TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08-07-2025
பொருளாதாரச் செய்திகள்
குறைந்தபட்ச இருப்புத் தொகை: பரோடா வங்கி நீக்கம்
சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி நீக்கியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அதற்காக கட்டணம் வசூலிப்பதை வங்கி நிறுத்தியுள்ளது. அனைத்து சாதாரண வகை சேமிப்புக் கணக்குகளுக்கும் இந்த கட்டண நிறுத்தம் ஜூலை 1–ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி மாதாந்திர சராசரி இருப்பு குறைந்தாலும், வாடிக்கையாளர்கள் அதற்காக ஒரு தொகையை இழக்கத் தேவையில்லை. பிரீமியம் வகை சேமிப்புக் கணக்குகளுக்கு இது பொருந்தாது
விளையாட்டுச் செய்திகள்
ஐசிசி புதிய சிஇஓ சஞ்ஜோக் குப்தா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ), இந்திய ஊடகதொழிலதிபர் சஞ்ஜோக் குப்தா நியமிக்கப்பட்டார்.
அந்தப் பொறுப்பிலிருந்த ஆஸ்திரேலியரான ஜியோஃப் அலார்டிஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனவரியில் ராஜிநாமா செய்ததை அடுத்து, சஞ்ஜோக் குப்தா அந்தப் பதவிக்கு வந்துள்ளார்.
அவர், ஐசிசி-யின் 7-ஆவது தலைமை செயல் அதிகாரி ஆவார். இப்பதவிக்காக மொத்தம் 25 நாடுகளில் இருந்து, 2,500-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்ற நிலையில், அதில் 12 பேர் இறுதி செய்யப்பட்டு, பின்னர் சஞ்ஜோக் குப்தா தேர்வு செய்யப்பட்டார்.
கார்ல்சென் சாம்பியன்: குகேஷுக்கு 3-ஆம் இடம்
குரோஷியாவில் நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அமெரிக்காவின் வெஸ்லி சோ, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டி.குகேஷ் ஆகியோர் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களை பிடித்தனர்.
சாம்பியனான கார்ல்செனுக்கு ரூ.34.36 லட்சமும், 2-ஆம் இடம் பிடித்த வெஸ்லிக்கு 25.77 லட்சமும், 3-ஆம் இடம் பிடித்த குகேஷுக்கு ரூ.21.48 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.
தங்கக் கோப்பை கால்பந்து: மெக்சிகோ சாம்பியன்
வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான கால்பந்து கூட்டமைப்பு (கான்ககாஃப்) நடத்தும் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்சிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவுக்காக கிறிஸ் ரிச்சர்ட்ஸ் 4-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, மெக்சிகோவுக்காக ரொனால் ஜிமெனெஸ் 27-ஆவது நிமிடத்தில் ஸ்கோர் செய்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனாக, இரு அணிகளுமே முன்னிலை பெறுவதற்காக கடுமையாக முயற்சித்தன. அதற்கான பலன் மெக்சிகோவுக்கு முதலில் கிடைக்க, 77-ஆவது நிமிடத்தில் எட்சன் அல்வரெஸ் கோலடித்தார். இதனால் மெக்சிகோ 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் அமெரிக்காவின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட, இறுதியில் மெக்சிகோ வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு இது 18-ஆவது சீசனாக இருக்க, அதில் மெக்சிகோ 10-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது.
சர்வதேசச் செய்திகள்
மலேசிய பிரதமர், கியூபா அதிபருடன் - பிரதமர் மோடி சந்திப்பு
பிரிக்ஸ் மாநாட்டின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், கியூபா அதிபர் மிகேல் டியாஸ் கானேல் ஆகியோரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.
கடந்த 2024, ஆகஸ்ட்டில் இந்தியாவுக்கு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
நிகழாண்டுக்கு ஆசியான் கூட்டமைப்புக்கு மலேசிய தலைமை யேற்றுள்ள நிலையில் அன்வர் இப்ராஹிமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஆசியான்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக மறுஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டதற்கும் பிரதமர் மோடி பாராட்டினார். கியூபா அதிபர் மிகேல் டியாஸ் கானேலுடனான பிரதமர் மோடியின் சந்திப்பின்போது உயிரிதொழில் நுட்பம், மருந்தியல், ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவம், எண்ம பணப்பரிவர்த்தனை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொலிவியா அதிபர் லூயிஸ் ஆல்பர்ட்டோ ஆா்சே கேடகோரா, உருகுவே அதிபர் யமாண்டு ஒர்சி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து அந்த நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினார்.
தேசியச் செய்திகள்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: முதல் முறையாக எண்ம சுய பதிவு முறை அறிமுகம்
நாட்டின் பதினேழாவது மக்கள்தொகை கணக்கெடுப்பில், குடிமக்கள் சுயமாக தரவுகளை பதிவு செய்யும் வகையில் (சுய கணக்கெடுப்பு) புதிய பேஸ் வலைதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இதன்மூலம் இந்த கணக்கெடுப்பு முடிவுகள் விரைந்து வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
‘முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த எண்ம மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைமுறையின்படி ‘அப்பீல்’ மற்றும் ‘ஸ்மார்ட்’ ஆகிய கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளத்தக்க புதிய வலைதளங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ஹரியாணா, சண்டீகர், ஜார்க்கண்ட் மாநிலங்கள், லட்சத்தீவுகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள மாதிரிப் பிரதேசங்களில் வரும் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 1-லிருந்து ஹவுஸிங் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். நாட்டு பிற பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு, 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கப்படும். இரு கட்டங்களாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி, 2027 பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டம் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க கர்நாடக அரசு முடிவு
கர்நாடகத்தில் ஆன்லைனில் நடத்தப்படும் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க காவல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. பந்தயம், விளையாட்டு, போக்கர் போன்ற பெயரில் இளைஞர்கள், பள்ளி மாணவர்களை தீயவழியில் சிக்கவைக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காவல் சட்டம் 1963-இல் திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. பணம், மெய்நிகர் செலாவணி, டோக்கன் போன்ற எந்த வகையிலாவது மக்களை ஆசை காட்டி சூதாட்டத்தில் ஈடுபடவைக்கும் முயற்சிகளை தடுத்த நிறுத்த இச்சட்டத் திருத்தம் உதவியாக இருக்கும் என்று அரசு கருதுகிறது. இது தொடர்பாக சட்ட வரைவை அரசு தயாரித்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தில் திறன், அறிவு, பயிற்சி, நிபுணத்துவம் அடிப்படையில் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால், அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கும், அபராதமாக ரூ. 1 லட்சம் வரை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக சட்ட வரைவு தெரிவிக்கிறது.
மாநிலச் செய்திகள்
ஏழை மாணவர் விடுதிகள் ‘சமூகநீதி விடுதி’ என பெயர் மாற்றம்
தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரிகளின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதி’ என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் அதே வேளையில் நமது எதிர்கால சமுதாயத்தை ஒரு சமத்துவ சமூகமாக உருவாக்கிட வேண்டும். இதற்கு ஜாதி சமய உணர்வுகளைக் களைவது அவசியம். இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஜாதி சமயப் பிரிவுகளின் பெயர்களில் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள், ‘சமூகநீதி விடுதி’ என்ற பொதுப் பெயரால் இனி அழைக்கப்படும்.