TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16-03-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16-03-2026
தேசியச் செய்திகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – ஏப்ரல் 23
இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15, 2026 அன்று தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை அறிவித்தது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணைப்படி வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – மார்ச் 30, மனு தாக்கல் கடைசி நாள் – ஏப்ரல் 6, மனுக்கள் பரிசீலனை – ஏப்ரல் 7, மனு திரும்பப் பெற கடைசி நாள் – ஏப்ரல் 9, வாக்குப்பதிவு – ஏப்ரல் 23, வாக்கு எண்ணிக்கை – மே 4 நடைபெறும். புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் அட்டவணையை முதன்மை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் (Gyanesh Kumar) மற்றும் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் எஸ். எஸ். சந்து (Dr. S. S. Sandhu), டாக்டர் விவேக் ஜோஷி (Dr. Vivek Joshi) அறிவித்தனர். தேர்தல் பணிகளுக்காக நாடு முழுவதும் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் 25 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5.67 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் உயர்வு – ஏப்ரல் 1 முதல் அமல்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2026–27 நிதியாண்டிற்கான ஃபாஸ்டேக் (FASTag) ஆண்டுக் கட்டணத்தை ₹3,000 இலிருந்து ₹3,075 ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டணம் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விலை நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள், 2008 அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் கட்டணம் வசூலிக்கும் 1,150 சுங்கச்சாவடிகள் வழியாகப் பயணிக்கும் வர்த்தகப் பயன்பாடில்லா வாகனங்கள் இந்த திருத்தப்பட்ட ஃபாஸ்டேக் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டண முறை 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் 56 லட்சம் தனியார் வாகன உரிமையாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் பயனாளர்கள் ஒரு ஆண்டில் 200 சுங்கச்சாவடிகள் வழியாகப் பயணம் மேற்கொள்ள ஒருமுறை ஆண்டுக் கட்டணம் செலுத்த முடியும்.
விளையாட்டுச் செய்திகள்
இந்தியன் வெல்ஸ் ஓபன் – கிளார்டு / ஆண்ட்ரியோஸி சாம்பியன்
இந்தியன் வெல்ஸ் ஓபன் (Indian Wells Open) டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில், பிரான்ஸ் நாட்டின் மேனுவல் கிளார்டு (Manuel Guinard) மற்றும் அர்ஜென்டீனாவின் குய்டோ ஆண்ட்ரியோஸி (Guido Andreozzi) இணை சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில், அவர்கள் போலந்தின் வாலென்டின் வசெராட் (Valentin Vacherot) மற்றும் பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்நெச் (Arthur Rinderknech) இணையை 7-6 (7/3), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர். போட்டித் தரவரிசையில் இடம் பெறாத கிளார்டு – ஆண்ட்ரியோஸி இணை தங்களின் முதல் சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதே போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில், இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலி (Flavio Cobolli) மற்றும் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச் (Belinda Bencic) இணை சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் அவர்கள் கனடாவின் கேப்ரியேலா டப்ரோஸ்கி (Gabriela Dabrowski) மற்றும் பிரிட்டனின் லாய்ட் கிளாஸ்பூல் (Lloyd Glasspool) இணையை 6-3, 2-6, 10-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.
உலக பியூச்சர்ஸ் குத்துச்சண்டை – இந்தியாவுக்கு 1 தங்கம்
உலக பியூச்சர்ஸ் குத்துச்சண்டை (World Futures Boxing) போட்டி தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றது. பாக்சிங் வேர்ல்ட் (World Boxing) சார்பில் நடைபெற்ற இந்த யூத் போட்டியில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் பதக்கங்களை வென்றது. மகளிர் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் சந்திரிகா குமாரி இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் மார்டோனோவோவை தோற்கடித்து தங்கப் பதக்கம் பெற்றார். 48 கிலோ பிரிவில் குஞ்சன் மற்றும் 54 கிலோ பிரிவில் ஜாய்ச்ரீதேவி வெள்ளிப் பதக்கங்கள் பெற்றனர். ஆடவர் 50 கிலோ பிரிவில் இந்தியாவின் அம்பேத்கர் இறுதிப் போட்டியில் உக்ரைன் வீரரிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். மகளிர் 57 கிலோ பிரிவில் ராதாமணி லாங்ஜாம் அரையிறுதி வரை முன்னேறி வெண்கலப் பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் வேர்ல்ட் பாக்சிங் தலைவர் ஜென்னடி கோலோவ்கின் மற்றும் பாக்சிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா (BFI) தலைவர் அஜய் சிங் கலந்து கொண்டனர்.
