Current Affairs Sat Jul 19 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 19-07-2025

மாநிலச் செய்திகள்

தமிழ்நாடு நாள்: ஜூலை 18

ஜூலை 18 ஆம் தேதி, அன்றைய ‘மெட்ராஸ் மாநிலத்திற்கு’ அதிகாரப்பூர்வமாக ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், மாநிலத்தின் மொழிவழி அடையாளம், கலாச்சாரப் பெருமை மற்றும் நீண்டகாலமாக நடைபெற்ற அரசியல் மற்றும் சமூகப் போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் தினமாகும்.

1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். ஜூலை 18, 1967 அன்று, மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி “தமிழ்நாடு வாழ்க!” என்று முழக்கமிட்டனர்.

இந்த நாளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 14, 1969 (தைப்பொங்கல்) அன்று நடைமுறைக்கு வந்தது.

நவம்பர் 1-க்கு பதிலாக ஜூலை 18 ஏன்?

நவம்பர் 1 ஆம் தேதி, மொழிவாரியாக மெட்ராஸ் மாநிலம் உருவாக்கப்பட்ட நாள் என்பதால், அது முன்னர் ‘தமிழ்நாடு நாள்’ ஆக அனுசரிக்கப்பட்டது.

இருப்பினும், 2021-ல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஜூலை 18 ஆம் தேதியை அதிகாரப்பூர்வ தமிழ்நாடு நாளாக அறிவித்தது.

அதற்கான காரணம்: நவம்பர் 1-ஆம் தேதி, மாநிலங்கள் மறுசீரமைப்பின்போது, தமிழ் பேசும் பல பகுதிகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவிடம் ஒப்படைக்கப்பட்டதால், அது ஒரு இழப்பின் நாளாகவே பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், ஜூலை 18 என்பது, மாநிலத்திற்கு அதன் பெருமைக்குரிய பெயர் கிடைத்த ஒரு வெற்றி மற்றும் சுயஅடையாளத்தை உறுதி செய்த பெருமைக்குரிய நாளாகக் கருதப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகள் 100% கணினிமயம்

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

நபார்டு வங்கியின் 44-ஆவது நிறுவன நாள் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுப் பேசியது: கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு நபார்டு வங்கி முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக, கிராமப்புற விவசாயிகளுக்கு வேளாண்மையில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்து அதிக வருமானம் ஈட்ட வழிவகை செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது.

நான் நிதி அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளையும் கணினிமயமாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தினேன். அதன் விளைவாக, தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் 100 சதவீதம் கணினிமயமாகியுள்ளன.

மேலும் நபார்டு வங்கி மூலம் ரூ.2,800 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருப்பது பாராட்டத்தக்கது என்றார்.

நபார்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் ஆனந்தன் பேசுகையில், நபார்டு வங்கி தமிழக வளர்ச்சிக்கு ரூ.56 ஆயிரம் கோடி அளித்துள்ளது. குறிப்பாக, ஊரக கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

விளையாட்டுச் செய்திகள்

ஒலிவியாவை ரூ.11.54 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது ஆர்செனல்

கனடா கால்பந்து வீராங்கனை ஒலிவியா ஸ்மித் (20), ஆர்செனல் அணியால் ரூ.11.54 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். லிவர்பூல் அணியிலிருந்த அவரை, 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆர்செனல் வாங்கியுள்ளது. மகளிர் கால்பந்து வரலாற்றில் ஒரு வீராங்கனைக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச ஒப்பந்தமதிப்பு இதுவாகும்.

இதற்கு முன், கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் தியோமி கீடோன்மா, சாண்டியாகோ வேவ் அணியிலிருந்து செல்சி அணி ரூ.9.47 கோடிக்கு வாங்கியதே அதிகபட்சமாக இருந்த நிலையில், ஒலிவியா தற்போது அதை முறியடித்துள்ளார்.

எனினும், ஆடவர் கால்பந்து உலகத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுடன் ஒப்பிடுகையில், ஒலிவியாவுக்கான ஒப்பந்த மதிப்பு எள்ளளவு கூட எட்டாததாகும். பிரேசில் வீரர் நெய்மர் கடந்த 2017-இல் பார்சிலோனா அணியிடமிருந்து, பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணியால் ரூ.2,256 கோடிக்கு வாங்கப்பட்டது இன்றைய சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ-லீக் சாம்பியனானது இன்டர் காசி

ஐ-லீக் கால்பந்து போட்டியின் 2024-25 சீசன் சாம்பியனாக இன்டர் காசி அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அந்தப் போட்டியின் சாம்பியனாக சர்ச்சில் பிரதர்ஸ் அறிவிக்கப்பட்டதை விளையாட்டுக்களுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் (சிஏஎஸ்) நிராகரித்ததை அடுத்து, இன்டர் காசியே சாம்பியன் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்தது.

இந்தியாவில் நடைபெறும் 2-ஆம் நிலை தொழில்முறை கால்பந்து போட்டியான ஐ-லீக்கின் 18-ஆவது சீசன், கடந்த ஏப்ரலில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இன்டர் காசி 42 புள்ளிகளுடன் முதலிடமும், சர்ச்சில் பிரதர்ஸ் 40 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தன.

மேலும், இந்தியாவின் முதல்நிலை தொழில்முறை கால்பந்து போட்டியான இந்தியன் சூப்பர் லீக்கிற்கு தகுதி பெற்றது இன்டர் காசி அணி.

தேசியச் செய்திகள்

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தார்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

முழுதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தார் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.

ஆழ்கடல்களில் மூழ்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடலில் 300 மீட்டர் ஆழம் வரை வீரர்கள் டைவிங் செய்து, மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான வசதிகளும், தொழில்நுட்பமும் இந்தக் கப்பலில் இடம்பெற்றுள்ளன.

‘நிஸ்தார்’ கப்பல் ஏற்கெனவே கடந்த 1971-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி கடற்படையில் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. இந்திய-பாகிஸ்தான் போரின்போது, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அருகே கடலில் மூழ்கிய பாகிஸ்தானின் காஸி நீர்மூழ்கிக் கப்பலை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளில் இக்கப்பல் முக்கியப் பங்காற்றியது.

மேலும், ‘முந்தைய நிஸ்தார் மீட்புக் கப்பல் 800 டன் எடை கொண்டதாக இருந்தது. கடந்த 1989-ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ள ‘நிஸ்தார்’ 10,500 டன் எடையுடனும், 120 மீ. நீளம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது

சர்வதேசச் செய்திகள்

குஜராத்தில் உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதாரத் தடை

ரஷ்யாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதாரத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய்க்கான விலை உச்ச வரம்பையும் ஐரோப்பிய யூனியன் குறைத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரமாக தொடர்ந்தாலும் நிலைமையில் அதிருப்தியுற்று அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு வகைகளில் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. தற்போது ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில், ரோஸ்நெஃப்ட் நிறுவனம் மீது புதிய பொருளாதாரத் தடையை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து சீனா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், இறக்குமதியை சிறிதளவு குறைத்தன. இந்தச் சூழலை சாதகமாக்கி ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. மொத்த இறக்குமதியில் 40 சதவீதம் அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து இந்தியா தற்போது செய்து வருகிறது. இதனால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பலனடைந்து வருகின்றன. மேலும், ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் மிகப் பெரிய எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், ரஷ்ய வங்கிகளுக்கு கடன் வழங்குவதில் கட்டுப்பாடு களை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா எரிசக்தி நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடையை புதிதாக விதித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய்க்கான விலை உச்ச வரம்பையும் குறைத்துள்ளது.

சமகால இணைப்புகள்