Current Affairs Thu Sep 25 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 25-09-2025

தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.1,156 கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் உற்பத்தி ஆலை

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,156 கோடி முதலீட்டில் ஒரு ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்ததாவது, இந்த ஆலை தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் தொழிற்பேட்டையில் நிறுவப்பட உள்ளது.

60 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஆலை, சிற்றுண்டிகள், பிஸ்கட், மசாலாப் பொருட்கள், ஆட்டா, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2,000 உள்ளூர் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தமிழ்நாடு, தேசிய அளவிலான முன்னணி FMCG நிறுவனங்களை தொடர்ந்து ஈர்த்து வருவதாகவும், முக்கிய துறைகள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ராஜா குறிப்பிட்டார்.

தமிழக அரசு – 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த கலைமாமணி விருதுகளை தமிழக அரசு 2021–2023க்கான பட்டியலாக அறிவித்துள்ளது.

அதில், தேசிய அளவிலான சிறப்பு விருதுகளில், இசைத் துறைக்கான எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரதியார் விருது எழுத்தாளர் பி.முருகேசன் பாண்டியனுக்கும், பாலசரஸ்வதி விருது நாட்டிய கலைஞர் முத்துக்கண்ணம்மாளுக்கும் வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் ஒவ்வொன்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் 3 பவுன் தங்கப் பதக்கமும் கொண்டதாகும்.

மொத்தம் 90 கலைஞர்கள்இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக்கலை ஆகிய துறைகளில் – விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முக்கிய விருதாளர்கள்:

  • திரைப்படம்/சின்னத்திரை: நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, கே. மணிகண்டன், நடிகைகள் சாய் பல்லவி, மெட்டி ஒலி சாந்தி, இயக்குநர் விக்ரம் சுகுமாரன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், பாடகர்கள் ஸ்வேதா மோகன், எஸ். விஜயலட்சுமி, பாடலாசிரியர் விவேகா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.

  • இசை/நாட்டியம்/நாடகம்: நாதஸ்வரம், தவில், தமிழிசை, வயலின், பரதநாட்டியம், கரகாட்டம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த கலைஞர்கள்.

  • கிராமியக்கலை: ஓயிலாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், தப்பாட்டம், பறையாட்டம் போன்ற கலைகளில் பங்காற்றிய கலைஞர்கள்.

சிறந்த கலை நிறுவன விருது சென்னை தமிழ் இசைச் சங்கத்திற்கும், சிறந்த நாடகக் குழு விருது மதுரை மாவட்ட எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றத்திற்கும் வழங்கப்படுகிறது.

விருது வழங்கும் விழா அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

எக்கோஃப்யூயலுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் – 850 டீசல் பேருந்துகள் சிஎன்ஜி-க்கு மாற்றம்

பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் முயற்சியாக, தமிழ்நாடு அரசு மும்பையைச் சேர்ந்த எக்கோஃப்யூயல் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, 850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற உள்ளது.

நிறுவனத்தின் செய்திக்குறிப்பின்படி, இந்த மாற்றுப் பணிகள் 12 மாதங்களில் நிறைவடையும்.

இந்த ஒப்பந்தம், சிஎன்ஜி வாகன மாற்றத் துறையில் எக்கோஃப்யூயலின் முன்னணியை வலுப்படுத்துகிறது. இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிஎன்ஜி-க்கு மாற்றிய நிறுவனம், தனது மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் செலவை மிச்சப்படுத்துகிறது.

உளுந்து, பச்சைப்பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கவும், அவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து உளுந்து, பச்சைப் பயறு ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

அதன்படி, 2025-2026-ஆம் ஆண்டுக்கான சம்பா பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சைப் பயறுக்கு ரூ.87.68, ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,768 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், சேலம், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

உளுந்து ஒரு கிலோ ரூ.78, ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,800 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

கன்னட இலக்கியவாதி எஸ்.எல். பைரப்பா காலமானார் – வயது 94

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் எஸ்.எல். பைரப்பா (94), முதுமை காரணமான உடல்நல பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் புதன்கிழமை காலமானார். அவர் பெங்களூரு ராஜாஜிநகர் ஜெயதேவ மேமோரியல் ராஷ்ட்ரோத்தனா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது, பிற்பகல் 2.38 மணிக்கு இறந்தார்.

