TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01-07-2025
இதரச் செய்திகள்
கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2025
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எல்லை சார்ந்த பதட்டச் சூழல்கள் காரணமாக ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இது மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் (LAC) ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு நிகழும் முதல் இந்தியா-சீனா மக்கள் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. இந்த யாத்திரையானது ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரைக்கான இரண்டு அதிகாரப்பூர்வ வழித்தடங்கள் உத்தரக்காண்டில் உள்ள லிபுலேக் கணவாய் (1981 ஆம் ஆண்டு முதல்) மற்றும் சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் (2015 ஆம் ஆண்டு முதல்) ஆகும். கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி ஆகியவை திபெத்தில், கைலாய மலையின் தெற்கு அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. மானசரோவர் ஏரி உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும். இந்த யாத்திரை இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பான் சமயத்தினைப் பின்பற்றுபவர்களுக்கு அதன் சமய மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்காக அறியப் படுகிறது.
மாநிலச் செய்திகள்
தேசிய பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில் முதலிடத்தில் கேரளா
2020-25 ஆம் ஆண்டிற்கான தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் மீதான மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டில் (MEE) கேரளா மற்றும் சண்டிகர் ஆகிய இரண்டும் ‘மிகச் சிறந்த’ மதிப்பெண்களைப் பெற்றன. சண்டிகர் ஆனது சராசரியாக சுமார் 85.16% என்ற MEE மதிப்பையும், கேரளா 76.22% மதிப்பையும் பெற்றது. பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில், எரவிகுளம் தேசியப் பூங்கா (கேரளா) மற்றும் டச்சிகம் தேசியப் பூங்கா (ஜம்மு & காஷ்மீர்) 92.97% MEE மதிப்பெண்களுடன் இதில் முதலிடத்தில் உள்ளன. கேரளாவைச் சேர்ந்த மதிகெட்டான் சோலைத் தேசியப் பூங்கா மற்றும் சின்னார் வன விலங்கு சரணாலயம் ஆகியவை முதல் 10 பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தன.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
உலக நாடுகளின் எரிசக்தி குறித்த 74வது புள்ளிவிவர மதிப்பாய்வு
இது கியர்னி மற்றும் KPMG நிறுவனத்துடன் இணைந்து எரிசக்தி முகமையினால் (EI) வெளியிட்ட அறிக்கையாகும். இந்தியாவின் நிலக்கரி நுகர்வு ஆனது, 2024 ஆம் ஆண்டில் 4% அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் சுதந்திர நாடுகளின் காமன்வெல்த் அமைப்பு (CIS) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிலக்கரிப் பயன்பாட்டிற்குச் சமமாகும். காற்று ஆற்றல் மற்றும் சூரிய சக்தி போன்ற தூய்மையான எரிசக்தி ஆதாரங்கள் 16% வளர்ச்சியடைந்தன. ஆனால் புதைபடிவ எரிபொருள் நுகர்வு இன்னும் 1 சதவீதத்திற்கும் மிக அதிகமாக உயர்ந்தது. இது ஆற்றலில் வெளியாகும் உலகளாவிய கார்பன் டை ஆக்சைடுக்கு (CO2) சமமான வெளியேற்றத்தில் 1% அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இது சுமார் 39.3 பில்லியன் டன்களுடன் தொடர்ச்சியாக நான்காவது அதிக பதிவினைக் குறிக்கிறது. உலகளாவிய இயற்கை எரிவாயுத் தேவை ஆனது 2024 ஆம் ஆண்டில் 2.5% அதிகரித்து உள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) உறுப்பினர் நாடுகளில் எண்ணெய் தேவை மிகவும் நிலையாக இருந்தது ஆனால் OECD சாராதப் பிராந்தியங்களில் 1% அதிகரித்துள்ளது. முதன்மை எரிசக்திப் பயன்பாட்டில் நிலக்கரி 57% மற்றும் எண்ணெய் 29% பங்குடன் இந்தியாவின் எரிசக்தி நுகர்வு ஆனது 5.8% அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிசக்தித் தேவையின் ஒரு வளர்ச்சியில் சீனாவும் இந்தியாவும் இணைந்து 80% பங்கினைக் கொண்டிருந்தன.