பிசிசிஐ நமன் விருதுகள் 2026
சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் (பாலி உம்ரிகர் விருது) – ஷுப்மன் கில்
சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை – ஸ்மிருதி மந்தனா
கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது – ரோஜர் பின்னி
கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது – ராகுல் திராவிட்
கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது – மிதாலி ராஜ்
சிறந்த சர்வதேச அறிமுக ஆண் வீரர் – ஹர்ஷித் ராணா
சிறந்த சர்வதேச அறிமுக மகளிர் வீராங்கனை – ஸ்ரீசரணியா
பிசிசிஐ உள்நாட்டு போட்டிகளில் சிறந்த அணி – மும்பை
உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த சீனியர் மகளிர் வீராங்கனை – ஷஃபாலி வர்மா
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த மகளிர் வீராங்கனை – ஐரா ஜாதவ்
ரஞ்சி கிரிக்கெட்டில் சிறந்த ஆல்-ரவுண்டர் – ஹர்ஷ் துபே
சீன கிராண்ட் ப்ரீ 2026 – ஆண்ட்னெலி வெற்றி
ஃபார்முலா ஒன் (Formula One) கார் பந்தயத்தின் சீன கிராண்ட் ப்ரீ (Chinese Grand Prix) போட்டியில் இத்தாலி வீரரும் மெர்சிடஸ் (Mercedes) டிரைவருமான கிம் ஆண்ட்னெலி வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஜார்ஜ் ரஸ்ஸல் (Mercedes) 2-ஆம் இடமும், பிரிட்டன் வீரர் லூயிஸ் ஹாமில்டன் (Ferrari) 3-ஆம் இடமும் பெற்றனர். இந்த வெற்றியுடன் கடந்த 20 ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் பந்தயத்தை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற சாதனையை கிம் ஆண்ட்னெலி பதிவு செய்தார்; இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு ஜியன்கார்லோ ஃபிசிசெல்லா வெற்றி பெற்றிருந்தார். மேலும் 19 வயதில் F1 பந்தயத்தை வென்ற 2-ஆவது இளம் வீரர் என்ற சாதனையையும் ஆண்ட்னெலி பெற்றார்; 2016 ஆம் ஆண்டு 18 வயதில் வென்ற மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (நெதர்லாந்து) இளம் வயதில் வென்ற முதல் வீரராக உள்ளார்.
இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் பொதுமக்களுக்கு திறப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமான இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் மார்ச் 16 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இந்த தோட்டம் காஷ்மீர் தோட்டக்கலைத் துறை மேற்பார்வையில் பராமரிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட வகைகளில் சுமார் 18 லட்சம் துலிப் மலர்கள் இத்தோட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சர்பராஸ் அகமது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சர்பராஸ் அகமது அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக கடைசியாக விளையாடினார். சர்பராஸ் அகமது தலைமையில் பாகிஸ்தான் அணி 2 ஐசிசி (ICC) கோப்பைகளை வென்றுள்ளது.
