TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17-07-2025
முக்கிய தினங்கள்
சர்வதேச நீதிக்கான உலக தினம் - ஜூலை 17
சர்வதேச நீதிக்கான உலக தினம் ஆண்டுதோறும் ஜூலை 17 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள், சர்வதேச குற்றவியல் நீதியை மேம்படுத்துவதற்கும், உலகைப் பாதிக்கும் மிகக் கடுமையான குற்றங்களுக்கான தண்டனையின்மையைத் (impunity) எதிர்த்துப் போராடுவதைக் கௌரவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிக்கான உலக தினம், சில நேரங்களில் சர்வதேச நீதி தினம் அல்லது சர்வதேச குற்றவியல் நீதி தினம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பணிகளையும், நீதி நிர்வாகத்திற்கு அதன் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, கொடூரங்களை எதிர்கொண்டு உலக அமைதியை மேம்படுத்துவதற்கும், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்கும் இந்த நாள் உதவுகிறது.
தேசியச் செய்திகள்
மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 8 புதிய சட்ட மசோதாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தேசிய விளையாட்டு நிர்வாக சட்ட மசோதா, புவியியல் பாரம்பரிய தளங்கள் மற்றும் புதைபொருட்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா, தேசியமயமாக்குவது எதிர்ப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த மசோதாக்கள் தவிர, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத் திருத்த மசோதா, குன் விஸ்வாஸ் சட்டத் திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவன சட்டத்திருத்த மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்தம் மசோதா ஆகிய மேலும் 4 சட்டத்திருத்த மசோதாக்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தொடரில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசு நாடியுள்ளது.
மேலும், அந்த மாநிலத்துக்கான நிதிமானியக் கோரிக்கைகளும் அவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கேரளா மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் சட்டப்பேரவைத் தொகுதி பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பதற்கான மசோதா, வணிக கப்பல் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா ஆகியவை மக்களவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எரிசக்தித் துறை பொறுப்பு செயலராக ரமேஷ் சந்த் மீனா நியமனம்
எரிசக்தித் துறை பொறுப்பு செயலராக ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். அந்தக் துறையின் செயலராக இருந்த பீலா வெங்கடேசன், நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.
திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக ரமேஷ் சந்த் மீனா செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக, எரிசக்தித் துறையின் பொறுப்புச் செயலராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலர் டி.கார்த்திகேயன் செயல்பட்டு வந்தார். அவருக்குப் பதிலாக இப்போது ரமேஷ் சந்த் மீனா பொறுப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயிர் உற்பத்தியை மேம்படுத்த ரூ.24,000 கோடி திட்டம்
பயிர் உற்பத்தி குறைவான 100 மாவட்டங்களுக்கு ரூ.24,000 கோடி மதிப்பில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிரதமரின் தன்-தான்ய கிருஷி விகாஸ் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பயிர் உற்பத்தி மேம்பாட்டை முக்கிய நோக்கமாகக் கொண்டு இத்திட்டம், 2025-26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதாகும். வரும் அக்டோபரில் தொடங்கப்பட உள்ள இத்திட்டத்தால் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவர்.
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தன்-தான்ய கிருஷி திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டம், தற்போதுள்ள 36 விவசாய திட்டங்களை ஒருங்கிணைத்து, பயிர் பல்வகைப்படுத்துதல் மற்றும் நிலையான வேளாண் நடைமுறைகளில் சிறப்பு ஊக்குவிக்கும் என்று இது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.