Current Affairs Wed Jul 02 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02-07-2025

இதரச் செய்திகள்

கோலாபுரி காலணி விவகாரம் - மகாராஷ்டிரா

கோலாபுரி செப்பல் கைவினைஞர்கள் பிராடா நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டு தயாரிப்பு வடிவங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். இது அவர்களின் பாரம்பரியக் காலணி வடிவமைப்பை நகலெடுத்தவாறு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். கோலாபுரி செப்பல்கள் என்பது விரல்கள் வெளியே தெரியும் வகையிலான, T வடிவ பட்டைத் தோற்றம் மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மைக்கு பெயர் பெற்ற கைவினை மூலம் உருவாக்கப்பட்ட தோல் செருப்புகள் ஆகும். கோலாப்பூர் (மகாராஷ்டிரா) மற்றும் அருகிலுள்ள கர்நாடகா மாவட்டங்களில் இருந்து தோன்றிய இவை 2019 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்றன. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கைவினைப் பொருள் ஆனது, தாவர மூலங்களில் இருந்து பெறப்பட்ட பதனிடப்பட்ட எருமைத் தோலைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், ஆணிகள் இல்லாமல் தயாரிக்கப்படும் நுட்பத்திற்காக புகழ்பெற்று அறியப்படுகிறது.

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

எதிர்காலத்திற்கான திறன்கள் குறித்த அறிக்கை

போட்டித் தன்மைக்கான நிறுவனமானது (IFC) இந்த அறிக்கையினைத் தயரித்துள்ளது. இந்த அறிக்கையானது, இந்தியாவின் திறன் சார் கட்டமைப்பினை மதிப்பிடுவதற்காக 2023–24 வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS) மீதான தரவுகளைப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் பணியாளர் வளத்தில் 88% பேர் குறைந்த திறன் கொண்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். பணியாளர் வளத்தில் சுமார் 10–12% பணியாளர்கள் மட்டுமே உயர் திறன் கொண்ட பணிகளில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 66 சதவீதத்திற்கும் அதிகமான தொழிற்கல்விப் பயிற்சியை ஐந்து துறைகள் கொண்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட இந்த முக்கியத் துறைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT மற்றும் ITeS), ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, மின்னணுவியல், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல், மற்றும் அழகு மற்றும் நல்வாழ்வு ஆகியவை அடங்கும். இந்த அறிக்கைக்கான தரவு:

  • வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS),
  • பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0 (PMKVY 4.0),
  • துறை சார் திறன் சபைகள் (SSC) மற்றும்
  • தேசியப் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) முகப்புப் பக்கங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது.

சுற்றுச்சூழல் செய்திகள்

செந்நாய் (ஆசியக் காட்டு நாய்)

பல ஆண்டுகள் இல்லாத தென்படாமல் இருந்த செந்நாய் ஆனது அசாமின் காசிரங்கா-கர்பி அங்லாங் நிலப்பரப்பில் மீண்டும் தென்பட்டுள்ளது. செந்நாய் ஆனது, ஆசியக் காட்டு நாய் என்றும் அழைக்கப்படுகிறது. செந்நாய் என்பது பெண் செந்நாய்களால் வழி நடத்தப் பட்டுக் கூட்டங்களாக வாழும் ஒரு குழுவாக சுற்றித் திரியும் மாமிச உண்ணியாகும். இவை அடர்ந்தக் காடுகள், புதர் நிலங்கள் மற்றும் ஏராளமான இரைகளைக் கொண்ட மலைப்பகுதிகளை அதிகம் விரும்புகின்றன. இந்தியாவில், அவை மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மத்தியப் பகுதிகள் மற்றும் வட கிழக்கின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. செந்நாய்கள் வன சுற்றுச்சூழல் அமைப்பில் இரை விலங்குகளின் சமநிலையை பேண உதவுகின்றன. இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

