TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09-07-2025
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
தொழில் சூழலுக்கான EIU தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம்
எகனாமிஸ்ட் குழுமத்தின் ஒரு அங்கமான எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வெளியிட்ட 2025-2029 காலகட்டத்திற்கான சமீபத்திய அறிக்கையின்படி, தொழில் சூழலுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முன்னணி இந்திய மாநிலமாக உருவெடுத்துள்ளது. 7.4 மதிப்பெண்களைப் பெற்று ‘சாதனையாளர்கள்’ (achievers) பிரிவில் தமிழ்நாடு இடம்பிடித்துள்ளது.
செவ்வாயன்று இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பொருளாதாரப் போட்டித்திறனில் தமிழ்நாடு ஒரு தேசியத் தலைவராக உருமாறியிருப்பதை இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று கூறினார். “சாதனை அளவிலான அந்நிய நேரடி முதலீடுகள் முதல் பல்வேறு துறைகளில் செழித்து வளரும் தொழில்கள் வரை, மாநிலத்தின் இணையற்ற முன்னேற்றத்தை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது,”
மாநிலச் செய்திகள்
மின்சார வாகன உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஐ.டி.டி.பி-யுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை நோக்கிய ஒரு முக்கிய முன்னெடுப்பாக, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL), போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கை நிறுவனத்துடன் (ITDP) செவ்வாய்க்கிழமை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜெ. ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்சார வாகனங்களின் (EVs) பயன்பாட்டை ஊக்குவிப்பதையும், மாநிலம் முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, ஐ.டி.டி.பி இந்தியா ஒரு அறிவுசார் பங்குதாரராக செயல்பட்டு, டி.என்.ஜி.இ.சி.எல்-க்கு பல முக்கியப் பகுதிகளில் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும். இதில், பொது மின்சார வாகன சார்ஜிங்கிற்கான ஒரு மொபைல் செயலியை உருவாக்குதல், மின்சார வாகனம் தொடர்பான கொள்கைகள் மற்றும் சந்தைத் தகவல்களுக்கான ஒரு ஒற்றைச் சாளர தளத்தை அமைத்தல், நிலப் பயன்பாடு மற்றும் சாத்தியக்கூறுகளைத் திட்டமிடுதல், மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்தக்கூடிய நகர அளவிலான மின்சார வாகன உத்திகளைத் தயாரித்தல் ஆகியவை அடங்கும்.
பொருளாதாரச் செய்திகள்
யூகோ வங்கி கடனளிப்பு 17% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் கடனளிப்பு கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 16.58 சதவீதம் உயர்ந்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 30-ஆம் தேதி இறுதியில் வங்கியின் கடனளிப்பு ரூ.2.25 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு இறுதி நிலையை ஒப்பிடுகையில் இது 16.58 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் கடனளிப்பு நிலை ரூ.1.93 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டு இறுதியில் ரூ.2.68 லட்சம் கோடியாக இருந்த வங்கியின் வைப்பு நிதி நிலை, நடப்பு நிதியாண்டின் அதே நாளில் 11.57 சதவீதம் அதிகரித்து ரூ.2.99 லட்சம் கோடியாக உள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில், மொத்த வைப்பு நிதி நிலையில் நடப்புக் கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகளின் (சிஏஎஸ்ஏ) பங்களிப்பு 38.62 சதவீதத்திலிருந்து 36.90 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி
96-வது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி இங்குள்ள எஸ்.டி.ஏ.டி-மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஜூலை 10 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக மலேசிய தேசிய ஜூனியர் அணி ஜூலை 10 (வியாழக்கிழமை) அன்று சென்னைக்கு வருகிறது. 1901-ல் முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க போட்டியில் ஒரு சர்வதேச அணி பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. மலேசியா தனது முதல் போட்டியில் ஜூலை 12-ஆம் தேதி இந்திய கடற்படை அணியை எதிர்கொள்கிறது. இந்திய கடற்படை, மலேசியா மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆகிய மூன்று புதிய அணிகள் இம்முறை சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த முறை பங்கேற்ற ஒடிசா, பிபிசிஎல் மற்றும் மத்திய செயலகம் ஆகிய அணிகள் இந்தப் பதிப்பில் பங்கேற்கவில்லை.
