TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15-07-2025
விளையாட்டுச் செய்திகள்
விம்பிள்டன் மகளிர் இரட்டையர்: குடெர்மெடோவா/மெர்டென்ஸ் சாம்பியன்
விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா/பெல்ஜியத்தின் எலீஸ் மெர்டென்ஸ் இணை 3–6, 6–2, 6–4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த லத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ/சீன தைபேவின் சு வெய் சியே கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இதில் வெரோனிகாவுக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மெர்டென்ஸுக்கு இது 5-ஆவது பட்டம். இவர்கள் இணைந்து களம் காண்பது இதுவே முதல்முறையாகும்.
2-வது முறையாக செல்ஸி சாம்பியன்
ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் செல்ஸி 3-0 கோல் கணக்கில் பார்ஸ் செயின்ட் ஜெர்மெய்னை (பிஎஸ்ஜி) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது.
ஏற்கெனவே 2021-இல் சாம்பியனான செல்ஸிக்கு, இந்தப் போட்டியில் இது 2-ஆவது கோப்பையாகும்.
இந்த ஆட்டத்தில் செல்ஸிக்காக கோல் பால்மர் 22 மற்றும் 30-ஆவது நிமிடங்களிலும், ஜாவ் பெட்ரோ 43-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனர். பிஎஸ்ஜி தனது கோல் வாய்ப்புக்காக தொடர்ந்து போராட, கடைசி வரை அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
அந்த அணிக்கான கூடுதல் பின்னடைவாக, செல்ஸி வீரர் மார்க் குகுரெல்லாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியதற்காக பிஎஸ்ஜி வீரர் ஜோ நெவெஸ் 84-ஆவது நிமிடத்தில் ‘ரெட் கார்டு’ காட்டி வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு பிஎஸ்ஜி தள்ளப்பட்டது.
இறுதி ஆட்டத்தைக் காண மெட்லைஃப் மைதானத்தில் சுமார் 81,000 ரசிகர்கள் கூடியிருந்தனர். போட்டியின் முடிவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ ஆகியோர் இணைந்து, சாம்பியனான செல்ஸி அணியின் கேப்டன் ரீஸ் ஜேம்ஸிடம் வெற்றிக் கோப்பையை வழங்கினர்.
சாம்பியனான செல்ஸி அணிக்கான பரிசுத் தொகையாக சுமார் ரூ.1,104 கோடி முதல் ரூ.1,322 கோடி வரை ரொக்கப் பரிசாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியச் செய்திகள்
எல்ஐசி புதிய நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசாமி
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஆர்.துரைசாமி (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறை வெளியிட்டது.
இதையடுத்து எல்ஐசியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக 3 ஆண்டுகளுக்கு துரைசாமி பதவியேற்பார்.
2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி, அவர் 62 வயதை எட்டும் போது அவரின் பதவிக்காலம் நிறைவடையும்.
கோவா, ஹரியாணா, லடாக் புதிய ஆளுநர்கள் நியமனம்
கோவா, ஹரியாணா ஆகிய 2 மாநில ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
தெலங்கானா தேசகட்சியின் மூத்த நிர்வாகியான அசோக் கஜபதி ராஜு (74), கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் ஆட்சிக்காலத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இவர் பணியாற்றினார். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு அப்பதவியை ராஜிநாமா செய்தார்.
தற்போது கோவா ஆளுநரான பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கடந்த 2021, ஜூலை 15-ஆம் தேதி முதல் அப்பதவியை வகித்து வருகிறார்.
ஹரியாணா: ஹரியாணா ஆளுநராக கடந்த 2021, ஜூலை 15-ஆம் தேதி முதல் முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடையும் சூழலில், மேற்கு வங்க மாநில முன்னாள் பாஜக தலைவரான பேராசிரியர் அஷிம் குமார் கோஷ் ஹரியாணாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லடாக்: லடாக் யூனியன் பிரதேசத்தின் 2-ஆவது துணைநிலை ஆளுநராக கடந்த 2023, பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி.மிஸ்ராவின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அவருடைய இடத்துக்கு ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வர் கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் மேயராகவும், பேரவைத் தலைவராகவும்
இவர் இருந்துள்ளார். இந்த நியமனங்கள் அவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா
ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய உயர்நீதிமன்றம்):
தலைமை நீதிபதி பெயர் - மாற்றம் செய்யப்பட்ட உயர்நீதிமன்றம்
எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா (ராஜஸ்தான்) - சென்னை
கே.ஆர்.ஸ்ரீராம் (சென்னை) - ராஜஸ்தான்
அபரேஷ் குமார் சிங் (திரிபுரா) - தெலங்கானா
எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் (ஜார்க்கண்ட்) - திரிபுரா
தலைமை நீதிபதிகளாகப் பதவி உயர்வு: உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மே 26-ஆம் தேதி அளித்த பரிந்துரையை ஏற்று, ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய உயர்நீதிமன்றம் மற்றும் பதவி): நீதிபதி பெயர் - தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்ட உயர்நீதிமன்றம்
சஞ்சீவ் சச்தேவா (மத்திய பிரதேச உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி) - மத்திய பிரதேசம்
விபு பக்ரு (தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி) - கர்நாடகம்
ஆசுதோஷ் குமார் (பாட்னா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி) - குவாஹாட்டி
விபுல் மனுபாய் பஞ்சோலி (பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி) - பாட்னா
தர்லோக் சிங் செளஹான் (ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி) - ஜார்க்கண்ட்.
மாநிலச் செய்திகள்
மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு ‘தூய்மை விருது’
சென்னை மீனம்பாக்கம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு தூய்மை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்குப் போக்குவரத்து வளாகத்தில் உள்ள புதிய சுங்க அலுவலகத்தில் முன்மாதிரியான தூய்மை முயற்சிகள், உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சென்னை சுங்கத் துறையின் தூய்மை மற்றும் சுகாதாரத்துக்கான சிறந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தூய்மை விருது வழங்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மையான பணிச்சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் தூய்மை பிரசாரத்தின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.