சுற்றுச்சூழல் செய்திகள்
யானைகள் வளங்காப்புத் திட்டம் புதுப்பிப்பு
யானைகள் வளங்காப்புத் திட்டத்தின் 21வது வழிகாட்டுதல் குழு கூட்டம் ஆனது உத்தரகாண்ட்டில் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் (IGNFA) நடைபெற்றது. இந்தக் கூட்டமானது, இந்தியாவில் யானைகள் வளங்காப்பு முயற்சிகளின் பெரும் முன்னேற்றத்தினை மதிப்பாய்வு செய்து எதிர்கால உத்திகளைப் பற்றி விவாதித்தது. யானைகள் வளங்காப்புத் திட்டம் என்பது 1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு பாதுகாப்பு முன்னெடுப்பாகும். மனித-யானை மோதல் ஆனது மனித உயிர்களுக்கும் யானைகளின் பாதுகாப்புக்கும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் நிலவும் மோதல்களை நன்கு மேலாண்மை செய்வதற்காக பிராந்திய செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 3,452.4 கி.மீ நீள இரயில் பாதைகளை உள்ளடக்கிய ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டு, இந்த மோதல் நிகழ்வுகளுக்கு எதிரான சில தணிப்பு நடவடிக்கைகளுக்காக 77 அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 22 மாநிலங்களில் 1,911 மரபணு குறித்த விவரங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், காப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள யானைகளின் டிஎன்ஏ விவரக்குறிப்பு பதிவு ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 16,500க்கும் மேற்பட்ட சாண மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பின் முதல் கட்டம் நிறைவு அடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்ற நீலகிரி யானைகள் வளங் காப்பகத்திற்கான மாதிரி யானைகள் வளங் காப்பு திட்டத்தில் (ECP) முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
பொருளாதாரச் செய்திகள்
வேளாண் விளைபொருள் உற்பத்தி குறித்த வருடாந்திர அறிக்கை
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (MoSPI) ஆனது, “Statistical Report on Value of Output from Agriculture and Allied Sectors – வேளாண்மை மற்றும் அதன் சார்பு துறைகளின் உற்பத்தி மதிப்பு குறித்த புள்ளி விவர அறிக்கையை (2011-12 முதல் 2023-24 வரை)” வெளியிட்டுள்ளது. நடப்பு விலையில் வேளாண்மை மற்றும் அதன் சார்பு துறைகளின் மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 225% அதிகரித்து 4,878 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது 2011-12 ஆம் ஆண்டில் 1,502 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. நிலையான விலையில் உற்பத்தியின் மொத்த மதிப்பு (GVO) 54.6% அதிகரித்து, 2011-12 ஆம் ஆண்டில் 1,908 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்பதோடு இது 2023-24 ஆம் ஆண்டில் 2,949 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 1,595 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த பயிர்ச் சாகுபடித் துறையின் மொத்த GVO ஆனது, மொத்த வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்பு உடைய துறைகளின் GVO உற்பத்தியில் 54.1% பங்களித்தது. தானியங்கள் மற்றும் பழங்கள் & காய்கறிகள் உற்பத்தியானது, 2023-24 ஆம் ஆண்டில் பயிர் GVO உற்பத்தியில் 52.5% பங்களித்தன. 2023-24 ஆம் ஆண்டில் அனைத்துத் தானியங்களின் GVO உற்பத்தியில் நெல் மற்றும் கோதுமையின் பங்கு சுமார் 85% ஆகும். வாழைப்பழத்தின் GVO ஆனது (சுமார் 47.0 ஆயிரம் கோடி) 2023-24 ஆம் ஆண்டில் மாம்பழத்தின் (46.1 ஆயிரம் கோடி) GVO பங்கினை விட அதிகமாக இருந்தது. 2011-12 ஆம் ஆண்டில் 21.3 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உருளைக்கிழங்கு உற்பத்தி ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 37.2 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து, காய்கறி உற்பத்தியில் அதிகளவிலான பங்களிப்பாளராகத் தொடர்ந்து திகழ்கிறது. 2011-12 ஆம் ஆண்டில் 17.4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மலர்கள் வளர்ப்பு உற்பத்தி ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 28.1 ஆயிரம் கோடி ரூபாயாக சுமார் இரட்டிப்பாகி உள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் 488 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த கால்நடைப் பொருட்களின் GVO ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 919 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. 2011-12 ஆம் ஆண்டில் சுமார் 67.2 சதவீதமாக இருந்த கால்நடை வளர்ப்புத் துறையில் பால் உற்பத்தியின் GVO பங்கு ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 65.9% ஆக சற்றுக் குறைந்தது. 2011-12 ஆம் ஆண்டில் 19.7 சதவீதமாக இருந்த கால்நடைகள் துறையில் இறைச்சியின் GVO பங்கு 2023-24 ஆம் ஆண்டில் 24.1% ஆக உயர்ந்தது. வனவியல் மற்றும் மரம் வெட்டுதல் GVO ஆனது 2011-12 ஆம் ஆண்டில் சுமார் 149 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 227 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. வனவியல் உற்பத்தியில், 2011-12 ஆம் ஆண்டில் 49.9 சதவீதமாக இருந்த தொழில்துறை பயன்பாடு சார் மர வளர்ப்பு உற்பத்தியின் பங்கு ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 70.2% ஆக உயர்ந்தது. மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு துறையின் பங்களிப்பு ஆனது, 2011-12 ஆம் ஆண்டில் 4.2 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 7.0% ஆக உயர்ந்தது. 2011-12 ஆம் ஆண்டில் 57.7% ஆக இருந்த உள்நாட்டு மீன் வளர்ப்புத் துறையின் பங்கு ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் 50.2% ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் கடல் சார் மீன் வளர்ப்புத் துறையின் பங்கு 42.3 சதவீதத்திலிருந்து 49.8% ஆக உயர்ந்துள்ளது. பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர் வளர்ப்பில் மாநில வாரியானப் பங்குகள் 2011-12 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் குறிப்பிடத்தக்க அளவில் மாறின. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகியவை 2023-24 ஆம் ஆண்டில் தானிய GVO பங்கில் சுமார் 53% பங்களித்தன. உத்தரப் பிரதேசம் அதன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் ஆனது சுவையூட்டுப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் GVO பங்கில் 19.2% பங்குடன் முன்னிலை பெற்றது அதைத் தொடர்ந்து கர்நாடகா (16.6%) மற்றும் குஜராத் (15.5%) உள்ளன. மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை 2011-12 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை மீன்வளத் துறையின் GVO பங்கில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காட்டின.
