TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15-09-2025
முக்கிய தினங்கள்
செப்டம்பர் 15 – சர்வதேச ஜனநாயக தினம்
சர்வதேச ஜனநாயக தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2007 ஆம் ஆண்டு அறிவித்து, 2008 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தின் கொள்கைகள், மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் குடிமக்கள் பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாளாக இது அமைந்துள்ளது.
“ஜனநாயகம் மக்களுக்கானது, மக்களால் நடத்தப்படுவது” என்பதைக் நினைவூட்டுவதோடு, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தனித்தலைப்புடன் கொண்டாடப்படும் இந்த நாள், உலகளவில் ஜனநாயகத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது.
2025 சர்வதேச ஜனநாயக தினத்தின் தலைப்பு
“குரலிலிருந்து செயல்படுவோர்க்கு”
செப்டம்பர் 15 – பொறியாளர் தினம் (இந்தியா)
பாரத ரத்னா சர் எம். விஸ்வசராய்யா அவர்களை நினைவுகூரும் வகையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. 1861 ஆம் ஆண்டு பிறந்த இவர், “இந்தியாவின் நவீன பொறியியல் தந்தை” என்று போற்றப்படுகிறார். பாசன முறைகள், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் அடிக்கட்டு வளர்ச்சியில் அவர் செய்த பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புடையது.
குறிப்பாக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜா சாகர் அணையை வடிவமைத்தவர். மேலும், 1912 முதல் 1918 வரை மைசூர் திவானாக பணியாற்றிய காலத்தில், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தினார். இவரது பங்களிப்பை பாராட்டி, 1955 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பொறியாளர் தினம், அவர் சாதனைகளை நினைவுபடுத்துவதோடு, இந்திய முன்னேற்றத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
விளையாட்டுச் செய்திகள்
ஆசிய கோப்பை ஹாக்கி – சீனாவுக்கு பட்டம், இந்தியாவுக்கு வெள்ளி
ஆசிய மகளிர் ஹாக்கி கோப்பை இறுதியில், இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. சீனா சாம்பியனாக பட்டத்தை வென்று, 2026 உலகக்கோப்பைக்கான நேரடி தகுதியையும் பெற்றது.
இறுதிப் போட்டியில், இந்தியா தொடக்க நிமிடத்திலேயே காலீர் அடித்த கோலால் முன்னிலை பெற்றது. ஆனால் பின்னர் சீனாவின் சிமியா கி (21’), ஹவ் ராய்ம் (41’), மெய் ராக் (51’), தியாங் காங்க்சும் (53’) அடித்த கோல்களால் இந்தியா தோல்வியடைந்தது.
இந்த தோல்வியால், இந்தியா 2026 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
ஹோங்காங் ஓபன் – லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி
ஹோங்காங் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் சாத்விக்-சிராக் இணை வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
ஆடவர் ஒற்றையர் இறுதியில் லக்ஷயா, உலக நான்காம் நிலை வீரர் லி ஷிஃபெங்-க்கு எதிராக 15-21, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பெற்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக், சீனாவின் ஒலிம்பிக் வெள்ளியாளர்கள் வெய் கெங் – வாங் சாங் ஜோடிக்கு எதிராக 21-19, 14-21, 17-21 என்ற கணக்கில் தோற்று ரன்னராக முடித்தனர்.
இந்த சீசனில் தொடர்ந்து 6 போட்டிகளில் அரையிறுதி அடைந்த சாத்விக்-சிராக், தொடக்கத்தில் வலுவாக ஆடியும், பின்னர் தவறுகள் காரணமாக பட்டத்தை தவறவிட்டனர். இதனால் இந்தியாவுக்கு இரட்டை பட்டம் கிடைக்கும் வாய்ப்பு இழந்தது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – தங்கம் வென்ற மீனாக்ஷி, ஜாஸ்மின்
இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மீனாக்ஷி ஹுடா (48 கிலோ) மற்றும் ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ) தங்கம் வென்று உலக சாம்பியன்கள் ஆனார்கள்.
ஜாஸ்மின், போலந்தின் அகுலினா செர்பிடென்யாவை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் பெற்றார். அதேபோல், மீனாக்ஷி நவீன் சௌத்ரியை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கம் வென்றார்.
80 கிலோ பிரிவில் நூபுர் வெள்ளியும், பூஜா ராணி வெண்கலமும் பெற்றனர்.
