Current Affairs Wed Aug 13 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 13-08-2025

சர்வதேசச் செய்திகள்

சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசு அங்கீகாரம்

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கை பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகெங்கிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை வருகின்றனர். அந்த வகையில், இலங்கையில் இருந்து ஆண்டுதோறும் 15,000-க்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில், அந்நாட்டு பக்தர்களின் வருடாந்திர சபரிமலை யாத்திரையைப் புனித யாத்திரையாக அங்கீகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. அதன் பின்னர், மகரவிளக்கு யாத்திரைக்காக கோயில் மீண்டும் திறக்கப்படும். ஜனவரி மாதத்தில் யாத்திரை காலம் முடிந்த பின்னர், கோயில் நடை சாத்தப்படும்.

விளையாட்டுச் செய்திகள்

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா

தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா (2025) ஆகியவை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறிய அந்த மசோதாக்கள், மாநிலங்களவையில் அதே வாக்கெடுப்பு முறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிறைவேறின. இதையடுத்து இரு மசோதாக்களும் இப்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவரின் ஒப்புதலுக்குப் பிறகு அவை சட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான அறிக்கை வெளியிடப்படும். தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதாக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, நாட்டிலுள்ள விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, மசோதாக்கள் நிறைவேற்றத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘உலக அளவில் ஏற்பட்டுள்ள 20 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது 21-வது நாடாக இந்தியா இணையவுள்ளது. விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்தத்தின் மூலமாக, வரும் காலத் தில் போட்டிகளில் பதக்கங்களை அதிகரிப்பதற்கான உத்திகள் வகுக்கப்படும். அதனடிப்படையில், அடுத்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் இருக்கும். புதிய மசோதாக்களின் மூலமாக, விளையாட்டுத் துறையானது போட்டியாளர்களை மையப்படுத்தியதாக இயங்கும். சம்மேளன நிர்வாகங்களில் வெளிப்படைத் தன்மை ஏற்படும். சர்வதேசத் தரத்திலான நடுவர் மன்றம், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி போட்டியாளர்களின் பங்களிப்பும் அதிகரிக்கும்’ என்றார். தேசிய சம்மேளனங்களை திறம்பட வழிநடத்துவதற்காக தேசிய விளையாட்டு வாரியம் அமைப்பது, சச்சரவுகளுக்குத் தீர்வு காண்பதற்காக தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் அமைப்பது, சம்மேளன தேர்தல்கள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய தேசிய விளையாட்டுத் தேர்தல் குழு அமைப்பது, நிர்வாகப் பொறுப்புகளில் போட்டியிடுவோருக்கான வயது தளர்வு, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள்ளாக தேசிய சம்மேளனங்களைக் கொண்டு வருவது உள்ளிட்டவை, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.

பொருளாதாரச் செய்திகள்

பொதுத்துறை வங்கிகளின் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்

கடந்த 5 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் கணக்குப் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாராக் கடன்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வசூலிக்க முடியாமல் இருக்கும்போது, அவை வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கப்படும். நிதி நிர்வாக வசதிக்காக இந்த நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது கடன் தள்ளுபடி நடவடிக்கையல்ல. அந்தக் கடனை வசூலிக்க வங்கிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும். இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது: 2024-25 நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.91,260 கோடி வாராக்கடன்கள் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் இது ரூ.1.15 லட்சம் கோடியாக இருந்தது. 2020-21 நிதியாண்டில் மிக அதிகபட்சமாக ரூ.1.33 லட்சம் கோடி வாராக்கடன் வங்கிப்பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக்கடன் நீக்கப்பட்டது. முந்தைய 5 ஆண்டுகளில் நீக்கப்பட்ட வாராக்கடன் ரூ.1.65 லட்சம் கோடியாகும். இது நீக்கப்பட்ட மொத்த வாராக்கடனில் 28 சதவீதமாகும். சில நீதிமன்றங்கள், கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் மூலம் வாராக்கடன்களை திரும்ப வசூலிக்க வங்கிகள் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் முத்ரா திட்டத்தின்கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.21.68 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகளை ஏலம் விட்டு பணத்தை வசூலிக்க உதவும் ‘சர்பேசி’ சட்டப் படி 2,15,709 வழக்குகளை தொடுத்து வங்கிகள் ரூ.32,466 கோடி கடனை மீட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

