குமதி சுங்க வரியை நீக்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஸ்காட்லாந்தின் சால்மன் மீன் ஏற்றுமதித் துறைக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியச் செய்திகள்
பிஎம்-கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தை 2026–27 முதல் 2030–31 வரை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து, ₹3,15,614 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கியது. 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு நேரடி பயனாளி பரிமாற்றம் (DBT) மூலம் ஆண்டுக்கு ₹6,000 தொகை, ₹2,000 வீதம் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இதுவரை 23 தவணைகள் மூலம் ₹4.47 லட்சம் கோடிக்கும் மேல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 23-ஆவது தவணையில், ₹18,984 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டு 9.49 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர். திட்டப் பயனாளிகளில் நான்கில் ஒருவர் பெண் விவசாயி ஆவார்; அவர்களுக்கு இதுவரை ₹1.06 லட்சம் கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் மதிப்பீட்டின்படி, 92%-க்கும் மேற்பட்ட பயனாளிகள் உதவித்தொகையை வேளாண் பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர்; 85% விவசாயிகள் தங்களின் வருமானம் அதிகரித்ததையும் முறைசாரா கடன்களைச் சார்ந்திருப்பது குறைந்ததையும் தெரிவித்துள்ளனர்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா ஜூலை 31 அன்று மக்களவையில் குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா 1969-ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்கிறது. தற்போதைய சட்டத்தின்படி, ஒரு ஆண்டுக்கு மேல் தாமதமாக பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் (RDO) அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் உத்தரவு அவசியமாகும். புதிய திருத்தத்தின்படி, இந்த நடைமுறை இரண்டு ஆண்டுகள் வரை தாமதமான பதிவுகளுக்கு பொருந்தும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாமதமான பதிவுகள் முதல்நிலை குற்றவியல் மாஜிஸ்திரேட் வழங்கும் உத்தரவின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
தேசிய கடல்சார் எரிசக்தி ஆய்வு-உற்பத்தி திட்டத்திற்கு ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் செயல்படுத்தும் 'சமுத்திர மந்தன்' தேசிய கடல்சார் எரிசக்தி ஆய்வு-உற்பத்தி திட்டத்திற்கு 2030–31 வரை ₹84,084 கோடி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கியது. இத்திட்டம் ஆழ்கடல் மற்றும் மிக ஆழ்கடல் பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறிதல், ஆய்வுத் துளையிடுதல் மற்றும் உற்பத்திக்கான பொது உள்கட்டமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வுக்காக துளையிடப்படும் ஒவ்வொரு கிணற்றுக்கும் அதிகபட்சமாக ₹650 கோடி நிதி உதவி வழங்கப்படும். மொத்த ஒதுக்கீட்டில் ₹43,200 கோடி ஆழ்கடல் துளையிடுதல் பணிகளுக்கும், ₹28,534 கோடி கடல்சார் தரவு சேகரிப்புக்கும், ₹10,000 கோடி உற்பத்திக்கான பொது உள்கட்டமைப்புக்கும், ₹2,000 கோடி எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் சேவை மண்டலங்களை அமைப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 600 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்க்கு நிகரான ஹைட்ரோகார்பன் இருப்புகளை கண்டறிய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அமைச்சரவை, ₹5,070 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் சூரிய சரோவர் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2031-க்குள் 5,000 மெகாவாட் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான திட்டங்களுக்கு செயல்பாடு தொடங்கிய பின் ஒரு மெகாவாட்டுக்கு ₹1 கோடி மத்திய நிதியுதவி வழங்கப்படும்.
