Current Affairs Fri Jul 18 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2025

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

1.38 கோடியாக உயர்ந்த உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை

இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.38 கோடியாக உயர்ந்துள்ளது.

இது குறித்து மதிப்பீட்டு முகமை ஐசிஆர்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதத்தில் 1.38 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றன.

முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.1 சதவீதம் அதிகம். அப்போது உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.32 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யூடிஏ மகளிர் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூன்றாண்டுகள் கழித்து சென்னையில் டபிள்யூடிஏ மகளிர் 250 டென்னிஸ் போட்டி மீண்டும் நடத்தப்படுகிறது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் இதற்காக புதுப்பிக்கப்படும். மைதானத்தின் பிரதான பெவிலியனுக்கு இந்திய ஜாம்பவான் விஜய் அம்ரித்ராஜ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் டபிள்யூடிஏ போட்டி நடைபெறுவது பொருத்தமானது. மேலும் நிகழாண்டு ஏடிபி சேலஞ்சர் போட்டிக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கியது. சென்னை ஓபன் போட்டியில் டபிள்யூடிஏ தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

சென்னை ஓபன் போட்டியை சிறப்பாக நடத்த ரூ.12 கோடியை ஒதுக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

நாட்டின் தூய்மையான நகரம் இந்தூர்! 8-ஆவது ஆண்டாக சாதனை

நாட்டின் மிக தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொடர்ந்தது 8-ஆவது ஆண்டாக தேர்வாகியுள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தும் தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சர்வேக்ஷன்) முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.

தூய்மையில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நகரங்களுக்காக இந்த ஆண்டு புதிதாக ‘சூப்பர் ஸ்வச் லீக்’ என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இப்பிரிவில் இந்தூர், குஜராத்தின் சூரத், மகாராஷ்டிராவின் நவி மும்பை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களுக்குத் தேர்வாகியுள்ளன.

இதேபிரிவில் 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உத்தர பிரதேசத்தின் நொய்டா தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டது. யூனியன் பிரதேசமான சண்டீகர், கர்நாடகத்தின் மைசூரு ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஸ்வச் சாஹர் பிரிவில் அகமதாபாத் முதலிடம். 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கான ‘ஸ்வச் சாஹர்’ பிரிவில், குஜராத்தின் அகமதாபாத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால், உத்தர பிரதேசத்தின் லக்னௌ ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

சர்வதேசச் செய்திகள்

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ராம்ஸ் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) வழங்கப்பட்டது.

இதையடுத்து ஆய்விருக்கை அமைப்பிற்காக இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 1 லட்சத்துக்கான (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) காசோலையை மலேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் ஜம்ரி அப்துல் காதிரிடம், ராம்ஸ் முஸ்தபா அறக்கட்டளைத் தலைவர் முஸ்தபா வழங்கினார். தொடர்ந்து, இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

தேசியச் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசி குமார் ஓய்வு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசி குமார் சுகுமார் குரூப் வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

நீதிபதி சசி குமார் சுகுமார் குரூப் ஓய்வு பெற்றதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக குறைந்தது. 17 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

உயரமான பகுதியில் இருந்து ஏவப்பட்டு, வான் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது (படம்).

ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்டு, பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆகாஷ் ரக ஏவுகணைகள், இந்திய ராணுவத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்படுகின்றன. 60 கிலோ வெடிகுண்டுகளுடன் 45 கி.மீ. வரை பாய்ந்து தாக்கும் திறன் கொண்டவை.

இந்நிலையில், 4,500 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள இடங்களில் இருந்து ஏவும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள ஆகாஷ் பிரைம் ஏவுகணை, லடாக்கில் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அப்போது, வானில் அதிவேகத்தில் பறந்த இரு ஆளில்லா விமான இலக்குகளை, ஆகாஷ் பிரைம் துல்லியமாக தாக்கி அழித்ததாகவும், இது குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது. லடாக்கில் சீன எல்லையை ஒட்டி நடைபெற்றதால்,

இப்பரிசோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையொட்டி, இந்திய ராணுவம், டிஆர்டிஓ மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா கடந்த மே மாதம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. அப்போது, இந்தியா தரப்பில் உள்நாட்டு தயாரிப்பு ஆகாஷ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சமகால இணைப்புகள்