மத்திய கிழக்கு போர் காரணமாக F1 பந்தயங்கள் ரத்து
ஃபார்முலா ஒன் (Formula One) கார் பந்தயத்தின் பஹ்ரைன் கிராண்ட் ப்ரீ மற்றும் சவுதி அரேபியா கிராண்ட் ப்ரீ போட்டிகள் மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக ஃபார்முலா ஒன் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 10 முதல் 12 வரை பஹ்ரைனில் நடைபெறவிருந்த 4-வது சுற்று மற்றும் ஏப்ரல் 17 முதல் 19 வரை சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த 5-வது சுற்று போட்டிகள் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
பினாகா ராக்கெட் லாஞ்சர் – 7வது ரெஜிமென்ட் இணைப்பு
இந்திய ராணுவம் தனது ராக்கெட் பீரங்கி திறனை விரிவுபடுத்தும் நோக்கில் பினாகா (Pinaka) ராக்கெட் லாஞ்சர் அமைப்பின் 7வது ரெஜிமென்ட்டை செயல்பாட்டில் இணைத்துள்ளது. மேலும் 8வது பினாகா ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டு, அதன் உபகரணங்களில் பெரும்பாலானவை பெறப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆறு கூடுதல் பினாகா ரெஜிமென்ட்களை வாங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் BEML, டாடா பவர் மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனங்களுடன் ₹2,580 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் 114 பினாகா லாஞ்சர்கள், 45 கட்டளை மையங்கள் மற்றும் 330 ஆதரவு வாகனங்கள் அடங்கும். தற்போது இந்திய ராணுவத்தில் சுமார் 15 ராக்கெட் பீரங்கி ரெஜிமென்ட்கள் உள்ளன; இதில் 7 பினாகா ரெஜிமென்ட்கள், 3 ரஷ்ய தயாரிப்பான ஸ்மெர்ச் (Smerch) அமைப்புகள் மற்றும் 5 BM-21 கிராட் (Grad) பிரிவுகள் அடங்கும்.
நியூயார்க் ஹாஃப் மரத்தான் – குல்வீர் சிங் தேசிய சாதனை
இந்திய தூர ஓட்ட வீரர் குல்வீர் சிங் நியூயார்க் சிட்டி ஹாஃப் மரத்தான் (New York City Half Marathon) போட்டியில் 21.1 கிமீ தூரத்தை 59 நிமிடம் 42 விநாடிகளில் முடித்து இந்திய ஆண்கள் ஹாஃப் மரத்தான் தேசிய சாதனையை புதுப்பித்தார் மற்றும் போட்டியில் 3-ஆம் இடம் பெற்றார். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் அத்ரியான் வைல்ட்ஷுட் (Adriaan Wildschutt) 59:30 நேரத்துடன் முதலிடம் பெற்றார்; மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வீரர் சூஹைர் தால்பி (Zouhair Talbi) 59:41 நேரத்துடன் 2-ஆம் இடம் பெற்றார். இதற்கு முன் இந்திய தேசிய சாதனை 1:00:30 ஆக இருந்து, அதை ஸ்டீப்பிள்சேஸ் வீரர் அவினாஷ் சாப்ளே (Avinash Sable) 2020 ஆம் ஆண்டு டெல்லி ஹாஃப் மரத்தான் போட்டியில் பதிவு செய்திருந்தார். மேலும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games) 10,000 மீட்டர் பிரிவில் பதக்கம் பெற்ற குல்வீர் சிங், 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் தடகள தேசிய சாதனைகளையும் வைத்துள்ளார்.