1930 ஆகஸ்ட் 20 அன்று கர்நாடக மாநிலம் சந்தேஷ்வரா கிராமத்தில் பிறந்த பைரப்பா, கேரூர் ராமசாமி ஐயங்காரின் இலக்கியங்களால் ஈர்க்கப்பட்டு தனது முதல் நாவலான பீமாகாயா’ (1958)வை வெளியிட்டார். அதன் பின்னர் பல முக்கியமான நாவல்களை எழுதியார். அவை இந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக ‘வம்ஷவிருக்ஷா’ நாவல் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

இலக்கியத்துக்கான இவரது பங்களிப்பை பாராட்டி, கன்னட சாகித்திய அகாடமி விருது, பேந்த்ரே தேசிய விருது, சாகித்திய அகாடமி ஃபெல்லோஷிப், சாகித்திய அகாடமி விருது, சரஸ்வதி சம்மான், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசியச் செய்திகள்

முப்படை தலைமைத் தளபதியின் பதவிக் காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

முப்படை தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகானின் பதவிக் காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 30 வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நீடிக்கும். மேலும், அவர் ராணுவ விவகாரத் துறைச் செயலராகவும் தொடர்ந்து பணியாற்றுவார். இந்த நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஜெனரல் அனில் சவுகான், 2022 செப்டம்பர் 28 அன்று முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1981-ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் இணைந்த அவர், பரம் விசிஷ்ட் சேவைப் பதக்கம், உத்தம் யுத் சேவைப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

பிகாரில் ₹3,822 கோடி தேசிய நெடுஞ்சாலை திட்டம்

மத்திய அரசு, பிகாரில் 78.9 கி.மீ. நீளமான சாப்ரா–மெஹ்சி சாலைப்பகுதியை நான்கு வழி சாலையாக மேம்படுத்த ₹3,822.31 கோடி திட்டத்தை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய பாதை, பாட்னா – இந்தியா – சீனா, நேபாளம், பூடான், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகத் தொடர்பை வலுப்படுத்தும்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் – கப்பல் கட்டும் மற்றும் கடல்சார் உள்கட்டமைப்புக்கான ₹69,725 கோடி திட்டம்

நாட்டின் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் வலுப்பெறும் வகையில், கப்பல் கட்டும் துறை மற்றும் கடல்சார் உள்கட்டமைப்பை மேம்படுத்த ₹69,725 கோடி திட்டத்தை மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • புதிய மற்றும் நவீன கப்பல்கள் கட்டுதல் ஊக்குவிப்பு

  • தொழில்நுட்ப மேம்பாடு

  • இந்தியாவை பசுமை எரிசக்தி கப்பல்கள் தயாரிப்பில் சர்வதேச மையமாக மாற்றுதல்

  • வர்த்தக, சரக்கு போக்குவரத்து எளிதாக்கம்

  • இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் கப்பல் வடிவமைப்பு மையம் நிறுவுதல்

  • கப்பல் கட்டும் மற்றும் பழுது பார்க்கும் திட்டங்களுக்கு ஊக்கம்

இதன் மூலம் ஆண்டுதோறும் 45 லட்சம் டன் சரக்கு கையாளும் திறன் உருவாகும். 30–45 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும் ₹4.5 லட்சம் கோடி முதலீடுகள் இந்திய கடல்சார் துறையில் ஈர்க்கப்படும். இது ஆற்றல், உணவு பாதுகாப்பு, வர்த்தக வழித்தடங்கள் ஆகியவற்றையும் வலுப்படுத்தும்.

சமகால இணைப்புகள்