ரூ.2,306 கோடியாக உயர்ந்த ஆர்சிபி பிராண்ட் மதிப்பு
ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த 18-ஆவது சீசனில் அந்த அணி சாம்பியனாகி வரலாறு படைத்தது. இதனால் சந்தையில் அந்த அணியின் பிராண்ட் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதாக முதலீட்டு வங்கி நிறுவனமான ‘ஹூலிஹான் லோகி’-யின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த அணியின் தற்போதைய பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக உள்ளது. முன்பு கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), இந்த முறை ரூ.2,015 கோடி மதிப்புடன் 3-ஆம் இடத்துக்கு சறுக்கியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2,076 கோடி மதிப்புடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறது. 10 அணிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸின் மதிப்பு இந்த ஆண்டு 39.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,208 கோடியாக உள்ளது. விளம்பரதாரர், ஊடகம், வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐபிஎல் போட்டியின் ஒட்டுமொத்த மதிப்பானது 12.9 சதவீதம் அதிகரித்து, தற்போது ரூ.1.6 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஐபிஎல் என்ற பிராண்டுக்கான தனி மதிப்பு மட்டும் 13.8 சதவீதம் அதிகரித்து ரூ.33,440 கோடியாக உள்ளது.
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு (2025)
-
பெங்களூரு (ஆர்சிபி): மதிப்பு: ரூ.2,306 கோடி வளர்ச்சி: 18.5%
-
மும்பை (எம்ஐ): மதிப்பு: ரூ.2,076 கோடி வளர்ச்சி: 18.6%
-
சென்னை (சிஎஸ்கே): மதிப்பு: ரூ.2,015 கோடி வளர்ச்சி: 1.7%
-
கொல்கத்தா (கேகேஆர்): மதிப்பு: ரூ.1,947 கோடி வளர்ச்சி: 5.1%
-
ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்): மதிப்பு: ரூ.1,320 கோடி வளர்ச்சி: 16.7%
-
டெல்லி (டிசி): மதிப்பு: ரூ.1,303 கோடி வளர்ச்சி: 16%
-
ராஜஸ்தான் (ஆர்ஆர்): மதிப்பு: ரூ.1,252 கோடி வளர்ச்சி: 9.8%
-
குஜராத் (ஜிடி): மதிப்பு: ரூ.1,217 கோடி வளர்ச்சி: 14.5%
-
பஞ்சாப் (பிகே): மதிப்பு: ரூ.1,209 கோடி வளர்ச்சி: 39.6%
-
லக்னோ (எல்எஸ்ஜி): மதிப்பு: ரூ.1,046 கோடி வளர்ச்சி: 34.1%
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை
நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவரட்டியில் ஜூன் 23 முதல் ஜூலை 7 வரை மொத்தம் 17 நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் அமைப்புகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) போர் தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஏஆர்டிஇ), இந்திய கடற்படையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் இந்த ராக்கெட் எதிர்ப்பு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டன. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் அமைப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மேற்கொள்ளக் கூடிய தாக்குதலை தடுப்பதோடு இந்திய கடற்படையின் ராக்கெட் ஏவுகளங்களில் இயங்கும் திறனுடையது. நீண்ட தூர இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் இந்த ராக்கெட் அமைப்பு விரைவில் இந்திய கடற்படையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
தேசியச் செய்திகள்
நிரந்தரமாக பிகாரில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு
பிகாரில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மாநில முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், அரசுப் பணிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பெண்களுக்கு பணிப் பாதுகாப்பை அதிகரிப்பது உள்ளிட்டப் பல்வேறு நோக்கங்களைக் கொண்டு அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதாக முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு அறிவித்தது. அப்போது பிகாரில் வசிக்கும் பிற மாநிலப் பெண்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு உண்டு எனக் கூறப்பட்டிருந்தது.
சர்வதேசச் செய்திகள்
பிரேசிலியாவில் பிரதமர் மோடி
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங் கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தலைநகர் பிரேசிலியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருதரப்பு ரீதியிலான இப்பயணத்தில், அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வாவுடன் பிரதமர் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். கானா, டிரினிடாட்-டொபேகோ, அர்ஜென்டீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, பிரேசிலுக்கு கடந்த ஜூலை 5-ஆம் தேதி வந்த பிரதமர் மோடி, தலைநகரங்களான ரியோ டி ஜெனீரோவில் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நிறுவன உறுப்பு நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய கூடுதல் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய இக்கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர், புதிய வளர்ச்சி வங்கி தலைவர் தில்மா ரௌசெஃப், ஐ.நா.பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, ரியோ டி ஜெனிரோவில் இருந்து தலைநகர் பிரேசிலியாவுக்கு அவர் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.
பிரேசிலைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா சென்று அங்குள்ள நம்மியனுக்குக்கு பிரதமர் பயணமாகவுள்ளார். அத்துடன், அவரது ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணம் நிறைவடையும்.