Current Affairs Tue Aug 12 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12-08-2025

தேசியச் செய்திகள்

மாநிலங்களவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, வணிகக் கப்பல் போக்குவரத்து மசோதா, 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

வணிகக் கப்பல் போக்குவரத்து மசோதா, 2025-க்கு மாநிலங்களவை இன்று ஒப்புதல் அளித்ததையடுத்து, நாடாளுமன்றம் இன்று அந்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா, இந்தியாவின் கடல்சார் கட்டமைப்பை நவீனமயமாக்குதல், உள்நாட்டுச் சட்டங்களை சர்வதேச சிறந்த நடைமுறைகள் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) மரபுகளுடன் இணங்கச் செய்தல், மற்றும் தற்கால மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் கடல்சார் துறை நன்கு ஆயத்தமாகவும், தயாராகவும், பொருத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு மைல்கல் சட்டமாக விளங்குகிறது. நடைபெற்று வரும் கூட்டத்தொடரின் போது, கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் (MoPSW) திரு. சர்பானந்தா சோனோவால் அவர்களால் மாநிலங்களவையில் பரிசீலனைக்காக இந்த மசோதா முன்வைக்கப்பட்டது.

எஸ்ஐஆர் விவகாரத்தில் அமளிக்கு மத்தியில் புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், எந்தவித விவாதமும் இன்றி புதிய வருமான வரி மசோதாவை மக்களவை திங்கள்கிழமை நிறைவேற்றியது. தேர்வுக் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை உள்ளடக்கிய மசோதாவின் திருத்தப்பட்ட பதிப்பை அரசு தாக்கல் செய்தது. அசல் வரைவில், வீட்டுச் சொத்து வரி விதிப்பு, ஓய்வூதியக் கழிவுகள் மற்றும் தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான ரீஃபண்ட் செயல்முறை போன்றவற்றில் தெளிவற்ற நிலை இருந்தது. திருத்தப்பட்ட மசோதா இந்த சிக்கல்களைத் தீர்க்கிறது. முந்தைய வரைவில், உரிய தேதிக்குள் அல்லது அதற்கு முன் ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே வரி ரீஃபண்ட்களை அனுமதிக்கும் ஒரு விதிமுறை இருந்தது. அது நீக்கப்பட்டதுதான் மிக முக்கியமான மாற்றமாகும்.

சர்வதேசச் செய்திகள்

வங்கதேச சணல் பொருட்களுக்கு தரைவழி இறக்குமதிக்குத் தடை

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் நிலவும் சூழலில், வங்கதேசத்தில் இருந்து அனைத்து தரைவழி மார்க்கமாகவும் இறக்குமதி செய்யப்படும் தடை செய்யப்பட்ட சணல் பொருட்களின் பட்டியலில் இந்தியா திங்களன்று மேலும் பல பொருட்களைச் சேர்த்தது. பட்டியலில் சேர்க்கப்பட்ட பொருட்கள், சணல் அல்லது பிற ஜவுளி நார்களின் வெளுக்கப்பட்ட மற்றும் வெளுக்கப்படாத நெய்த துணிகள்; நூல், கயிறு, சணல் கயிறு; மற்றும் சணல் சாக்குகள் மற்றும் பைகள் ஆகும். இருப்பினும், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் (DGFT) அறிவிப்பின்படி, இந்த இறக்குமதிகள் நவா ஷேவா துறைமுகம் வழியாக அனுமதிக்கப்படுகின்றன. “இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள எந்தவொரு தரைவழி துறைமுகத்திலிருந்தும் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது,” என்று அது கூறியது. மேலும், “வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு சில பொருட்களை இறக்குமதி செய்வது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தது.

ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீன அரசை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும்

செப்டம்பரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார். “மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா) வன்முறைச் சுழற்சியை உடைக்கவும், காசாவில் மோதல், துன்பம் மற்றும் பட்டினியை முடிவுக்குக் கொண்டுவரவும் இரு-அரசு தீர்வுதான் மனிதகுலத்தின் சிறந்த நம்பிக்கை” என்று அவர் கான்பெராவில் செய்தியாளர்களிடம் கூறினார். “பாலஸ்தீன மக்களின் சொந்த நாட்டுக்கான உரிமையை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும். இந்த உரிமையை நனவாக்க நாங்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம்.”