K-6 நீர்மூழ்கி எறிகணை

K-6 எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் வகையிலான அணுசக்தி திறன் கொண்ட அதி மீயொலி எறிகணையினை இந்தியா உருவாக்கி வருகிறது. இது ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மேம்பட்ட கடற்படை அமைப்புகள் ஆய்வகத்தால் கட்டமைக்கப்படுகிறது. K-6 எறிகணையானது 7.5 மேக் (மணிக்கு சுமார் 9,261 கிலோ மீட்டர்) வரையிலான அதி மீயொலி வேகத்தையும் 8,000 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக் கூடியத் திறனையும் கொண்டுள்ளது. இது அணு ஆயுதங்கள் அல்லது மரபுசார் ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது. இதில் ஒரு எறிகணை மூலம் பல இலக்குகளைத் தாக்கும் MIRV தொழில்நுட்பத்துடன் பொருத்தப் பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே சுமார் 1,000 முதல் 6,000 கிலோ மீட்டர்கள் வரை செல்லக் கூடிய K-3, K-4 மற்றும் K-5 போன்ற முந்தைய SLBM வகையான எறிகணைகளைப் பரிசோதித்துப் பயன்படுத்தியுள்ளது.

வடக்கு கியூபெக்கில் உள்ள மிகப் பழமையான பாறை - கனடா

வடக்கு கியூபெக்கில் உள்ள நுவ்வாகிட்டக் கிரீன்ஸ்டோன் மண்டலம் என்று அழைக்கப் படுகின்ற ஒரு பாறைப் பகுதியானது பூமியின் பழமையான பாறைகளைக் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் புதிய ஆராய்ச்சியானது, இந்தப் பாறைகள் ஆனது புவியின் ஆரம்ப காலமான ஹேடியன் என்ற யுகத்தினைச் சேர்ந்ததாக சுமார் 4.16 பில்லியன் ஆண்டுகள் மிகவும் பழமையானவை என்பதைக் காட்டுகிறது. ஹேடியன் காலமானது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி மிகவும் வெப்பமாகவும் நிலையற்றதாகவும் இருந்த போது தொடங்கியது.

பொருளாதாரச் செய்திகள்

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10% உயர்ந்து 736.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பதோடு இது ஓராண்டிற்கு முன்பு 668.8 பில்லியன் டாலராக இருந்தது. முந்தைய ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.5% ஆக இருந்த வெளிநாட்டுக் கடன் மதிப்பு ஆனது 19.1% ஆக அதிகரித்துள்ளது. ரூபாய் மற்றும் பிற நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து, மதிப்பீட்டு விளைவுகளில் சுமார் 5.3 பில்லியன் டாலர் கூடியதே இந்த உயர்வுக்கு ஒரு காரணமாகும். இந்த விளைவைத் தவிர்த்து இருந்தால், வெளிநாட்டுக் கடன் ஆனது 67.5 பில்லியன் டாலருக்குப் பதிலாக 72.9 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கும். துறை வாரியாக கடன்களாவன:

  • நிதி அல்லாத நிறுவனங்களின் 261.7 பில்லியன் டாலர் கடன்கள்
  • அரசாங்கத்தினால் பெறப்பட்ட 168.4 பில்லியன் டாலர் கடன்
  • வைப்புத் தொகை பெறும் நிறுவனங்களால் பெறப்பட்ட 202.1 பில்லியன் டாலர் (RBI தவிர்த்து) நீண்ட காலக் கடன் (ஓராண்டில் நிறைவு காலம் முடிவுறும்) ஆனது 60.6 பில்லியன் டாலர் அதிகரித்து 601.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. குறுகிய காலக் கடன்களின் (ஓராண்டு வரை நிறைவு காலம் உடையவை) பங்கு 18.3% ஆகக் குறைந்தது ஆனால் அந்நியச் செலாவணி இருப்புகளில் அதன் விகிதம் சுமார் 19.7 சதவீதத்திலிருந்து 20.1% ஆக சற்று உயர்ந்தது. அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் ஆனது சுமார் 54.2 சதவீதத்தில் மிகப்பெரிய மதிப்பிலான கடனாக உள்ளது. அதைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பிலான கடன் (31.1%), யென் மதிப்பிலான கடன் (6.2%), SDR மதிப்பிலான கடன் (4.6%) மற்றும் யூரோ மதிப்பிலான கடன்கள் (3.2%) உள்ளன. கடன் வகையைப் பொறுத்தவரை, கடன்கள் 34%, நாணயம் மற்றும் வைப்புத் தொகை 22.8%, வர்த்தக் கடன் மற்றும் முன்பணங்கள் 17.8%, மற்றும் கடன் பத்திரங்கள் 17.7% ஆக உள்ளன. அந்நியச் செலாவணி இருப்பு ஆனது 11 மாத இறக்குமதிகளை அல்லது நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடனில் 96 சதவீதத்தினை ஈடு கட்ட போதுமானது.

