Current Affairs Tue Jul 22 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2025

மாநிலச் செய்திகள்

தனிநபர் வருமானத்தில் 2ஆம் இடத்தில் தமிழகம்: மத்திய அரசு தகவல்

இந்திய அரசு மாநில வாரியாக தனிநபர் வருமானம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

“இந்தியப் புள்ளிவிவரங்கள், திட்ட அமலாக்க அமைச்சின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2024-2025ஆம் ஆண்டுக்கான தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.1,14,710 ஆக உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு, இது ரூ.72,805 ஆக இருந்தது.

மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களின்படி, இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாகக் கர்நாடகம் திகழ்கிறது.

மெட்ரோ பயண அட்டை தேசிய பொதுப் போக்குவரத்து முறைக்கு மாற்றம்

சென்னை மெட்ரோவில் பயணிப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள சிஎம்ஆர்எல் பயண அட்டை தேசிய பொதுப் போக்குவரத்து ‘சிங்காரச் சென்னை’ என்ற முறைக்கு முழுமையாக மாற்றப்பட்டு ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது முழுமையாக தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை (என்சிஎம்சி-சிங்காரச் சென்னை) ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்படவுள்ளது. ஏற்கெனவே பயண அட்டை வைத்திருப்போர் புதிய தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு மாற வேண்டும். மேலும், ஏற்கெனவே 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள பயண அட்டை ரீசார்ஜ் செய்யும் வசதியும் நிறுத்தப்படவுள்ளது.

அதே நேரத்தில் க்யூஆர் பயணச்சீட்டுகள், பிற பயணச்சீட்டுகள் பெறும் முறை வழக்கம் போலத் தொடரும். பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேசியச் செய்திகள்

ஜிஎஸ்ஆர்இ நிறுவனத்தின் 8-ஆவது போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் மற்றும் பொறியாளர்கள் (ஜிஆர்எஸ்இ) நிறுவனம் தயாரித்த 8-ஆவது நீர் மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் (அமினி) திங்கள்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்திய கடற்படைக்காக நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் பிரிவில் ஜிஎஸ்ஆர்இ உருவாக்கிய 8-வது மற்றும் இறுதி போர்க்கப்பல் இதுவாகும்.

ஆழம் குறைவாக உள்ள நீர் நிலைகளிலும் திறம்பட செயல்படக் கூடியது இந்த போர்க்கப்பல். விமானத்துடன் கூடிய போர்க்கப்பலாகவும், கடலோர கண்காணிப்பு, கடலுக்கு அடியில் சுரங்கம் தேடுதல் போன்ற பணிகளையும் இந்தக் கப்பல் மேற்கொள்ளும் திறனுடையது’

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு

கேரள அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நிறைந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார். அவருக்கு வயது 101.

1956-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவில் இடம் பெற்றார். 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகக் காரணமான 32 தேசிய கவுன்சில் உறுப்பினர்களில் அச்சுதானந்தனும் ஒருவர்.

1985-இல் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் (பொலிட் பீரோ) இடம்பெற்றார்.

2006 முதல் 2011 வரையில் கேரள முதல்வராகவும், பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் மூன்று முறையும் அவர் பதவி வகித்தார். 2016 பேரவைத் தேர்தலில் தனது வயதையும் பொருட்படுத்தாமல் கேரள முழுதும் பிரசாரம் செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வந்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் - சரத்து 67(ஏ)

இந்தச் சரத்து, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் பதவி விலகல் தொடர்பான நடைமுறையைக் குறிப்பிடுகிறது.

யாருக்கானது: குடியரசுத் துணைத் தலைவர். செயல்: தனது பதவியை ராஜினாமா செய்தல். முறை: தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தின் மூலம். சமர்ப்பிக்க வேண்டியவர்: குடியரசுத் தலைவர்.

ஒரு குடியரசுத் துணைத் தலைவர் தனது பதவிக் காலம் முடிவதற்குள் விலக விரும்பினால், அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அதிகாரப்பூர்வ வழியாகும்.

சர்வதேசச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா

இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்த ஜக்தீப் தன்கர் (74) தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜினாமா செய்தார்.

அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் மீதமுள்ள நிலையில், உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்த முடிவை எடுத்ததாக தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டார். எதிர்க்கட்சி வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவைத் தோற்கடித்து, நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் 2022, ஆகஸ்ட் 11-ஆம் தேதி பொறுப்பேற்றார்.

3-ஆவது நபர்: ஜக்தீப் தன்கர், பதவிக் காலத்தின் இடையே ராஜினாமா செய்த 3-ஆவது குடியரசு துணைத் தலைவர் ஆவார். 1969-இல் வி.வி.கிரியும், 1987-இல் ஆர்.வெங்கட்ராமனும் இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் நிலையில் இருந்த நிலையில், குடியரசுத் தலைவரானதால் தமது பதவியை ராஜினாமா செய்தனர்.

மேலும் மூன்று குடியரசு துணைத் தலைவர்கள் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் ஆகிய இருவரும் குடியரசுத் தலைவரானதையடுத்து, பைரோன் சிங் ஷெகாவத் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றதையடுத்துப் பதவியை ராஜினாமா செய்தார். ஆறு மாதங்களுக்குள் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் குடியரசு துணைத் தலைவர், அடுத்த ஐந்து ஆண்டு காலத்துக்கு பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமகால இணைப்புகள்