நீதிமன்ற நேரலை காப்பக அணுகலுக்கான வழிகாட்டு நெறிமுறை
இந்திய உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் நேரலை செய்யப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒளி-ஒலி பதிவுகளை அதிகாரப்பூர்வ நீதிமன்ற காப்பகங்கள் (Archives) மூலம் அணுகுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த், நீதிமன்ற நேரலை காட்சிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் வணிக ரீதியாகச் சுரண்டப்படுவதையும் தடுக்கும் வகையில் இந்த நடைமுறை உருவாக்கப்படும் என தெரிவித்தார். சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் நீதிமன்ற நேரலைகளைப் பகிர்வதை கட்டுப்படுத்திய ஜூலை 24 இடைக்கால உத்தரவை மாற்றக் கோரி ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ் மற்றும் அம்ரிதா ஜோஹ்ரி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர்கள் இந்த உத்தரவு வெளிப்படையான நீதி தத்துவத்திற்கு (Principle of Open Justice) எதிரானது என தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் மனுவை ஏற்று வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க ஆலோசனைகளை கோரியது. டிஜிட்டல் தளங்களான Meta மற்றும் WhatsApp ஆகியவையும் ஆலோசனைகளை வழங்க ஒப்புக்கொண்டன. ஜூலை 24, 2025 உத்தரவின்படி, உச்சநீதிமன்ற பொதுச்செயலாளர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற பதிவுத் தலைவர்களின் முன்அனுமதி இன்றி நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒளி-ஒலி பதிவுகளை பதிவேற்றம் செய்தல், பகிர்தல், மாற்றம் செய்தல், மறுபதிவு செய்தல் மற்றும் பணமாக்குதல் ஆகியவை தடை செய்யப்பட்டன.
பிரதமரின் சூரிய சரோவர் யோஜனா
மத்திய அமைச்சரவை, நீர்த்தேக்கங்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் மிதக்கும் சூரிய மின் திட்டங்களை ஊக்குவிக்கும் பிரதமரின் சூரிய சரோவர் யோஜனா திட்டத்திற்கு ₹5,070 கோடி ஒதுக்கீட்டுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது. 2030–31-க்குள் 5,000 மெகாவாட் மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் திறனை உருவாக்குவது இத்திட்டத்தின் இலக்காகும். இத்திட்டத்தை இந்திய சூரிய ஆற்றல் கழகம் (SECI) செயல்படுத்தும். தகுதியுள்ள திட்டங்களுக்கு ஒரு மெகாவாட்டிற்கு ₹1 கோடி வரை மத்திய நிதியுதவி வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு திட்டத்திலும் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு இணையான பேட்டரி ஆற்றல் சேமிப்பு வசதி கட்டாயமாக இடம்பெற வேண்டும்; மொத்தமாக 10,000 மெகாவாட்-மணி சேமிப்பு திறன் உருவாக்கப்பட உள்ளது. இந்தியாவில் தற்போது 0.7 ஜிகாவாட் மிதக்கும் சூரிய மின் திறன் மட்டுமே நிறுவப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பிடப்பட்ட திறன் 102 ஜிகாவாட் ஆகும். மத்தியப் பிரதேசம், கன்ட்வா மாவட்டத்தில், நர்மதை ஆற்றில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய மின் பூங்கா, 278 மெகாவாட் திறனுடன் நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் திட்டமாக உள்ளது; இதனை 600 மெகாவாட் வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
‘சமுத்திர மந்தன்’ கடல்சார் ஆய்வுத் திட்டம்
மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டமான ‘சமுத்திர மந்தன்’ திட்டத்திற்கு ₹84,084 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான நிதி 2030–31 நிதியாண்டு வரை பயன்படுத்தப்படும். இத்திட்டம் நான்கு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. இதில் 60 ஆழ்கடல் ஆய்வு கிணறுகள் தோண்டுவதற்காக ₹43,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; இதில் தகுதியான துளையிடும் செலவில் 50% வரை அல்லது ஒரு கிணற்றுக்கு ₹675 கோடி வரை மத்திய அரசின் ஆதரவு வழங்கப்படும். கடல்சார் தரவு சேகரிப்புக்கு ₹28,534 கோடி, கண்டறியப்படும் வளங்களை வணிகமயமாக்குவதற்கான பொது கடல்சார் உள்கட்டமைப்பு மையங்களுக்கு ₹10,000 கோடி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் சேவை மண்டலங்களை உருவாக்க ₹2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 600 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்க்கு நிகரான (MMTOE) ஹைட்ரோகார்பன் இருப்புகளை கண்டறிந்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போதைப்பொருளற்ற இளைஞர் சங்கல்ப் அபியான் தொடக்கம்