2025 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நடப்புக் கணக்கு உபரி

2025 ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் (2025 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்) இந்தியா 13.5 பில்லியன் டாலர் மதிப்பிலான நடப்புக் கணக்கு உபரியை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% உபரியைப் பதிவு செய்தது. 2024 ஆம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மாதக் காலாண்டில் பதிவான 11.3 பில்லியன் டாலர்ப் பற்றாக்குறை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவீதத்திலிருந்து இது பதிவான கூர்மையான தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது. உபரி மதிப்பும் ஓராண்டிற்கு முன்னதாக இதே காலாண்டில் பதிவான 4.6 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்திலிருந்து உயர்ந்தது. 2025 ஆம் நிதியாண்டின் முழு நிதியாண்டிற்கு, நடப்புக் கணக்கு பற்றாக்குறை 23.3 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% ஆக இருந்தது. இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 26.0 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதத்தினை விட சிறப்பாகப் பதிவானது.

தேசியச் செய்திகள்

ஆதி கர்மயோகி திட்டம்

பழங்குடியின விவகாரத் துறை அமைச்சகமானது, ஆதி கர்மயோகி (பீட்டா வடிவம்) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பழங்குடியினர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான உந்துதலைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை உள்ளடக்கிய மிகவும் வலுவான குழுவை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கள அளவிலான அதிகாரிகளின் மனநிலையையும், ஒரு உந்துதலையும் மாற்றுவதில் இதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டமானது குடிமக்களை மையமாகக் கொண்ட கருத்தாக்கங்கள் மற்றும் சேவை வழங்கலை ஊக்குவிக்கிறது. நாடு முழுவதும் 1 லட்சம் பழங்குடியின கிராமங்கள் மற்றும் வாழ்விடங்களில் சேவை வழங்கலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பின் கீழ் சுமார் 20 லட்சம் பங்குதாரர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படும். சுமார் 180க்கும் மேற்பட்ட மாநில அளவு முதன்மைப் பயிற்சியாளர்கள், 3,000 மாவட்டப் பயிற்சியாளர்கள் மற்றும் 15,000 தொகுதிப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப் படும்.

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் புதிய ரா தலைவர் - பராக் ஜெயின்

பராக் ஜெயின் இந்தியாவின் வெளிவிவகாரப் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1968 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவானது, பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இதற்கு நேர்மாறாக, 1887 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உள் விவகாரப் புலனாய்வு அமைப்பான புலனாய்வு வாரியம் (IB) ஆனது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல் படுகிறது. IB பிரிவானது உலகின் பழமையான புலனாய்வு அமைப்பாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டுச் செய்திகள்

ஈட்டி மரங்கள் பாதுகாப்புச் சட்டம் ரத்து

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காலாவதியான 1994 ஆம் ஆண்டு ஈட்டி மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தினைப் புதுப்பிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசானது முடிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக மரம் வெட்டல் நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படும் அரிய மற்றும் மதிப்புமிக்க மரமான டால்பெர்ஜியா லாட்டிஃபோலியாவை (ஈட்டி மரம்) பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டது, பின்பு 2010 ஆம் ஆண்டில் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது. இந்தச் சட்டமானது விவசாயிகள் தங்கள் தனியார் நிலங்களில் (பட்டா நிலங்கள்) ஈட்டி மரம் வளர்ப்பதைத் தடை செய்தது. இந்தச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது விவசாயிகள் ஈட்டி மரத்தினை சிறந்த விலையில் விற்கவும், அதன் மிகவும் பரந்த அளவிலான சாகுபடியை ஊக்குவிக்கவும் அனுமதிக்கும். விவசாயிகளுக்கான பெரும் பொருளாதாரப் பலன்களுடன் அதன் வளங்காப்பினை சமநிலைப் படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு இந்த ஒரு முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள்