‘முதலில் நாடு கடத்தல், பிறகு மேல்முறையீடு’ பிரிட்டன் திட்டத்தில் இந்தியா சேர்ப்பு

வெளிநாட்டு குற்றவாளிகளை சொந்த நாட்டுக்கு கடத்தும் பிரிட்டனின் ‘முதலில் நாடு கடத்தல், பிறகு மேல்முறையீடு’ திட்டத்தில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘முதலில் நாடு கடத்தல், பிறகு மேல்முறையீடு’ திட்டத்தின் கீழ், குற்ற வழக்கு களில் சம்பந்தப்பட்டு வெளிநாட்டவர்கள், பிரிட்டனில் இருந்து நாடு கடத்த முடிவு செய்யப்பட்டால், அதற்கு எதிராக அவர்கள் பிரிட்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முன், அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவர். இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அல்பானியா, நைஜீரியா, எஸ்தோனியா உள்ளிட்ட 8 நாடுகள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியா, ஆர்மீனியா, கனடா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது. இதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்து அவர்களை பிரிட்டனில் இருந்து நாடு கடத்த முடிவு செய்யப்பட்டால், அதற்கு எதிராக அவர்கள் பிரிட்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முன், அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர். அதன் பின்னர் அவர்கள் சொந்த நாட்டிலிருந்து பிரிட்டன் நீதி மன்றத்தில் காணொலி வழியாக மேல்முறையீட்டு விசாரணையில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்

கம்யூனிட்டி ஷீல்டை கைப்பற்றியது கிரிஸ்டல் பேலஸ்

பிரீமியர் லீக் சாம்பியனான லிவர்பூலை வீழ்த்தி, கம்யூனிட்டி ஷீல்டை வென்று, கிரிஸ்டல் பேலஸ் மற்றொரு வெம்ப்ளி வெற்றியைப் பதிவு செய்தது. மே மாதம் நடந்த எஃப்.ஏ கோப்பை இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிறகு, பேலஸ் மீண்டும் எதிர்பார்ப்புகளைத் தகர்த்தது - ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் 2-2 என சமனில் முடிந்ததைத் தொடர்ந்து, ஷூட்-அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. “மூன்று மாதங்களில் இரண்டு கோப்பைகள். இது நம்பமுடியாதது. வரலாற்றின் அடுத்த பக்கத்தைக் காண்போம்,” என்று பேலஸ் கோல்கீப்பர் டீன் ஹென்டர்சன் கூறினார். அவர் ஷூட்-அவுட்டின் போது இரண்டு பெனால்டிகளைத் தடுத்தார்.

ஆசிய யு22 குத்துச்சண்டை: ரித்திகாவுக்கு தங்கம்

தாய்லாந்தில் நடைபெற்ற 22 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு22) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரித்திகா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். மகளிருக்கான 80+ கிலோ இறுதிச்சுற்றில் அவர், 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் அசெல் டோக்டிரோனை வீழ்த்தினார். போட்டியில் இந்தியாவுக்கு இது கடைசி பதக்கமாகும். இத்துடன் இந்தியா 13 பதக்கங்களுடன் போட்டியில் 4-ஆம் இடம் பிடித்தது. முன்னதாக இந்த சாம்பியன்ஷிப்பின் மகளிர் 57 கிலோ பிரிவில் யாத்ரி படேல் - உஸ்பெகிஸ்தானின் குமொர்ரபோனு மமட்ஜோனோவாவிடம் தோல்வி கண்டு வெள்ளி பெற்றார். 60 கிலோ பிரிவில் பிரியா 2-3 என சீனாவின் யு யுயானிடம் தோல்வி கண்டு வெள்ளியுடன் விடைபெற்றார். ஆடவர் 75 கிலோ பிரிவில் நீரஜ் - உஸ்பெகிஸ்தானின் ஷொக்ஜோன் போல்டபோயேவிடமும், 90+ கிலோ பிரிவில் ஜியான் சவுகான் - உஸ்பெகிஸ்தானின் காலிட்ஜோன் மமசலியோவிடமும் தோற்று வெற்றி பெற்றனர்.

மாநிலச் செய்திகள்

தாயுமானவர் திட்டம்

ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பிப்ரவரி 19, 2024 அன்று முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான தாயுமானவர் திட்டத்தின் கீழ் சுமார் ஐந்து லட்சம் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. தாயுமானவர் திட்டத்தின் நோக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஏறக்குறைய ஐந்து லட்சம் ஏழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசின் திட்டங்களின் மூலம் செய்துக் கொடுத்து, சமூகம் மற்றும் வாழ்வாதாரத்தை மேன்மை அடைய செய்வதே முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் முழு நோக்கம் ஆகும். முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் முக்கியமான நன்மைகள் இந்த திட்டத்தின் கீழ், தனியாக வசிக்கும் முதியவர்கள், ஆதரவற்றோர், பெற்றோரை இழந்தை குழந்தைகள், ஒற்றைப் பெற்றோரை குடும்பங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் போன்ற வறிய நிலையில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தின் கீழ் ஏறக்குறைய ஐந்து லட்ச ஏழை, எளிய குடும்பங்கள் பயனடைவார்கள். மேலும், இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக உதவித்தொகை டெபாசிட் செய்யப்படும். அதேபோல், இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இது பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு இடைநிற்றல் இன்றி பள்ளிப் படிப்பை தொடர மிகவும் உதவியாக இருக்கும். இந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரி கல்வி செல்ல உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும்

சமகால இணைப்புகள்