‘விகசித் பாரதத்திற்கான போதைப்பொருளற்ற இளைஞர் சங்கல்ப் அபியான்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 2 அன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் இளைஞர்களை போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விலகி இருக்க ஊக்குவிப்பதையும், சமூக மாற்றத்தில் அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கத்துடன் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான 100 வார நாடு தழுவிய ஜன பாகிதாரி (மக்கள் பங்கேற்பு) பிரச்சாரம் தொடங்குகிறது. இதன் கீழ் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விளையாட்டுப் போட்டிகள், நடைப்பயணங்கள், தியான நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தெருக்கூத்துகள், கலந்துரையாடல்கள், கலைப் போட்டிகள் மற்றும் சமூக ஈடுபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கல்வி நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள், தொழில் அமைப்புகள் மற்றும் ஆன்மீக அமைப்புகளை ஒருங்கிணைத்து போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இம்முயற்சி செயல்படுத்தப்படுகிறது. 10,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் MY Bharat தன்னார்வலர்கள், தேசிய சேவைத் திட்டம் (NSS) தன்னார்வலர்கள், இளைஞர் மன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகள் பங்கேற்கின்றன.
விமானப் படைத் துணைத் தலைவராக தேஜ்பால் சிங் பொறுப்பேற்பு
எயார் மார்ஷல் தேஜ்பால் சிங் (AVSM, VM) இந்திய விமானப் படையின் (IAF) துணைத் தலைவர் (Deputy Chief of the Air Staff) பதவியை 2026 ஆகஸ்ட் 1 அன்று ஏற்றார். இவர் 1990 ஜூன் 16 அன்று போர் விமானியாக இந்திய விமானப் படையில் இணைந்தார். 3,500 மணி நேரத்திற்கும் அதிகமான பறக்கும் அனுபவம் கொண்ட இவர், கேட் ஏ தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர் (Category A Qualified Flying Instructor) மற்றும் சோதனைப் போர் விமானி (Experimental Test Pilot) ஆவார். இந்திய விமானப் படையில் பல்வேறு செயல்பாட்டு, கட்டளை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது சேவையைப் பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வாயு சேனா பதக்கம் (ஜனவரி 2011) மற்றும் அதி விசிஷ்ட சேவா பதக்கம் (ஜனவரி 2021) வழங்கப்பட்டது. இவர் 39 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு 2026 ஜூலை 31 அன்று ஓய்வு பெற்ற எயார் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி (SYSM, AVSM, VM) அவர்களிடமிருந்து விமானப் படைத் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
பாதுகாப்புக் கணக்குகள் கட்டுப்பாட்டு ஜெனரலாக அல்கா நங்கியா அரோரா பொறுப்பேற்பு
1991-ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக் கணக்குச் சேவை (IDAS) பிரிவைச் சேர்ந்த அதிகாரியான திருமதி அல்கா நங்கியா அரோரா, 2026 ஆகஸ்ட் 1 அன்று பாதுகாப்புக் கணக்குகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (CGDA) பதவியை ஏற்றார். இவர் டெஹ்ராடூன் கர்வால் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி ரூர்க்கி முன்னாள் மாணவி ஆவார். இந்திய அரசில் வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் (DARE) கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகர், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் இணைச் செயலர், Central Cottage Industries Corporation of India Limited மேலாண் இயக்குநர், ஜவுளி அமைச்சகத்தின் கீழ் கைவினைப் பொருட்களுக்கான கூடுதல் வளர்ச்சி ஆணையர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். பாதுகாப்பு நிதி மேலாண்மை மற்றும் பொதுச் சேவையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இவர் தனது பணியை பாதுகாப்பு அமைச்சகத்தின் கொல்கத்தா டம் டம் ஆயுதத் தொழிற்சாலையில் தொடங்கினார். பின்னர் பாதுகாப்புக் கணக்குகள் துறை (DAD)-இல் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் நிதி ஆலோசனைப் பொறுப்புகளில் பணியாற்றிய இவர், CGDA தலைமையகத்தில் கூடுதல் மற்றும் சிறப்பு CGDA பதவியிலும் பணியாற்றி, தணிக்கை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அமைப்புகள், IFA மற்றும் பயிற்சி தொடர்பான கொள்கைகளை வழிநடத்தினார்.