தேசியச் செய்திகள்

அருணாசலில் ரூ. 8,146 கோடியில் நீர் மின் உற்பத்தி திட்டம்

அருணாசல பிரதேச மாநிலம் ஷி யோமி மாவட்டத்தில் ரூ. 8,146.21 கோடி முதலீட்டில் 700 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ‘டடோ-2’ நீர் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

லக்னோ மெட்ரோ ரயில் திட்டம்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ரூ. 5,801 கோடி மதிப்பீட்டில் 11.165 கி.மீ. தொலைவுக்கு புதிய மெட்ரோ ரயில் (பகுதி 1பி) திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஆந்திரம் உள்பட 3 மாநிலங்களில் 4 ‘சிப்’ உற்பத்தி நிறுவனங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திரம், ஒடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ. 4,594 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 4 குறை மின் கடத்திகள் (சிப்) உற்பத்தி நிறுவனங்களை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் ‘இந்திய செமிகண்டக்டர் இயக்கம்’ திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாட்டில் சிப் உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு நிதியுதவி அளிக்க ரூ. 76,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ஆந்திரம், ஒடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் 4 செமிகண்டக்டர் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் ரூ. 2,066 கோடி முதலீட்டில் சிக்னெடிக்ஸ் செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 9.6 கோடி ‘சிப்’ களை உற்பத்தி செய்யும் திறனுடன் இது அமையும். சிலிக்கான் கார்பைடு அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடிய வலுவான உலோகமாகும். ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், தொலைபேசி கோபுரங்கள், ராக்கெட்டுகள், ரயில் என்ஜின்களில் சிலிக்கான் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. ரூ.1,943 கோடி முதலீட்டில் ஒடிஸா மாநிலம் முப்பர்மண்டல இன்டெல் இந்தியா டெக்னாலஜி செமிகண்டக்டர் (3டி பிளஸ்) உற்பத்தி மையத்தை அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரிய ‘சிப்’ உற்பத்தி நிறுவனமான லோக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் உதவியுடன், ஹெட்டெஜ் இன்டகிரேஷன் பேக்கேஜிங் சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவனம் அமைக்க உள்ளது. ஆண்டுக்கு 5 கோடி சிப் உற்பத்தி திறனுடன் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தில் ‘அட்வான்ஸ்டு சிஸ்டம் இன் பேக்கேஜிங் டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ரூ.468 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 9.6 கோடி ‘சிப்’ உற்பத்தி திறனுடன் செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. அதுபோல, பஞ்சாப் மாநிலத்தில் சிஐஓஎஸ் நிறுவனம் சார்பில் ரூ. 117 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 15.8 கோடி ‘சிப்’ உற்பத்தி திறனுடன் செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமையப்பட உள்ளது என்றார். மேலும், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி யில் நாட்டின் மின்னணு உற்பத்தித் துறை கடந்த 11 ஆண்டுகளில் ரூ. 12 லட்சம் கோடி மதிப்பில் 6 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. மின்னணு பொருள்கள் ஏற்றுமதி ரூ.3.3 லட்சம் கோடி மதிப்பில் 8 மடங்கு அளவுக்கு வளர்ச்சி யடைந்துள்ளது. கைப்பேசி கள் உற்பத்தி ரூ 5.5 லட்சம் கோடியில் 28 மடங்கு வளர்ச்சிபெற்றுள்ளது. வரும் செப்டம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், கொரியா நாடுகளுடன் இணைந்து ‘செமிகான் இந்தியா 2025’ என்ற சர்வதேச குறை கடத்தி மாநாடு மற்றும் கண்காட்சியை இந்தியா நடத்த உள்ளது என்றார்.

சமகால இணைப்புகள்