TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02-08-2025
தேசியச் செய்திகள்
உறவுகளை வலுப்படுத்த மணிலா வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்கள்
இந்திய கடற்படையின் கிழக்குக் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த ஐஎன்எஸ் டெல்லி, சக்தி மற்றும் கில்டான் ஆகிய கப்பல்கள் மணிலாவை வந்தடைந்துள்ளன. இந்த வருகை, பிலிப்பைன்ஸுடனான கடல்சார் உறவுகளையும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கிழக்குக் கடற்படையின் தளபதி, ரியர் அட்மிரல் சுஷீல் மேனன் தலைமையில், தென்கிழக்கு ஆசியாவிற்கான செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது. மணிலா வந்தடைந்த இந்தியக் கப்பல்களை பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்கள் வரவேற்றனர். இந்தோ-பசிபிக் பகுதியில் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கான இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டிற்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும்.
கடற்படை துணைத் தலைவராக வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சாயன் பொறுப்பேற்பு
வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சாயன், கடற்படை துணைத் தலைவராக (VCNS) வெள்ளிக்கிழமை அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றதும், புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார். வைஸ் அட்மிரல் வத்சாயன், துப்பாக்கி மற்றும் ஏவுகணை அமைப்புகளில் ஒரு நிபுணர் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது புகழ்பெற்ற கடற்படைப் பணியில், அவர் பலதரப்பட்ட கட்டளை, செயல்பாட்டு மற்றும் பணியாளர் நியமனங்களை வகித்துள்ளார். கடலில், அவர் வழிகாட்டுதல் ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் மைசூர் மற்றும் ஐஎன்எஸ் நிஷாங்க் உள்ளிட்ட பல முன்னணி போர்க்கப்பல்களில் பணியாற்றியுள்ளார்.
ஆர்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு
ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆர்பிஎஃப் டிஜியாக சோனாலி மிஸ்ராவை நியமிக்க மத்திய கேபினட் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. அதன்படி அவர் 2026, அக்டோபர் 31-ஆம் தேதி வரை அந்தப் பதவியில் தொடரவுள்ளார். இவர் 1993, மத்திய பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாவார். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘30 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா தனக்கு வழங்கப்படும் பணிகளை அர்ப்பணிப்புடன் திறம்பட செய்து முடிப்பார். மத்திய பிரதேச போலீஸ் அகாதெமியின் இயக்குநராகவும், சிபிஐ மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உள்பட பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது அவர் ஆர்பிஎஃப் டிஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மனிதக்கடத்தல் மற்றும் பயணிகளுக்கு எதிரான குற்றங்களை நவீனத் தொழில்நுட்பங்களுடன் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அவரை ஆர்பிஎஃப் பெருமையுடன் வரவேற்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
79.71 கோடி ஆயுஷ்மான் பாரத் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன
ஜூலை 28ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 79.71 கோடி ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கியக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறியதாவது: ஒவ்வொரு குடிமகனின் ஆரோக்கியம் தொடர்பான பதிவேட்டை மின்னணு முறையில் பராமரிப்பதற்காக ஆயுஷ்மான் பாரத் மின்னணு தகவல் தொகுப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 4.17 லட்சம் மருத்துவ வல்லுநர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 6.76 லட்சம் சுகாதாரப் பணியாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். ஜூலை 28ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 79.71 கோடி ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கியக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் 65.09 கோடி ஆரோக்கியப் பதிவேடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இணையதள இணைப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் கணக்காக ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கியக் கணக்குகளை கைப்பேசி எழுத்துப் பாரமரிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாநில அரசுகளுடன் தேசிய சுகாதார ஆணையம் இணைந்து பணியாற்றி வருகிறது. மாநில மற்றும் மாவட்ட அளவில் மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அம்சம் தொடர்பான தகவல் பலகைகள் மார்ச் மாதம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒவ்வொரு குடிமகளையும் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோன்று தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயன்கள் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இ-சஞ்சீவனி மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் ஆகிய இரு தொலைநிலை மருத்துவத் திட்டங்கள் (டெலிமெடிசின்) அமல்படுத்தப்பட்டுள்ளன. ஜூலை 28ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 39 கோடி நோயாளிகளுக்கு இ-சஞ்சீவனி திட்டம் சேவை அளித்துள்ளது. 1,34,029 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மையங்கள் மூலம் இச்சேவை வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மையங்களுக்கு இணையதள இணைப்புகளை வழங்குவதில் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன என்று அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தனது பதிலில் தெரிவித்தார்.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள்
