Current Affairs Sat Jul 12 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12-07-2025

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

சர்வதேச மலாலா தினம் 2024 - July 12

பெண்கள் கல்விக்காகக் குரல் கொடுக்கும் பாகிஸ்தானிய ஆர்வலரும், மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாயின் பங்களிப்பைப் போற்றும் விதமாக மலாலா தினம் அனுசரிக்கப்படுகிறது. திருமதி யூசுப்சாயின் பிறந்த நாளான ஜூலை 12 அன்று, உலகெங்கிலும் உள்ள பெண்களின் கல்வி உரிமைகளுக்காக அவர் அயராது ஆதரவளிப்பதை உலகம் கௌரவிக்கிறது. பெண்களின் கல்வி உரிமைக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசியதற்காக தலிபான் துப்பாக்கிதாரியால் அவர் தலையிலும் கழுத்திலும் சுடப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, 2013-ல் இந்த முக்கியமான நாள் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 12, 2013 அன்று முதல் சர்வதேச மலாலா தினத்தைக் கொண்டாடியது. பாகிஸ்தானில் பெண் கல்விக்கு தலிபான்கள் விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்ததற்காக அவர்கள் மலாலாவைத் தாக்கியதன் ஓராண்டு நிறைவை அந்த நாள் குறித்தது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய திருமதி யூசுப்சாய், கல்விக்கான உலகளாவிய நாயகியாக உருவெடுத்தார். எனவே, அவரது பணிகளைக் கௌரவிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபை 2015-ல் ஜூலை 12-ஆம் தேதியை சர்வதேச மலாலா தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

விஜடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சார்பில் ‘உயர்தனிச் செம்மல் விருது’ வழங்கி கவுரவிப்பு

சர்வதேச அளவில் உயர்கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிவரும் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனுக்கு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சார்பில் ‘உயர்தனிச் செம்மல் விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் உள்ள ராலேயில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North Americans-FeTna) செயல்பட்டு வருகிறது. தமிழர் மேம்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டு வட அமெரிக்காவில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து கடந்த 38 ஆண்டுகளாக தமிழ் மொழி, பண்பாடு, மரபு, கலை, இலக்கியம், தொழில் வளர்ச்சிக்கு வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சேவை செய்து வருகிறது. உலகத் தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் வகையில் வருடாந்திர மாநாடும் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, சர்வதேச அளவில் உயர்கல்வியில் சிறப்பான சேவையாற்றிவரும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, வடக்கு கரோலினாவில் உள்ள ராலேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ‘உயர்தனிச் செம்மல் விருது’ வழங்கி கவுரவித்தது.

விளையாட்டுச் செய்திகள்

சினியகோவா – வெட்ரிக் இணை சாம்பியன்

விம்பிள்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில், ஹென்றி வெட்ரிக்-செக் குடியரசின் கேத்ரினா சினியகோவா இணை 7-6 (7/3), 7-6 (7/3) என்ற நேர் செட்களில், பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி - பிரிட்டனின் ஜோ சாலஸ்பரி கூட்டணியை வீழ்த்தி, வாகை சூடியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இது இவர்களின் முதல் சாம்பியன் பட்டமாகும். இவர்கள் இருவரும் இணைந்து களம் கண்ட முதல் போட்டியும் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெட்ரிக்-கிற்கு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்க, சினியகோவா ஏற்கனவே 10 முறை வேறு கிராண்ட்ஸ்லாம் மகளிர் இரட்டையரில் சாம்பியன் ஆகியிருக்கிறார். இந்த முறை விம்பிள்டனிலும் அவர் மகளிர் இரட்டையர் அரைஇறுதிக்குக்கு முன் தோல்வியுற்றிருக்கிறார்.