தியாகிகள், தலைவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் சிலை வைத்து திமுக அரசே கவுரவித்துள்ளது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 25 தியாகிகளுக்கு மட்டுமே சிலைகள் அமைக்கப்பட்டன. திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் தியாகிகள், தலைவர்களுக்கு 63 சிலைகள், 11 மணி மண்டபங்கள், அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 28 சிலைகளும் 12 அரங்கங்களும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், தேசியத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கௌரவிப்பதற்காக தமிழக அரசானது 63 சிலைகள் மற்றும் 11 நினைவு மண்டபங்களை நிறுவியுள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்கும் தமிழ் மொழிக்கும் பங்களித்தவர்களின் ஒரு நினைவைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் என்பதோடு இது எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது. திருவள்ளுவர் சிலை திறக்கப் பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியன்று சிலைக்கு அருகில் உள்ள ‘Wisdom Dome’ என்ற பேரறிவு அரங்கத்தினை முதல்வர் திறந்து வைத்தார். மகாத்மா காந்தி, B.R. அம்பேத்கர், தமிழ்க் கவிஞர் பாரதியார், முன்னாள் முதல்வர் K.காமராஜ், முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பாடகர் T.M. சௌந்தர ராஜன், திமுக தலைவர் K.அன்பழகன் ஆகியோரின் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. வீரன் சுந்தரலிங்கம், குயிலி, வ.உ.சிதம்பரம் ஆகியோருக்கும், இலக்கியச் அடையாள நபர்களான மயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் பாரதிதாசன் ஆகியோருக்கும் மற்ற நினைவுச் சின்னங்களும் சிலைகளும் திறக்கப்பட்டுள்ளன.

முத்துப்பேட்டை சதுப்புநிலக் காடு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ளன. பாக் ஜலசந்தியில் சுமார் 120 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ள இந்தப் பகுதியில் அவிசென்னியா மெரினா எனும் அலையாத்தி மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் இந்த சதுப்புநிலப் பரப்பளவு 2,057 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியானது ஆறு பாதுகாக்கப் பட்ட காடுகளை உள்ளடக்கிய வகையில் முத்துப்பேட்டை ஈர நில வளாகத்தையும் உள்ளடக்கியது. 2004 ஆம் ஆண்டில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட மீன் முள் கால்வாய் நுட்பம் ஆனது, ஓதங்களின் பாய்வு மற்றும் விதை பரவலை மேம்படுத்தியது. 2023–24 ஆம் ஆண்டில், இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி 350 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதி சுத்திகரிக்கப்பட்டது. நாற்றுகள் செழித்து வளர்வதை மேம்படுத்துவதற்காக என்று ஒரு புதிய “படி நிலை கால்வாய்” மாதிரி சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த மூன்று ஆண்டு கால முன்னெடுப்பானது, கோரையாறு மற்றும் பாமனியாறு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் 12,020 ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப் படுகிறது. மொத்தம் 1,350 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் புதிதாக உருவாக்கப்பட்டன என்ற ஒரு நிலையில் மேலும் 707 ஹெக்டேர்கள் பரப்பானது கால்வாய் பழுது மற்றும் தூர்வாருதல் மூலம் மீட்டெடுக்கப் பட்டது. இதில், 1,482 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் தஞ்சாவூரிலும் மற்றும் 575 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் திருவாரூரிலும் இருந்தன. ஆரம்பகாலக் கணக்கெடுப்புகள் 700 ஹெக்டேர் பரப்பிலான பரப்புச் செடிகளை நடவு செய்வதற்கும், 800 ஹெக்டேர்கள் பரப்பு எதிர்கால மறுசீரமைப்புக்கும் அடையாளம் காணப் பட்டன. பசுமைத் தமிழ்நாடு திட்டமானது இந்த முன்னெடுப்பினை ஆதரித்தது என்பதோடு தோட்டக்கலை மற்றும் கால்வாய்ப் பணிகள் மூலம் சுமார் 86,000க்கும் மேற்பட்ட மனித உழைப்பு நாட்களுக்கான வேலை வாய்ப்புகளை இது உருவாக்கியது. 2022-23 ஆம் ஆண்டில் மட்டும், 31,000 மனித உழைப்பு நாட்கள் பதிவு செய்யப்பட்டன மேலும் 2023-24 ஆம் ஆண்டில் 32,397 மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்பட்டன.

சமகால இணைப்புகள்