Current Affairs Fri Aug 15 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15-08-2025

சர்வதேசச் செய்திகள்

தேசிய இரங்கல் நாள் (பங்களாதேஷ்) - ஆகஸ்ட் 15

பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று தேசிய இரங்கல் நாள் கடைபிடிக்கப்படுகிறது, இது ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்கு நினைவாகும்.

பங்களாதேஷின் நிறுவனர் மற்றும் முதல் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், 1975 ஆம் ஆண்டு ஒரு இராணுவத் திட்செயலில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டார்.

இந்த நாள் இராணுவ ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டது, ஆனால் 1996 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமராக வந்த பிறகு மீண்டும் தேசிய இரங்கல் நாளாக அறிவிக்கப்பட்டது.

பங்களாதேஷைப் பற்றிய முக்கியமான தகவல்கள்

மாநிலத் தலைநகர் – டாகா அதிகாரப்பூர்வ மொழி – பெங்காலி ஜனாதிபதி – மொஹம்மட் ஷஹபுத்தீன் முதன்மை ஆலோசகர் – முகம்மட் யூனுஸ் முக்கிய நீதியரசர் – சையத் ரஃபாத் அஹமட்

பொருளாதாரச் செய்திகள்

டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநராக நோல் டாடா நியமனம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் சாரா இயக்குநராக நோல் டாடாவை நியமிக்க அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். டாடா சன்ஸ், $165 பில்லியன் மதிப்பிலான குழும நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற 107வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், மற்ற குழும மாற்றங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறைந்த முதலீட்டு ஆதாயங்களால் டாடா சன்ஸின் FY25 லாபம் குறைந்துள்ளதால், குழும நிறுவனங்களிடமிருந்து அதிக ஈவுத்தொகையை கோரியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான நோல் டாடா, டாடா சன்ஸில் 66.4% பங்குகளை வைத்திருக்கும் டாடா அறக்கட்டளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் அறக்கட்டளைகளால் டாடா சன்ஸ் குழுமத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு, கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். தகவல்களின்படி, மேலும் மூன்று இயக்குநர்களின் நியமனத்திற்கும் ஆண்டு பொதுக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நியமனங்களில் வேணு சீனிவாசன் மற்றும் சவுரப் அகர்வால் (இயக்குநர்களாக மீண்டும் நியமனம்) மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளின் வளர்ச்சி நிதியான ‘ப்ராஸ்பெரேட்’-இன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான அனிதா மரங்கோலி ஜார்ஜ் ஆகியோர் சுயாதீன இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசியச் செய்திகள்

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை: ஐஐடி-எம் மற்றும் எஸ்பிஐ புதிய திட்டம்

இந்தியா முழுவதும் உள்ள 100 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக, ஐஐடி மெட்ராஸ் மற்றும் எஸ்பிஐ ஃபவுண்டேஷன் இணைந்து விளையாட்டு உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஐஐடி-எம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வீரர்களுக்கு அறிவியல் பூர்வமான பயிற்சியுடன், தலா ₹40,000 மாத உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டம், எஸ்பிஐ ஃபவுண்டேஷனின் எம்.டி மற்றும் சிஇஓ சஞ்சய் பிரகாஷ் மற்றும் பலர் முன்னிலையில் வியாழக்கிழமை அன்று முறையாகத் தொடங்கப்பட்டது.

பிஎஸ்என்எல் சேவை மேம்பாட்டுக்கு கூடுதலாக ரூ. 47,000 கோடி

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த ரூ.47,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘கடந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கப்பட்டதுடன், 4ஜி சேவையை மேம்படுத்த 1 லட்சம் தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டன. சேவைகளை மேம்படுத்த இந்த ஆண்டு கூடுதலாக ரூ.47,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து சராசரியாக ரூ.40 முதல் ரூ.175 வரை வருவாய் ஈட்டுகிறது. இது ஜியோ நிறுவனத்தில் ரூ.208 ஆகவும், ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.250 ஆகவும் உள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