முன்னதாக மேரி கோம் (6 முறை), நிகாத் சரீன் (2 முறை) உள்ளிட்ட பலர் உலக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இப்போது ஜாஸ்மின் மற்றும் மீனாக்ஷி அந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
தேசியச் செய்திகள்
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தர், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, அப்பதவியில் இருந்த நீதிபதி கே. சோமசேகர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த பல நீதிபதிகள் – ராமலிங்கம் கதார், எம்.வி. முரளிதரன், டி. கிருஷ்ணகுமார் – முன்பு மணிப்பூர் தலைமை நீதிபதிகளாக பணியாற்றியுள்ளனர்.
குறிப்பு: உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65.
குடியரசு துணைத் தலைவரின் செயலாளராக அமித் கரே நியமனம்
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித் கரே, புதிய குடியரசு துணைத் தலைவர் சி.டி. ராகாகிருஷ்ணன் அவர்களின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1985-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார்.
அமித் கரே முன்னதாக 2021 அக்டோபர் முதல் பிரதமரின் ஆலோசகராக பணியாற்றி வந்தார். மேலும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, உயர்கல்வித் துறை செயலாளராகவும் இருந்துள்ளார்.
2020 தேசிய கல்விக் கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்துள்ளார். டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை, அஹமதாபாத் ஐ.ஐ.எம்-இல் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு செய்திகள்
’காக்கும் கரங்கள்’ அமைப்புக்கு பிரத்யேக ‘கைப்பேசி செயலி’
ஆதரவற்றோர் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களை விரைந்து மீட்க, ‘காக்கும் கரங்கள்’ அமைப்புக்கான செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மொபைல் ஆப் உருவாக்கப்படுகிறது.
2021-இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, காவல் துறை, 25 தொண்டு அமைப்புகள், 200 தன்னார்வலர்களுடன் இணைந்து, ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்கிறது அல்லது குடும்பத்துடன் இணைக்கிறது.
புதிய ஆப் மூலம் மக்கள் எளிதில் புகார் அளிக்க முடியும்; காணாமல் போனவர்கள் பட்டியலுடன் தரவு ஒப்பிடப்பட்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
193 பேருக்கு அண்ணா பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு மொத்தம் 193 பேருக்கு “அண்ணா பதக்கம்” வழங்குவதாக அறிவித்துள்ளது.
அரசின் செய்திக்குறிப்பின் படி, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தம், ஊர்க்காவல் படை, விரல் ரேகைப் பிரிவு, தடய அறிவியல் துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் –
காவல் துறையில் 150 பேர்
தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் 22 பேர்
சிறை துறையில் 10 பேர்
ஊர்க்காவல் படையில் 5 பேர்
விரல் ரேகைப் பிரிவில் 2 பேர்
தடய அறிவியல் துறையில் 4 பேர்
மொத்தம் 193 பேர் அண்ணா பதக்கத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு வீரத்திற்கான அண்ணா வீரதீரா பதக்கம்:
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 நோயாளிகளை காப்பாற்றிய உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் மற்றும் முன்னணி தீயணைப்போர் புனித் ராஜ்.
மதுரையில் ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய தீயணைப்போர் ராஜசேகர்.
இவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பணிச்சீரை பாராட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அண்ணா வீரதீரா பதக்கம் வழங்கப்படுகிறது.
பொருளாதாரச் செய்திகள்
குளிர்கால கூட்டத்தொடரில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததாவது, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) வரம்பு 74% இலிருந்து 100% ஆக உயர்த்தப்பட உள்ளது.
இந்நிலையில், காப்பீட்டு துறையில் இதுவரை ₹82,000 கோடி முதலீடு வந்துள்ளது. இந்த திருத்தத்தின் கீழ் காப்பீட்டு சட்டம் (1938), இந்திய ஆயுள் காப்பீட்டு கழக சட்டம் (1956), மற்றும் IRDA சட்டம் (1999) ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அரசின் இலக்கு “2047க்குள் அனைவருக்கும் காப்பீடு” என்பதாகும். தற்போது இந்தியாவில் 25 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 34 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. முந்தைய காலங்களில் FDI வரம்பு 2015-இல் 26% → 49% ஆகவும், 2021-இல் 49% → 74% ஆகவும் உயர்த்தப்பட்டது.