மகளிர் ஒற்றையர்

வெற்றியாளர்: இகா ஸ்வியாடெக் (போலந்து) இரண்டாம் இடம்: அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா)

ஆடவர் இரட்டையர் வெற்றியாளர்கள்: ஜூலியன் கேஷ் & லாயிட் கிளாஸ்பூல் (ஐக்கிய ராச்சியம்) இரண்டாம் இடம்: ரிங்கி ஹிஜிகாடா (ஆஸ்திரேலியா) & டேவிட் பெல் (நெதர்லாந்து)

கலப்பு இரட்டையர் வெற்றியாளர்கள்: செம் வெர்பீக் (நெதர்லாந்து) & கரோலினா சினியாகோவா (செக் குடியரசு) இரண்டாம் இடம்: ஜோ சாலிஸ்பரி (ஐக்கிய ராச்சியம்) & லூயிசா ஸ்டெபானி (பிரேசில்)

சர்வதேசச் செய்திகள்

மும்பையில் அடுத்த வாரம் டெஸ்லா முதல் விற்பனையகம் திறப்பு

மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் ஜூலை 15-ஆம் தேதி தனது முதல் விற்பனையகத்தை திறக்க இருக்கிறது.

இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தடம் பதிக்கும். மும்பையில் விற்பனையகம் அமைத்து மின்சார கார்களை காட்சிப்படுத்துதல், சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்துதல், விற்பனை மையம் செய்யவும் மும்பை வட்டார போக்குவரத்து அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா விற்பனை குறைந்துள்ள நிலையில், இந்தியர்கள் டெஸ்லா மீது எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில் டாடா, மஹிந்திரா, ஹுண்டாய், பிஎம்டபிள்யு, எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியைக் குறைக்க இந்தியாவில் மின்சார வாகனங்களை அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்தச் சூழலில் உலக மின் மிகப்பெரிய வாகனச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் டெஸ்லா களம் இறங்குகிறது.

மராத்திய பேரரசின் ராணுவ தளங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

மராத்திய பேரரசின் ராணுவ தளங்களை உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்த்ததாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 47-ஆவது அமர்வில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது.

தகவல்கள்: அமைப்பு - யுனெஸ்கோ (UNESCO) தலைமையகம் - பாரிஸ், பிரான்ஸ் தலைமை இயக்குநர் - ஆட்ரே அசுலே துணைத் தலைமை இயக்குநர் - சிங் கு

வகுப்பு: 7 ஆம் வகுப்பு பாடம்: சமூக அறிவியல் (வரலாறு) அலகு: மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்கள்

தோரணா கோட்டை: சிவாஜியால் கைப்பற்றப்பட்ட முதல் கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும். இது அவரது இராணுவ விரிவாக்கத்தின் தொடக்கத்தைக் குறித்தது. இந்தக் கோட்டையில் அவர் கண்டெடுத்த மாபெரும் புதையல், ஒரு பெரிய இராணுவத்தை உருவாக்கவும் புதிய கோட்டைகளைக் கட்டவும் அவருக்கு உதவியது.

ராய்காட் கோட்டை: சமச்சீர் கல்வி புத்தகம் ராய்காட்டை சிவாஜியின் தலைநகராக அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 1674-ல் அவரது முடிசூட்டுக்குப் பிறகு, ராய்காட் மராட்டியப் பேரரசின் முக்கிய நிர்வாக மற்றும் இராணுவ மையமாக மாறியது. இந்த மலைக்கோட்டையைத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது அவரது உத்தி சார்ந்த சிந்தனையைக் காட்டுகிறது, ஏனெனில் அதன் இருப்பிடம் எதிரிகளிடமிருந்து இயற்கையான பாதுகாப்பை வழங்கியது.

சிவனேரி கோட்டை: சிவனேரியை சிவாஜியின் பிறப்பிடமாக புத்தகம் குறிப்பிடுகிறது. அவர் பிறந்த நேரத்தில் அது பீஜப்பூர் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், அதன் குறிப்பு அவரது வாழ்க்கைக்கு ஒரு புவியியல் மற்றும் வரலாற்றுத் தொடக்க புள்ளியை வழங்குகிறது.

புரந்தர் கோட்டை: புரந்தர் உடன்படிக்கை பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். சிவாஜிக்கும் முகலாயத் தளபதி ஜெய் சிங்கிற்கும் இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி, சிவாஜி தனது 23 கோட்டைகளை முகலாயர்களிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. இந்த நிகழ்வு, சக்திவாய்ந்த முகலாயப் பேரரசிலிருந்து சிவாஜி எதிர்கொண்ட அரசியல் மற்றும் இராணுவ அழுத்தங்களை விளக்கப் பயன்படுகிறது.