ஞான் பாரதம் திட்டம் – கையெழுத்துப் பிரதிகள் கணக்கெடுப்பு தொடக்கம்
மத்திய கலாச்சார அமைச்சகம் இந்தியாவின் கையெழுத்துப் பிரதிகள் பாரம்பரியத்தை கண்டறிந்து டிஜிட்டல் பதிவை உருவாக்குவதற்காக ‘ஞான் பாரதம் (Gyan Bharatam) திட்டத்தின் கீழ் மூன்று மாத கால நாடு தழுவிய கணக்கெடுப்பை மார்ச் 16 அன்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு மாவட்ட அளவில் தொடங்கி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. நிறுவனங்கள், தனியார் சேகரிப்புகள் மற்றும் தனிநபர்களிடம் உள்ள கையெழுத்துப் பிரதிகளை அடையாளம் காண குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டறியப்படும் கையெழுத்துப் பிரதிகள் புவிசார் குறியீடு (Geotagging) செய்யப்பட்டு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் (National Digital Repository) உருவாக்கப்பட உள்ளது. இந்த தகவல்கள் ‘ஞான் பாரதம்’ மொபைல் செயலி மூலம் பதிவேற்றப்படும் என்று கலாச்சாரத் துறை செயலாளர் விவேக் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி 2025–26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் சுமார் 1 கோடி கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய ஊரக வங்கிகள் – செயல்பாட்டை மேம்படுத்த நிலைக்குழு பரிந்துரை
நிதி தொடர்பான நிலைக்குழு (Standing Committee on Finance) பிராந்திய ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs) செயல்பாட்டை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. டாக்டர் வியாஸ் குழுவின் பரிந்துரைகளின்படி ஆர்.ஆர்.பி-கள் 43 இலிருந்து 28 ஆக ஒருங்கிணைக்கப்பட்டு, 11 மாநிலங்களில் “ஒரே மாநிலம் – ஒரே ஆர்.ஆர்.பி” என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன. கல்விக்கடன்களில் மொத்த வாராக்கடன் (GNPA) 13.8% ஆக உள்ளதால், அதை குறைக்க கல்விக்கடன்களுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம் (Credit Guarantee Fund Scheme for Education Loans – CGFSEL) முழுமையாக பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது; இதில் ₹7.5 லட்சம் வரை கல்விக்கடன்களுக்கு மத்திய அரசு பிணையின்றி உத்தரவாதம் வழங்குகிறது. மேலும் சொத்துத் தரம் மற்றும் கடன் அபாயத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு (Early Warning Signals – EWS) பயன்படுத்தவும், லாபம் ஈட்டும் வங்கிகள் IPO (Initial Public Offering) மூலம் மூலதனத்தை திரட்டவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஊரக வங்கிகள் 1975 ஆம் ஆண்டு நரசிம்மன் குழு பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, 1976 சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டன; இவற்றில் மத்திய அரசு 50%, மாநில அரசு 15%, ஸ்பான்சர் வங்கி 35% பங்குகளை வைத்துள்ளன. இவ்வங்கிகள் ரிசர்வ் வங்கி (RBI) கட்டுப்பாட்டில் செயல்பட்டு, நபார்டு (NABARD) மேற்பார்வையில் உள்ளன மற்றும் மொத்தக் கடனில் 75% முன்னுரிமைத் துறைக்கு (Priority Sector Lending) வழங்க வேண்டும்.
மாநிலச் செய்திகள்
நார்வெஸ்டர்
நார்வெஸ்டர் (Nor’wester) என்பது மார்ச் முதல் மே வரை பருவமழைக்கு முன் காலத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உருவாகும் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று ஆகும். இவ்வகை புயல்கள் கனமழை, மின்னல், இடி, ஆலங்கட்டி மழை, புழுதிப் புயல் மற்றும் பலத்த சூறாவளிக் காற்று போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தக்கூடும். ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நார்வெஸ்டர் புயல் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வங்காளத்தில் இந்த நிகழ்வு “கல்பைசாகி (Kalbaisakhi)” என அழைக்கப்படுகிறது; அஸ்ஸாமில் இது “பர்டோய்சிலா (Bordoisila)” அல்லது “பர்டோலி சீர்ஹா (Bardoli Chheerha)” என அழைக்கப்படுகிறது. இந்த மழை தேயிலை, சணல் மற்றும் நெல் சாகுபடிக்கு பயனுள்ளதாக உள்ளது.
