Current Affairs Mon Jul 21 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2025

மாநிலச் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூலை 21) பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிர்க் கடன்

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

கூட்டுறவுத் துறை, ஏழை எளிய நலிந்த பிரிவு மக்களுக்கு நன்மை களைச் செய்வதோடு ஒரு சமூக அமைதியில், கூட்டுறவு அமைப்புகள் மூலம் மக்களுக்குக் கடன் உதவிகளை அரசு வழங்கி வருகிறது. மக்கள் சிரமப்பட நேரும் காலங்களில் கடன் களைத் தள்ளுபடி செய்யவும் உதவுகிறது.

தேர்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உள்பட்டு பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் ஆணையிட்டார். அதன்படி, 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு கடன்களில் ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அதில் 1,01,963 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,56,816 பேர் பயன்பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சம் என்பதிலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி 1,90,499 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் செய்திகள்

24 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டனர்

பத்து ஆண்டுகளில் 24 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டதாக நீதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் அண்மையில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது: கடந்த 2013-14 முதல் 2022-23 வரையிலான 10 ஆண்டு காலத்தில், பல பரிமாண வறுமையில் இருந்து 24 கோடி இந்தியர்கள் மீண்டுள்ளனர்.

பேறுகால இறப்பு, பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறார்கள் இறப்பை தடுப்பதற்கான சுகாதார இலக்குகளை எட்டுவதை நோக்கி இந்தியா பயணிக்கிறது.

மிகவும் விளிம்புநிலையில் உள்ள மக்களை காக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள், வளர்ச்சிக்குத் துணை செய்யும் சீர்திருத்தங்கள் ஆகிய இரட்டை உத்திகளால் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது என்றார்.

பிரிட்டன், மாலத்தீவுக்கு ஜூலை 23 முதல் பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்

பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. (ஜூலை 23) செவ்வாய்க்கிழமை புறப்படுகிறார். அப்போது வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிரிட்டனுக்கு ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் மற்றும் வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு, கள், பாதுகாப்பு, பருவகால, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

சுற்றுப்பயணத்தின்போது பிரிட்டன் அரசர் சார்லஸையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாலத்தீவுக்கு ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார். பயணத்தின்போது பல்வேறு விருந்து மாலத்தீவு அதிபர் முகமது முயிஸ்ஸுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது முயிஸ்ஸின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இரு நாடுகளிடையே கையொப்பமிடப்பட்ட பொது ஸ்தாபிதம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்களை இந்தியா அளிக்கப் பேருதவியாகவிருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே சாம்பியன்

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ரயில்வே-இந்திய கடற்படை அணிகள் மோதின.

இதில் ரயில்வே அணி 3-1 என்ற கோல் கணக்கில் கடற்படை அணியை வீழ்த்தியது. ரயில்வே தரப்பில் அஜித், பங்கஜ் ரவாத், சயந்த் தியாகி ஆகியோர் கோலடித்தனர். கடற்படை தரப்பில் அகீப் ரஹ்ம் கோலடித்தார். இறுதி ஆட்ட நாயகனாக ரயில்வே வீரர் குர்சாஹிப்ஜித் சிங் தேர்வு பெற்றார்.

உலக பல்கலைக்கழக நீச்சல்: ஸ்ரீஹரி நட்ராஜ் சாதனை

உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற நீச்சலில் இந்தியாவின் ஸ்ரீ ஹரி நட்ராஜ் புதிய தேசிய சாதனை படைத்தார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் உலகப் பல்கலைக்கழக போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆடவர் 100 மீ ப்ரீஸ்டைல் பிரிவில் பந்தய தூரத்தை 49.46 விநாடிகளில் கடந்து புதிய இந்திய சாதனையை நிகழ்த்தினார் ஸ்ரீ ஹரி நட்ராஜ். கடந்த 2008-இல் வீர்தாவல் கடேவின் 49.47 விநாடிகள் சாதனையை இதன் மூலம் முறியடித்தார்.

அரை இறுதிக்கும் ஸ்ரீஹரி தகுதி பெற்றுள்ளார். வெள்ளிக்கிழமை 200 மீ ப்ரீஸ்டைல் பிரிவிலும் சிறந்த இந்திய நேர சாதனையை நிகழ்த்தினார்.

தேசியச் செய்திகள்

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பம்

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீஸில் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

மக்களவையில் இத்தீர்மானம் கொண்டுவர குறைந்த பட்சம் 100 எம்.பி.க்களின் கையொப்பம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தபோது, புது தில்லியில் அவர் வசித்த அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் - சரத்து 124 உச்ச நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி, நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது திறனற்ற தன்மை ஆகிய காரணங்களுக்காக, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோராலும் மற்றும் அவைக்கு வந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத பெரும்பான்மையோராலும் ஆதரிக்கப்பட்ட ஒரு கோரிக்கை, அதே கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பேரில், குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் ஓர் உத்தரவின் மூலமே தவிர, அவரது பதவியிலிருந்து நீக்கப்பட மாட்டார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் - சரத்து 218 சரத்து 124-இன் உட்பிரிவுகள் (4) மற்றும் (5)-இல் உள்ள விதிகள், உச்ச நீதிமன்றத்திற்கான குறிப்புகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்திற்கான குறிப்புகளை மாற்றுவதன் மூலம், உச்ச நீதிமன்றத்திற்குப் பொருந்துவது போலவே உயர் நீதிமன்றத்திற்கும் பொருந்தும்.

சமகால இணைப்புகள்