12-ஆவது தேசிய கைத்தறி தினம் – 2026
மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் 12-ஆவது தேசிய கைத்தறி தினம் 2026 ஆகஸ்ட் 7 அன்று ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையம் (RBCC), புது தில்லியில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார். விழாவில் 2025-ஆம் ஆண்டிற்கான சந்த் கபீர் கைத்தறி விருதுகள் மற்றும் தேசிய கைத்தறி விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு 3 சந்த் கபீர் கைத்தறி விருதுகள் மற்றும் 19 தேசிய கைத்தறி விருதுகள் என மொத்தம் 22 விருதுகள் வழங்கப்படும். இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் 4 நினைவு அஞ்சல் தலைகள் வெளியிடப்படுகின்றன. “Earth. Root. Thread – Aal Dyed Handloom Textiles of Central India” மற்றும் Handloom Awards Book 2025 ஆகிய நூல்கள் வெளியிடப்பட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று 1905 ஆகஸ்ட் 7 அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய கைத்தறித் துறை 35 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகிறது; இதில் பெண்களின் பங்களிப்பு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக காற்றின் வேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் தினசரி காற்றாலை மின் உற்பத்தி சராசரியாக இருந்த 3,424 மெகாவாட்டிலிருந்து 4,990 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் சுமார் 13,000 காற்றாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், அனல்மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், மற்றும் அணுமின் நிலையங்கள் மூலம் மாநிலத்தின் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. கூடங்குளம், ராதாபுரம், காவல்கிணறு, பழவூர், இருக்கன்துறை, பணகுடி, வடக்கன்குளம், முப்பந்தல், மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய பகுதிகள் முக்கிய காற்றாலை மின் உற்பத்தி மையங்களாக உள்ளன. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் முழுத் திறனில் செயல்படுகின்றன. தமிழகத்தின் அதிகபட்ச காற்றாலை மின் உற்பத்தித் திறன் 6,160 மெகாவாட் ஆகும்.
நீர் ஆதார மேம்பாட்டிற்கு ₹330 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 60% குறைவாக பெய்துள்ளதால், முதல்வர் ஜோசப் விஜய் குடிநீர் வழங்கல் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்த ₹330 கோடி ஒதுக்க உத்தரவிட்டார். இந்த நிதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ஆழ்துளைக் கிணறுகள் தூர்வாருதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், நீர் உறிஞ்சு கிணறுகள் புனரமைத்தல், நீரோட்ட திசைமாற்றுக் கால்வாய்கள் அமைத்தல், மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறைக்கு ₹10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் ஜூலை 30 வரை 2,85,350 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மொத்த ₹134 கோடி ஒதுக்கீட்டில் ₹16.93 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விநியோகம் ஆகஸ்ட் 15-க்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
TNPSC தேர்வில் முன்னிலை பெற தினசரி பொது அறிவு ஒரே App-ல்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02-08-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
சமகால இணைப்புகள்
Fri Oct 02 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 02-10-2026
Thu Oct 01 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 01-10-2026
Wed Sep 30 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 30-09-2026
Tue Sep 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 29-09-2026
Mon Sep 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 28-09-2026
Sun Sep 27 2026