சர்வதேசச் செய்திகள்
நேட்டோ உச்சி மாநாடு 2025
நேட்டோ நாடுகளின் 2025 ஆம் ஆண்டு உச்சி மாநாடு ஆனது நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்றது. நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், முக்கியப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு 3.5% மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கம் போன்றவற்றுடன் தொடர்புடையச் செலவுகளுக்கு சுமார் 1.5% ஆகியவற்றினை உள்ளடக்கியதாக அதன் பாதுகாப்புச் செலவினங்களை அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளன. அவற்றின் முன்னேற்றம் குறித்த மதிப்பாய்வுடன் சேர்த்து 2029 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, இந்த இலக்கை அடைவதற்கான அவற்றின் வருடாந்திரத் திட்டங்களை உறுப்பினர் நாடுகள் சமர்ப்பிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில், போலந்து, எஸ்டோனியா மற்றும் லாட்வியா மட்டுமே சுமார் 3 சதவீதத்திற்கும் அதிகமாகச் செலவிட்டன. பாதுகாப்புத் துறைக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.24% மட்டுமே செலவழித்த ஸ்பெயின், விதிமுறைகளுக்கு இணங்காததற்காக அமெரிக்க வர்த்தகத் தடைகளை எதிர்கொண்டது. தற்போது, நேட்டோவில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன என்பதோடு இந்தியாவானது நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இடம் பெறவில்லை.
SCO பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டு அறிக்கை
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. பன்னாட்டுத் தீவிரவாதம் குறித்து எந்த குறிப்பிடலும் இல்லாதது குறித்து இந்தியாவின் அதிருப்தி காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. SCO சாசனத்தின் படி, முடிவுகள் ஒருமித்த கருத்தினால் எடுக்கப்படுகின்றன, மேலும் எந்த ஒரு உறுப்பினரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் மட்டுமே அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படும். SCO ஆனது 2001 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான குழு ஆகும். இந்தியா 2017 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் முழு உறுப்பினரானது. இதன் தற்போதைய உறுப்பினர்களில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் மற்றும் இந்தியா ஆகியன அடங்கும்.
2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு
இந்தியா உட்பட ஆசிய-பசிபிக் பகுதிகளில் உள்ள அரசாங்கங்கள் பாங்காக்கில் ஒரு முக்கிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன. 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்துப் பிறப்புகளும் பதிவு செய்யப் படுவதையும் அனைத்து இறப்புகளும் பதிவு செய்யப் படுவதையும் உறுதி செய்வதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற குடிமைப் பதிவு மற்றும் முக்கியப் புள்ளி விவரங்கள் (CRVS) தொடர்பான மூன்றாவது அமைச்சர்கள் மாநாட்டில் இந்த ஒரு முடிவு ஆனது மேற்கொள்ளப்பட்டது. CRVS என்பது ஒரு சட்ட அமைப்பின் கீழ் பிறப்புகள், இறப்புகள், திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ பதிவைக் குறிக்கிறது. CRVS புள்ளிவிவரங்கள் கருத்தக்கத்திற்கான பின்னணியில் உள்ள முன்னணி அமைப்பு UN ESCAP (ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம்) ஆகும். இந்தத் தீர்மானம் ஆனது, பிறப்பு பதிவு உட்பட அனைவருக்குமான ஒரு சட்டப் பூர்வ அடையாளம் 16.9 என்ற SDG இலக்கினை ஆதரிக்கிறது. 2012 ஆம் ஆண்டு முதல், பதிவு செய்யப் படாத ஐந்து வயத்திற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 135 மில்லியனிலிருந்து 51 மில்லியனாகக் குறைந்துள்ளது. 29 நாடுகள் தற்போது 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிறப்புகளைப் பதிவு செய்கின்றன, மேலும் 30 நாடுகள் இறப்புகளுக்கும் அத்தகைய சதவீதத்திலானப் பதிவுகளைப் பதிவு செய்கின்றன. இந்த முன்னேற்றம் பதிவவாகியிருந்த போதிலும், 14 மில்லியன் குழந்தைகள் இன்னும் ஒரு வயதிற்குள் தங்கள் பிறப்புகளைப் பதிவு செய்யவில்லை. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 6.9 மில்லியன் உயிரிழப்புகள் பெரும்பாலும் மருத்துவ மனைகளுக்கு வெளியே அல்லது தொலைதூரப் பகுதிகளில் பதிவு செய்யப்படாமல் போகின்றன.