கொரில்லா போர்முறை: சிவாஜி தனது கொரில்லா போர் தந்திரங்களுக்கு கோட்டைகளை எவ்வாறு திறம்பட தளங்களாகப் பயன்படுத்தினார் என்பதை கொடுக்கப்பட்ட சூழல் விளக்குகிறது. இந்தக் கோட்டைகளைச் சுற்றியுள்ள மலைப்பாங்கான மற்றும் காடுகள் நிறைந்த நிலப்பரப்பு, அவரது சிறிய, அதிக இயக்கம் கொண்ட இராணுவத்தை, பெரிய முகலாய மற்றும் பீஜப்பூர் படைகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்த அனுமதித்தது.

கோட்டைகளின் நிர்வாகம்: சிவாஜியின் கீழ் இருந்த கோட்டைகளின் நிர்வாக முறையைப் பற்றியும் புத்தகம் குறிப்பிடுகிறது. எந்தவொரு அதிகாரியும் அவருக்குத் துரோகம் செய்வதைத் தடுக்க, ஒவ்வொரு கோட்டையும் சம தகுதியில் உள்ள மூன்று அதிகாரிகளின் கட்டளையின் கீழ் வைக்கப்பட்டது. இந்த சரிபார்ப்பு மற்றும் சமநிலை அமைப்பு அவரது கோட்டைகளின் பாதுகாப்பையும் விசுவாசத்தையும் உறுதி செய்தது.

தேசியச் செய்திகள்

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ‘அஸ்த்ரா’ ஏவுகணை வெற்றிகர சோதனை

விமானத்தில் இருந்து பார்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கி அழிக்கும் ‘அஸ்த்ரா’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிஸா கடலோரப் பகுதியில் சுகோய் போர் விமானத்தில் இருந்து அஸ்த்ரா ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய விமானப் படை இணைந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தில் இருந்து பார்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘அஸ்த்ரா’ ஏவுகணை யின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது ஆளில்லா விமானங்கள் மூலம் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து அதிவேகத்தில் சோதனைக்கு இலக்குகள் ஏவப்பட்டன. இந்த இரண்டு இலக்குகளையும் அஸ்த்ரா ஏவுகணை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது. ஏவுகணையில் பயன்படுத்தப்பட்ட ரேடியோ அலைவரிசை சமிக்ஞைகள் உள்பட அனைத்து செயல்பாடுகளும் எதிர்பார்க்கப்பட்டபடி மிகச் சிறப்பாக செயல்பட்டன. இதன்மூலம், பாதுகாப்புத் துறை சார்ந்த நவீன தொழில்நுட்பவளர்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அஸ்த்ரா ஏவுகணையின் செயல்பாடுகள் ஒடிஸாவின் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் கண்காணிப்பு சாதனங்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டன. டிஆர்டிஓ-வின் ஆய்வகங்கள் மட்டுமின்றி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அஸ்த்ரா ஏவுகணையின் உருவாக்கத்தில் பங்களித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. அஸ்த்ரா சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட டிஆர்டிஓ, இந்திய விமானப் படை மற்றும் பிற அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய உள்துறை செயலரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு

மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகனின் பதவிக்காலத்தை 2026, ஆக.22 வரை நீட்டித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மத்திய உள்துறைச் செயலராக இருந்த அஜய் பல்லா கடந்த ஆண்டு ஆக.22-இல் பணி ஓய்வுபெற்றதையடுத்து அந்தப் பதவிக்கு கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு 2027-இல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல் 2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் இந்தியாவில் முழுவதுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சூளுரைத்துள்ளார். இந்தச் சூழலில் கோவிந்த் மோகனின் பதவிக்காலத்தை 2026, ஆக.22 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் வழங்கியது. இதற்கான ஆணையை மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்தது. இதன்மூலம் மத்திய உள்துறைச் செயலராக கோவிந்த் மோகன் 2 ஆண்டுகள் பதவி வகிக்கவுள்ளார். 1989, சிக்கிம் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் உள்துறைச் செயலராக பதவியேற்கும் முன் மத்திய கலாசார செயலராகப் பதவி வகித்தார்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக மத்திய விவசாயிகள் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். வெள்ளிக்கிழமை அன்று, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் ஹரியாணா மாநில வேளாண் அமைச்சர் ஷியாம் சிங் ராணா ஆகியோர் கோயம்புத்தூர் பி.என். புதூரில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்தில் உள்ள விளைநிலங்களைப் பார்வையிட்டனர். பின்னர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி நடவுத் திட்டம் மற்றும் நவீன ரக டிராக்டர்களைப் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாட்டுத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். தகவல்கள்: “பருத்தி இயக்கம்” என்பது 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஐந்தாண்டு கால திட்டமாகும். இது இந்தியாவில் பருத்தி உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, மிக நீண்ட இழை (ELS) பருத்தி வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி, விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதையும், ஜவுளித் தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம், விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், பருத்தியின் விளைச்சல் மற்றும் தரத்தை மேம்படுத்தவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த இயக்கம் ஐந்தாண்டு திட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது, இதன் மொத்த ஒதுக்கீடு ரூ. 5272 கோடி ஆகும். வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் - சிவராஜ் சிங் சவுகான் மாண்புமிகு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் - பகீரத் ​​சவுத்ரி 10 ஆண்டுகள், 3 நாட்கள் பதவியில் இருந்ததன் மூலம், மிக நீண்ட காலம் பணியாற்றிய விவசாய அமைச்சர் என்ற சாதனையை சரத் பவார் பெற்றுள்ளார்.

இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் எம்.டி., சிஇஓ.வாக பிரியா நாயர் நியமனம்

லைப்பாய், பியர்ஸ், டவ், லக்ஸ், பான்ட்ஸ், குளோஸ் அப், பெப்சோடன்ட், சர்ஃப் எக்செல், ரின், விம், புரூ காபி, புரூக் பாண்ட் தேநீர், அழகு சாதனங்கள் உட்பட பல்வேறு நுகர்வோர் பொருட்களை இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (எம்.டி.) மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ரோஹித் ஜாவா பதவி வகிக்கிறார். இவர் வரும் 31-ம் தேதியுடன் அப்பதவியில் இருந்து விலகுகிறார். இதையடுத்து பிரியா நாயரை அந்தப் பதவிகளுக்கு இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் முதல் பெண் எம்.டி, சிஇஓ என்ற பெருமையை பிரியா நாயர் பெறுகிறார். அத்துடன் நிறுவனத்தின் போர்டு, தலைமை நிர்வாக உறுப்பினராகவும் இனிமேல் இருப்பார். தற்போது பிரியா நாயர் வீட்டு பராமரிப்பு, அழகு, நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பணிகளின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பொறுப்புகளை வகித்து வருகிறார்.

மாநிலச் செய்திகள்

ஸ்மார்ட் காக்பிட்’ திட்டம்

‘ஸ்மார்ட் காக்பிட்’ திட்டம் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை புகைப்படம் எடுத்து செயலியில் பதிவு செய்தால் அவர்களின் முழு விவரமும் போலீஸாருக்கு கிடைக்கும். இந்தத் திட்டம் மூலம் கல்லூரி, பள்ளி போன்ற பகுதிகளில் எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.

‘ஸ்மார்ட் காக்பிட்’ திட்டத்தின் கீழ், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை செயலி மூலம் எளிதாகக் கண்டறியலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் கூறினார்.

மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த ரூ.64 கோடியில் பணிகள் தொடக்கம்

மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.64.43 கோடி மதிப்பில் 7 விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், உள்விளையாட்டு அரங்கங்கள் ஏற்படுத்துதல், நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டத்தில் ரூ.9.47 கோடி மதிப்பில் செயற்கை வளைகோல் பந்து மைதானம், திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடி மதிப்பிலும், அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பிலும் புதிய செயற்கை வளைகோல் பந்து மைதானம் அமைக்கும் பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மதுரையில் ரூ.12.50 கோடி மதிப்பில் மல்டிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம், கரூரில் ரூ.6.28 கோடி மதிப்பில் புதிய நீச்சல்குளம், கோவையில் ரூ.7.95 கோடியிலும், சேலத்தில் ரூ.7.93 கோடி மதிப்பிலும் புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்கும் பணிகளுக்கும் துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து சென்னை ராணி மேரி கல்லூரியின் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சமகால இணைப்புகள்