சர்வதேசச் செய்திகள்
கார்க் தீவு
கார்க் தீவு (Kharg Island) என்பது பெர்ஷியக் வளைகுடாவில் (Persian Gulf) அமைந்துள்ள ஈரான் நாட்டின் புஷேர் (Bushehr) மாகாணத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இது ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமாக செயல்படுகிறது. ஈரானில் உற்பத்தியாகும் மூல எண்ணெயின் பெரும்பகுதி இந்த தீவிலிருந்து உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தீவில் பெரிய எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், ஏற்றுமதி துறைமுகங்கள் மற்றும் குழாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1980–1988 காலகட்டத்தில் நடைபெற்ற ஈரான்–ஈராக் போரின் போது, கார்க் தீவு பலமுறை தாக்குதலுக்கு உள்ளானது, காரணம் அது ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையம் என்பதுதான். சமீப காலங்களில் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் மோதல்கள் காரணமாக இந்த தீவு மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
சாகித்ய அகாடமி விருது 2025
அசாமி – Karhi Khelar Sadhu (நாவல்) — தேவப்ரத் தாஸ்
பெங்காலி – Shrestha Kabita (கவிதை) — பிரசுன் பந்த்யோபாத்யாய்
போடோ – Dwngnwi Lama Mwnse Gathwn (நாவல்) — சஹைசுலி பிரம்மா
டோக்ரி – Thakur Satsayie (கவிதை) — கஜூர் சிங் தாகூர்
ஆங்கிலம் – Crimson Spring (நாவல்) — நவ்தேஜ் சர்னா
குஜராத்தி – Bhattkhadaki (கவிதை) — யோகேஷ் வைத்யா
இந்தி – Jeete Jee Allahabad (நினைவுகள்) — மம்தா காலியா
கன்னடம் – Dada Seerisu Tande (சிறுகதைகள்) — அமரேஷ் நுகடோனி
காஷ்மிரி – Najdavanek'y Pot Aalav (கவிதை) — அலி ஷைதா
கொங்கணி – Konkani Kavyem: Rupani Ani Rupakam (கட்டுரைகள்) — ஹென்றி மெண்டோன்கா
மைத்திலி – Dhatri Paat San Gaam (நினைவுகள்) — மகேந்திர
மலையாளம் – Maayaamanushyar (நாவல்) — என். பிரபாகரன்
மணிப்பூரி – Kanglamdriba Eephut (சிறுகதைகள்) — ஹோபம் நலினி
மராத்தி – Kalyanilya Resha (சுயசரிதை) — ராஜு பவிஸ்கர்
நேபாளி – Nepali Paramparik Sanskriti Ra Sabhyata Ko Dukuti (கட்டுரைகள்) — பிரகாஷ் பட்டாராய்
ஒடியா – Padapurana (கவிதை) — கிரிஜாகுமார் பாலியார் சிங்
பஞ்சாபி – Safety Kit (சிறுகதைகள்) — ஜிந்தர்
ராஜஸ்தானி – Bharkhama (சிறுகதைகள்) — ஜிதேந்தர் குமார் சோனி
சமஸ்கிருதம் – Prasthanacatustaye Brahmaghosah (கவிதை) — சாது பத்ரேஷ்தாஸ்
சந்தாலி – Mid Birna Chenne Saon Inag Sagai (சிறுகதைகள்) — சுமித்ரா சோரன்
சிந்தி – Waghoo (சிறுகதைகள்) — பகவான் அட்லானி
தமிழ் – Thamiz Sirukathaiyin Thadangal (இலக்கிய விமர்சனம்) — சா. தமிழ்செல்வன்
தெலுங்கு – Animesha (கவிதை) — நந்தினி சித்தா ரெட்டி
உருது – Safar Jaari Hai (கவிதை) — பிரித்பால் சிங் பெடாப்
சாகித்ய அகாடமி விருது இந்திய மொழிகளில் வெளியான சிறந்த இலக்கிய படைப்புகளை கௌரவிப்பதற்காக வழங்கப்படுகிறது.
இது இந்திய இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், எழுத்தாளர்களை பாராட்டவும் வழங்கப்படும் முக்கிய விருதாகும்.
இந்தியாவின் மொழி மற்றும் கலாச்சார பல்வகைப்பாட்டை பாதுகாக்க 24 இந்திய மொழிகளில் உள்ள படைப்புகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றன.
உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்க இப்போது செயலியை பெறுங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17-03-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12-03-2026
சமகால இணைப்புகள்
Sun Mar 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-03-2026
Sat Mar 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-03-2026
Fri Mar 27 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-03-2026
Thu Mar 26 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26-03-2026
Sat Mar 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-03-2026
Thu Mar 19 2026