தடகளம்: ‘எஸ்ஆர்ஒய்’ பரிசோதனை கட்டாயம்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள வீராங்கனைகள் ‘எஸ்ஆர்ஒய்’ என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்வதை, இந்திய தடகள சம்மேளனம் கட்டாயமாக்கியுள்ளது. ஒரு நபரின் பிறப்புப் பாலினத்தைக் கண்டறிவதற்கு இந்த ‘எஸ்ஆர்ஒய்’ பரிசோதனை உதவுகிறது. ஆணாகப் பருவ வயது அடைந்து, பிறகு பெண்ணாக மாறியவர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க உலக தடகள அமைப்பு தடை விதித்துள்ளது. பிறப்பில் ஆணாக இருந்து, பின்னர் பெண்ணாக மாறியோர் மகளிர் பிரிவில் பங்கேற்கும்போது, உடல்ரீதியாக அவர்களுக்கு இயல்பாகவே சாதகமான நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், டோக்கியோவில் செப்டம்பரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப்பில் மகளிர் பிரிவில் பங்கேற்க விரும்புவோர் ‘எஸ்ஆர்ஒய்’ பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என உலக தடகள அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில், அதுதொடர்பான அறிவுறுத்தலை இந்திய தடகள சம்மேளனம், மாநிலச் சங்கங்களுக்கு அனுப்பியுள்ளது. தற்போதைய நிலையில், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க பாருல் செளதரி (3,000 மீ ஸ்டீபிள்சேஸ்) தகுதிபெற்றிருக்கும் நிலையில், அன்னு ராணி (ஈட்டி எறிதல்) தரவரிசை அடிப்படையில் அந்த வாய்ப்பைப் பெறும் நிலையில் உள்ளார்.

சாம்பியனானது பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில், டார்ட்மண்ட் ஹுஸ்பர் அணியை வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) அணி சாம்பியன் ஆனது. போட்டியின் வரலாற்றில் அந்த அணிக்கு இது முதல் கோப்பையாகும். முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பிஎஸ்ஜி 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் பிஎஸ்ஜி வென்ற 5-ஆவது சாம்பியன் கோப்பை இதுவாகும். உள்நாட்டில் லீக் 1, கூப் டி பிரான்ஸ், டிரோஃபி சாம்பியன்ஸ் போட்டிகளிலும், ஐரோப்பிய கண்டத்தில் சாம்பியன்ஸ் லீக், சூப்பர் கோப்பை போட்டிகளிலும் அந்த அணி வாகை சூடியுள்ளது.

மாநிலச் செய்திகள்

தமிழ்நாட்டில் ரூ.1,937 கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்

தமிழ்நாட்டில் ரூ.1,937 கோடி முதலீட்டுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 13 ஆயிரத்து 409 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் துறை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அமைச்சர் ராஜா வெளியிட்ட பதிவு: மின்னணு சாதனங்கள் உற்பத்தி, பொறியியல் வடிவமைப்பு, ஜவுளி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக, போபா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களின் முதலீடுகள் செயலாக்கத்துக்கு வரவுள்ளன. கடந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, அந்நிறுவனங்களிடமிருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், ரூ.1,937.76 கோடி முதலீடுகள் செய்யப்படும், அதன் வழியாக 13 ஆயிரத்து 409 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் பல புதிய முதலீடுகளுக்கும், விரிவாக்கத் திட்டங்களுக்கும் ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன.

அவசரம் 108 செயலி

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ள அவசரம் 108 என்ற பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது 11 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அந்த கால அளவு 13 நிமிஷங்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அளவை மேலும் குறைக்கும் வகையில், அவசரம் 108 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் மேப் எனப்படும் வரைபடத்துடன் கூடிய தகவல் பரிமாற்ற வசதி உள்ளதால், காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது. இருசக்கர ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கத்தின் கூறியதாவது: சாலை விபத்துகளாலோ அல்லது அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு, ஒவ்வொரு நிமிஷமும் விலைமதிப்பற்றது. அந்த வகையில் தற்போது 108 உதவி மையத்துக்கு அழைப்பு வந்ததும் தங்களது பெயர், மாவட்டம், ஊர், தெரு, வீட்டு எண் உள்ளிட்டவை அடங்கிய விவரங்களை வாய்ஸ் மெசேஜ் ஆக ரெகார்ட் செய்து அதை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவிடலாம். அல்லது இந்த செயலி மூலமே பதிவு செய்துவிடலாம். இந்த புதிய நடைமுறை மூலம் சராசரியாக 13 நிமிஷங்களாக இருந்த ஆம்புலன்ஸ் சேவையின் வருகை நேரம், தற்போது 11 நிமிஷங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

சமகால இணைப்புகள்