சிறந்த நடிகர்: ஷாருக் கான் (ஜவான்), விக்ராந்த் மாசே (12-வது ஃபெயில்) சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (மிஸஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே) சிறந்த துணை நடிகர்: எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்) சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் (பார்க்கிங் - வாத்தி) சிறந்த படம்: பாலிவுட் படம் ‘கௌரி’ சிறந்த இயக்குநர்: ரிஷப் ஷெட்டி (காந்தாரா) சிறந்த பொழுதுபோக்கு படம்: ‘உள்ளொழுக்கு’ (மலையாளம்) சிறந்த அறிமுக இயக்குநர்: ஷாஃபி குவாண்டிலின் மார்க் ஆன்டனி சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஷிஃபூசின் ஜான் ‘ஆமி-மேரே’ 2023-ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக பெண் நட்சத்திரம்: அனிகா சுரேந்திரன் சிறந்த அனிமேஷன் படம்: ‘கனவு’ ‘பார்க்கிங்’ (தமிழ்ப் படம்) பெற்ற விருதுகள் சிறந்த திரைக்கதை சிறந்த தமிழ் படம் சிறந்த துணை நடிகர் குறும்படங்கள் சிறந்த குறும்படம்: ‘டைம்லெஸ் தமிழ்நாடு’ சிறந்த கலை, கலாசாரப் படம்: ‘டைம்லெஸ் தமிழ்நாடு’ சிறந்த குறும்பட இயக்குநர்: லிட்டில் விங்ஸ் என்ற தமிழ் குறும்படத்திற்காக விக்னேஷ்
விளையாட்டுச் செய்திகள்
இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் காலித் ஜமீல்
இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக, முன்னாள் வீரர் காலித் ஜமீல் (48) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளில், அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் அவராவார். 2017-இல் ஐ-லீக் கோப்பையை வெல்ல உதவிய ஜமீல், தற்போது ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
பொருளாதாரச் செய்திகள்
ஜூலை ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடி: 7.5% அதிகரிப்பு
கடந்த ஜூலையில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.95 லட்சம் கோடியாக 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஜிஎஸ்டி வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு ஜூலையில் நாட்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 1,82,075 கோடியாக இருந்தது. இது நிகழாண்டு ஜூலையில் ரூ.1,95,735 கோடியாக 7.5 சதவீதம் அதிகரித்தது. ரூ.1,95,735 கோடியில் மொத்த உள்நாட்டு வருவாய் ரூ.1,43,023 கோடி, மொத்த இறக்குமதி வருவாய் ரூ.52,712 கோடி. கடந்த ஆண்டு ஜூலையில் மொத்த ஜிஎஸ்டி ரீஃபண்ட் ரூ.16,275 கோடியாக இருந்தது. இது நிகழாண்டு ஜூலையில் 66.8 சதவீதம் அதிகரித்து ரூ.27,147 கோடியாக உயர்ந்தது. மாநிலங்கள் அளவில் கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.10,490 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய், நிகழாண்டு ஜூலையில் 8 சதவீதம் அதிகரித்து ரூ.11,296 கோடியாக உயர்ந்தது. இதேபோல கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.225 கோடியாக இருந்த புதுச்சேரி ஜிஎஸ்டி வருவாய், நிகழாண்டு ஜூலையில் 9 சதவீதம் அதிகரித்து ரூ.245 கோடியாக உயர்ந்தது.
மாநிலச் செய்திகள்
ஆங்கில மொழித் திறனை வளர்க்கும் ‘லெவல் அப்’ திட்டம்
அரசுப் பள்ளிகளில் அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளர்க்கும் வகையில் ‘லெவல் அப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து உரிய கால இடைவெளியில் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களின் கேட்டல், வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்துவதற்காக ‘லெவல் அப்’ என்ற தன்னார்வத் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தால் மாணவர்களின் மொழித் திறன்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணப்படுவதாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து நேர்மறையான கருத்துக்கள் கிடைத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய 4 அடிப்படை மொழித் திறன்களோடு இணைந்து சொற்களஞ்சியம், இலக்கணப் பயிற்சிகள், படைப்பாற்றல் சார்ந்த எழுதுதல் ஆகியவை இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் பாடங்களுடன் தொடர்புடைய அடிப்படை இலக்கணப் பகுதிகளையும், புதிய சொற்களையும், படைப்பாற்றலுடன் எழுதுதல் உள்ளிட்ட திறன்களைக் கற்றுக்கொள்ள ஏதுவாக செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் முறையாகப் பின்பற்றி அனைத்து மாணவர்களும் அடிப்படை மொழித் திறன்களைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.