TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 30-07-2025
தேசியச் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசார்’ செயற்கைக்கோள்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஜூலை 30 மாலை விண்ணில் ஏவப்பட உள்ளது. இது புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டம் ₹12,000 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. ஏவுதலுக்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் ஜூலை 29 அன்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதன் எடை 2,392 கிலோ; ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள். புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பனிப்பாறை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களைப் பெற முடியும். நிசார், புவிப்பரப்பை 12 நாட்களுக்கு ஒருமுறை முழுமையாகச் சுற்றி வரும். இது P-பேண்ட் மற்றும் S-பேண்ட் ஆகிய இரண்டு அலைவரிசைகளைக் கொண்ட ராடார் கருவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த திட்டத்தில் நாசா P-பேண்ட் சிதறல் அப்ரேச்சர் ராடார், ஒரு ஜிபிஎஸ் ரிசீவர், அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் மற்றும் ஒரு பேலோட் டேட்டா சிஸ்டம் ஆகியவற்றை வழங்கியுள்ளது.
பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘பிரளய்’ ஏவுகணையின் இரண்டு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 150 கி.மீ. முதல் 500 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையிலான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்டுள்ளது. பிரளய் ஏவுகணை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையின் இரண்டு சோதனைகள் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒடிசா மாநிலம் குலா கலாவோவ் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த ஏவுகணையை டிஆர்டிஓ, பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் டிஆர்டிஓவின் பிற ஆய்வகங்கள் இணைந்து வடிவமைத்துள்ளன.
பொருளாதாரச் செய்திகள்
அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி ஏற்றுமதி: சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம்
அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) ஏற்றுமதி செய்வதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த அறிதிறன்பேசி இறக்குமதி 1% அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு இந்திய அறிதிறன்பேசி ஏற்றுமதி 61% அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அறிதிறன்பேசிகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 240% உயர்ந்துள்ளது. அமெரிக்கா இறக்குமதி செய்யும் அறிதிறன்பேசிகளில் 44% இந்தியாவில் இருந்து செல்கிறது. அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் ஏற்பட்டதால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது உற்பத்தி மையமாக மாற்றத் தொடங்கியது, இது இந்தியாவில் ஏற்றுமதி அதிகரிக்க முக்கிய காரணம். இந்தியாவிற்கான சீனாவின் அறிதிறன்பேசி ஏற்றுமதி 25% குறைந்துள்ளது. சாம்சங் நிறுவன உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 38% உயர்ந்து 83 லட்சம் அலகுகள் உள்ளது. மோட்டோரோலா உற்பத்திப் பொருட்களின் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 2% அதிகரித்துள்ளது. கூகுள், பிக்சல் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மேக்நாத் தேசாய் காலமானார்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) வெள்ளிக்கிழமை காலமானார். குஜராத்தில் பிறந்த மேக்நாத் தேசாய், லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் 1965 முதல் 2003 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். 1971-ஆம் ஆண்டு அந்நாட்டில் உள்ள தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். 2008-ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றவர்.
விளையாட்டுச் செய்திகள்
உலக நீச்சல்: ஒலெடெக்கி சாம்பியன்
சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் அமெரிக்க வீரர் ரொபர்ட் ஒலெடெக்கி 1,500 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இலக்கை அவர் 15 நிமிடம், 26.44 வினாடிகளில் கடந்தார். இத்தாலியின் கிரிகோரியோ (15:31.79) வெள்ளிப் பதக்கத்தையும், ஆஸ்திரேலியாவின் வானி பாப்ஸ்டி (15:41.18) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். ஒலெடெக்கிக்கு இது 2-வது தங்கப் பதக்கமாகும்; முன்னதாக அவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் வெண்கலம் வென்றிருந்தார். உலக சாம்பியன்ஷிப்பில் ஒலெடெக்கி தற்போது 22-வது தங்கப் பதக்கமாகும். 1,500 மீட்டரில் ஒலெடெக்கி தொடர்ந்து அதிக தங்கப் பதக்கம் பெற்ற வீரர் ஆவார்.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்!
‘டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 5 மடங்கு அதிகரித்து 128 ஆக உயர்ந்துள்ளது. இது உலகத் தரவரிசையில் இடம் பெறும் மொத்த பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 6% ஆகும். தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, 49 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே தரவரிசையில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு முதல், டைம்ஸ் ஹையர் கல்வி தரவரிசைகள், ஐ.நா. சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன.
சர்வதேசச் செய்திகள்
செப்டம்பரில் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: பிரிட்டன் அறிவிப்பு
இஸ்ரேல் சில நிபந்தனைகளை ஏற்றால், செப்டம்பரில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், காசாவில் போர் நிறுத்தம் மற்றும் நீண்ட கால அமைதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் அவ்வாறு செய்யத் தவறினால், செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தில் பிரிட்டன் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும். பிரிட்டனின் நோக்கம் ‘பாதுகாப்பான மற்றும் நிலையான இஸ்ரேல் மற்றும் செயல்படக்கூடிய மற்றும் சுதந்திரமான பாலஸ்தீன அரசு ஆகிய இரண்டையும் உருவாக்குவதே’ ஆகும். பிரான்ஸ் ஏற்கனவே பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிரிட்டனும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இந்தியா உள்ளிட்ட சுமார் 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.